வள்ளலார் வழி எது?
பகுதி 2 · 2 / 3
ஆனால் பொதுவாகச் சமுதாயத்திற்குத் தேவையான - சமுதாயத்தை வளர வைக்கக்கூடிய - விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய-கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துரைத்ததையும், திருமூலரே அதை அந்தக் காலத்திலே சொன்னார் என்பதனையும் குன்றக்குடி அடிகளார் எடுத்துச் சொன்னார்.
பெரியார் அவர்கள் கடவுளே இல்லையென்று சொல்கிறார். அண்ணா அவர்கள் நம்முடைய பழமையைக் காக்கவும், நல்ல புதுமைகளைச் செழிப்பாக வளர வைக்கவும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டார் என்றும் அடிகளார் குறிப்பிட்டார்.
பெரியார் அந்த அளவுக்குப் போன காரணத்தினாலேதான் இப்போது நாம் பெரியாரிடத்திலே ஒரு சமரசத்திற்குப் போகிறோம். எதுவுமே இல்லை என்று சொல்லாதீர்கள். ஒன்றையாவது ஒப்புக் கொள்வோம் என்று சமரசத்திற்குப் போகிறோம்.
அதைத்தான் இராமலிங்க அடிகள் சொன்னதாக இந்தப் புத்தகத்திலே இருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு கூடாது என்கிறார்; ஆகவே பல தெய்வ வழிபாடு கூடாது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இங்கே வந்திருக்கின்ற தாய்க்குலமாயினும் ஆடவர்களாயினும் இங்கிருந்து சென்ற பிறகு, இன்றிரவிலிருந்து நாளை இரவு வரை, எத்தனைத் தெய்வங்களை வழிபடுகிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இராமலிங்க அடிகளின் வழியில் செல்கிறோமா என்பதை நாமே முடிவெடுத்துக் கொள்ள முடியும்.
அதைப்போலவே “புராணங்கள் - சாத்திரங்கள் முடிவான உண்மைகளைத் தெரிவிக்க மாட்டா” என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், ‘நீ அப்படிச் சொன்னாயா? உனக்கே ஒரு புராணம் எழுதுகிறேன் பார்!’ என்று இராமலிங்க அடிகளுக்கே நாம் புராணமெழுதிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நூலிலேகூடச் சில இடங்களில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. சென்ற முறை இங்கே வந்து பேசும்போதுகூட அதை நான் சொன்னேன்!
‘எண்ணெய் விளக்கு! எழுதிக் கொண்டே இருக்கிறார் இராமலிங்க அடிகள்; விளக்கு அணைந்து போகின்ற சூழ்நிலை! பக்கத்திலே செம்பிலிருந்த தண்ணீரை எண்ணெய் என எண்ணிக் கொண்டு விளக்கிலே ஊற்றினார். அவர் எண்ணெய் என்று எண்ணிக் கொண்ட காரணத்தினால் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது’ என்று சொல்லதன் வாயிலாகப் புராணங்களை, அற்புதங்களை நம்பாதே என்று எந்த இராமலிங்க அடிகள் சொன்னாரோ, அதற்கு மாறாக அவரையே அப்படி அற்புதங்கள் செய்யக்கூடிய சித்தர் என்று குற்றவாளி ஆக்கியிருக்கின்றோம் நாம் என்பது தான் என்னுடைய திடமான எண்ணமாகும்.
எந்தெந்தக் காலத்திலே எவையெவை எழுதப்பட்டன என்று காலவரையறைகளை நிர்ணயித்து, அதன் படியே இந்நூல் தொகுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். அது உண்மை, பொருத்தமானதும்கூட.
ஏனென்றால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அவருடைய இறுதிக் காலத்திலே எழுதிய பல்வேறு பாடல்களை நாம் படித்திருக்கின்றோம். எவ்வளவோ புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றார். அதே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இளமைக்காலத்திலே எழுதியதுதான் சுப்பிரமணியர் துதி அல்லது:
இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, புரட்சிக் கவிஞரின் எழுத்துக்களைத் தொகுப்பதாக ஒருவர் சொல்லிக் கொண்டு, அவர் கடைசிக் காலத்திலே எழுதிய புரட்சிக் கருத்துக்களையெல்லாம் முன்னுக்குத் தள்ளி அவர் எழுதிய சுப்பிரமணியர் துதி அழுகைக் கடைசியாகச் சொல்லி, முதலில் இப்படி இருந்தார், பிறகு கடவுள் அருளாலே திருந்தி சுப்பிரமணியனுக்கு அடிமை
யானார் என்று எழுதி விடுவார்களானால், ஒவ்வொரு காலத்திலும் அவர் எப்படியெப்படி மாறினார் என்பது தெரியாமலே போய்விடக்கூடும்.
இன்றைக்கு ஒரு கருத்தைச் சொல்லும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அந்தக் கருத்தைத்தான் இப்போது சொல்கிறாயே என்று நம்மைச் சந்தேகப் படுகிறவர்கள் இருக்கிற நேரத்தில், இப்படிக் காலங்கள் வரையறுக்கப்படுவது எவ்வளவு தேவை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே, காலங்களை வரையறுத்து, எவ்வெப்போது என்னென்ன கருத்துக்களை எழுதினார்கள் என்பதை எண்ணிப்பார்க்கிறபொழுது, இராமலிங்க அடிகள், இந்தக் கொள்கைகளை மாத்திரமல்ல; சைவம், சன்மார்க்கம் ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடுகளைப்பற்றிக் கூடச் சாடியிருக்கின்றார்.
இராமலிங்க அடிகளுடைய திருவருட்பாவில் பலரும் மூழ்கித் திளைத்திருந்திருக்கிறார்கள். அவர்களிலே ஒருவர் இராஜமாணிக்கம் பிள்ளை என்பவர். அந்த இராஜமாணிக்கம் பிள்ளை தொகுத்துள்ள பதிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:
பக்கம் 58-ல்,
“தெய்வத்திற்குக் கை, கால் முதலியன இருக்குமா என்று கேட்பவருக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றோம்.”
“இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்”. - இது இராஜமாணிக்கம் பிள்ளை பதிப்பு 69-வது பக்கத்தில்.
“... மேலும் இவைகளுக்கெல்லாம் சாட்சி நானே இருக்கிறேன். நான் முதலில் சைவ சமயத்தில் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும்
வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த இலட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா? இப்படி இலட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும் மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன், அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்குக் கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”
“இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதனால் வந்த இலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டுவிட்டீர்களானால் என்னைப்போல் பெரிய இலாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது இலாபத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.”
இது அந்த நூலில் 60-வது பக்கத்தில் காணப்படுகிறது!
