உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

வள்ளலார் வழி எது?

பகுதி 1 · 1 / 3

வள்ளலார் வழி எது?

இராமலிங்க அடிகளார் தாம் பாடுவதற்காக எடுத்துக் கொண்ட திருத்தலங்களில் நான் வாழ்ந்த திருவாரூரும் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் இந்த நூலை வெளியிட என்னைத் தெரிந்தெடுத்தார்களோ என்றுகூடக் கருதுகிறேன். அடுத்தபடியாக, வள்ளலார் அவர்கள் “சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்” என்று தன்னை அழைத்துக் கொண்டார்கள்.

அவர்களுக்கும் சிதம்பரத்துக்கும் மண் தொடர்பு உண்டு. எனக்கும் சிதம்பரத்துக்கும் பெண் தொடர்பு உண்டு; எனக்கு முதலில் பெண் எடுத்த ஊர் சிதம்பரம் என்பதால்.

“இராமலிங்க அடிகளுடைய கொள்கைகள், அந்தக் கொள்கைகளைச் சொல்ல அவர் எடுத்தாண்ட தமிழ், அவர் ஆற்றிய பணி இவைகளையெல்லாம் எத்தனையோ பெரியவர்கள் - மகான்கள் - புலவர் பெருமக்கள் - கர்ம வீரர்கள் - பாவேந்தர்கள் - புரட்சிக் கவிஞர்கள் இவர்களெல்லாம் எடுத்துச் சொன்ன பிறகும் அவரது கொள்கைகள் நாட்டிலே வேரூன்றாத காரணத்தினாலேதான் அன்றைக்குத் தந்தை பெரியார் மேடையில் தோன்றினார். ஆகவே திராவிடர் கழகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் இராமலிங்க அடிகளார் கொள்கைகளை நல்ல முறையிலே பரப்பிட வேண்டும்” என்று குன்றக்குடி அடிகளார் சொன்னார்.

பலரும் அடிகளார் அவர்களைக் காவி உடை தரித்த பெரியார் என்று சொல்கிறார்கள். இதை உணர்ந்து,

பயந்தோ என்னவோ இவ்வளவு பேசிவிட்ட பிறகு, இந்த ஒரு வார்த்தையாவது சொன்னால்தான் மடாலயங்களுக்கு மத்தியில் தப்ப முடியும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இடுங்கள் என்று அடிகளார் சொன்னார்.

புள்ளி வைக்க வேண்டியதுதான். ஆனால் தமிழ் நாட்டினுடைய எதிர்காலம், எழுச்சிக்கோலம் பூண நாமனைவரும் புள்ளி வைக்க வேண்டும் என்று மாத்திரம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் அவர்கள் மாத்திரம் இப்படிப்பட்ட முரட்டுத்தனமான கொள்கைகளைச் சொல்கிறார் என்று குறை கூறப்பட்டாலும், அப்படிப்பட்ட முரட்டுத்தனமான கருத்துக்களைச் சொல்லாமல் இருந்திருப்பாரேயானால் இப்போது ஏற்பட்டுவிட்ட பல சம்பவங்களுக்காக நாம் வருத்தக்கூடச் செய்திருக்க மாட்டோம்.

அடிகளாருடைய பேச்சை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கேட்டபோது, நல்லவேளை பெரியார் பிறந்தார் என்ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது.

ஏனென்றால், அவர் பிறந்த காரணத்தினால்தான் இவ்வளவு உண்மைகளை நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை அவர் நமக்களித்திருக்கிறார்.

சிலரைச் சுலபமாக எழுப்ப முடியும்; வேறு பலரைச் சுலபமாக எழுப்ப முடிவதில்லை - முரட்டுத்தனமாகத்தான் எழுப்ப வேண்டும்.

இராவணனை அவனுடைய மனைவி மண்டோதரி ‘கண்ணா’ என்று காலையிலே அழைத்ததும் இருபது கண்ணும் மலர அவன் எழுவானாம்.

ஆனால் அவனுடைய இளவல் கும்பகர்ணனை எழுப்புவதென்றால் ஆயிரக்கணக்கான மதயானைகள் தேவைப்படும் என்று இராமாயணம் கூறுகிறது.

தமிழ்ச் சமுதாயம் கும்பகர்ணனுடைய நிலையிலே இருந்த காரணத்தினால்தான் பெரியார் என்கிற யானையினால் மிதிபட வேண்டியிருந்தது.

பெரியாருடைய அழுத்தமான கால்கள்பட்ட காரணத்தினாலேதான் கும்பகர்ணன் நிலையில் இருந்த தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொண்டு, அடிகளார் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்திடக் கூடாது.

ஆகவே கும்பகர்ணன் நிலையில் இப்போது ஆழ்ந்திருக்கின்ற சமுதாயத்தை விழிப்படையச் செய்வதற்குப் பெரியாரைப் போன்ற புரட்சியாளர்கள் தேவைப்பட்டார்கள் - இன்னமும் தேவைப்படுகிறார்கள்.

இராமலிங்க அடிகளாருடைய இவ்வளவு பெரிய அருட்பா நூலில் - இதைப் பதிப்பித்து நம்மிடம் வழங்கியிருக்கின்றவர்கள் இராமலிங்க அடிகளாரின் கொள்கைகளை ஒரு பக்கத்திலே வெகு அழகாக விளக்கியிருக்கின்றார்கள்.

இவ்வளவு அருமையான எல்லாப் பாடல்களையும் படித்து முடித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு வசதியாக இராமலிங்க அடிகளின் கொள்கைகளை வகுத்துத் தொகுத்துக் காட்டியிருக்கின்றார்கள்:

* “கடவுள் ஒருவரே-அவர் அருட்பெருஞ் சோதியர். * சிறு தெய்வ வழிபாடு கூடாது. * இத்தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி கூடாது. * புலால் உண்ணலாகாது. * சாதி சமயம் முதலிய வேறுபாடுகள் கூடா. * எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைக் கடைப் பிடிக்க வேண்டும்.

* ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். * புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கமாட்டா. * இறந்தவரைப் புதைக்க வேண்டும் - எரிக்கக் கூடாது. * கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டா. * எதிலும் பொது நோக்கம் வேண்டும்.”

- இவ்வளவும் இராமலிங்க அடிகளின் கருத்துக்கள் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

நான் கேட்கின்றேன்; இவைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிற நாம் இந்தக் கொள்கைகளில் எத்தனை கொள்கைகளை ஒப்புக் கொண்டிருக்கிறோம்? எத்தனை கொள்கைகளின்படி நடந்து கொண்டிருக்கிறோம்? எந்தெந்தக் கொள்கைகளுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்விகளை நம்மை நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

“புலால் உண்பது கூடாது” என்பது இராமலிங்க அடிகளாருடைய கருத்து. விழாவை நடத்துகின்ற பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களேகூட அதைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியாது.

ஆகவே ஒரு பெரியவருடைய கொள்கை - இலட்சியம் எல்லாவற்றையுமே ஏற்றுக் கொண்டு அவ்வழியில் தங்களை உருவாக்கிக் கொள்வது என்பது இயலாத காரியம்.

முதற் பதிப்பு : மே 2000