வள்ளலார் வழி எது?
பகுதி 3 · 3 / 3
ஆகவே இப்படி நிறையச் சொல்லலாம். புரட்சிகரமான கருத்துக்களை வடலூர் வள்ளலார் தமிழ் நாட்டுக்கு அளித்தார்.
அப்படி அளித்த கருத்துக்கள் தமிழ் மொழியில் அளிக்கப்பட்ட காரணத்தினால், வேறு மொழிகளிலே மொழிபெயர்க்கப்படாத காரணத்தினால், அந்தக் கருத்துக்கள் நாட்டில் வெகுவாகப் பரவிடவில்லை. ஆனால் எப்பொழுதுமே புரட்சிக் கருத்துக்களை - புதுமைக் கருத்துக்களை - தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்திட முனையும்போது அதை மறுத்திட வேண்டும் - அது புகுந்திடக் கூடாது என்று எண்ணுகின்றவர்கள், கருத்துக்களைச் சொன்னவர்களை உயர்ந்த இடத்திலே உட்கார வைத்துவிட்டு, அவர்களுக்கு மாலை சூட்டி மதிப்பளித்துக் கருத்துக்களை ஒதுக்கிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட
தந்திரங்களைக் கற்றவர்கள் நாட்டிலே ஏராளமாக இருக்கிறார்கள்.
சித்தர்கள் சொன்னார்கள்:
“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில்
“பறைச்சி ஆவதேதடா? பணத்தியாவதேதடா?” இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குமோ?”
என்று பாடினார்கள்.
ஆனால் என்ன சொன்னது நாடு?
நாட்டிலே அந்தக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக் கூடாது என்று கருதியவர்கள் என்ன சொன்னார்கள்?
“அவர்கள் சித்தர்கள் - அவர்களால்தான் சொல்ல முடியும்.”
“நாம் சாதாரண மனிதர்கள். நம்மால் அதெல்லாம் ஆகாது!”
“ஆலயத்திற்கு அரிசனத் தோழனை அழைத்துச் செல்ல வேண்டுமென்று காந்தியடிகள் சொல்லுகிறாரா? அவர் மகாத்மா! அவரால் செய்ய முடியும். நாம் மனித ஆத்மாக்கள். நம்மால் இயலுமா?” என்று சொல்லிவிட்டார்கள்.
சொன்னவர்களை உயர்த்தி வைத்துவிட்டு, அவர்கள் சொன்ன கருத்துக்களைத் தாழ்த்துவதிலே நாட்டிலே உள்ள பல சாமர்த்தியக்காரர்கள் பல்வேறு கட்டங்களிலே வெற்றியைப் பெற்று வந்திருக்கிறார்கள்.
அதைப்போலத்தான் இராமலிங்க அடிகளை உயர்த்தி வைத்துவிட்டு, “இராமலிங்க அடிகள் சொல்லலாம்; நாம் சொல்ல முடியுமா? அவர்கள் பெரியவர்கள் சொல்லலாம். நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? நம்மை அந்த அளவுக்கு உயர்த்திக் கொண்டு அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது நலமா?”
என்று இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கேட்டுக் கருத்துக்களின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் புகழுரையும் போற்றுதலும் அளித்துவிட்டு கருத்துக்களை அழிப்பதிலே நாம் கால காலமாக வெற்றியைப் பெற்று வந்திருக்கிறோம்.
இனிமேலாவது கருத்துக்களின் சொந்தக்காரர்களை மதிப்பது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் சொன்ன கருத்துக்களை மதிப்பதிலே நாம் தனிக் கவனத்தைச் செலுத்தியாக வேண்டும்.
இராமலிங்க அடிகளின் பாடல்கள் மாத்திரமல்ல, அவரது உரைநடைகளையும் படிக்கப் படிக்க நம்முடைய உள்ளமும் இராமலிங்கரின் கருத்துக்களோடு ஒன்றாக இணைந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முடிந்த அளவு பாடுபட வேண்டுமென்ற உணர்ச்சியினை நமக்கு ஏற்படுத்தும்.
பசி ஒழிக்கப்பட்டால்தான் நாடு வளரும் என்று இராமலிங்க அடிகள் சொன்னதாகக் குறிப்பிட்டார்கள்.
பசியை ஒழிப்பது குறிக்கோளானால், செல்வர்களோடு சாதாரணமானவர்களையும் சமமாக்குவது அதற்காக எடுத்துக் கொள்ளப்படுகின்ற செயல் முறையாகும்.
குறிக்கோள் பசியை ஒழிப்பது, சில நேரங்களில் பசியின்போது நல்ல கருத்துக்கள் வருவதுண்டு.
பசியின் காரணமாகப் படுத்திருந்த புலவன்தானே “நாராய் நாராய் செங்கால் நாராய்; பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்” என்று அந்த நாரையினுடைய வாயைப் பற்றி
உதாரணம் சொல்லி, நாரையினுடைய அலகு எப்படி இருக்கிறது என்றால் பனங்கிழங்கு பிளந்தது போல் இருக்கிறது என்று உலகுக்கு அறிவித்தான்.
சாப்பிடக் கிழங்கு கிடைக்காவிட்டாலும், கிழங்கு பற்றிச் சொல்ல ஒரு உதாரணம் கிடைத்தது. அதனால் நல்ல பாடல்கள் கிடைக்க வேண்டுமானால் பசி தேவையா என்று கேட்டுவிடாதீர்கள்!
பசி போக்கிட - பசி நீக்கிட வேண்டும் என்று வடலூர் வள்ளலார் சொன்ன கொள்கையின் அடிப்படையில்தான் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கிய நேரத்தில் முதல் முதலாக நான், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வடலூர் வள்ளலார் சொன்னார்; அந்தப் பாடலை மனத்தில் வைத்துத்தான் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது என்று சொன்னேன்.
இப்படிப் பல்வேறு வகையிலும் இராமலிங்க அடிகள் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். அன்று இந்தத் தமிழ்நாட்டு ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’ நமக்குக் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவதைப் போல், தருவின் நிழலைப்போல் நித்தமும் நிம்மதியை வழங்கி வருகின்றது.
1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4-ஆம் நாள் காந்தியடிகள் - வள்ளலார் விழாவில் நூலை வெளியிட்டுப் பேசியது.
