உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திருவள்ளுவர் விழா

பகுதி 2 · 2 / 3

★ திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அங்குள்ள ஒரு மண்டபம் இடிந்து வீழ்ந்தது. அதற்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி இந்த அரசின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது. எங்களுக்குப் பக்தி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். கலைப்பற்று இருக்கிற காரணத்தால் அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. (கைத்தட்டல்)

★ திராவிட மொழியியல் பள்ளிக்குக் கழக அரசு உயர்த்தி வழங்கிய மான்ய உதவி என்ற பெயரில் திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளிக்குத் தமிழியல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ஐந்து லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதி 96-97 ஆண்டு முதல் பத்து லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

★ ஆசியவியல் ஆய்வு நிறுவனத்திற்கு தமிழ் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக 96-97-ஆம் ஆண்டில் 19.57 லட்ச ரூபாயும், 97-98-ஆம் ஆண்டில் இருபது லட்ச ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

★ புதுடெல்லியிலுள்ள தமிழ்ச்சங்கத்திற்கு திருவள்ளுவர் கலையரங்கம் கட்டுவதற்காகப் பத்து லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு அந்தக் கலையரங்கத்தைச் சில மாதங்களுக்கு முன்பு நானே திறந்து வைத்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

★ தேவநேயப்பாவாணரின் நூல்களை நாட்டுடமையாக ஆக்கி அவருடைய வாரிசுகளுக்கு இருபது லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

★ இந்த ஆண்டில் மறைமலையடிகளாரின் நூல்களை நாட்டுடமையாக்கி அவருடைய வழித்தோன்றல்களுக்கு மொத்த ரூபாய் முப்பது லட்சத்து முப்பதாயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

★ சென்னைத் திருவல்லிக்கேணியிலே உள்ள பாரதியார் இல்லம் 8.30 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு அங்கு 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு நூலகம் இந்த அரசினால் அமைக்கப்பட்டு உள்ளது. பாரதியார் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் வாரம் 3 முறை அங்கே காட்டப்படுகிறது.

★ மதுரைத் தமிழ்ச் சங்க மேம்பாட்டிற்காக, தேவர் பேரவையின் கோரிக்கைகளை ஏற்று கழக அரசு 45 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கின்றது.

★ ஆந்திர மாநிலத்திலுள்ள திராவிடப் பல்கலைக் கழகத்திற்கு இந்த அரசு 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறது.

★ மறைமலை அடிகள் நூலகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த மானிய உதவி பத்தாயிரம் ரூபாயை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இந்த அரசு வழங்கத் தொடங்கியிருக்கிறது.

★ திருவான்மியூரில் உள்ள உ.வே. சாமிநாத அய்யர் நூலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 60 ஆயிரம் ரூபாய் மானிய உதவியை இந்த ஆண்டு முதல் 1 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் இந்த அரசுதான்.

★ அதுமாத்திரமல்ல; நான் கட்டபொம்மன் கோட்டையைப் பற்றி சொல்கிறபோது நண்பர் பரமகுரு அவர்கள் பூலித்தேவன் என்ன ஆனான் என்று கேட்காமலே விழிகளால் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நம்முடைய அமைச்சர்கள் துரைமுருகன், முல்லைவேந்தன், ஆலடி அருணா இவர்கள் எல்லாம் சென்று பார்வையிட்டு அந்தப் பூலித்தேவனுடைய பழைய இடிந்துபோன மாளிகையைப் புதுப்பிக்கத் திட்டமிட்டு அதற்கான வரைபடம் என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 53 லட்சம் ரூபாய் செலவிலே பூலித்தேவன் மாளிகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. (கைத்தட்டல்)

★ வீரன் சுந்தரலிங்கம் நினைவாக அவரது வழித் தோன்றல்கள் வாழ்ந்திட இருநூறு வீடுகள் கொண்ட ‘சுந்தரலிங்கம் நகர்’ அமைக்கப்பட்டுள்ளது, சுமார் அறுபது லட்ச ரூபாய் செலவில்! (கைத்தட்டல்)

★ அதைப்போலவே தியாகி நாடகப் புலவர் விசுவநாத தாஸ் “கொக்கு பறக்குதடி பாப்பா” என்று வெள்ளையனுக்கு எதிராக வீரக்குரல் எழுப்பிய நாடக நடிகர் - நடித்துக் கொண்டிருக்கும்போதே மேடையிலே உயிர் விட்டவர். அந்தத் தியாகி விசுவநாததாசுக்காக மதுரை திருமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீட்டை வாங்கி 50 லட்ச ரூபாய் செலவிலே விசுவநாத தாஸ் நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது.

★ நம்முடைய இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அடிக்கடி என்னைத் துணைத்தெடுத்து அந்த “தொந்தரவுக்குள்ளே தோழி நான் சுகம் கண்டேன்” என்பதற்கு ஒப்ப அதனை ஏற்று (கிண்டியிலே காமராஜர் நினைவிடம்,

ராஜாஜி நினைவு மண்டபம், காந்தி மண்டபம், எல்லாம் இருப்பதற்கு அருகில்) தியாகிகள் மணி மண்டபம் 30 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுகிறது என்ற செய்தியையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

★ உ.வே.சா. நூலகத்தில் அவருடைய சிலை நிறுவுவதற்கு இந்த அரசு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதை யாரும் கேட்கவில்லை. பத்திரிகைகளிலே செய்தியைப் பார்த்தேன். சிலையை வைக்க முடியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்; சிலை வைப்பவர்கள் என்ற செய்தி ஏடுகளிலே வந்தது. உடனடியாக அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் அந்தச் சிலையை நிறுவுவதற்கு அரசு வழங்கியது.

★ “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்,” என்ற பாரதி மொழிக்கேற்ப பிற மொழிச் செல்வங்களைத் தமிழில் மொழி பெயர்த்திட வேண்டும் என்ற உணர்வோடு சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களைத் தமிழில் கொண்டு வருவதற்கு உதவும் வகையில் 96-97-ஆம் ஆண்டு முதல் புதிய திட்டம் ஒன்றை கழக அரசு ஏற்படுத்தி பிறமொழி நூல்களைத் தமிழிலும், தமிழிலே உள்ள சிறந்த இலக்கியங்களைப் பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடும் திட்டத்திற்கு 5 லட்ச ரூபாய் இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

★ விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் வழங்கப்பட்டது. அதனை 10-9-96 முதல் 500 ரூபாய் என்று அரசு உயர்த்தியது. அதோடு முடியவில்லை. பிறகு 10-10-96 முதல் அந்தத் தொகை பல தியாகிகளுடைய வேண்டுகோளுக்கு இணங்க மாதந்தோறும் 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன் மருத்துவப் படியாக 15 ரூபாயும் இந்த அரசினால் சேர்த்து வழங்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டையொட்டி இந்த உதவித்தொகை மேலும் உயர்த்தப்பட்டு 15-8-97 முதல் தியாகிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து அதே தியாகிகளுக்குத் தருகிற 3 ஆயிரம் ரூபாய் மொழிக் காவலர்களுக்கும் தரப்படும் என்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மொழிக் காவலர்களுக்கும் திங்கள்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

எந்த ஒரு முனையிலும் தமிழ் வளர்த்தவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய தொண்டு உண்டு என்பதை எடுத்துக் காட்டவும், தொடர்ந்து இந்தத் தமிழ்த் தொண்டினை ஆற்றுவோம் என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறவும்தான் இவற்றை நான் இங்கே குறிப்பிட்டிருக்கின்றேன்.

இங்கே நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் திருவள்ளுவருடைய அருமை பெருமைகளைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். இங்கே நம்முடைய பெரியவர் சாரங்கபாணி - பெரியவர் என்று சொல்லக் கூடாது, என்னை விட ஒரு வயது இளையவர்தான். தமிழில் பெரியவர் என்ற காரணத்தால் சொன்னேன் (பலத்த கைதட்டல்) அவர் உரை வேற்றுமை எழுதியிருக்கின்றார்கள். பேராசிரியர் உரையாற்றும்போது பலரும் திருக்குறளுக்கு அவரவர்களுடைய சிந்தனைக்கு ஏற்ப அவரவர்களுடைய எண்ணத்திற்கேற்ப உரை எழுதினார்கள் என்பதெல்லாம் திருக்குறளுக்கு வலு சேர்ப்பது, திருக்குறளுக்கு வளம் சேர்ப்பது என்ற கருத்துப்பட எடுத்துச் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்துக்கூட இந்தத் திருக்குறளுக்கு உரை காண்பதில் - ஒரு முறை நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார்கள். “பழைய காலத்து உரைகள் எல்லாம்

தவறாக, ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு எழுதப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொன்னார்கள்.

“தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.”

முதல் பதிப்பு 2000