உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திருவள்ளுவர் விழா

பகுதி 1 · 1 / 3

திருவள்ளுவர் விழா

தைப்பொங்கலைத் தொடர்ந்து இந்தத் தமிழர் திருநாள் தொடரில் திருவள்ளுவர் நாளை நாம் பெருமிதத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாளில் திருவள்ளுவர் விருது வழங்கியும், தமிழக வரலாற்றில் ஒரு பகுதியாக சி.இ. இராமச்சந்திரன் தலைமையிலே இயங்குகின்ற வரலாற்றுக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ‘சோழப் பெருவேந்தர் காலம்’ என்ற நூல் வெளியீட்டு விழா உரை நிகழ்த்தியும் சிறந்த நூல்களுக்குப் பரிசு என்ற வகையில் அந்த நூலாசிரியர்கள் 56 பேரை - பழைய காலத்தில் 56 தேசத்து ராஜகுமாரர்களைப் பாராட்டுவதைப் போல பாராட்டி, பரிசு வழங்கியும், முதிர்ந்த வயதுடைய தமிழ் அறிஞர் பெருமக்கள் நால்வருக்குத் திங்கள்தோறும் வழங்குகின்ற நிதியினை வழங்கியும் சிறப்புப் பெற்றுள்ள இந்த அரிய நிகழ்ச்சியில் உங்கள் அனைவரோடு நானும் கலந்து கொள்கின்ற வாய்ப்புப் பெற்றமைக்காகப் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

திருவள்ளுவர் விருதுபெற்ற சாரங்கபாணி அவர்களைப் பற்றி நம்முடைய பேராசிரியர் அவர்கள் குறிப்பிடும்போது அவர்கள் “குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். அதுதான் நல்லது

என்று கூடச் சொன்னார். ஆனால் சாரங்கபாணி அவர்கள் உரை வேற்றுமை கண்டவர் என்ற காரணத்தினால் பேராசிரியருடைய உரையிலேயிருந்து நான் கொஞ்சம் விலகிச் சென்றல்ல; ஓட்டிச் சென்று அவர் குடத்திற்குள்ளே இருக்கின்ற விளக்குதான்; ஆனால் அந்தக் குடம் கண்ணாடியில் செய்யப்பட்ட குடம் (பலத்த கைதட்டல்) மண் குடமாக இருந்திருந்தால், பித்தளைக் குடமாக இருந்தால் ஒளி வெளியே தெரியாது, எனவே இன்றுமுதல் அவரை கண்ணாடிக் குடத்திற்குள்ளே நாம் வைத்திருக்கிறோம் என்று சொல்லலாமே என்று கருதிக் கொண்டேன்.

அப்படிக் கண்ணாடிக் குடத்திற்குள்ளேயிருந்து ஒளி வழங்கிக் கொண்டிருக்கின்றவராக திருக்குறளுக்கு உரை இயற்றிய நூல்கள் மாத்திரமல்ல, திருக்குறளைப் பற்றிய ஆய்வு நூல்களை மாத்திரமல்ல, சங்க இலக்கிய நூல்கள் பலவற்றை தன்னுடைய அருந்திறனால் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள பெருமைக்குரியவர் சாரங்கபாணி என்கிறபோது; அவர் சொன்னார்; கலைஞர் கையினால் நான் இன்று இந்த விருது பெறுகின்ற பேற்றினைப் பெறுகிறேன் என்று; நான் சொல்கிறேன், அவை அடக்கத்திற்காக அல்ல, உண்மையைச் சொல்கிறேன். அவரைப் போன்ற தமிழ் அறிஞர்களுக்கு விருது அளிக்கின்ற பேற்றினை நான் பெற்றேன் என்று பெருமைப்படுகிறேன்.

(கைத்தட்டல்) அப்படி ஒரு நல்ல விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரையில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே 1967-ஆம் ஆண்டு இந்த அரசு அமைந்த காலந்தொட்டு மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் எத்தனையோ நற்செயல்களை ஆற்றியிருக்கிறது. அரும் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று முதலமைச்சராக ஆன அந்தக் காலக்கட்டத்திலேதான் தமிழர்களுடைய நீண்டகால கனவாக இருந்த; நாம் பிறந்த மண்ணுக்கு “சென்னை ராஜ்யம்” என்று இருக்கின்ற பெயரை மாற்றி இந்த மண்ணுக்கு உரிய பெயரை தமிழ் நிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என்று சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றது.

அந்தக் கோரிக்கையை பேரறிஞர் அண்ணா அவர்கள் நிறைவேற்றித் தந்தார்கள்.

யார் யார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தேவையில்லை என்றெல்லாம் வாதிட்டார்களோ அவர்களையெல்லாம் பேரவையிலே நிறுத்தி வைத்து அண்ணா அவர்கள் எழுந்து நின்று நான் மும்முறை சொல்வேன் ‘தமிழ்நாடு’ என்று, நீங்களெல்லாம் வாழ்க! வாழ்க! என்று சொல்ல வேண்டும் என்று கூறி, தமிழ்நாடு என்ற பெயர் தேவையா? என்று வாதிட்டவர்களையும் வாழ்க! வாழ்க! என்று சொல்ல வைத்த பெருமையும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு உண்டு.

அண்ணா காலத்திலேதான் தமிழர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் சிதைக்கப்படாமலிருக்க - தமிழ்மொழி எதிர்காலத்திலே அறவே வீழ்ந்து விட்டது என்ற நிலை ஏற்படாமலிருக்க இனிமேல் தமிழ்நாட்டிலே இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டந்தான் என்று அறைகூவலாக விடுத்து அறிவித்த பெருமையும் கழக அரசுக்கு அண்ணா தலைமையிலே அமைந்த அரசுக்கு உண்டு என்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள்.

அண்ணா அவர்களுடைய அடிச்சுவடைப் பின்பற்றி நாங்கள் - நானும், பேராசிரியரும் மற்றும் அமைச்சப் பெருமக்களும் ஆற்றிய தொண்டின் அடிப்படையிலே தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்காக எத்தனையோ நற்காரியங்களை ஆற்றி

வந்திருக்கின்றோம். இன்னும் ஆற்றிக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக நான் 67-இல் இருந்து அந்த நீண்ட கால சாதனையைச் சொல்ல விரும்பவில்லை, கடந்த 96-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வந்து - குறிப்பாக நான் நான்காவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்று இந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு இந்த அரசு என்னென்ன செய்திருக்கின்றது என்பதை கொஞ்சம் நீங்கள் கருதிப் பார்க்க வேண்டும்.

★ தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு புதிய அமைச்சகமே கண்டு அதற்கென்று ஒரு அமைச்சரையே நியமித்தது இந்த அரசுதான். (கைத்தட்டல்) இதுவரையில் இல்லாத ஒன்று தமிழகத்தில்.

★ மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை ராஜ்யம் என்று இருந்து தமிழ்நாடு என்று ஆகிவிட்ட பிறகு மெட்ராசோ, மதராசோ இருக்கக் கூடாது என்பதற்காக “சென்னை” என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டதும் இந்த ஆட்சியிலேதான் (கைத்தட்டல்).

அன்று 76-க்கு முன்பு ‘பூம்புகார்’ சிலப்பதிகாரத்தினுடைய சாயலாய், தமிழர்களுடைய வரலாற்றுப் பெட்டகமாய், கரிகால் பெருவளத்தான் ஆண்ட மூதூர் என்ற சரித்திரச் சான்றாய் விளங்கிய அந்த பூம்புகார் பட்டிணத்தைப் புதுப்பித்து பழைய பூம்புகாரை நிலை நாட்ட முடியாவிட்டாலும் கூட இயன்ற வரையில் இந்தப் பூம்புகாரைக் காணீர்! என்று அதைப் புதுப்பித்து இந்திர விழா ஆண்டுதோறும் எடுத்த ஆட்சி இந்த ஆட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

★ ஆனால் அந்த விழா இடையில் நின்றுபோனது. இப்பொழுது அதை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இந்த அரசுக்கு இருக்கின்றது. எனவேதான் பாழ்பட்டுப்போன பூம்புகாரில் ஒரு கோடி ரூபாய்

செலவிலே அதனைப் புதுப்பிக்கின்ற பணிகள் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பணிகள் முழுமையாக முடிவுற்றதும் இந்திர விழா அங்கே கோலாகலமாக நடைபெறும் என்ற நல்ல செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

★ இத்தகைய உணர்வுகளை ஊட்டிய அறிஞர் அண்ணா அவர்கள் கடற்கரையில் துயில்கின்றாரே அந்தச் சதுக்கத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் புதுமைகள் செய்யப்படுகின்றன. அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

★ காஞ்சியில் அறிஞர் அண்ணா அவர்களுடைய இல்லம் நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

★ வள்ளுவர் கோட்டம்; அதைப்பற்றி இங்கே பேசினார்கள். விருது பெற்ற சாரங்கபாணி பேசினார் - முனைவர் தமிழ்க்குடிமகனும் அதைப் பற்றி விளக்கினார். விளக்காமலே உங்களுக்குத் தெரியக் கூடியதுதான் வள்ளுவர் கோட்டம். ஆனால் அந்த வள்ளுவர் கோட்டம் ஐந்தாண்டுக் காலத்தில் என்ன பாடுபட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். நான் சொல்லவில்லை. முரசொலியிலே அல்ல. வேறு ஏடுகளிலே அல்ல, கல்கி, குமுதம், விகடன் போன்ற நடுநிலை ஏடுகளில் ஒரு கட்சியைச் சாராத நிலையிலே உள்ள ஏடுகளில் எல்லாம் வள்ளுவர் கோட்டத்தில் என்னென்ன அநியாயங்கள் நடைபெறுகின்றன என்பனவற்றைப் புகைப்படமெடுத்து வெளியிட்ட காட்சிகளை எல்லாம் நீங்கள் கண்டிருப்பீர்கள்.

நீங்களோ கண்டீர்கள். நானோ கண்டு கண்ணீர் விட்டேன். அந்த வள்ளுவர் கோட்டத்தை மீண்டும் புதுப்பித்து அது வள்ளுவர் கோட்டமாகவே இருக்க வேண்டும்; கோட்டம், ‘தோட்ட’மாகி விடக்கூடாது என்ற அந்த

உணர்வோடு 84.94 இலட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள காட்சியை இன்றைக்கு நீங்கள் காணுகின்றீர்கள்.

★ சென்னையிலே உள்ள தென்மொழிகள் புத்தக நிறுவனத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் இந்த அரசு நிதியுதவி வழங்கி இருக்கிறது.

★ சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 43.75 லட்ச ரூபாய் இந்த அரசு வழங்கியிருக்கிறது.

★ பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மன் கோட்டை கலனாகிக் கிடக்கிறது. அந்தக் கலனாகிக் கிடக்கின்ற கட்டபொம்மன் கோட்டையை புதுப்பிக்கும் பணி 25 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

★ கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கலைச் செல்வங்கள் பராமரிப்புக்காக 5 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

முதல் பதிப்பு 2000