உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திருவள்ளுவர் விழா

பகுதி 3 · 3 / 3

என்ற குறளுக்குப் பாரதிதாசன் சொன்ன விளக்கத்திற்கு முன் ஏற்கனவே அதற்காகத் தரப்பட்ட விளக்கம் என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனைத் தொழுது எழுகின்ற பெண், மழை பெய்யாமல் இருக்கின்ற காலத்தில் மழையே பெய் என்று சொன்னால் மழை பொழியும். இதுதான் பழைய காலத்திலே எழுதப்பட்ட உரை.

இந்தக் காலத்திலே கூட அந்தப் பழைய எண்ணத்தோடு எழுதப்பட்ட உரை இப்படித்தான், “தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனைத் தொழுது எழுகின்ற பெண் சொன்னால் மழை பொழியும்” என்று. இதனைச் சோதித்துப் பார்க்க முடியாது. ஒரு பெண்ணை அழைத்து ‘மழை பொழியச் சொல்’ என்று சொல்லி அந்த அம்மையார் ஆகாயத்தைப் பார்த்து ‘மழையே வா’ என்று சொல்லி மழை வராவிட்டால் அந்தப் பெண் மீது நாம் வைத்திருக்கின்ற அன்பு எப்படி எல்லாம் மாறும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஐயப்பாடே ஏற்பட்டுவிடும். அதனால்தான் பாரதிதாசன் சொன்னார்: அப்படி அல்ல அதற்குப் பொருள். தவறாக எழுதி விட்டார்கள். பெய்யெனப் பெய்யும் மழை என்றால், ஓர் உழவன் தன்னுடைய வயலுக்கு, குளத்திற்கு, ஏரிக்கு இவற்றுக்கெல்லாம் தண்ணீர் வேண்டும் என்று கருதுகிற நேரத்தில், மழை பெய்யாதா? என்று ஏங்குகிற நேரத்தில் அவன் பெய்ய வேண்டும் என்று எண்ணுகிற

நேரத்திலே பெய்கிற மழை எப்படிப்பட்டதோ அதைப் போன்றவள் அந்தப் பெண். தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனைத் தொழுகின்ற அந்தப் பெண், பெய்ய வேண்டும் என்று நினைக்கிற நேரத்திலே பெய்கின்ற மழைக்கு ஒப்பானவளே தவிர, அவள் சொன்னால் ஒன்றும் மழை பெய்துவிடாது என்று பாரதிதாசன் சொன்னார்.

அதைத்தான் - நான் குறளோவியம் தீட்டும்போது, அந்தப் பொருளைத்தான் - குறிப்பிட்டிருந்தேன். அது குறளோவியம் எழுதிய காலகட்டம்.

பிறகு திருக்குறளுக்கு உரையே எழுதினேன். புரட்சிக் கவிஞர் சொன்ன அந்த உரையைச் சற்று மாற்றத்தோடு நான் என்ன சொன்னேன் என்றால் - அப்போதெல்லாம்; ஏன்! இன்றைக்குக் கூட திருக்குறளைப் பாராட்டுகின்ற, போற்றுகின்ற பெண்கள் பலர், என்ன இருந்தாலும் பெண்களை அடிமையாக அல்லவா திருவள்ளுவர் சித்தரித்திருக்கிறார் என்று பெண்களைப் பற்றி வள்ளுவர் குறிப்பிட்டிருக்கின்ற சில குறட்பாக்களை எடுத்துக் காட்டுவார்கள்.

வள்ளுவரை அந்தப் பழிக்கு ஆளாக்கி விடக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். எனவேதான் நான் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்ற அந்தக் குறளுக்கு உரை கண்டபோது என்ன எழுதினேன் என்றால் தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனைத் தொழுது எழுகின்ற பெண் - பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழையைப் போல அடிமையாக இருப்பவள். பெண் உரிமையோடு இருக்க வேண்டும். அடிமை நிலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக அப்படி ஓர் உரையை நான் எழுதினேன்.

இப்படி உரைகள் பரிமேலழகர் எழுதிய காலத்திலிருந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காலம் வரை

அதற்குப் பிறகும் சில உரை ஆசிரியர்களால் மாற்றம் பெற்றிருக்கின்றன. இருந்தாலும் கூட திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர். எல்லோராலும் புகழப்படுபவராக எல்லோரும் அவர் எனக்கு உரியவர், எனக்கு உரியவர் என்று சொல்லக் கூடியவராக எல்லா மதத்திலே உள்ளவர்களும், என் மதக்கருத்துக்கள் அங்கே இருக்கின்றன. சமண மதக் கருத்து உண்டு என்று சமணர்களும், சைவ மதக் கருத்து உண்டு என்று சைவர்களும், புத்த மதக் கருத்து அங்கே இருக்கிறதென்று புத்தர்களும்; வைணவ மதக் கருத்து அங்கே இருக்கிறது என்று வைணவர்களும் எடுத்துக் காட்டுகின்ற அளவிற்கு எல்லா மதத்தார்களாலும் போற்றப்படுகின்றவர் திருவள்ளுவர்.

அந்தத் திருவள்ளுவருக்குத்தான் இந்த அரசு 76-ஆம் ஆண்டுக்கு முன்பே நாங்கள் ஆலோசித்து உலகத்திலேயே உள்ள சில சிலைகளோடு ஒப்பிடத்தக்க அளவிற்கு வள்ளுவருக்குச் சிலை அமைக்க வேண்டும் என்று கருதி குமரிக் கடல் ஓரத்தில் வள்ளுவருக்குச் சிலை அமைக்கத் திட்டமிட்டு அன்றைக்கே அது அறிவிக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாயின. வள்ளுவர் சிலை வைப்பதற்காகக் கல்லெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு 76-இல் ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால் அப்பணி நிறைவு பெறாமல் நின்று விட்டது.

பிறகு என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பொறுப்பேற்ற பிறகு அந்தப் பணியைத் தொடர எண்ணினார் - தொடங்கப்பட்டது, ஆனால் தொய்வு விழுந்து விட்டது. மேலும் மேலும் தொய்வு ஏற்பட்டது.

இப்போது நாங்கள் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கின்ற காலக்கட்டத்தில் வள்ளுவருடைய சிலையின் பணி அநேகமாக பெரும் பகுதி முடிந்து விட்டது. விரைவில் அந்தச் சிலை குமரிக்கடல் ஓரத்தில் நிறுவப்படும் (கைத்தட்டல்). 133 அடி உயரத்திலே திருவள்ளுவருடைய சிலை அங்கே நிறுவப்படும் என்ற

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை வள்ளுவர் விழாவிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றை நகைச்சுவைக்காக அல்ல; நம்முடைய தமிழ்க்குடிமகனைப் பற்றி அவர் இந்தத் துறையினுடைய அமைச்சராகப் பொறுப்பேற்ற காலந்தொட்டு தமிழ் வளர்க்க தமிழுக்குச் செல்வாக்குத் தேடித்தர அதைப் போலவே அறநிலையத் துறையிலே ஆலயங்களிலே நடைபெறுகின்ற கொள்ளைகளைத் தடுக்க, ஆலயச் சொத்துக்களை யார் யார் அபகரித்திருக்கிறார்களோ அவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்க அருமையாகப் பணியாற்றி வருகின்றார்.

வள்ளுவருடைய குறளிலே ஒரு குறள்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”

என்று. அந்தக் குறள் இப்போது எனக்கு நினைவுக்கு வருகின்றதென்றால் தமிழ்க்குடிமகனுடைய கட்டுரை ஒன்று ஒரு வார இதழிலே நான் படித்துப் பார்த்தேன். கோபித்துக் கொள்ள மாட்டார். அண்ணன்தானே என்று ஆத்திரப்படாமலே கவனமாகக் கேட்பார்.

ஒரு வார இதழில் படித்துப் பார்த்தேன். நான் பெற்ற இன்பம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்துக் கொண்டு வந்திருக்கிறேன் (பலத்த சிரிப்பு) ராணி பத்திரிகை, அதிலே அவர் சொல்கிறார். அவருடைய ஏக்கத்தைப் பாருங்கள்.

ஆம்! ‘பொங்கல் திருநாள்’ என்பதைச் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் இருக்கின்ற தமிழர்கள் ‘தமிழர் திருநாள்’ என்றே கொண்டாடுகின்றனர். சீனர்கள், மலாய்க்காரர்கள் எனும் பெரும்பான்மை இனத்தாரிடையே சேர்ந்து வாழவும் முன்னேறவும் வேண்டியுள்ள கட்டாயத் தேவை இருப்பதால், அங்குள்ள தமிழர்கள் ‘தமிழர் திருநாள்’ என்று கொண்டாடுவதில்

வியப்பில்லை. ஆம்! தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழக்கக் கூடாது என்றும், அதைத் தக்க வைத்துக் கொள்வதே தகுதி என்றும் கருதுகிறார்கள். அதனால் பொங்கல் திருநாளை முழு விருப்போடு கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்த எண்ணம் இருக்கிறதா? இருக்கிறது. சிற்றார்ப்புழத்தில் மட்டும் இருக்கிறது. மார்கழி முதல் நாளிலிருந்தே சிற்றார்ப்புழப் பெண்கள் பொங்கல் கொண்டாட அணியமாகி விடுகின்றனர்.

அணியம் என்றால் தயாராகி விடுகிறார்கள். அதாவது மார்கழி முதல்நாளே தைப் பொங்கல் கொண்டாட தயாராகி விடுகிறார்கள். இப்படிக் கட்டுரை எழுதிய நம்முடைய தமிழ்க்குடிமகன் அவர்கள் கட்டுரையை எப்படித் தொடங்குகிறார் தெரியுமா?

“புலர்காலைப்பொழுது புள்ளினங்கள் ஆர்த்தன. சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தேன். வழக்கம் போல-அப்புறந்தான் நினைவு வந்தது இன்று பொங்கல் நாள் என்று. அந்த நினைவு வந்ததும் துள்ளி எழுந்தேன். ‘தமிழர் திருநாள்’ என்பதே இதுதான். இதைக் கொண்டாட வேண்டுமே என்று எழுந்தேன்.”

இவர் சொல்கிறார் கிராமத்துப் பெண்களுக்கெல்லாம் மார்கழி முதல்நாளே பொங்கல் வரப்போகிறது என்று தெரியுமாம் (பலத்த சிரிப்பு). இவர் மாத்திரம் பொங்கல் அன்று காலையிலே சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தாராம், பிறகுதான் பொங்கல் என்பது நினைவுக்கு வந்ததாம்! (பலத்த சிரிப்பு).

நான் விடிய விடியத் தூங்கவில்லை, காலையில் பொங்கலாயிற்றே சீக்கிரம் எழுந்து புத்தாடை அணிந்து வருகின்றவர்களை எல்லாம் வரவேற்று வாழ்த்துச் சொல்ல வேண்டுமே என்று நான் விடிய விடியத்

தூங்கவில்லை. இவர் காலையில் வழக்கம்போல சோம்பல் முறித்து எழுந்தாராம்.

தமிழ் வளர்க்கின்ற தமிழ்க்குடிமகனே இப்படி இருந்தால்! (பலத்த கைதட்டல், சிரிப்பு) அப்புறம்தான் நினைவு வந்து இன்று பொங்கல் நாள் என்று. சூரியனைப் பார்த்த பிறகுதான் அவருக்கு நினைவே வந்திருக்கின்றது. எனவே இதை ஒரு வேடிக்கைக்காகத்தான் சொன்னேன். அதை அவரிடமும் சொன்னேன். அன்றைக்கே காலையிலே பொங்கல் வாழ்த்துக்காக எனது இல்லத்துக்கு வந்தார். வந்தவுடன் நான் கேட்டேன்; “என்ன, புலர் காலைப் பொழுதிலே சோம்பல் முறிக்கப்படி எழுந்தீர்களா?”

என்று கேட்டேன். அவரே சிரித்தார். “அண்ணா ஏதோ அப்படி எழுதி விட்டேன் விட்டுவிடுங்கள்” - என்றார். நான் விடுவதாக இல்லை. ஒரு தமிழ்க்குடிமகனைத் தனியாகத் திருத்தலாம். இவ்வளவு தமிழ்க்குடிமக்களையும் திருத்த வேண்டாமா? (பலத்த கைதட்டல்)

எனவே உங்களுக்கெல்லாம் பொங்கல் நாள் முதல் நாளே தெரிந்திட வேண்டும். முதல் நாள் தெரிந்தால்தான் வீட்டில் இருக்கின்ற அழுக்குகளையெல்லாம் தூய்மைப்படுத்த முடியும். அதுதான் போகி; போக்கிப் பண்டிகை! இருக்கின்ற அழுக்குகளை, குப்பைகளை, கூளங்களை எல்லாம் அகற்ற வேண்டும். அதைப்போல தமிழர்களுடைய வீட்டில், நாட்டில் தமிழ்ச் சமுதாயத்தில் பரவி விட்ட மூடப் பழமைகளை எல்லாம் போக்க வேண்டும். அந்தப் பொங்கலை நாம் கொண்டாட வேண்டும்.

எனவே முன்கூட்டியே விழித்துக் கொள்ளுங்கள் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

15-1-98 அன்று திருவள்ளுவர் விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000