தத்துவம்
பகுதி 2 · 2 / 3
என்றார் வள்ளுவர்.
பொய்மைகூட வாய்மையினிடத்திலே வைக்கப்பட்டு விடும். புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின் - யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத நன்மையை உண்டாக்குமென்றால் பொய் என்பது கூட வாய்மை என்ற இடத்திலே வைக்கப்பட்டு விடும் என்கிறார். அது எவ்வாறு?
நான் வள்ளுவரை வைத்தே உங்களுக்கு ஒரு நாடக ஓவியத்தை தீட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஒரு வேடன் வேகமாக ஒரு மானைத் துரத்தி வருகிறான். அழகான புள்ளிமான்குட்டி. அது துள்ளி ஓட வேண்டிய தோட்டத்தில் ஓட விடாமல் அதைக் கொன்றுவிட வேண்டும் என்கிற விருப்பத்தோடு வேடன் துரத்திவர, அது எங்கேல்லாமோ சுற்றி இறுதியாக வள்ளுவரின் இல்லத்திற்குள்ளே நுழைந்து விட, வாயிற்புறத்திலே உட்கார்ந்து குறள் தீட்டிக் கொண்டிருக்கிற வள்ளுவர் தன்னைக் கடந்து தன் வீட்டுக்குள்ளே மான்குட்டி சென்றதைக் காணுகிறார்.
பத்து நிமிடத்திற்குப் பிறகு வேடன் அங்கே ஓடி வருகிறான். ஓடி வந்து வள்ளுவரைப் பார்த்துக் கேட்கிறான். “இந்தப் பக்கம் ஒரு மான்குட்டி வந்ததா?” என்று.
பொய் சொல்லவே தீது என்று கருதுகிற வள்ளுவர் என்ன சொல்லி இருக்க வேண்டும்? “ஆமாம், வந்தது! வீட்டிற்குள்ளேதான் இருக்கிறது” என்று சொல்லி இருக்க வேண்டும். சொல்லவில்லை; சொன்னால் வேடன் நுழைந்து அந்த மான்குட்டியை இழுத்துச் சென்று கொன்று தின்று இருப்பான். எனவே “வரவில்லை” என்கிறார். வள்ளுவரா பொய் சொல்லுவார் என்று எண்ணிக் கொண்டு வேடனும் வேறு பக்கம் போய் விடுகிறான். அதற்குப் பிறகு வள்ளுவருடைய மாணவன் கேட்கிறான்.
“பெருந்தகையே, பொய்யே சொல்லாத தாங்கள் இப்படி ஒரு பொய் சொல்லுவதற்கு காரணம் என்ன?” என்று கேட்கிறான். அப்பொழுதுதான் வள்ளுவர் சொல்கிறார்: “நான் சொன்னது பொய்யா? உண்மையா - என்பதல்ல. வாய்மையா, அல்லவா என்பதை ஆராய்ந்து பார். பிறருக்குத் தீங்கு செய்யாத ஒன்றைச் சொன்னால், அதற்குப் பெயர் வாய்மை. எனவே
நான் சொன்ன பொய்யையும் அந்த வாய்மையினிடத்தில் வைக்கப்படும்:
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
என்றார்.
உண்மை வேறு! வாய்மை வேறு! அந்த உண்மை எப்படி இருக்க வேண்டும்? எது உண்மை? பச்சையப்பன் கல்லூரியில் தத்துவக் கலைக்கழகத்தில் கருணாநிதி பேசிக் கொண்டு இருக்கிறான் என்பது உண்மை! பேசியதாக நாளைக்குச் செய்தி வரும்! அது உண்மை! இவன் யார்? இவன் மனிதன்! அது உண்மை!
தந்தை பெரியார் அவர்கள் தத்துவம் பற்றி ஒருமுறை உரையாற்றிய பொழுது குறிப்பிட்டார்.
“தத்துவம் என்பது உண்மையென்றால் நான் ஒப்புக் கொள்கிறேன் உண்மைதான் என்பதை. ஆனால் யாராவது பச்சை உண்மையைப் பேசுகிறார்களா?” என்று பெரியார் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“பச்சை உண்மையை யாராவது பேசினார்களா?” என்று கேட்டுவிட்டுச் சொன்னார், “மனிதனைப் பார்த்தேன் என்று சொன்னால் சட்டை போட்ட, வேட்டி கட்டிய, கண்ணாடி அணிந்த துண்டு போட்ட ஒரு உருவத்தைத்தான் பார்க்கிறோம். அல்லது கோட்டு அணிந்த, சூட்டு உடுத்திய, பூட்ஸ் மாட்டிய தொப்பி வைத்துக் கொண்டிருக்கிற...”
(பலத்த ஆரவாரம்) நான் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் எங்கேயோ போகிறீர்கள். “பூட்ஸ் அணிந்த சூட் அணிந்த கோட்டு அணிந்த தொப்பி வைத்துக் கொண்டிருக்கிற” என்று சொன்னேன்! எனவே வேறெங்கும் தயவுசெய்து செல்லாதீர்கள். நான் அப்படி உங்களை இழுத்துச் செல்ல விரும்பவில்லை. அந்த ஈனத்தனமும் எனக்குக்
கிடையாது. (கைத்தட்டல்) “இப்படி உடைகள் அணிந்திருக்கிற உருவத்தைக்காட்டி இது மனிதன் என்று சொல்லுகிற நேரத்திலே அங்கே உண்மை வெளிப்படவில்லை.” பெரியார் சொல்கிறார். “மனிதன் என்றால் எந்த உடைகளுமற்ற ஒரு உருவத்தைக் காட்ட வேண்டும். இவன்தான் மனிதன் என்று காட்ட வேண்டும். அதை எப்படி இப்போது காட்ட முடியவில்லையோ, அதைப்போலத்தான் இந்த உலகத்திலே மக்களுக்கு உணர்த்த வேண்டிய பல உண்மைகளை நாம் உணர்த்தாமலே இருக்கிறோம்.
நான் பச்சையாகப் பல உண்மைகளைச் சொல்கிறேன். எனவே நான் இந்தச் சமுதாயத்திலே பலரால் கண்டிக்கப்படுகிறேன்; பல பேருடைய அதிருப்திக்கு ஆளாகிறேன்” என்று தந்தை பெரியார் அவர்கள் தத்துவப் பேருரையை ஒருமுறை ஆற்றிய நேரத்திலே குறிப்பிட்டது என்பது நினைவிற்கு வருகிறது.
இயற்கை ஞானம்தான் தத்துவம். தத்துவம் என்பது தனியான ஒன்றை மாத்திரம் குறிப்பது அல்ல. தத்துவத்திலே அரசியல் கருத்துக்கள் உண்டு! தத்துவம் சமுதாயத்தைச் சுற்றிச் சுழல்வதும் உண்டு. தத்துவம் பொதுவுடைமையை மணக்கச் செய்வதும் உண்டு. தத்துவம் நன்முறைகளை வரவேற்பதும் உண்டு! வன்முறைகளைக் கண்டிப்பதும் உண்டு!
மனிதன் பிறக்கும் பொழுது எந்தத் துணையோடும் பிறப்பதில்லை என்று சொல்லுகிறோம். அவனுடைய இறுதிவரை அவனோடு இருப்பது எவ்வளவு ஆயிர் நண்பர்களாக இருந்தாலும் நிழல் ஒன்றுதான் அவனோடு இருப்பது என்று சொல்கிறோம். இல்லை மனிதன் பிறக்கும்பொழுதே சேர்ந்து பிறந்து இறுதி வரையிலே அவனோடு சேர்ந்து இருப்பது ஒன்றே
ஒன்றுதான்! அதுதான் மரணம்! அதைப் போல வேறு யாரும் அவனுடன் சேர்ந்து இருப்பதே இல்லை. ஆனால் அந்த மரணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிற நேரத்தில் தத்துவவாதிகள் என்ன சொல்கிறார்கள்? வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். “மரணம் என்பது மனிதனுடைய உயிர் அவனது உடலிலே இருந்து பிரிந்து வெளியே சென்று விடுகிறது; அதுதான் மரணம்” என்று சொல்கிறார்கள்.
ஆனால் அந்த உயிர் போய்விடுகிறது என்று சொல்லப்படுவதை நாம் ஒத்துக் கொள்கிறோமா? உயிர் என்ற ஒரு சொல் புழக்கத்திலே இருக்கிறது. ஆனால் உயிர் போய் விடுகிறது - உயிர் நீங்கிவிடுகிறது என்றெல்லாம் நாம் வழக்கமாகச் சொல்லுகின்ற வாசகங்களாக இருக்குமேயல்லாமல் உயிர் எங்கே போகின்றது? எங்கிருந்தாவது வந்தால் அல்லவா அது இங்கிருந்து விடுவித்துக் கொண்டு போக வேண்டும்? உயிர் என்பது வருவதும் அல்ல போவதும் அல்ல.
ஒரு இயந்திரத்திலே இருக்கின்ற பல்வேறு விசைகள் எல்லாம் கூடி இயந்திரத்தை இயக்கச் செய்வதுபோல் மனிதனுடைய உடலிலே பல்வேறு உறுப்புக்கள் மனிதனை இயக்கிக் கொண்டு இருக்கின்றன. மனிதன் குறிப்பிட்ட ஒரு நாளில் காலையில் ஏழு மணிக்கோ எட்டு மணிக்கோ தன்னுடைய உயிரை போகச் சொல்லிவிட்டான் என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா? அல்லது எந்த உறுப்பிலும் எந்தவிதமான பாதகமும் ஏற்படாமல் ஒரு மனிதனுடைய உயிர் பிரிந்து விட்டது என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா, இல்லை!
ஈரலிலே கோளாறு வரலாம்; சிறுநீரகத்திலே கோளாறு வரலாம்; நரம்பியல் மண்டலங்களிலே கோளாறு வரலாம்; மூளை போன்ற
உறுப்பிலே நோய் நொடிகள் ஏற்படலாம். இருதயத்திலே நோய் ஏற்படலாம். இப்படி எங்காவது நோய் ஏற்பட்டு அது பரவி இறுதியாக இதயத்தினுடைய துடிப்புகள் நின்று, அது நின்ற காரணத்தினால் அது அழுத்தி வெளிப்படுத்தி மறுபடியும் உள்ளே இழுக்க வேண்டிய மூச்சு நின்று விட்டபிறகு மனிதனுடைய உயிர் அவனிடமே அடங்கி விடுகிறது அல்லாமல் அது எங்கிருந்தும் வரவுமில்லை. விடைபெற்றுக் கொண்டு போகவுமில்லை. அசைவு நின்று விடுகிறது!
அவ்வளவுதான்! இதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.
உயிர் என்ற ஒன்றை ஒத்துக் கொண்டால், பிறகு அதற்கு ஆத்மா என்கிற அணிகலனையும் பூட்டி அந்த ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அப்படிச் சாந்தியடைய வேண்டுமேயானால் என்னென்ன தான் தருமங்களைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளையும் உருவாக்கிக் கொண்டு அந்தத் தான் தருமங்களை யார் யாருக்குச் செய்ய வேண்டும், எவ்வளவு செய்ய வேண்டும் என்ற கணக்கையும் பார்த்து இவ்வளவையும் செய்கிறோம்.
ஆத்மா என்ற ஒன்றே இல்லை என்பது பகுத்தறிவுவாதிகளுடைய வாதம். நம்முடைய பேராசிரியர் முத்துராமன் அவர்கள் அதிலே வேறுபடக்கூடும். ஏனென்றால் என்னை நேர்மையை தினம் இந்த விழாவிற்கு வருக என்று அழைப்பதற்கான அழைப்பிதழைத் தர வந்தபொழுது அவர் என்னிடத்திலே வழங்கிய புத்தகத்தின் பெயர் - அவர் எழுதிய தமிழ் நூல் ‘சைவ சித்தாந்தம்’ என்பதாகும். எனவே நான் சொல்லுகின்ற இந்தக் கருத்துக்கள் அவருடைய கருத்துக்களுக்கு வேறுபாடானவையாக இருக்கலாம்.
வேறுபாடான கருத்துக்கள் இருப்பது தவறல்ல. எப்படி எனக்கு வேறு
பாடான கருத்துக்கள் உள்ள நூலை அவர் எனக்கு வழங்க உரிமை படைத்திருக்கிறாரோ அதைப் போல அவருக்கு வேறுபாடான கருத்துக்களை நான் வழங்குவதற்கும் அவர் எனக்கு உரிமை அளித்திருக்கிறார் என்றுதான் நான் எண்ணி உங்கள் முன்னால் கூறிக் கொண்டிருக்கிறேன்.
ஆத்மா உண்டென்று நம்மிடத்திலே சொல்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள்? அந்த ஆத்மா நம்மிடத்திலிருந்து பிரிந்து அலைந்து திரிந்து பிறகு இன்னொரு உடலில் புகுந்து மறுபிறவி எடுக்கிறது. அடுத்த ஜென்மம் எடுக்கிறது என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில் ஆண்டுதோறும் அந்த ஆத்மாவைத் திருப்திப்படுத்த மேல் உலகத்திலே இருக்கிற அந்த ஆத்மாவிற்காக நாம் இங்கே இருக்கிற புரோகிதரிடத்தில் திதி - திவசங்களைச் செய்து அவர்களிடத்திலே காய்கறிகளை, சொர்ணதானத்தை, கோதானத்தை இத்தனையும் வைத்து அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம்.
எவ்வளவு முரண்பாடு?
இந்த ஆத்மா இன்னொரு உடலிலே போய் அடுத்த ஜென்மம் எடுக்கிறது என்று சொல்லி ஒரு கருத்தையும் சொல்கிறோம். அதே நேரத்தில் மேலுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ள அதே ஆத்மாவை சாந்தப்படுத்த ஆண்டுதோறும் அதற்கென நம் வீட்டிலே புரோகிதரை வைத்து திதி - திவசம் செய்திட வேண்டும் என்றும் சொல்கிறோம். மறுபிறவி எடுத்த ஆத்மா பிறகு எங்கே மேல் உலகத்திலே உட்கார்ந்து கொண்டு இருக்கப் போகிறது, (சிரிப்பு) அதற்கு எதற்காக பிறகு ஆண்டுதோறும் திதி-திவசம்?
(கைத்தட்டல்)
இந்தப் பகுத்தறிவு வாதங்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத காரணங்களினால்தான் நாங்கள் பல நேரங்களிலே வெறுக்கப்படுகிறோம் அல்லது கண்டிக்கப்படுகிறோம்; கடுமையான வார்த்தைகளால் தாக்கப்படுகிறோம்.
தத்துவத்தை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம், அது ஒரு இரும்புத் துண்டு போன்றது. இரும்புத்துண்டை வீரம் செறிந்தவர்கள் பயன்படுத்தக் கூடிய போர் வாளாகவும் செய்யலாம், சம்மட்டியாகவும் அமைக்கலாம். ஆணியாகவும் செய்யலாம். அதைப் போலத்தான் தத்துவத்தை அவரவரும் தங்கள் இயல்பிற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். தத்துவ மார்க்கங்கள் ஆண்டவன் வழியிலே செல்கிற மார்க்கங்களாகவும் மத வழியிலே செல்லுகின்ற நிலையிலும், பகுத்தறிவு வழியிலே மட்டும் பயன்படுத்தப்படுவதாகவும் உலகில் பல மேதைகளால் கையாளப்படுகின்றன.
அப்படிப்பட்ட தத்துவக் கோட்பாடுகளைப் பயிலுகின்ற மாணவர்கள் அனைத்தையும் கற்றிட வேண்டும். எல்லா மலரிலும் வண்டு சென்று தேனை சேகரிக்கிற காரணத்தினாலே தான் தேனுக்கு அதிகமான சக்தி உண்டு என்கிறார்கள். காரணம் பல்வேறு மலர்களிலே வண்டு சென்று அமர்ந்து அந்த மதுவினை சேகரிக்கின்ற காரணத்தால் தேன் சக்திவாய்ந்த ஒரு மருந்து என்று கருதப்படுகிறது. அதைப் போலப் பல்வேறு கருத்துக்களையும் மாணவர்கள் உய்த்து உணர வேண்டும்.
மலர்களிலே - பல மலர்களிலே மொய்க்கின்ற வண்டாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி விட்டான் (ஆரவாரம்) என்று எண்ணிடாமல் தயவுசெய்து உவமையைத் தத்துவத்தோடு நிறுத்துங்கள். (பலத்த ஆரவாரம்)
