தத்துவம்
பகுதி 1 · 1 / 3
தத்துவம்
கரும்பினை சுவைப்பதற்காக எறும்புகள் மொய்ப்பது உண்டு! அந்தக் கரும்பினையே பிழிந்து சாறாக வடிக்கின்ற கரும்பு ஆலைகளும் உண்டு! நான் இப்பொழுது கல்விச் சாலைக்கு வந்திருக்கிறேனா? கரும்பு ஆலைக்கு வந்திருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை! (கைத்தட்டல்)
என் உடலில் உள்ள இரத்தமெல்லாம் வியர்வையாகப் பெருகிட உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன்.
நீண்ட காலத்திற்கு முன்னர் கட்டப்பட்ட இந்த நெடிய மண்டபம் இப்படிப்பட்ட விழாக்களை இனிமேல் தாங்காது என்பதையும் வெகு விரைவிலே இந்த நெடிய மண்டபத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதையும் தொடர்புடையவர்களுக்கெல்லாம் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
என்பால் நீங்கள் கொண்டிருக்கிற அன்பும் ஆர்வமும், பற்றும் பாசமும் எவ்வளவு என்பதை கல்லூரியினுடைய முகப்பிலிருந்து நான் இறங்கியது தொடங்கி இந்த மேடையிலே வந்து என்னை நீங்கள் தாக்கிப் போட்டது வரையில் (கைத்தட்டல்) உணர்ந்தே இருக்கிறேன்.
நான் இந்தக் கல்லூரிக்கு வருவது என்பதும் மாணவர்களுடைய பேரவைகளை - தமிழ் மன்றங்களை
துவக்கி வைப்பது அல்லது அவற்றின் நிகழ்ச்சிகளில் கருத்துரை ஆற்றுவது என்பதும் புதுமையானது அல்ல.
ஆண்டுக்கு ஆண்டு என்னை அழைக்கின்ற கல்லூரிகளில் ஒன்றாகப் பச்சையப்பன் கல்லூரியும் திகழ்கிறது என்பதை அறிவேன். நான் ஆண்டு கொண்டு இல்லாவிட்டாலும் (கைத்தட்டல்) ஆண்டுக்கு ஆண்டு என்னை அழைக்கிறார்கள்.
இந்தத் தொடக்க விழாவிற்கு வர வேண்டும் என்று என்னை நீங்கள் அழைக்க வந்த பொழுது உங்களுடைய ஆர்வத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் உத்வேகத்தையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எனவேதான் கொஞ்ச நாட்களை ஒத்திப் போடலாம் என்று சொன்னாலும் உங்கள் முன்னால் அது பயன்படாது - பலிக்காது என்று புரிந்துகொண்டு உடனடியாக நாளைக் குறித்துத் தந்தேன்.
இந்தப் பதினெட்டாம் நாள் கட்டாயம் நீங்கள் பேசிட வேண்டும் என்று அன்புக்கட்டளை பிறப்பித்தீர்கள். என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்னும் அமைதியான முறையில் என்னை இந்த மண்டபத்திற்குள்ளே அழைத்து வந்திருப்பீர்களேயானால் இவ்வளவு களைப்பிற்கு நான் ஆளாகி இருக்க மாட்டேன்.
வியர்வை சிந்த உழைப்பவர்கள் உண்டு. வியர்வை சிந்தப் பாடுபடுபவர்கள் உண்டு. பேசிக் கொண்டே இருக்கும் பொழுது நேரமாக நேரமாக உணர்ச்சி பொங்கி எழுந்த காரணத்தால் வியர்வை சிந்துவதும் உண்டு. ஆனால் நான் மேடைக்கு வருவதற்கு என் உடலில் இருந்து ஒரு வியர்வை ஆறே பெருகிக்கெடுத்து ஓட வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியிருக்கின்றீர்கள். ஆனால் அந்த வியர்வைத்
துளி ஒவ்வொன்றிலும் உங்களுடைய அன்பு கலந்த இரத்தத் துளி ஒளிவிடுவதை என்னால் உணரமுடிகிறது. (பலத்த கைத்தட்டல்)
நீங்கள் என்னிடத்திலே கொண்டு இருக்கின்ற பேரன்பிற்கு எப்படி நன்றி செலுத்துவது என்றே எனக்குப் புரியவில்லை.
தமிழகத்திலே பல்வேறு கல்லூரிகளில் நடைபெறுகின்ற பலதரப்பட்ட துவக்க விழா, சிறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற வாய்ப்பினை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன். மாணவர்கள் எதிர்காலத்தைப் பூக்க வைக்கின்ற சமுதாயம், மாணவர்களை ஊக்கப்படுத்துவது என்னுடைய கடமை. எனவே நான் அந்தக் கடமை தவறாமல் உங்களுடைய அழைப்பினை ஏற்று இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்கிறேன்.
தத்துவப் பேரவையினுடைய துவக்கவிழா என்பதால் நான் எதிர்பார்த்தேன். பேராசிரியர் டாக்டர் முத்துராமன் அவர்களும் கல்லூரியினுடைய முதல்வர் டாக்டர் சண்முகநாதன் அவர்களும் உரையாற்றி அவர்களுடைய உரையினையும் நீங்களும் நானும் கேட்டு இடையிலே என்னை அழைத்துவந்த காரணத்தால் ஏற்பட்ட களைப்பினையும் கொஞ்சம் போக்கிக் கொண்டு பேச எழலாம் என்று இருந்தேன். ஆனால் மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படுத்திக் கொண்டுதான் நான் உங்கள் முன்னால் பேசக்கூட துவக்கம் செய்ய வேண்டிய நிலமை எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வளவு அன்பினை நீங்கள் பொழிகிறீர்கள். ஆனால் இந்த அன்பினை நீங்கள் அமைதியாகக் கட்டுப்பாடாக என்னிடத்திலே காட்டியிருப்பீர்களேயானால் இன்னும் இந்த விழா சிறப்புற அமைந்து இருக்கும்.
“உனக்கு வயது ஐம்பத்தியேழு ஆகிறது; நீ அப்படித்தான் அமைதிபற்றிச் சொல்வாய். நாங்களோ இருபதையும் எட்டாத வாலிப வயதினர். எங்கள் வயதில் நீயும் இப்படித்தான் இருந்திருப்பாய்; இந்தத் துடிப்புத்தானே நாட்டிற்குத் தேவை! சமூகத்திற்குத் தேவை! மொழியை வளர்க்கத் தேவை! இந்தத் துடிப்பைத்தானே நீ கூட மானசீகமாக விரும்புகிறாய். இருந்தாலும் எங்கள் முன்னால் இவ்வளவு துடிப்புக் கூடாது என்று பொய் சொல்கிறாயே, பொருத்தம்தானா?”
என்று உங்களுடைய விழிகள் என்னைப்பார்த்து பேசுவதை, கேட்பதை நான் உணராமல் இல்லை!
துடிப்புத் தேவதான்! அந்தத் துடிப்பு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட, துடிப்பாக இருந்திடல் வேண்டும். இராணுவ வீரர்களுக்குக்கூட விறுவிறுப்பும் துடிப்பும் தேவை. ஆனால் அவர்கள்கூட ஒருவர் மேல் ஒருவர் ஏறி மிதித்துத்தான் கொண்டே போவார்களேயானால் போரிலே வெற்றியை எதிரிகளை கைமேல் கொடுத்துவிட நேரிடும். ஆகவேதான் கட்டுப்பாடு தேவை என்பதை நான் எடுத்துரைத்துக் கொள்கிறேன்.
மனித சமுதாயம் தொடக்கத்தில் கட்டுப்பாடற்ற முறையிலேதான் வளர்ந்தது. கட்டுப்பாடும் ஒழுங்கும் நீதியும் மனித சமுதாயத்திலே ஏற்பட வேண்டும் என்பதற்காகப் பல பெரியவர்கள் அரிய கருத்துக்களை எல்லாம் எடுத்துக் கூறி இருக்கின்றார்கள். கட்டுப்பாடு என்பதும் தத்துவத்திற்குள்ளே அடங்குகின்ற ஒன்றுதான். தத்துவத்திலே அடங்காத ஒன்றல்ல. தத்துவம் என்றாலே பாரதக் கதையிலே வருகின்ற பவளத்தீவிற்கு பார்த்திபனை அனுப்புவதாக படிக்கின்றோமே அதைப் போல படாத பாடுபட்டு பலரை வென்று கொண்டு வர
வேண்டிய பவளக்கொடி அல்ல தத்துவம் என்பது. அதைப்போல பாரிஜாத மலருமல்ல. பல இன்னல்களுக்கு இடையே கொய்துவர வேண்டிய ஒன்றுமல்ல. அதைப் போலவே பல கடல் தாண்டி பல பொய்கைகளிலே புகுந்து தாமரைத் தண்டிலே நுழைந்து பாதாளத்திற்குச் சென்று அங்கே கட்டப்பட்டிருக்கிற பயங்கரமான குகைக்குள்ளே நுழைந்து அந்தக் குகையிலே எங்கோ ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருக்கின்ற ஒரு சிமிழைத் திறந்து அந்த சிமிழுக்குள் இருக்கின்ற வண்டைப் பிடித்து அழித்தினால் தான் மயில் இராவணனுடைய உயிர் போகும் என்று புராணத்திலே எழுதி இருக்கிறார்களே, அப்படிக் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க வேண்டிய கருவண்டும் அல்ல தத்துவம் என்பது!
அது நம்முடைய வாழ்க்கையிலே சாதாரணமாகத் தென்படக்கூடிய ஒன்றுதான். அதை தமிழிலே மெய்ப்பொருள் இயல் என்று கூறிவிட்டாலோ அல்லது உண்மை என்று உரைத்துவிட்டாலோ எல்லோருக்கும் சாதாரணமாகத் தெரியும்.
சில விஷயங்கள் சாதாரணமாகத் தெரியக்கூடாது என்பதற்காகவே அவை வேறுமொழிகளிலே சொல்லப்பட்டு யாருக்கும் புரியாத ஒன்றாக அது நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்கிற நம்பிக்கையின்மையை ஏற்படுத்தக் கூடியதாக ஆக்கப்பட்டு விட்டன. அந்த வரிசையிலே இடம் பெறக்கூடிய ஒரு சொல்தான் தத்துவம் என்பதாகும்.
தண்ணீர் கொடு என்று சொன்னால் இன்னல்ல ஒரு காலத்திலே அது கொச்சையாகக் கேட்பதாகும். “ஜலம்” கொண்டுவா; “தீர்த்தம்” எடுத்துவா இப்படிச் சொன்னால்தான் கெளரவமாகக் கேட்பதாகப் பொருள். ஆகவேதான் உண்மை என்று மிகச் சாதாரணமாக உச்சரிக்கக்கூடிய அவர்கள் விரும்புகின்ற,
கலைச்சுவையோடு உச்சரிக்க வேண்டுமேயானால் மெய்ப்பொருள் இயல் என்று சொல்லக்கூடிய ஒன்றைத்தான் தத்துவம் என்று சொல்லுகிறோம். அது மிக மிகச் சாதாரணமானது. அதே நேரத்தில் சாதாரணமானது தானே என்று அதை அலட்சியப்படுத்தி விடவும் முடியாது.
நம்முடைய வாழ்க்கையிலே தொடர்ந்து தொய்வு இல்லாமல் இணைந்து பிணைந்து இருக்கின்ற ஒன்றுதான் தத்துவம். தத்துவத்தை உண்மை என்று பொருள் கொள்கிற நேரத்தில் உண்மை வேறு - வாய்மை வேறு என்பதையும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும். வாய்மை என்பதற்கு வள்ளுவர் தருகின்ற பொருளே அழகானதாகும், அற்புதமானதாகும்.
உண்மையும் - வாய்மையும் ஒன்றுதான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. இன்னமும்கூட எண்ணிக் கொண்டிருக்கிறவர்களும் உண்டு! உண்மை வேறு! வாய்மை வேறு!
வாய்மை என்பது பிறருக்குத் தீங்கு இல்லாமல் சொல்லப்படுகின்ற ஒன்றிற்கு பெயர். யாருக்கும் எந்தவிதக் கெடுதியும் வராது இந்த வார்த்தையினால் என்கிற அந்த உறுதியோடு சொல்லப்படுகின்ற வார்த்தைகள் வாய்மையின் பால் வைக்கப்படுகிறது. உண்மை அதற்கு அடுத்த கட்டம்தான்.
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
