தத்துவம்
பகுதி 3 · 3 / 3
அப்படி நாம் அறிந்து கொள்ள வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, ஆராய வேண்டிய கருத்துக்களை எல்லாம் நாம் அறிந்து எப்படி அருமருந்தாக - தேன் பயன்படுகிறதோ அதைப் போல நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தியாக வேண்டும்.
இதுதான் முடிந்த ஒன்று என்றல்ல. இன்னும் ஆராய வேண்டிய - சிந்திக்க வேண்டிய பல கருத்துக்கள் நாட்டிலே இருக்கின்றன. அவைகளுக்கு நம்முடைய நேரத்தை - நினைப்பை செலவழித்தாக வேண்டும்.
தத்துவம் நாம் இங்கு எடுத்துக் காட்டிய மனித உணர்வுகளோடு - கடவுள் - மத - அறிவியக்க வாதங்களோடு நின்று விட்டதா என்றால் இல்லை. மனித சமுதாயம் தோன்றுவதற்கு முன்பு சூரியனிலிருந்து பூமி ஒரு கோளாக வெடித்துச் சிதறி, நெருப்புப் பிழம்பாக இருந்து எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நெருப்பின் ஜ்வாலை அடங்கி இன்னமும் பூமியின் மத்திய பாகத்திலே அந்த நெருப்பு இருக்கிற காரணத்தால் அது எரிமலையாகக் குமுறுகிறது என நிலநூல் கலையைப் படிக்கின்ற நாம் உணர்ந்திருக்கிறோம்.
பூமியிலே மனித ஜீவன்கள் என்றோ தோன்றின என எண்ணும் பொழுது மனித உயிர்களுக்கு முன்பு மிருகங்களும், மிருகங்களுக்கு முன்பு பூச்சி புழுக்களும் தோன்றின என்பதும் அதனுடைய பரிணாம வளர்ச்சிதான் மனிதன் என்பதும் இந்த மனிதனுடைய அமைப்பு முறைகளும், உறுப்புக்களும்கூட இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றக்கூடும் என்பதும் இன்றைக்கு நம்முடைய அறிவியக்க விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்ற பேருண்மைகள்!
முதலில் கால்களிலே திரிந்தார்கள். ஆடையில்லாமல் திரிந்தார்கள். ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் கூச்சமில்லாமல் திரிந்தார்கள். ஒருவரோடு ஒருவர் உடல் உறவு கொள்கிறார்கள். உடல் உறவு கொண்டவர்கள் சிறிய சிறிய குடும்பங்களாக ஆனார்கள். அந்தக் குடும்பங்கள்கூட தாய் என்றும் தந்தையென்றும் உறவுமுறை பாராமல் ஒருவரோடு ஒருவர் உடல் உறவு கொண்டார்கள். குடும்பத்திலே ஒருவன் இறந்துவிட்டால் அந்த நேரத்திலே குடும்பத்திலே இருப்பவர்கள் பசித்து இருந்தால் பசித்த நேரத்திலே மானோ, புலியோ வேறு மிருகங்களோ தின்பதற்கு கிடைக்காவிட்டால் தன் குடும்பத்திலே செத்துப்போன அந்தப் பிணத்தையே தின்றார்கள்.
இப்படி உருவான சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விரிவடைந்து, விரிவடைந்த பிறகு தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிற நேரத்திலே யார் வலிமை மிக்கவனாக இருக்கிறானோ அவன் நம்மைக் காப்பான் என்று நம்பி அந்த வலிமையானவனிடத்திலே அந்தக் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுகிற உரிமையை விட்டு அப்படி அவர்களைக் காத்தவன் காவலனாகி அந்தக் காவலனே அரசராகி, அன்றைக்கு ஆன காவலன்தான் இன்றைக்கும் நாட்டை ஆளுகின்றவனை காவலன் என்று அழைக்கின்ற அளவிற்கு மனித சமுதாயம் உருவாகியது.
அப்படி அமைந்த காவலன் சில நேரங்களில் மற்ற பிரிவினரை பக்கத்திலே இருக்கிற வேறு குழுக்களை அடக்கி ஆளவும், அதன் காரணமாகப் போர்மூண்டு, அந்தப் போருக்குத் தேவையான கற்காலக் கருவிகளும் அதற்குப் பிறகு இடைக்காலப் போர்க்கருவிகளும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிறகு யார்
ஒருவன் அதிகப் போர்ப் படைக்கலன்களை உடையவனாக இருக்கிறானோ அவன்தான் வலிமை வாய்ந்தவன். அவனை யாரும் வெல்ல முடியாது என்கிற ஆதிக்க புரிகளும் உலகத்திலே உருவாயின. கட்டுப்பாடற்ற ஒரு சமுதாயத்திற்கும் கட்டுப்பாடுள்ள ஒரு சமுதாயத்திற்கும் இடையே தோன்றிய மேதைகள்தாம் அரசியல் தத்துவத்தை உலகிற்கே போதித்தார்கள்.
ஐரோப்பியக் கண்டத்தினுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் 15-ஆம் நூற்றாண்டு வரையிலே மூடநம்பிக்கையிலே ஆழ்ந்து போயிருந்தது என்றும் 16-ஆம் நூற்றாண்டிலே தான் ஐரோப்பா மறுமலர்ச்சி பெற்ற ஐரோப்பாவாக தோன்றிடத் தொடங்கியது என்றும் அதனை ஆங்கிலத்திலே “Period of Renaissance” என்று அழைத்தார்கள் என்றும் நாம் படிக்கிறோம்.
15-ஆம் நூற்றாண்டு வரையிலே மூட நம்பிக்கையிலே அமிழ்ந்து கிடந்த ஐரோப்பா மறுமலர்ச்சியின் காரணமாக 20-ஆம் நூற்றாண்டில் உலகத்திற்கே ஒளி பாய்ச்சக்கூடிய அளவிற்கு வளர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.
அரசியல் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்த நிலையைத்தான் “Natural Condition” அதாவது கட்டுப்பாடு இல்லாமல் இயற்கையின் வழியின்படி மனிதர்கள் அவரவர்கள் நடந்து கொண்ட தன்மை “Natural Condition” என்று இருந்தது.
கட்டுப்பாடு உள்ள தன்மை ஏற்பட்ட பிறகுதான் “Political Condition” என்ற அளவிற்கு ஒரு அரசியல் தன்மை அன்றைக்கு ஏற்பட்டது. அந்தக் கட்டுப்பாட்டை உருவாக்க அரசு தேவைப்பட்டது. அந்த அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி 16வது, 17வது நூற்றாண்டிலே ஹாப்ஸ், லாக், ரூசோ என்ற மூன்று
மேதைகளும் அரிய கருத்துக்களை வெளியிட்டார்கள். அதிலே ஹாப்ஸ் முதன்முதலாக வெளியிட்ட கருத்து அவருடைய காலத்தை ஒட்டிய கருத்தாக இருந்தது. மன்னன் ஆட்சிக்கே முழு உரிமை வைத்து அந்த மன்னனுக்கு அனைவரும் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். மன்னனுக்கு வரையறையற்ற அதிகாரம் இருக்க வேண்டும் என்கிற அந்த அடிப்படையிலே ஹாப்ஸ் கருத்துக்களைத் தந்தார். அவருக்குப் பிறகு வந்த லாக்; மக்களால் மன்னர்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.
அப்படி வழங்கப்பட்ட உரிமைகளை மன்னர்கள் துஷ்பிரயோகம் செய்தார்களானால் மக்கள் மன்றங்களின் மூலம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தினை லாக் அறிவித்தார்.
அதற்குப் பிறகு ரூசோ! அவர் வாழ்ந்த கருத்து அளித்த காலம் பிரெஞ்சு நாட்டிலே 14-வது லூயி கொடுங்கோல் புரிந்து கொண்டிருந்த காலம்! எனவே அவர் மன்னராட்சியே கூடாது. மக்கள் ஆட்சிதான் தேவை என்ற கருத்தை அன்றைக்கு வெளியிட்டார்.
இந்த மூன்று கருத்துக்களில் இன்றைக்கு ரூசோவின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றாலும்கூட ஹாப்ஸினுடைய கருத்து அறவே ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும்கூட இடையிலே உள்ள லாக்கினுடைய கருத்தும் அறவே நீக்கி விடப்படவில்லை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
லாக், என்ற அந்த மேதையினுடைய கருத்தில் ஒரு அரசு இருக்கும். அந்த அரசை ஒழுங்காக இயக்க சில மன்றம் இருக்கும். அந்த மன்றங்களின் மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும். இதுதான் லாக்கினுடைய கருத்து. அந்தக் கருத்தை இன்றைக்கும் ஏற்றுக் கொள்கிற,
உலகத்திலே ஒரு நாடாக இங்கிலாந்து விளங்குகின்றது; இங்கிலாந்தின் பாராளுமன்ற முறைதான் உலகத்திலே இன்றைக்கும் பல நாடுகளிலே பல்வேறு வடிவங்களில் செயல்படுகிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இங்கிலாந்திலே ஒரு அரசன் அல்லது அரசியார் இருக்கிறார்கள். ஒரு அமைச்சரவையும் இருக்கிறது. பாராளுமன்றம் இருக்கிறது; பாராளுமன்றம் இரண்டு பிரிவாக இருக்கிறது; “House of commons”, - “House of lords” அதாவது பொதுமக்கள் சபை-பிரபுக்கள் சபை என்று இரு பிரிவாக இருக்கிறது. இங்கே இந்தியாவை எடுத்துக் கொண்டால் அரசா அல்லது அரசி என்பதற்குப் பதிலாக இங்கே ஒரு “President” இருக்கிறார். அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்.
ஜனாதிபதி அங்கே வம்ச வழியாக வருகின்ற அரசரைப் போல அல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களாகக் கிட்டத்தட்ட இங்கிலாந்து நாட்டினுடைய பாராளுமன்ற முறையை நெருங்கி வருகிற நிலையில் ஜனாதிபதி பகுதியும் பாராளுமன்ற முறைகளும் இந்தியாவில் இருக்கிறது. இப்படிப் பல நாடுகளில் இருக்கின்றன.
இந்த முறைகள் எல்லாம் தேவையில்லை; துப்பாக்கி ஏந்தியவன்தான், இராணுவத்தைக் கைப்பற்றியவன்தான் நாட்டாளுகின்ற வல்லமை படைத்தவன் என்கிற சர்வாதிகார முறையை உருவாக்குகிற நாடுகளும் இன்றைக்கு அரசியல் தத்துவத்தினுடைய கண்ணிலே படாமல் இல்லை.
அப்படிப்பட்ட நாடுகளும் இருக்கின்றன. ஜனநாயக நாடுகளும் இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் ஆளுகிறார்கள்!
“நானே ராஜா!” என்று தானே நாட்டாளுபவராக ஆகிக் கொள்கிறவர்களும் ஆளுகிறார்கள்! “நானே ராஜா” என்று ஆள்பவர்கள் அத்தனை பேரும் மோசமானவர்களாகவும் இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரும் நல்லவர்களாகவும் இருந்துவிடுவதில்லை. (ஆரவாரம்) இதை நாம் எண்ணிப் பார்க்கிற காரணத்தினால் நமக்கு சர்வாதிகார முறைதான் தேவை என்கிற முடிவிற்கு வருகிறோமா என்றால் நான் அறிந்தவரையிலே அந்த அரசியல் தத்துவத்திற்கு நாம் யாரும் துணை போக முடியாது.
மக்களுக்கு இடையிலே எத்தனையோ பூசல்கள், பூசல் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நாட்டிலே வறுமை மிஞ்சிவிடுமேயானால் அந்த நாட்டிலே வேலை இல்லாத நிலைமை ஏற்பட்டு விடுமேயானால், படித்துப் பட்டம் பெற்றவர்கள் தங்கள் எதிர்காலம் என்ன என்கிற நீண்ட ஏரி நெருப்பு பெருமூச்சுக்கு ஆளாகி விடுவார்களேயானால் அவர்கள் அந்த நாட்டிலே புரட்சித் தீப்பொறிகளாக ஆகி விடுகிறார்கள். அது அவர்களுடைய குற்றமா? அவர்கள் அப்படி மாறுவதற்கு இடம் தந்த நிலை வைத்த நம்முடைய குற்றமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நச்சுப் பாம்புகள் ஓட்டப்பட வேண்டும். அது நம்முடைய வீட்டிற்குள்ளே வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். சரியான எண்ணம்தான். நச்சுப் பாம்பு கூடாதுதான். ஆனால் நச்சுப் பாம்பு வந்து தங்குவதற்கு ஏற்ற புதர்களை நம் வீட்டிற்குப் பக்கத்திலேயே வைத்துவிட்டு புற்றுகளையும் நம் வீட்டிற்கு அருகாமையிலே அனுமதித்துவிட்டு நான் நச்சுப் பாம்பை ஒழித்தே தீருவேன் என்று சொன்னால்
ஒழிக்கப்பட வேண்டியது புதர்களா? அல்லது பாம்புகளா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் அண்மையிலே டில்லியிலே ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டத்திலே பேசுகையிலேகூடக் குறிப்பிட்டேன்.
“வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் வறுமையால் பல்வேறு துன்ப துயரங்களால் ஆட்படுத்தப்பட்டு நாம் ஏன் இந்த நிலைக்கு ஆளானோம்? என்று கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களுடைய உள்ளங்களில் சரியான கேள்விகள் எழுகின்றன. ஆனால் பாவம் தவறான விடைகளைத் தேடிப் போகிறார்கள்” என்று குறிப்பிட்டு விட்டு அந்தக் குழுக்கூட்டத்திலே சொன்னேன்: “நாம் இந்த தீவிரவாத வன்முறை எப்படி ஒடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோமோ அதைப் போலவே இந்த வன்முறையும் தீவிரவாதமும் ஏற்படக் காரணமாக இருக்கின்ற தீவிரமான பழமைவாதிகளின் எண்ணங்களும் கருத்துக்களும் ஒடுக்கப்பட்டாக வேண்டும்” என்ற கருத்தை நான் அங்கே எடுத்துச் சொன்னேன்.
எனவே தத்துவம் என்பது ஏதோ கடவுளைக் காணுகின்ற - மதத்தைக் காணுகின்ற - சொர்க்கலோகத்துக்கு வழி காட்டுகின்ற ஒன்று என்று யாரும் கருதிடத் தேவையில்லை.
தத்துவம் நாம் நிலைப்படியில் இடித்துக் கொள்ளும் போது தோன்றுகிறது. அன்றாடம் நாம் நடந்து செல்லுகின்ற பாதையைப் போன்றது அது! தத்துவம் நாம் உலவுகின்ற கடற்கரையைப் போன்றது. தத்துவம் நம்மீது படுகின்ற வெயிலைப் போன்றது. தத்துவம் நம்மீது வீசுகின்ற தென்றலைப் போன்றது! தத்துவம்
அன்பு கொண்டது! அதே நேரத்தில் தத்துவம் சில சமயம் கடுமையாகவும் காட்டி தரக் கூடியது! இந்தத் தத்துவம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருப்பது கடவுள் கூட அல்ல. தத்துவம்தான் நிறைந்து இருக்கிறது! அந்தத் தத்துவத்தைப் பயிலுகின்ற மாணவர்கள் தங்களை இந்தத் தமிழ்நாட்டிற்கும் இந்தியத் திருநாட்டிற்கும் எதிர்கால மன்னர்களாக எண்ணி இந்த நாட்டை வாழ வைக்கின்ற தூதுவர்களாக எண்ணித் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இந்தத் தத்துவப் பேரவையைத் துவக்கி வைக்கிறேன்.
18-11-80 அன்று சென்னை பச்சையப்பர் கல்லூரி விழாவில் ஆற்றிய உரை.
