தமிழுக்கு நிறம் உண்டு
பகுதி 4 · 4 / 5
அனுப்பு - அதற்காக ஒரு இலை” என்றான். எமன் துப்பினான், அந்தப் பெண் வெளியே வந்துவிட்டாள். “இன்னொரு இலை எதற்காக?” என்று கேட்டான். உடனே வாயு, “அம்மா, பதி விரதா சிரோண்மணி, உன் வயிற்றுக்குள் இருக்கின்ற என் நண்பனை அக்னி பகவானை வெளியே அனுப்பு” என்கிறான்.
அவள் வெளியே அனுப்புகிறாள். அப்படி வெளியே அனுப்பும்போது, அக்னிக்குப் பயம், பெரியவர்களுக்கெல்லாம் நேராக வெளியே வர பயம் என்பதால் நடுங்கிக் கொண்டே வெளியே வருகிறான். வெளியே வந்த வேகத்திலே அந்தப் பெண்ணின் முகமெல்லாம் தீயில் கருகிப் போய்விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அதுவரை பெண்களுக்கு மீசை, தாடி உண்டு. அது கருகிப் போனதிலிருந்து பெண்களுக்கு முகத்திலே மீசை, தாடி கிடையாது. (பலத்த கைதட்டல்) இப்படி ஒரு புராணம்.
நான் எழுதியதல்ல. தாய்மார்கள் யாரும் முகம் சுளிக்கக் கூடாது. இதையெல்லாம் நம்பி நாம் ஏமாந்திருக்கிறோம் என்பதற்காகச் சொல்கிறேன். தம்பி வைரமுத்து “பயந்தவன் பகவான்” என்று எழுதியிருக்கிறாரே, அந்தப் பகவானின் கதையை நான் சொல்லாமல் இருந்தால் இந்தக் கவிதை முற்றுப் பெறாது என்பதற்காகத்தான் நான் இந்தக் கதையைச் சொன்னேனே அல்லாமல் வேறல்ல.
அதே கவிதையில் இன்னொரு இடத்தில் சொல்கிறார். “குளிர் காய - விலங்கு விரட்ட - சமைக்க - சிகை புரிய - கருவி செய்ய - களிமண் சுடப் பயன்படுத்த நெருப்பை - கற்பைக் கண்டறியும் தர்மா மீட்டராய் அழுக்குச் செய்தான் அயோத்தி மன்னன்” (நான் எழுதவில்லை, வைரமுத்து எழுதியிருக்கிறார்)
என்று அக்னி பிரவேசம் நடைபெற்றதே ராமாயணத்தில் - அதைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
இதே தலைப்பில் எழுதப்பட்ட கவிதையின் இறுதி வரியில்
“உள்ளே நெருப்பு இல்லாதவர்க்கு சூரியனும் ஒரு கரித்துண்டு!”
(அருமையான தத்துவம்)
“உள்ளே நெருப்பு உள்ளவருக்குக் கரித்துண்டும் ஒரு சூரியன்...”
ஆழமாகச் சிந்தித்தால்தான் புரியும் உள்ளே நெருப்பு இல்லாதவர்க்கு என்றால் சூடு சொரணை இல்லாதவர்க்கு சூரியனும் ஒரு கரித் துண்டு. உள்ளே அக்கினி இருக்க வேண்டும். அது இல்லாதவர்க்கு சூரியனும் ஒரு கரித்துண்டுதான். உள்ளே நெருப்பு உள்ளவருக்கு - கரித் துண்டும் ஒரு சூரியன் - என்று ஒரு அருமையான தத்துவத்தை சூடு, சொரணை இருக்க வேண்டுமென்பதற்காக, அவர் சுட்டிக் காட்டியிருக்கிற தத்துவத்தை என்னால் மகிழ்ந்து, மகிழ்ந்து பாராட்டாமல் இருக்க முடியாது.
இன்னொன்று சொல்கிறார். விலங்குகள் பெருமையை அவரே சொல்லியிருக்கிறார். இங்கே ஒரு கவியரங்கத்திலே கூட அவர் பாடிய கவிதையிலே விலங்குகளைப் பற்றிப் பாடியதை நானே கேட்டுச் சுவைத்திருக்கிறேன், இதிலே கூறுகிறார்...
“ஒரு கடவுள் - காளை கொண்டான் ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான் ஒரு கடவுள் - கருடன் கொண்டான் எந்தக் கடவுளையும் விலங்கு சுமந்த தன்றி மனிதன் சுமந்த தில்லை...
அதாவது மனிதனை விட விலங்கு உயர்ந்தது என்பதற்காகச் சொல்கிறார்... ஏன் மனிதன் சுமந்ததில்லை தெரியுமா—
“மனிதன் சுமக்கச் சொன்னால் கடத்தி விடுவானென்று கடவுளுக்குத் தெரியாதா?” (கைத்தட்டல்)
எவ்வளவு அருமையான தத்துவம்! கற்பனை அல்ல; நாட்டு நடப்பு! மேலும் எழுதுகிறார்...
“மனிதர்கள் வணங்கும்படி சில விலங்குகள் உண்டு...”
(வராக அவதாரத்தை வணங்குகிறோம்; கூர்மா அவதாரத்தை வணங்குகிறோம்; ஆஞ்சநேயரை வணங்குகிறோம்; அவர் கேட்கிறார்)
“மனிதர்கள் வணங்கும்படி சில விலங்குகள் உண்டு விலங்குகள் வணங்கும்படி இங்கு மனிதர்கள் உண்டா?”
அற்புதமான கற்பனை மாத்திரமல்ல; அற்புதமான தத்துவம்.
இதைவிட உச்சக் கட்டத் தத்துவம் ஒன்று. “கால வித்தியாசம்” என்ற கவிதைத் தலைப்பில்
“பூமி தனக்கே சொந்தம் என்று புலம்பித் திரிவதும் ஒரு காலம் பூமிக்கே நீ சொந்தம் என்று புரிந்து தெளிவதும் ஒரு காலம்”
பூமி நமக்குத்தான் சொந்தம் என்று புலம்பித் திரிவது ஒரு காலம். ஆனால் நாம் பூமிக்குத் தானே சொந்தம். எட்டடி மண்ணுக்கு அல்லது ஆறடி மண்ணுக்குத்தான் நாம் சொந்தம்.
“அயோத்தி ராமன் அழுகிறான்” என்ற தலைப்பிலே ஒரு கவிதை.
“கங்கை காவிரி இணைக்க வேண்டும் கரசேவகரே வருவீரா?”
கங்கையும் காவேரியையும் இணைக்க வேண்டும், கரசேவகர்களே நீங்கள் வருவீர்களா? நீங்கள் வருவீர்களா? நீங்கள் பாபர் மசூதியை இடிக்கத்தானே போவீர்கள் என்கிறார்.
“காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கர சேவகரே வருவீரா? வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும் கர சேவகரே வருவீரா? மாட்டார்கள் சேவகரே மாட்டார்கள்? நாம் உடைக்கவே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை...”
கர சேவை என்றால் என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதை யார் ஆதரித்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். (கைத்தட்டல்) நான் அரசியல் பேச விரும்பவில்லை.
