தமிழுக்கு நிறம் உண்டு
பகுதி 5 · 5 / 5
ஏதோ அயோத்திராமன் பிறந்த இடம் அது; அங்கே பாபர் மசூதி கட்டிவிட்டார்கள்; அதை இடிப்பது பற்றியெல்லாம் பெரிய பிரச்சினை. ஆனால் இவர் கேட்கிறார்...
“அயோத்திராமன் அவதாரமா? மனிதனா? அயோத்திராமன் அவதாரமெனில் அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன்... பிறவாதவனுக்கா பிறப்பிடம் தேடுவீர்? அயோத்தி ராமன் மனிதன் தான் என்றால் கர்ப்பத்தில் வந்தவன் கடவுள் ஆகான்”
கர்ப்பத்தில் வந்தவன் கடவுளாக இருக்க முடியாது. அவதாரங்கள் கர்ப்பத்திலே வராது. ஆகவே கடவுளாக இருக்க முடியாது.
அதற்குப் பிறகு கவிஞர் தன் ஊரிலே ஓடிய ஒரு நதியைப் பற்றி பரிதாபமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். பொன்மணி அதைப்பற்றிச் சொல்லும்போது, பொன்மணிக்கும் கண் கலங்கி, அந்த நதியைப் பற்றிப் பாடும் போது தம்பி வைரமுத்துவிற்கும் கண் கலங்கி, அதைக் கேட்கும்போது எங்கள் ஊர் நதியை நினைத்துக் கொண்டு என்னுடைய கண்ணும் கலங்கியது. அதிலே சொல்கிறார்.
“பால் நுரைக்கும் பெளர்ணமி ராத்திரியில் நிலவைக் கரைத்துக் கொண்டு வெள்ளையாய் ஓடியதும் எரிந்த மரங்களின் கரிகள் சுமந்து இரவின் திரவம் போல் கறுப்பாய் ஓடியதும்”
(இரவின் திரவம் என்கிறார். பெரிய சொல்லாட்சி அது)
“எரிந்த மரங்களின் கரிகள் சுமந்து இரவின் திரவம் போல் கறுப்பாய் ஓடியதும் (முதலில் வெள்ளை, இப்போது கறுப்பு) மலைக்கிழவி போட்டுத் துப்பிய தாம்பூலச் சாறு போல் - செஞ்சாந்துக் குழம்பாய்ச் சிவப்பாய் ஓடியதும்...”
மலைக்கிழவி போட்டுத் துப்பிய தாம்பூலச் சாறாம்! ஏன் மலைக்கிழவி என்கிறார். மலைக்குமரி என்று ஏன்
சொல்லவில்லை, தெரியுமா? மலைக்குமரி தாம்பூலம் போட்டால் கீழே துப்ப மாட்டாள். அது துப்புகிற இடம் வேறாக இருக்கும். அது துப்புவதாக இருக்காது; தாம்பூலம் மாற்றிக் கொள்வதாக இருக்கும். எவ்வளவு எச்சரிக்கையாக சொல்கிறார், பாருங்கள். சொல்லிவிட்டு அந்த நதி எப்படி இளைத்து என்றும் கூறுகிறார்.
“யானை போல் இருந்து அதன் வால் போல் இளைத்து”
என்கிறார்.
அபாரமான கற்பனை. நீங்கள் ஐந்து நிமிடம் கை தட்டலாம். (பலத்த நீண்ட கைதட்டல்) தம்பி வைரமுத்து!
இன்னொன்றும் கூறுகிறார்.
“இன்று கழுதைகளின் ஒற்றையடிப் பாதையானதும் இந்த நதிதான்”
என்கிறார்.
தம்பி, இது எந்த நதி என்று சொன்னால் - பி.டபிள்யூ.டி. மினிஸ்டர் இங்கே இருக்கிறார். (பலத்த கைதட்டல்) இது குறித்து எழுதி ஒரு விண்ணப்பமாகத் தந்தால், அடுத்த மாதமே அந்த நதியை பழைய நதியாக ஆக்கி அங்கே தம்பியை உலவ விட்டு அதற்காக ஒரு கவிதையை உன்னிடம் எழுதி வாங்குவேன் என்ற உறுதியை வழங்குகிறேன்.
உலகத்தைப் பற்றிப் பாடும்போது அவர் சொல்கிறார்.
“உலகின் வாயைத் தைத்திடு; அல்லது இரண்டு செவிகளை இறுக்கி மூடு உலகின் வாயைத் தைப்பது கடினம் உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்”
என்று குறிப்பிடுகிறார்.
அதற்காக எப்போதும் செவிகளை மூடிக் கொண்டிருக்க முடியாது. எங்களைப் போன்ற அரசியல் வாதிகள் உலகம் என்ன சொல்கிறது என்று கேட்டுத்தான் ஆக வேண்டும். ஆகவே அறவே செவிகளை மூடி விட முடியாது. அதற்காக சொல்வதையெல்லாம் கேட்கவும் முடியாது. அதற்காக இன்னொருவர் சொல்ல நாம் கேட்பதா என்றும் இருக்கக் கூடாது. சொல்வதை எல்லாம் கேட்கவும் கூடாது. சொல்வதையெல்லாம் கேட்பதென்றால் சந்தைக்கு கழுதையை அப்பனும் மகனும் ஓட்டிச் சென்ற கதையாகிவிடும்.
பாருய்யா, அந்தக் கழுதை தனியாகப் போகிறது. கிழவன் அதிலே ஏறிக் கொண்டு போகக் கூடாதா? என்றான் ஒருவன். அவன் சொல்வது சரிதான் என்று அப்பாவை ஏறிக் கொள்ளச் சொன்னான் மகன். அப்பன் ஏறிக் கொண்டான். கொஞ்ச தூரம் போனதும் இன்னொருவன் பார்த்தான். “இந்தக் கிழவன் பாருய்யா, கழுதையிலே ஏறிக் கொண்டு போகிறான். மகனையும் ஏறிக் கொண்டு போகக் கூடாதா?”
என்றான். அவனும் ஏறிக் கொண்டான். இன்னொருத்தன் சொன்னான். “இந்த இரண்டு பேரையும் இந்தக் கழுதை தாங்குமாய்யா, கழுதை சாகப் போகிறது” என்று சொன்னான். இரண்டு பேரும் என்ன செய்வதென்று கேட்டார்கள். அதற்கு அவன் கழுதையைத் தூக்கிக் கொண்டு போங்கள் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கம்பிலே கழுதையைத் தலைகீழாக கட்டித் தூக்கிக் கொண்டு போனார்கள். தூக்கிக் கொண்டு ஒரு ஆற்றோரமாக போகும்போது - எவ்வளவு நேரம்தான் கழுதை தலைகீழாகத் தொங்கும்.
துள்ளி ஆற்றிலே விழுந்து விட்டது. எனவே எல்லோருடைய பேச்சையும் கேட்டால் கழுதையை ஓட்டிக் கொண்டு போனவன் கதையாக ஆகிவிடும். கேட்க வேண்டிய பேச்சை கேட்க
வேண்டும். தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைக் கேட்காதே; தீயவற்றைச் சொல்லாதே என்பதைப் போல கேட்க வேண்டியவைகளை கேட்க வேண்டும். நல்லவைகளை கேட்க வேண்டும். நாம் திருந்திக் கொள்ள வேண்டும். அதற்காகச் செவிகளை மூடுவது சுலபம் என்றுதான் சொல்கிறாரே தவிர மூடிக் கொள் என்று கவிஞர் சொல்லவில்லை. எனவே அந்த வகையிலே நான் அவரைப் பாராட்டுகிறேன்.
இனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்
“காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம்”
பாலைவனத் தாவரத்திற்கு வேரிலேயோ தண்ணீர் ஊற்றுவார்கள்? இல்லை. வானத்திலிருந்து மழையா பொழியும்? இல்லை, ஈரக்காற்று அடித்தால்தான் அதற்கு தண்ணீர் கிடைக்கிறது. அதைத்தான் “காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம் போல்” இது ஒரு விஞ்ஞான அடிப்படையிலே எழுதப்பட்ட கவிதை.
“காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம் போல் முன்னாள் பெருமை என்னும் முதுமக்கள் தாழியில் மூச்சு விடும் தமிழா”
சேரன் செங்குட்டுவன் ஆண்டான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்டான், கரிகால் பெருவளத்தான் ஆண்டான், கல்லணை கட்டினான் என்று பழம்பெருமை பேசும் தமிழா இந்தப் பழம்பெருமை பேசுவது எப்படியிருக்கிறதென்றால், “காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம் போல் முன்னாள் பெருமை என்னும் முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா” என்று கூறுகிறார்.
அதனால் பழம்
பெருமை பாடாமல், அதற்காகப் பழம் பெருமையையும் அறவே அழித்து விடாமல் பழம் பெருமையின் அடிப்படையில் நம்முடைய முன்னோர்கள் நம்மையெல்லாம் இந்த உலகத்திற்குத் தந்தவர்கள். அவர்களைத் தந்தவர்கள் என்கிற அந்த வரிசை இருக்கிறதே, அந்த வரிசையிலே வந்த தமிழகத்தைப் பொறுத்த வரையிலே சங்க காலம் - அந்தச் சங்கக்காலம் நமக்கெல்லாம் பொற்காலம். அந்தச் சங்கக் காலத்தின் பண்பாட்டின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.
அந்தச் சமுதாயம் சாதிசமயமற்ற சமுதாயமாக இருக்க வேண்டும். ஒற்றுமையுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும். பிரிவினையற்ற, பிளவுகள் அற்ற சமுதாயமாக இருக்க வேண்டும். தீண்டாமை ஒழிந்த சமுதாயமாக இருக்க வேண்டும். அந்தச் சமுதாயத்தை உருவாக்க “ஏடா தம்பி, எடுடா பேனா” என்று அன்றைக்குப் புரட்சிக் கவிஞரும் பேரறிஞர் அண்ணாவும் சொன்னார்களே அதைப் போல நான் தம்பியை உரிமையோடு சொல்கிறேன் - “ஏடா தம்பி, எடுடா பேனா!
உன் பேனாவிற்கு வெற்றி! வெற்றி!! வெற்றி!!! என்னைக்கும் கிடைக்கும்.”
முரசொலி 14.7.97
