தமிழுக்கு நிறம் உண்டு
பகுதி 3 · 3 / 5
என்கிறார்.
அப்படி என்றால் தமிழ்நாட்டில் சேவல்களே கூவ முடியாது. (கைதட்டல்) ஆனால் ஜாதிகள் மறைவதற்கான அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன.
நேற்றைக்கு ஈரோடு மாவட்டத்தில் முட்டைப் பதப்படுத்தும் ஒரு தொழிற்சாலை தொடக்க விழாவிற்குச் சென்றிருந்தேன். தொடக்க விழா அழைப்பிதழில் அதனுடைய இரண்டு நிறுவனங்களின் ஒரு உரிமையாளர் தமிழக அரசுத் தொழில் வளர்ச்சிக் கழகம், மற்றொரு உரிமையாளர் திரு. மயில்சாமி கவுண்டர் அவர்களின் நிறுவனம். அழைப்பிதழில் மயில்சாமி கவுண்டர் என்றுதான் அச்சடிக்கப்பட்டிருந்தது. அவர் வரவேற்புரையிலே நேற்று இதே நேரம் பேசும்போது - “என்னுடைய பெயர் மயில்சாமி கவுண்டர் என்று அழைப்பிதழிலே அச்சிட்டிருக்கிறேன் - முதலமைச்சர் என்னை மன்னித்துக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் இப்போது தான் சாதி பேதங்கள் ஒழிய வேண்டுமென்ற அடிப்படையில் தனக்குப் பிடித்தமான பெயர்களை எல்லாம்கூட மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாற்றிவிட்டு வந்திருக்கிறார். அவருக்கு ஒத்துழைப்பு தருவதற்கு அடையாளமாக நான் என்னுடைய சாதிப் பெயரை விட்டுவிடுகிறேன். மயில்சாமி என்பதையும் மயிலானந்தம் என்று மாற்றிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
நான் பேசும் போது கவுண்டரை விட்டுவிட்டார்; மயில்சாமி என்பதையும் மாற்றி ஏன் மயிலானந்தம் என்று வைத்துக் கொண்டார் என்பதைச் சிந்தித்தால், அப்படி பெயர் மாற்றியதில் ஏற்பட்ட ஆனந்தத்தைத் தெரிவிக்கக்கூடிய வகையிலே மயிலானந்தம் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் போலும் என்று குறிப்பிட்டேன்.
அதே கவிதையில்,
“எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ அங்கே தோன்றுக கதிரவனே”
என்கிறார்.
அப்படிப் பார்த்தால் நான் அதில் ஒருவன் என்று கூறிக் கொள்ள முடியும். பாக்கி இந்த அவையிலே அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியாது. “எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ அங்கே தோன்றுக கதிரவனே” என்கிறார். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து பணியாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா விடியற்காலை 3 மணி வரையிலே எழுதி எழுதிக் குவிப்பார். அவர் எழுதியவைகள் எல்லாம் மின்விசிறியில் அறை முழுவதும் பறந்து கொண்டேயிருக்கும்.
அப்படிப் பறந்து கொண்டிருக்கும் அந்த தாள்களின்மீதே அயர்ந்து படுத்துத் தூங்கிவிடுவார். அண்ணியாரோ, மற்றவர்களோ வந்து விடியற்காலை அந்தத் தாள்களையெல்லாம் எடுத்து மேஜையிலே அடுக்கி வைப்பார்கள். அப்படி விழித்துப் பணியாற்றுபவர்கள் உண்டு.
தலைவர்கள் விழித்திருக்கிறார்கள் என்றால் அதற்கொரு சம்பவம் உண்மைச் செய்தியோ என்னவோ தெரியாது - கூறுவார்கள். ஒருமுறை நிருபர்கள் மகாத்மா காந்தி அடிகளிடத்திலே பேட்டி காண இரவு பத்து மணிக்கோ பத்தரை மணிக்கோ நேரம் கேட்டிருந்தார்கள். அவரும் ஒத்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே ஜவாஹர் ஜின்னாவிடமும் நேரம் கேட்டிருந்தார்கள். 11 மணி அளவிற்கு அவரும் ஒத்துக் கொண்டிருந்தார். 12 மணிக்கு டாக்டர் அம்பேத்கரிடம் நேரம் கேட்டு, அவரும் ஒத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நிருபர்கள் காந்தியடிகளைச்
சென்று சந்திக்க அரைமணி நேரம் தாமதமாகி விட்டது. சென்றார்கள் காந்தியடிகள் இல்லத்திற்குள். அங்கேயிருந்தவர்கள் “காந்தியடிகள் உறங்கப் போய் விட்டார்கள்” என்று சொன்னார்கள். பிறகு ஜின்னா வீட்டிற்குச் சென்றார்கள். “நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள்; எனவே ஜின்னா உறங்கச் சென்று அரை மணி நேரமாகிறது” என்று சொன்னார்கள்.
மூன்றாவதாக அம்பேத்கர் வீட்டிற்குச் சென்றார்கள். அவர் விழித்துக் கொண்டிருந்தார் - இவர்கள் தாமதமாக சென்ற போதிலும்! அம்பேத்கரைப் பார்த்து நிருபர்கள் கேட்ட முதல் கேள்வி - “காந்தி அடிகளைப் பார்க்கச் சென்றோம்; அவர் தூங்கி விட்டார். ஜவாஹர் ஜின்னாவைப் பார்க்கச் சென்றோம்; அவரும் உறங்கி விட்டார்; நீங்கள் மாத்திரம் விழித்துக் கொண்டிருக்கிறீர்களே, என்ன காரணம்?”
என்று கேட்டபோது, அம்பேத்கர் சொன்னார் “காந்தியடிகளுடைய மக்களும், ஜவாஹர் ஜின்னாவின் மக்களும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் தூங்கி விட்டார்கள். ஆனால் என்னுடைய மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்; ஆகவே நான் இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறேன்” (பலத்த கைதட்டல்) என்று கூறியதாக ஒரு செய்தி உண்டு. எனவே அந்த உள்ளுணர்வை வைத்துத்தான் தம்பி வைரமுத்து “எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ, அங்கே தோன்றுக கதிரவனே” என்று பாடுகிறார்.
அதே பாடலில்
“எங்கே விதவையர் கூந்தல் காயுமோ அங்கே மலருக பூவினமே”
என்றும் எழுதியிருக்கிறார். இது தேசிய கவி பாரதியாரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் நம் நினைவுக்குக் கொண்டு வருகின்ற கவிதை வரிகளாகும்.
“கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா” என்று விதவையைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாடிய கவிதையை நினைவிற்குக் கொண்டு வரும் கவிதை இது. அந்தப் பாடலை அல்ல; அந்தக் கருத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது. எங்கே விதவையர் கூந்தல் காயுமோ அங்கே மலருக பூவினமே - விதவையர் கூந்தலில் பூக்கள் ஏற வேண்டும், பூச்சரம் மிளிர வேண்டும் என்ற அந்தக் கருத்தை உள்ளடக்கிக் கவிஞர் வைரமுத்து ஒரு புரட்சிகரமான எண்ணம் கொண்டவர் சமுதாயத்திற்கு முன்னேற்றம் தேவை என்ற முனைப்பான ஆர்வம் படைத்தவர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அவர் அந்தப் பூக்களுக்கு கட்டளையிடுகிறார்.
என் நினைவிற்கும் உங்கள் நினைவிற்கும் ஒன்று கூற வேண்டும். ஆனந்த விகடன் பத்திரிகையிலே ஒரு கவிஞன் எழுதியிருந்தான். “அய்யோ விதவை” என்று அந்த சொல்லுக்குக் கூட பொட்டு கிடையாதே? வி-த-வை என்று எழுதினால் அந்த எழுத்திலே பொட்டு இல்லையே” என்று அழுது எழுதியிருந்தான்.
அதைப் படித்துவிட்டு நான் ராஜேஸ்வரி மண்டபத்திலே நடைபெற்ற ஒரு விழாவிலே பேசும் போது சொன்னேன். “தம்பி, நீ விதவை என்று அந்த நிகழ்ச்சியிலேயே வட மொழியிலே எழுதினால் பொட்டு இருக்காது. கைம்பெண் என்று தமிழிலே எழுது, ஒரு பொட்டுக்குப் பதில் இரண்டு பொட்டு இருக்கும்,” (கைதட்டல்) என்று அந்த நிகழ்ச்சியிலே குறிப்பிட்டேன். இந்தக் கவிதை எனக்கு அந்த நினைவை இழுத்து வந்தது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.
“ஞானத்” என்ற தலைப்பில் நெருப்பைப் பற்றி கூறும்போது நெருப்பு எப்போது, ஞானத் தீயாக மாறுகிறது என்பதை மிக அழகாகப் பாடியிருக்கிறார்.
“நெருப்புக்கு ஜாதி சொல்லி நெருப்பையே எரித்தோம் நெருப்புக்குப் பெயர் வைப்பதில் நூற்றாண்டுகள் எரித்தோம்... நெருப்பு கண்டு வியந்தவன் தீ என்றான்... பயந்தவன் பகவான் என்றான்...”
அக்கினியைப் பார்த்து வியந்தவன் தீ என்றானாம். பயந்தவன் பகவான் என்றானாம். இந்த அக்கினையைப் பற்றியும் ஒரு கதை உண்டு.
பெண்களுக்கு ஆண்களைப் போல முகத்திலே ஏன் தாடி மீசை இல்லை என்று ஒரு கேள்வி; இந்தக் கேள்விக்கு “விப்ரபுராணம்” பதில் சொல்லியிருக்கிறது. புராணத்திலே நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் ஏதோ கருணாநிதி சுயமரியாதை பிரச்சாரம் செய்வதாக கருதக் கூடாது. எல்லோருக்கும் வேண்டியது தான் சுயமரியாதை. சுயமரியாதை இல்லாமல் யாரும் வாழ முடியாது.
விப்ர புராணத்திலே மாண்டவியர் என்று ஒரு ரிஷி வருகிறார். ரிஷிக்கு ஒரு பத்தினி உண்டு. ரிஷியின் மனைவி என்று கூறக் கூடாது. ரிஷி பத்தினி! பல முனிவர்கள் இல்வாழ்க்கையிலே நல்ல ஆண்மக வாதிகளாக விளங்கி இருக்கிறார்கள். ஏன் வள்ளுவரே கூட அவர் முனிவர் அல்ல என்றாலுங்கூட அவர் வாழ்க்கைத் துணையோடுதான் இருந்தார் என்பது தான் நாமறிந்த வரலாறு.
அதைப் போல மாண்டவியர் என்ற ரிஷி தன் பத்தினியோடு வாழ்ந்த போது அழகான பெண் குழந்தை இருந்தது. இவர்களுக்கு புலோகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஒரு ஆசை வந்தது. அப்படியானால்
பெண்ணை அழைத்துக் கொண்டு போக முடியாது. ஏனென்றால் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கும் போது ஆங்காங்கு அரசர்கள் இருப்பார்கள்; அவர்கள் கண்ணிலே இந்தப் பெண் பட நேரிடும். எனவே பத்திரமாக யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகலாம் என்று யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்தார்கள். பரமசிவனிடம் ஒப்படைக்கலாமா என்று யோசித்தார்கள்.
உடனே மாண்டவியர் சொன்னார். தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா? அங்கேயே பரமசிவனைப் பற்றி தவறான கருத்து உண்டு. எனவே தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் பட்ட பாட்டில் நம் பெண்ணைப் பரமசிவனிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிறார். (நான் சொல்லவில்லை, விப்ர புராணம் கூறுகிறது) சரி, மகாவிஷ்ணுவிடம் ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்று யோசிக்கிறார்கள். அதற்கு “கூடாது, கூடாது, மகாவிஷ்ணு தான் கோபாலகிருஷ்ணனாக உருவெடுத்து கோபிகாஸ்திரிகளிடம் விளையாடியவர்; அவரிடமும் இந்தப் பெண்ணை விட்டு விட்டுப் போகக் கூடாது” என்கிறார்கள்.
சரி இந்திரனிடம் ஒப்படைக்கலாமா என்கிறார்கள். அய்யோ, அகலிகை கதை தெரியாதா, வேண்டாம் அந்த யோசனை என்று முடிவிற்கு வந்து இப்படி ஒவ்வொருவராகச் சொல்லி வேண்டாம், வேண்டாம் என்று கைவிட்டு கடைசியாக யோக்கியமானவன், நல்லவன் எமதர்மராஜன், அதனால் தான் அவனுக்கு எம தர்மன் என்றே பெயர் இருக்கிறது. எனவே அவனிடம் விட்டுவிட்டுப் போகலாமென்று சொல்லி, அந்தப் பெண்ணைக் கொண்டு போய் விட்டுவிட்டு இவர்கள் சுற்றுப் பயணம் போய்விட்டார்கள்.
எமதர்மன் ஒருநாள், இரண்டு நாள் பெண்ணை வைத்திருந்தான். தினந்தோறும் அந்தப் பெண் பால், பழம் போன்றவைகளைக் கொண்டு வந்து கொடுக்க, பரிமாற, இப்படியாக “தர்மன்” முன்னால் ஒரு “அ” சேர்ந்து விட்டது. உடனே தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். அந்தப் பெண்ணும் சம்மதித்தாள். இவனுக்கு ஒரு பயம். இந்தப் பெண்ணோடு இன்பமாக இருப்பதை யாரும் கண்டுவிடக் கூடாது என்பதற்காக - இவளை ஒளித்து வைப்பதற்காக - அவளைத் தன் வயிற்றிலே பகல் எல்லாம் விழுங்கி வைத்திருப்பான்.
இரவிலே படுக்கை அறையிலே அவளை உமிழ்ந்து அவளோடு இன்பமாக இருப்பான். இப்படிப் பல நாட்கள் ஓடின.
ஒருநாள் அவன் நீராடுவதற்காகச் சென்றபோது அந்தப் பெண்ணை ஒரு மண்டபத்திலே உமிழ்ந்து வைத்துவிட்டு அவன் குளித்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் அந்த வழியாக வாயு பகவானும் அக்னி பகவானும் வந்தார்கள். அக்னி பகவானுக்கு இந்தப் பெண்ணைப் பார்த்ததும் மோகம் ஏற்பட்டு விட்டது. உடனே நண்பன் வாயுவைப் பார்த்து சொன்னான் - கொஞ்சம் மந்த மாருதமாக வீசு; அவளுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்து - என்று கேட்கிறான். உடனே வாயு பகவான் அவ்வாறே செய்தான்.
அக்னி பகவான் அவள் அருகே நெருங்கினான். இருவருக்கும் கூடல்.
குளித்துக் கொண்டிருந்த எமன் திரும்பினான். எமன் பார்த்துவிடப் போகிறானோ என்று அந்தப் பெண், அக்னியைத் தூக்கி விழுங்கிவிட்டாள். எமனுக்கு அது தெரியாது. மண்டபத்திற்கு வந்து, வழக்கம் போல அவளைத் தூக்கி விழுங்கிவிட்டுப் போய்விட்டான். இப்போது எமனின் வயிற்றுக்குள்ளே அந்தப் பெண்;
அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள்ளே அக்னி பகவான். பகல் எல்லாம் அவள் என்ன செய்தாள் என்றால் எமனின் வயிற்றுக்குள்ளேயே அக்னி பகவானை வெளியே துப்பி, இரண்டு பேருமே வயிற்றுக்குள்ளேயே இன்பமாக இருந்தார்கள். இரவிலே எமன் தன் வயிற்றுக்குள்ளிருந்து அவளை வெளியே துப்பி அவளோடு இன்பமாக இருக்கிறான். என்ன ஆயிற்றென்றால் உலகத்தில் அக்னியையே காணோம். உலகத்தில் அக்னி இல்லாவிட்டால் என்ன ஆகும்? அடுப்புப் பற்ற வைக்க முடியவில்லை; தீப்பெட்டி எரியவில்லை.
எல்லோரும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், அஷ்டதிக்குப் பாலகர்கள் அத்தனை பேரும் (பலத்த கைதட்டல்) பரமசிவனிடம் போய் அக்னியைக் காணவில்லை என்று முறையிட்டார்கள்.
பரமசிவன் உடனே வாயுவை அழைத்து, உன் ‘பிரெண்டு’ தானே அக்னி பகவான்; நாளைக்கு 24 மணி நேரத்திற்குள்ளே அக்னியைக் கொண்டு வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறார். வாயுவிற்குத் தான் தெரியுமே அக்னி பகவான் எங்கிருக்கின்றான் என்று. அதற்காக என்ன செய்கிறான்? (அதற்குள் சுற்றுப் பயணம் சென்ற முனிவர் மாண்டவியரும் அவருடைய மனைவியும் திரும்பி விட்டார்கள்) வாயு பகவான் தன் அரண்மனையிலே ஒரு பெரிய விருந்து வைத்தான்.
எல்லோரும் வந்தார்கள் இலை போடப்பட்டது. வரிசையாக இலை போட்டுக் கொண்டு வரும்போது, வாயு பகவான் எமதர்மனுக்கு நேராக மூன்று இலை போட்டான். எமன் “ஏன் எனக்கு மூன்று இலை?” என்று கோபமாகக் கேட்டான். அதற்கு வாயு எமனைப் பார்த்து “உன் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணை வெளியே
