தமிழுக்கு நிறம் உண்டு
பகுதி 2 · 2 / 5
“சீப்போடு என்னதான் சிநேகம் பிடித்தாலும் ஒரே வகிர்வில் வகிடு கொண்டதில்லை”
இது எனக்குத் தேவையில்லை. (பலத்த சிரிப்பு, கைத்தட்டல்) வைரமுத்துவின் அனுபவத்தைக் கூறுகிறார். அந்த அனுபவம் எனக்கும் ஒரு காலத்திலே இருந்தது. “சீப்போடு என்னதான் சிநேகம் பிடித்தாலும் ஒரே வகிர்வில் வகிடு கொண்டதில்லை” என்கிறார். எதற்குச் சொல்ல வருகிறார் என்று பாருங்கள்.
“எது உள் எது வெளி பட்டிமன்றம் முடியாமல் காலுறை அணிந்ததில்லை”
கால் உறை (சாக்ஸ்) அணியும்போது எது உள்பக்கம், எது வெளிப்பக்கம் என்பதற்கு “பட்டிமன்றம்”
முடியாமல் அது தெரிவதில்லையாம். அதற்கு ஒரு பட்டிமன்றமே தமிழ்க்குடிமகனைத் தலைவராக வைத்து அதை அணிய வேண்டும் என்கிறார். ஒவ்வொருவருடைய அனுபவம் இது.
“ஓடும் ரயிலில் பிடிமான மில்லாமல் சிறுநீர் கழிக்கும் திறனுமில்லை”
ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும்போது - சிறுநீர் கழிக்கச் சென்றால் ஏதாவது ஒரு பிடியை பிடித்துக் கொண்டுதான் (கைத்தட்டல்) - அது எந்தப் பிடி என்பது அவருக்குத்தான் தெரியும் (சிரிப்பு) நிற்க முடியும். ஏனென்றால் அவர் ஏராளமாக காதல் கவிதைகளை எழுதியிருப்பதால், என் பேச்சும் இன்று அப்படித்தான் இருக்கும்.
“திரும்பத் திரும்பத் திருத்தியும் திருத்தியும் முற்றும் பிழை நீக்க முடியவில்லை”
என்கிறார்.
“இத்தனை ஒட்டைகள் இருப்பினும் என்னில் வழியாதெப்படி வந்து நிறைந்துள்ளாய் என் தமிழே?”
என்று முடிக்கிறார்.
அதாவது இவ்வளவு ஒட்டைகள் என்னிடம் இருக்கிறது. இருந்தும் வழியாமல் என்னிடம் தமிழே எப்படி வந்து நிறைந்திருக்கிறாய் என்று தமிழை வாழ்த்துகிறார். ஆனால் நான் பாராட்ட மாத்திரம் இங்கே வரவில்லை. குறையும் சொல்ல வேண்டுமல்லவா? அப்போதுதானே நிறையாகும். அவர் சொல்லுகிறார் “திரும்பத் திரும்பத் திருத்தியும், திருத்தியும் முற்றும் பிழை நீக்க முடியவில்லை” என்று சொல்லியிருக்கிறார்.
அது உண்மைதான்! இந்த புத்தகத்தில் 39-ஆவது பக்கத்தில் (பலத்த சிரிப்பு கைத்தட்டல்) வேறு ஒரு கவிதையிலே சொல்லுகிறார்.
“விலங்கின் விலை தெரியுமா உனக்கு? உயிர் கழிந்து உடல் கிடப்பினும் - ஆபரணமாகும் புலியின் நகம் எழுகோல் ஆகும் புறாவின் இறகு”
என்று எழுதியிருக்கிறார்.
புலியைக் கொன்று போட்டால்கூட அதன் நகம் நமக்கு ஆபரணமாகும். புறாவைச் சுட்டுப் போட்டால் கூட அதன் இறகு எழுதுகோலாகும் என்று சொல்ல வந்தவர் - சொல்லியிருக்கிறார் - ஆனால் அச்சுக் கோத்தவர்கள் எழுதுகோல் என்பதற்குப் பதிலாக “எழுகோல் என்று அச்சடித்திருக்கிறார்கள். அதை பிழை திருத்தும்போது கவனிக்காமல் வெளிய வந்திருக்கிறது. நான் படித்து விட்டு உங்களிடம் சொல்கிறேன். புத்தகத்தில் எழுதுகோல் என்பதில் “து” என்ற எழுத்தைக் காணோம்.
அதை “தா” வென்று விட்டார்கள் போலும்! “திரும்பத் திரும்பத் திருத்தியும் திருத்தியும் முற்றும் பிழை நீக்க முடியவில்லை” என்று கவிதையிலே முதலிலே எழுதியிருக்கிறார் அல்லவா; அதற்கு உதாரணமாக இது திகழ்கிறது. (கைத்தட்டல்)
“கேள் மனமே கேள்” என்ற கவிதைக்கு பொன்மணி இங்கே முன்னுரை தந்து - அலாவுதீனுக்கு எதிரே வந்த பூதம் போல ஒரு பூதம் வந்தால் - விளக்கைத் தேய்க்கும் போது பூதம் வந்தால் என்ன கேட்பேன் என்று கூறுகின்ற அந்தப் பாடலில் வைரமுத்து சொல்கிறார்.
“உலகெங்கும் சம பங்கு மழையைக் கேட்பேன்”
என்கிறார். அப்புறம் என்ன கேட்கிறார் தெரியுமா? கவிஞர்கள் எப்போதும் முரண்படுவார்கள் என்பதற்கேற்ப
“விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்”
என்கிறார்.
விண்மீன் மறைக்காத வானம் கேட்கிறார். வானத்திலே மேகம் இல்லாவிட்டால் மழை எப்படி வரும்? (கைத்தட்டல்) உலகெங்கும் சமபங்கு மழை வேண்டுமென்கிறார். வானம் அப்படியே வெளிச்சமாக விண்மீன்களைக் காட்டிக் கொண்டிருந்தால், அதை மறைக்க, மேகங்களே இல்லாமல் இருந்தால், மழை வராது. ஆனால் நான் இதை பெரும் முரண்பாடு என்று சொல்ல மாட்டேன். கரு மேகங்களும் வர வேண்டும்; எப்படி நாடகத்திலே திரை விழுவதைப் போல - திரை இருக்க வேண்டும்.
உள்ளே நடக்கின்ற காட்சிகளை உடனடியாகக் காண்பதற்கு ஏற்ப திரை சுருளவும் வேண்டும் அதைப் போல இந்தக் கருமேகங்கள் வந்தாலுங்கூட, மழை உடனடியாகப் பொழிந்து அந்தக் கருமேகங்கள் எல்லாம் மழை பொழிந்த காரணத்தால், அகன்று நீங்கி, விண்மீன்களைக் காண வேண்டும் என்பதைத்தான் கவிஞர் இப்படிப் பாடுகிறார் என்று
தம்பிக்கு அண்ணன் வக்காலத்து வாங்குகிறேன். (பலத்த கைதட்டல்)
பின்பு அதே பாடலில் -
“இப்போது போலிருக்கும் இளமை கேட்டேன் இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்டேன்”
மிக உயர்ந்த வரிகள். நான் நினைத்து நினைத்து மகிழ்ந்த வரிகள். இப்போது போலிருக்கும் இளமை கேட்டேன் என்பது பேராசை. யார்தான் கேட்கமாட்டார்கள்? நான் கூடக் கேட்பேன் இங்கே அமர்ந்திருக்கும் சாவி கூடக் கேட்பார். (பலத்த சிரிப்பு) அவரும் அவருடைய துணைவியாரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் அந்த இளமையோடு உட்கார்ந்திருப்பது போலத்தான் தெரிகிறது. (கைதட்டல்) இப்போது போலிருக்கும் இளமை கேட்டேன் என்று கூறிவிட்டு அடுத்து, “இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்டேன்” என்கிறார்.
மிக உயர்ந்த சொல்லாட்சி! அறிவுக்கு நரைகள் கேட்டேன் என்கிறார் - அது கிழத்தன்மைக்கு அல்ல; முதிர்ந்த அறிவு கேட்டேன் என்பதை தம்பி வைரமுத்து தனக்கே உரிய அந்த அழகோடு குறிப்பிட்டிருக்கிறார். (கைதட்டல்) அவர் இந்த இளமையிலேயே அவருடைய அறிவுக்கு நரை வந்து விட்ட காரணத்தினால்தான் அவரால் இதை எழுத முடிந்தது என்று கருதுகிறேன்.
“இருபது கட்டளைகள்” என்ற தலைப்பிலே உள்ள கவிதை பற்றி இங்கே பொன்மணி படித்து, அந்தக் கட்டளைகள் எவையெவை என்பதையும் கவிஞர் மூலமாக இங்கே வெளியிடச் சொன்னார்.
“எங்கே ஊர்களில் ஜாதி இல்லையோ அங்கே கூவுக சேவல்களே”
