உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

தமிழுக்கு நிறம் உண்டு

பகுதி 1 · 1 / 5

‘தமிழுக்கு நிறம் உண்டு’

கவிதை நூல் வெளியீட்டு விழா

“தமிழுக்கு நிறம் உண்டு” என்ற தலைப்பில் என்னுடைய அன்புத் தம்பி கவியரசு வைரமுத்து அவர்கள் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பினை வெளியிடுகின்ற இந்த விழா ஒரு வித்தியாசமான விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு - உங்களுடைய அன்பான வாழ்த்துக்களை கவியரசு வைரமுத்து அவர்கள் பெறுகின்ற வகையில் - அந்த வாழ்த்துக்களோடு என்னுடைய வாழ்த்துக்களையும் இணைக்கின்ற வாய்ப்பினைப் பெற்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.

“தமிழுக்கு நிறம் உண்டு” என்ற இந்த கவிதைத் தொகுப்பை நான் பல முறை படித்து, அதிலுள்ள கொள்கையை - கோட்பாடுகளை, குறிப்புகளை உங்கள் முன்னால் விளக்குகின்ற வித்தியாசமான மேடை என்று இங்கே தங்கை பொன்மணி வைரமுத்து குறிப்பிட்டார். ஆமாம், என்னை அறிந்தவர்களுக்கு - நான் எப்போதும் நான்கைந்து பேரோடு இருந்துதான் பழக்கப்பட்டவன் (கைத்தட்டல்) மேடையிலே கூட! (இந்த விழா மேடையில் ஒரேயொரு நாற்காலி மட்டும் போடப்பட்டு முதல்வர் கலைஞர் மட்டும் அமர வைக்கப்பட்டிருந்தார்) என்னை உணர்ந்து கொண்ட பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் என்னைத் தனிமைப்படுத்தி, 65-ஆம் ஆண்டு பாளையங்

கோட்டை சிறைச்சாலையிலே வைத்தார். அதற்குப் பிறகு அந்தப் பணியை தம்பி வைரமுத்து (கைத்தட்டல்) தங்கை பொன்மணி வைரமுத்து ஆகியோர் இங்கே செய்திருக்கிறார்கள். பாளையங்கோட்டையை நினைவூட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இன்னொரு வகையிலும் இருவரும் என்னை தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். நான் எந்தெந்த கவிதைகளை இங்கே பாராட்டிக் கூறவேண்டுமென்று கருதியிருந்தேனோ அந்தக் கவிதைகளை எல்லாம் இங்கே வைரமுத்து பாடிக்காட்டி உங்களுடைய கையொலிகளை வெகுமானமாகப் பெற்றிருக்கிறார். அதே கவிதைகளை நான் திருப்பிச் சொல்கின்ற வகையிலே என்னை தனிமைப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் எத்தனை முறை சொன்னாலும் இனிக்கக்கூடிய கவிதைகள் என்பதால் நான் இதிலே தனிமைப்படுத்திவிட்டேன் என்று உணராமல், இந்தக் கவிதையேட்டிற்கு வைரமுத்து எழுதியுள்ள முன்னுரையைப் பற்றிச் சில வார்த்தைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் எத்தனையோ புயல்களையும் சூறாவளிகளையும் எரிமலைக் குமுறல்களையும் பூகம்பக் குலுக்கல்களையும் வரலாற்றிலே கண்டாலும் அவற்றையெல்லாம் கடந்து இன்றைக்கு உயிர் மொழியாய் விளங்குகிறது என்பதை இந்தக் கவிதை நூலுக்கு தம்பி வைரமுத்து எழுதியுள்ள முன்னுரையிலே குறிப்பிட்டிருக்கிறார்.

“காலம் தமிழ்நாட்டைக் கற்கண்டு கட்டிகளாய் உடைத்து, தன் கடைவாயிலே இட்டுக் கொண்ட போதும் தமிழ் மட்டும் கரைந்து போகவே இல்லை” என்று குறிப்பிடுகிறார். என்னதான் கற்கண்டை கடைவாயிலே போட்டு நொறுக்கித் தின்றாலுங்கூட, கற்கண்டு துகள்கள்தான் கரையுமே தவிர சுவை குறையாது. அதே

போலத்தான் தமிழ். எனவேதான் அது கரையவில்லை என்பதை தம்பி வைரமுத்துவோடு சேர்ந்து நானும் ஒப்புக்கொள்கிறேன். உண்மையை ஒப்புக் கொள்வதில் தயக்கம் தேவை இல்லை என்ற காரணத்தால்!

களப்பிரர்கள் ஆண்டிருக்கிறார்கள்; தமிழகத்தை! சேர, சோழ பாண்டியன் ஆண்டிருக்கிறார்கள், தமிழகத்தை! இருண்ட காலம் தமிழகத்தை மொய்த்திருந்தது! அதுவும் நமக்குத் தெரியும் - வரலாறு கூறுகிறது. பல்லவர்கள் ஆண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்திலே வடமொழிக்குத்தான் ஆதிக்கம் இருந்தது. ஏன் பிற்காலச் சோழர்களிலே ராஜராஜ சோழன் ஆண்டிருக்கிறான். அவன் காலத்திலேகூட - தமிழுக்கு தனித்த உயர்வில்லை, வடமொழிக்குத்தான் அன்றைக்கும் ஆதிக்கம் இருந்தது.

இத்தனையும் கடந்து ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு நிலையிலும் தமிழ் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல், புலவர்கள் வாயிலாக புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கூறியதைப் போல - “தமிழ் எங்கள் இளமைக்குப் பால் புலவர்க்கு வேல்” என்பதைப் போல புலவர்கள் கையிலிருந்த காரணத்தால், தமிழ் அழியவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

“எத்தனை வண்ணங்கள் பூசிப் பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை” என்று வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார். அழியாது. பல வண்ணங்கள் பூசப்பட்டன - தமிழகத்தின் மீது! வானத்தை நாம் அண்ணாந்து பார்க்கும்போது எத்தனையோ வண்ணங்களை காண்கிறோம். காலையிலே கிழக்குத் திக்கிலே செவ்வானத்தை காண்கிறோம். பிறகு சில நேரங்களில் மஞ்சள் நிறத்தை மேகங்களிலே காண்கிறோம். சில நேரங்களில் வானவில்லில் பல வண்ணங்களைக் காண்கிறோம்.

மேற்கு திசையில் அந்தி

வானத்தில் செவ்வானத்தைக் காண்கிறோம். ஆனாலும் எத்தனை வண்ணங்கள் இருந்தாலும் வானம் ஒரே வண்ணம் தான். நீல வண்ணம்தான் - அதைப் போல எத்தனை வண்ணங்கள் வந்து மறைந்தாலும் “தமிழுக்கு நிறம் உண்டு” - அதுதான் வானத்தைப் போன்ற நிறம் - எப்படி நீல வண்ணம் வானத்திற்கு நிரந்தரமானதோ, அதைப் போலவே தமிழுக்கும் நிறம் உண்டு என்பதை இங்கே தம்பி வைரமுத்து எடுத்துக் காட்டியிருக்கின்ற இந்த மாண்பு - இந்தப் பெருமிதம் என்றென்றும் பாராட்டத் தகுந்தது.

ஒன்றை தம்பிக்குக் கூறிக் கொள்வேன். அவர் கட்டளை என்ற பெயரால் ஒரு கவிதையை இயற்றி இருக்கிறார். அவருக்கு கட்டளையிடுகின்ற வயது எனக்குண்டு. உரிமையும் எனக்குண்டு. எனவே நான் தம்பியைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முன்னுரையை ஏறத்தாழ பத்து அல்லது பதினொரு பக்கங்கள் கொண்ட முன்னுரை - ஒரு பெரிய புத்தகமாக வைரமுத்துவால் வரையப்பட்டு, அதனுடைய வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

(கைத்தட்டல்) ஏனென்றால் திருக்குறள் போல இதிலே தமிழகத்தின் வரலாறும், அந்த வரலாற்றிலே தமிழ் மொழி எப்படியெல்லாம் தப்பித்து பிழைத்தது என்பதும் எந்தெந்தப் புலவர்கள் எந்தெந்த காலக் கட்டத்தில் தமிழை வாழ வைத்தார்கள் என்பதும், வாழ வைக்க முற்பட்டார்கள் என்பதும் இந்த முன்னுரையிலே வரையப்பட்டு உள்ளது. இதை நானூறு அல்லது ஐநூறு பக்கப் புத்தகமாக வெளியிட்டால் என்றென்றைக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழ் மக்களுக்கு, எதிர்கால இளைஞர்களுக்கு, வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு உறுதுணையாக இது அமையும் என்ற காரணத்தால், இந்த முன்னுரை பெரிய அளவிலே விரிவுரையாக பெரிய

நூலாக வெளியிட வேண்டுமென்று நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விழா குறித்த விளம்பரத்தில் “இலக்கியப் பேச்சு - கலைஞர் ஆற்றுவார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இலக்கியம் என்பது என்னைப் பொறுத்தவரையில், அரசியல் வெப்பத்திற்கிடையே இளைப்பாறுகின்ற ஒரு நிழல், குளிர் தரும் நிழல் என்றாலுங்கூட - இலக்கியம் என்ற சொல்லைப் பற்றியே நாம் கொஞ்சம் ஆராயலாம். அதற்கு ஒரு சம்பவம்கூட உண்டு.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. முத்தமிழ் மாநாடு என்று அதற்குப் பெயர். அப்போது நான் சேலத்தில் திரைப்படத் துறையிலே பணியாற்றிக் கொண்டிருந்தேன். மந்திரிகுமாரி படம் வெளிவருகின்ற காலகட்டம். அந்த மாநாட்டிற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். முதல்நாள் செல்லவில்லை. மறுநாள் சென்றேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் அந்த மாநாடு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார், அவ்வை துரைசாமி பிள்ளை, வெள்ளை வாரணார் போன்றவர்களும் பங்கேற்ற மாநாடு அது.

மறுநாள் பகல் 12 மணி அளவில் நான் மாநாட்டிற்குச் சென்றதும், அங்கேயிருந்த நண்பர்களிடம் “நான் நேற்று வரவில்லையே, நேற்றும் இன்று காலையிலும் என்ன நடைபெற்றது?” என்று கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, “இலக்கியம் தமிழா, வடமொழியா? என்ற ஆராய்ச்சி நேற்று காலையிலே தொடங்கி இதுவரையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது” என்றார்கள்.

“ஏன்” என்று கேட்டேன். “தமிழ் இலக்கிய மன்றம் என்று தமிழகம் தழுவிய அளவிலே ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று முடிவு

செய்யப்பட்டிருக்கிறது. அந்த முடிவை எதிர்த்து நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘இலக்கியம்’ என்பது ‘இலட்சியம்’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. எனவே இலக்கிய மன்றம் என்று பெயர் வைக்கக் கூடாது” என்று சொன்னார். “அதை மறுத்து வேறு சில புலவர்கள் பேசினார்கள். இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

நான் சென்று அண்ணாவிற்கு பக்கத்திலே மேடையிலே அமர்ந்தபோது - பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், “இலக்கியம் தமிழ்தான். சோமசுந்தர பாரதியார் சொன்னதைப் போல அது வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததல்ல; ‘இலங்குதல்’ என்ற தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் வந்ததுதான் இலக்கியம்; எனவே இது தமிழ்தான்” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அடுத்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வெள்ளை வாரணார் என்ற பெரும் புலவரைப் பேச அழைத்தார். அழைக்கும்போதே, “அடுத்து புலவர் வெள்ளை வாரணார் அவர்கள் இலக்கியம் தமிழ் என்பதைப் பற்றிய கேள்விக்கு விடையளிப்பார் அல்லது தொடர்ந்து வாதிடுவார்” என்று கூறி அவரை அழைத்தார்.

அவர் பேசி முடித்த பிறகு என்னைப் பேச அழைத்தார்கள்.

நான் பேசும்போது சொன்னேன். “நேற்று இந்த மாநாட்டிற்கு வரவியலாமல் வேறு சில பணிகள் இருந்தன; இன்று வந்தவுடன் ‘என்ன நடந்தது? இதுவரை’ என்று கேட்டேன். ‘நேற்று முதல் இதுவரை இலக்கியம் தமிழா, வடமொழியா என்று ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது’ என்று குறிப்பிட்டார்கள்.

நான் இங்கே கூடியிருக்கும் பெரும் புலவர்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அது என்ன மொழி என்பதை நீங்கள் பத்துப் புலவர்கள் ஓர் இடத்திலே அமர்ந்து

ஒரு முடிவு செய்துகொண்டு வந்து இந்த இடத்திலே பேசியிருக்கலாம். நீங்கள் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக ஐம்பதாயிரம் பேருடைய நேரத்தை வீணடித்திருக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் முடிவு செய்து ‘இலக்கியம்’ தமிழா அல்லவா என்று ஒரு தீர்ப்பைச் சொன்னால் அதை நாங்கள் ஒத்துக்கொண்டு தொலைக்கிறோம். அதை விட்டு விட்டு எதற்காக இரண்டுநாள் மாநாடு” என்று கேட்டேன்.

நான் பேசி முடித்தபிறகு புரட்சிக் கவிஞருக்கு என் மீது கொஞ்சம் கோபம். என்னைப் பேச அழைக்கும்போதே அவர் “இப்போது நாடகப் புலவர் கருணாநிதி பேசுவார்” என்றழைத்தார். நான் உண்மையைச் சொல்கிறேன். நான் பேசி முடித்ததும், “உன்னைப் போய் நாடகப் புலவர் என்று சொன்னேனே” என்று சீறி விழுந்தார்.

ஏனென்றால் அங்கேயுள்ள புலவர்களையெல்லாம் நான் இழிவுபடுத்தி விட்டதாக அவருக்கு என் மீது கோபம். அண்ணாவிடம்கூட குறைப்பட்டுக் கொண்டார்.

மாலையிலே அண்ணா பேசினார். பேசும்போது “தம்பி கருணாநிதி காலையிலே பேசிக்கொண்டிருந்தபோது என் பக்கத்திலே இருந்த அவ்வை துரைசாமி பிள்ளை என்னை தொடையிலே தட்டி, உங்கள் கட்சியிலே ஹைட்ரஜன் குண்டுகளையெல்லாம் வளர்க்கிறீர்களே (பலத்த கைத்தட்டல்) என்று சொன்னார்” என்று அண்ணா குறிப்பிட்டார்.

இதை நான் அவர்கள் எல்லாம் இல்லாத நிலையில் இப்போது மட்டும் கூறவில்லை. அவர்கள் எல்லாம் இருந்தபோதே பலமுறை கூறியிருக்கிறேன். அவர்கள் எல்லாம் இருந்த மேடையிலேயே கூறியிருக்கிறேன்.

ஏனென்றால் மக்களுக்குப் புரிய வேண்டிய ஒரு பிரச்சினையை அதிகம் மொழி சம்பந்தப்பட்ட ஒன்றை புலவர்கள் ஒன்று கூடி அவர்களே தீர்மானித்து மக்கள் முன்னால் அதை வைத்தால் பிரச்சனை தொடராது. அதை விடுத்து மக்கள் மன்றத்திலே விவாதமாக அதை ஆக்குவது கூடாது என்பதைத்தான் நான் அன்றைக்கு எடுத்துச் சொன்னேன். எனவே இங்கே இலக்கியம் பற்றி நான் பேச வேண்டுமென்று தம்பி வைரமுத்து அன்புக் கட்டளை பிறப்பித்திருந்தாலும், நான் இன்று பேசவிருக்கின்ற இலக்கியம் தம்பி வைரமுத்து எழுதியுள்ள “தமிழுக்கு நிறம் உண்டு” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பிலே நான் காணுகின்ற சுவைகள்தான் - நான் காண்கின்ற இன்பம்தான்; நான் காண்கின்ற உணர்வுதான் - அதைத்தான் இலக்கியமாக இன்றைக்கு நான் பேசவிழைகிறேன்.

எடுத்த எடுப்பில் - முன்னுரையைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து! அதில் எழுதுகிறார்...

“விழித்துப் பார்க்கும் விடியலெவ்வொன்றிலும் தலையணை மீது தலையிருந்ததில்லை”

இது எல்லோருக்கும் அனுபவம்தான். படுத்துத் தூங்குவோம். காலையிலே எழுந்து பார்க்கும்போது தலை, தலையணைமீது இருக்காது. அவரவர்களுடைய அனுபவம் அவர்களுக்கே தெரியும். (கைத்தட்டல்) வைரமுத்துவுக்குத் தலை எங்கேயிருந்து என்று எனக்குத் தெரியாது (கைத்தட்டல்) அடுத்து,

“ஒரே பாய்ச்சலில் உள்ளாடைக்குள் கால் நுழைத்த சாதனை நிகழ்ந்ததே இல்லை”

காலையில் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ போடும்போது ஒரே நேரத்தில் போட்ட முடியாது. போடும் போதே அந்தக் காலா, இந்தக் காலா என்று சந்தேகம் வந்துவிடும். அதாவது தனிப்பட்ட, சொந்த, எல்லோருக்கும் தெரிந்த - ஆனால் நாம் சொல்லாத விஷயங்களை - தம்பி வைரமுத்து சொல்லியிருப்பதைப் பார்த்துத்தான் ஆச்சரியப்படுகிறேன். தொடர்ந்து எழுதுகிறார்,

முதற் பதிப்பு : மே 2000