தமிழ்க்குடி மகன்!
பகுதி 2 · 2 / 3
சாதி பெருகிட பெருகிட, அதனை மூலகனமாக வைத்து ஆதிக்கவர்க்கம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டது! சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில்,
தன்மான இயக்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட அதே நேரத்தில் இந்திய உப கண்டத்தில் உத்தமர் காந்தியடிகளின் உதடுகளிலே இருந்து அவரின் உள்ளத்து முழக்கம் வெளிப்பட்டது. பல்வேறு அரசியல் இயக்கங்கள், சாதிகள் ஒழிய வேண்டும் என்பதிலே முனைப்பைக் காட்டின. அதிலே தலைசிறந்ததாக - எல்லோருக்கும் வழிகாட்டத்தக்கதாக இருந்த இயக்கம் திராவிடர் இயக்கம். சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கியது தன்மான இயக்கம்தான், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்தான் என்பதை வரலாறு படித்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
சாதியை ஒழிப்பதற்கு “சாதி ஒழிக ஒழிக” என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? என்றால் போதாது. எல்லாச் சாதியைச் சேர்ந்த மக்களும் தங்களை ஒருவரோடு ஒருவர் உடன்பிறப்புகளாகக் கொண்டு பழகிட வேண்டும். தீண்டாமையை ஒழித்திட வேண்டும்.
பெரிய சாதிக்காரர்கள் வாழ்கின்ற பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் தோளிலே துண்டு போடக்கூடாத நிலை மாற்றப்பட வேண்டும்; காலிலே செருப்பு போடுவதற்கும் தடை என்றிருந்த நிலை மாறவேண்டும்; என்றெல்லாம் போராடிப் போராடிப் பெற்ற வெற்றியின் அடையாளமாகத்தான் இன்றைக்கு இந்தக் கல்லூரி முதல்வர் பேசும்போது குறிப்பிட்டாரே யாதவர் கல்லூரி என்ற பெயரில் இது அமைந்திருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று சொன்னாரே அந்தப் பாகுபாடு இருக்கின்ற நிலையாலும்.
சாதிகள் ஒழிக்கப்பட்ட நம்மிடத்திலே நல்ல உணர்வுகள் வெளிப்பட வேண்டும். ஒரு சாதி இன்னொரு சாதியோடு உறவு கொண்டிட வேண்டும் என்கிற நல்ல வழியை அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறைப்படுத்தினார்கள். இப்படி சாதிகள் ஒன்றோடொன்று இணைந்து, ‘ஒன்றே குலம்’ என்ற நிலை ஏற்பட்டாக வேண்டும். அதுவே நம்முடைய குறிக்கோள்.
ஒன்றே குலம் வேண்டும், அதுவே எங்கள் குறிக்கோள் என்று கூறுகிறாயே, அப்படிக் கூறும் நீ வகுப்புரிமை வேண்டும் என்று கேட்டதிலிருந்து வகுப்புகள் இருந்திட வேண்டுமென்று கூறுகிறாயா என்று நீங்கள் கேட்டிடக்கூடும். இங்கேதான் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஒன்றே குலம் என்பதே நம்முடைய குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைகிறவரை இருக்கிற வகுப்புகளுக்குரிய உரிமைகள் குறைக்கப்படக் கூடாது. இதுதான் நம்முடைய குறிக்கோள்.
தந்தை பெரியார் அவர்கள் கோயில்களே கூடாது என்ற குறிக்கோள் கொண்டவர். அந்தக் குறிக்கோளை தந்தை பெரியார் கோயிலிலே அர்ச்சனை செய்கிறவர்கள் எல்லா சாதிகளையும் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அய்யராகவும் இருக்கலாம், அரிசன சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அதற்கோர் சட்டம் தேவை என்று நாம் ஆட்சியிலிருந்த போது குரல் கொடுத்தார். அந்தக் குரலை நாங்கள் சட்டமாக ஆக்கினோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சில சனாதனிகள் தொடுத்த போரின் காரணமாகத்தான் நாங்கள் உருவாக்கிய சட்டம் முடமாக்கப்பட்டு இன்னும் எழுந்து நடமாட முடியாமல் இருக்கின்றது, அரசியல்
சட்டத்திற்கு எத்தனையோ திருத்தங்கள். ஆனால் இந்த சட்டம் நிறைவேற திருத்தம் கொண்டு வரப்படவில்லை. திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் மறைந்து விட்டார்.
அவர் மறைந்த நேரத்தில் சொன்னேன், அனைத்து சாதி மக்களும் ஆலயங்களிலே அர்ச்சகர்களாக ஆக வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தினார் பெரியார். அதற்கென இயற்றப்பட்ட சட்டம் உச்ச நீதிமன்றத்தில் முடமாக்கப்பட்டு விட்டது. ஆகவே தந்தை பெரியார் இதயத்தில் குத்தப்பட்டிருக்கிற முள்ளை எடுக்காமலேயே அவரைப் புதைக்கிறோம் என்று வேதனையோடு நான் குறிப்பிட்டேன். அந்த முள் வேறு எதுவும் அல்ல. ஆண்டவனைப் பூஜிக்கிற அத்தனை பேரும் அர்ச்சனை செய்யும் உரிமை படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
யார் யார் அர்ச்சனை செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறார்களோ, பயிற்சியின் மூலம் தேர்ச்சியைப் பெறுகிறார்களோ அவர்கள் அரிசன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - கள்ளராக, மறவராக, யாதவராக இருந்தாலும், அவர்கள் அர்ச்சகர்களாக ஆகலாம் என்று பெரியார் கூறினார் என்றால், அதற்கு என்ன பொருள்? கோயில் வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
“கோயில் கூடாது என்பது குறிக்கோளாக இருந்தாலும், கோயில் என்பது இருக்கும் வரை அங்கே அர்ச்சனை செய்கிற உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்” என்பதுதான் அவருடைய உரிமை முழக்கம். இப்படிக் கொள்கைக்கும் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத சில பேர் தங்களையும் குழப்பிக் கொண்டு, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். கொள்கை
என்பது வேறு. அந்தக் கொள்கையை நிறைவேற்ற நடத்துகின்ற பயணத்திலே நமக்கென்று உரிமைகள் இருக்க வேண்டும்.
ஒன்றே குலம் என்பது நம்முடைய குறிக்கோள். நாம் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ-இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, ஐம்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு யாதவர், முதலியார், பிள்ளை என்று சாதிப் பெயர்களே இல்லாத நிலை ஏற்படக்கூடும். அப்படி ஏற்படுகிற வரையில் இருக்கின்ற உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது.
அதற்காகத்தான் இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம், இந்தச் சமுதாயத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது பதறுகிறார்கள், பரபரப்பு அடைகிறார்கள், துடிக்கிறார்கள், துவண்டு போகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமா? வேண்டாமா என்பதை எதிர்காலத்தை உருவாக்க இருக்கின்ற மாணவக் கண்மணிகள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
இந்தக் கல்லூரியில் 87 விழுக்காட்டுக்கு மேலானவர்கள் பிற்படுத்தப்பட்டோர் படிக்கிறார்கள் என்றால் 1928-ஆம் ஆண்டு நீதிக் கட்சி ஆதரவோடு அமைச்சர் பொறுப்பை வகித்து வந்த முத்தையா அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் காரணமாகத்தான் பிராமணர்கள் - பிராமணர் அல்லாதவர்கள் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்றவாறு கல்லூரிகளிலும் வேலை வாய்ப்புகளிலும் இடம் பெறவும் வழி வகுத்தது.
நான் இதைச் சொல்வதால் இங்கே நான் ஜாதிப் பிரச்சினையைப் பேசுவதாகக் கருதக்கூடாது.
பிராமணர் சமுதாயம், பிராமணர் அல்லாதார் சமுதாயம் என்பதை வரலாற்றில் யாரும் மறைக்க முடியாத பகுதிகளாகும். பிராமண வரலாற்று ஆசிரியர்களே அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் படித்து முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிராமணர் அல்லாதவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். படிப்பதே பாவம் என்று கருதிக் கொண்டு படிப்பறையின் தலைவாசலையே எண்ணிப் பார்த்தவர்களாக இருக்கிறார்கள்.
மக்கள் தொகையில் மிகக் குறைவானோர் கல்வியறிவு படைத்தவர்களாகவும், அதிக எண்ணிக்கை படைத்தவர்கள் கல்வியறிவு அற்றவர்களாக தாழ்ந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உரிமை பெற்றுத்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட்டது.
