தமிழ்க்குடி மகன்!
பகுதி 3 · 3 / 3
1951-ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அந்தச் சட்டம் முறியடிக்கப்பட்டது. அன்று இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் கம்யூனல் ஜி.ஓ எந்த அளவுக்கு மக்களுக்குத் தேவையானது என்பதை மற்றவர்களுக்கு அறிவுறுத்த அதை உயர்நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார்கள்.
உச்ச நீதிமன்றத்திலும் கம்யூனல் ஜி.ஓ.வின் கழுத்து நெறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பண்டித நேரு அவர்களிடத்தில் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா - பெரியார் உயர்த்திய போர்க் கொடியைச் சுட்டிக் காட்டி பெருந்தலைவர் காமராசர் அவர்களும் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் தலைவர்களும் நேருவிடம் சொன்னார்கள். அவர்களே அதைப் பற்றித் தெளிவாக உணர்ந்து அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அந்தத் திருத்தத்தை நேரு அவர்களே ஆதரித்துப் பேசி அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் 51-ஆம் ஆண்டு
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்லூரிகளில் சேருவதற்கான இட ஒதுக்கீடு 25 சதவிகிதம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம் என்றும் மீதம் உள்ள 60 இடங்கள் எல்லா ஜாதிக்காரர்களும் போட்டியிடக் கூடிய இடங்கள் என்றும் முறைப்படுத்தப்பட்டது. அது ஒரு ஏற்பாடு என்றாலும் அதுகூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இருந்தாலும் இதாவது கிடைத்ததே என்ற மன ஆறுதலோடு ஏற்றுக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு 71-ஆம் ஆண்டு முதல்வர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டபோது சட்டப் பேரவையிலேயே சொன்னேன். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்களுக்காக என்னுடைய ஆட்சிக் காலத்தில் என்னுடைய வாழ்வையே பணயமாக வைத்து வாதாடுவேன் - போராடுவேன் என்று சொன்னேன். நானே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன். எனவே அவர்களின் நலனைக் கவனிக்க என்னுடைய ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதி அளித்தேன்.
பிறகு அதற்கென சட்டநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சில பரிந்துரைகளை தந்தது. அந்தப் பரிந்துரைகளிலே ஒன்றுதான் 25 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருந்ததை மேலும் உயர்த்த வேண்டும் என்கிற பரிந்துரையாகும். 8 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்றார்கள். 8 சதவிகிதத்தில் அதை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே உயர்த்தி விட்டால் அது நன்றாக இராது என்று 8-ல் 6 சதவிகிதத்தை எடுத்துப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்த்தி அதை 31 சதவிகிதம் என்றாக்கி, இரண்டு சதவிகிதத்தை தாழ்த்தப்பட்டவர்
களுக்கு உயர்த்தி அதை 18 சதவிகிதம் என்றாக்கி அதற்கு மேல் உயர்த்துவதற்கு இடம் இருக்கிறதா? என்று கேட்டு அரசியல் சட்டப்படி உயர்த்த இயலாது என்ற நிலைமை தெரிவிக்கப்பட்டதால் அது கைவிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது போக மீதி 51 சதவிகிதத்திலும் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தலாம் என்று கண்டு அதற்கு அரசியல் சட்டத்தில் எந்தவித இடையூறும் இல்லை என்பதைப் புரிந்து கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ச் அவருக்குத் தரப்பட்ட சட்ட ஆலோசகர்கள் கருத்துப்படி அவர் 51 சதவிகிதத்தில் எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு 15 சதவிகிதம் என்று ஒதுக்கி இருக்கிறார். நான் இங்கே பொறுப்பில் இருந்திருந்தால் தேவராஜ் அர்சைப் பின்பற்றி 51 சதவிகிதத்தில் 15 சதவிகிதத்தை எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு ஒதுக்கி இருப்பேன்.
ஐயோ! நான் முதல்வராக இல்லையே என்ற கவலையால் நான் இதைச் சொல்லவில்லை. இந்தக் காரியத்தை உங்களுக்குச் செய்யக்கூடிய இடத்தில் நான் இல்லையே என்ற வருத்தத்தில் சொல்லுகிறேன்.
15 சதவிகிதத்தை ஒதுக்கினார் யாருக்கு? பிராமண ஜாதியிலே உள்ள ஏழையானாலும், முதலியார், செட்டியார், மற்றும் உள்ள உயர்சாதிக்காரர் ஆனாலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய வகுப்புகளில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் கர்நாடகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த நிலைதான் இங்கேயும் பின்பற்றப்பட வேண்டுமே அல்லாமல் “உழக்குக்குள்ளே கிழக்கு மேற்கு”ப் பார்ப்பதைப் போல் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்குள்ளேயே ஏழை, பணக்காரன் என்று பார்த்துக் கொண்டிருப்பது நியாயமில்லை. தர்மம் அல்ல.
எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரிய இருள் கவிழ்ந்த நிலை ஏற்படிவிடும் என்று நாம் எச்சரிக்கிறோம். எதிர்க் கட்சியின் சார்பிலே சொல்லுகின்ற காரணத்தால் ஏதோ வேண்டுமென்றே அரசுக்கு விரோதமாகச் சொல்லுகின்ற கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ளாமல் அவைகளை மறுபரிசீலனை செய்யப் பொறுப்பிலே உள்ளவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். உங்கள் நியாயமான கோரிக்கைகளை கேட்டுப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
கல்லூரி முதல்வர் நல்லெண்ணம் படைத்தவராக, தமிழ்க்குடிமகனாக இருக்கிற காரணத்தால் நிச்சயம் அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்றும் ஆர்வம் படைத்தவராக இருப்பார். அதுதான் நிலை.
அதுபோலத்தான் பொறுப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எழுகின்ற கோரிக்கை எங்கிருந்து எழுகின்றது என்று பாராமல் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற அந்தக் குறளின் அடிப்படையில் ஆராய்ந்து நீதி வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.
இன்று தமிழ்க்குடிமகனுக்கு ஏற்பட்டிருக்கிற நிலை என்ன? நான் கல்லூரி முதல்வரைச் சொல்லவில்லை. தமிழ்ச் சமுதாயத்தைச் சொல்லுகிறேன். எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடு-கேள்விக் குறியோடு இருக்கிறார்கள். அவன் எடுத்து வைத்திருக்கிற ஒவ்வொரு அடியிலும் நெருஞ்சிமுள் குத்துகிறது. அடுத்த அடி வைத்தால் கருவேலமுள் குத்துகிறது. அதற்கு அடுத்த அடி வைத்தால் ஈட்டியோ, வேலோ, வாளோ குத்தும்
என்கிற அளவுக்கு அவனுடைய எதிர்காலம் சிக்கலாகி கிடக்கிறது.
இதற்கு ஒரு மாற்றுத் தேவை. இதற்கோர் வழிபிறந்தாக வேண்டும். தமிழ்க்குடிமகன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற சூளுரையை மேற்கொள்ள வேண்டியது இன்றைய மாணவர்களாகிய உங்கள் கடமையாகும்.
இதை நான் பேசுகிற காரணத்தாலேயே யாதவர் கல்லூரிக்கு கருணாநிதி வந்தான் மாணவர்களைத் தூண்டிவிடும் காரியத்தைச் செய்தான் என்று யாராவது சொல்வார்களேயானால் நான் இங்கே ஆற்றும் உரை உங்களைத் தூண்டி விடுவதற்காக அல்ல. யாரையும் உணர்ச்சி வசப்படுத்தாத காரியங்களில் ஈடுபடச் செய்வதற்காக அல்ல. சிந்தித்தாலே போதும். மாணவர்கள் சிந்தித்தாலே மற்றவர்கள் செயல்படுவதற்குச் சமானமாகும். எனவே நீங்கள் சிந்தித்தால் போதும்.
செயல்பட நாங்கள் இருக்கிறோம்.
நீங்கள் சிந்திக்க மறந்து விடுவீர்களானால், எதிர்காலம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர மறந்து விடுவீர்களானால், நாம் படிக்கிறோம் - நம் குடும்பம் வாழ்கிறது என்ற அந்த எண்ணத்தோடு உங்கள் நிலையை நிறுத்தி விடுவீர்களானால், நமக்குப் பிறகு நம்முடைய எதிர்காலச் சமுதாயம், நம்முடைய சந்ததியினர் என்ன ஆவார்கள் என்பதைப் பற்றிய எண்ணத்தை அறவே விட்டுவிட்டோம் என்ற பழிக்கு ஆளாவோம்.
5.8.79 அன்று மதுரை யாதவர் கல்லூரியில் ஆற்றிய உரை.
