தமிழ்க்குடி மகன்!
பகுதி 1 · 1 / 3
தமிழ்க்குடி மகன்!
இந்தக் கல்லூரியின் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா என்ற பெயரில் இந்த மாலை நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தப் பரந்த வெளியில் இந்தக் கல்லூரி துவங்க வேண்டும் என்கிற தனியாத ஆசையோடு கல்லூரி விழா நடத்திவிட்டு அதன்பின் இங்கே எழுந்துள்ள கட்டிடங்களைக் காணும் வாய்ப்பினை பெறும் அளவிற்கு இந்தக் கல்லூரி சிறப்புற நடைபெறுகிறது என்ற செய்தியினை, தொடர்ந்து கேட்டு, நேரிலே காணவேண்டும் என்கிற ஆசையும் நிறைவு பெறுகின்ற அளவிற்கு இந்த விழாவிலே நான் பங்கு பெறுகின்ற வாய்ப்பை அடைந்திருக்கின்றேன்.
அனைத்து மன்றங்களின் தொடக்க விழாவில் மாணவர் பேரவைத் தலைவருக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் இங்கே நடைபெறுகிறது.
இன்றைக்கு மாணவர் தலைவர் எடுத்துக் கொண்டிருக்கிற உறுதிமொழி அந்தப் பதவி எத்தனை ஆண்டு காலத்திற்கு, எத்தனை மாதங்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றதோ அந்தக் கால கட்டம் வரையில் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றுவார் என்ற உறுதியை நமக்கு தெரிவிக்கின்றது.
ஆனால் இன்றைக்கு அனைத்து இந்திய அரங்கத்தில் நாள்தோறும் உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன - முதல்வர் முன்னிலையில் அல்ல. இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எடுக்கப்பட்டவர்கள் எவ்வளவு நாளைக்கு உறுதிப்பாட்டோடு இருப்பார்கள் என்ற ஐயப்பாட்டோடு அனைத்து இந்தியாவில் இருக்கின்ற மக்கள் விழிகளை அகல விரித்து இந்திய நகரத்தின் தலைநகரை உற்று நோக்கியவாறு இருக்கிற சூழ்நிலையில்தான் நான் உங்களை இந்தக் கல்லூரியில் சந்திக்கின்றேன்.
நம்முடைய கல்லூரி முதல்வர் தமிழ்க்குடிமகன் அவர்கள் என்னைப் பற்றியும், நான் இந்தக் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் பற்றியும், எடுத்துரைத்ததைத் தொடர்ந்து மாணவர் பேரவைத் தலைவர் ராஜசேகரனும், ஆட்சிக் குழுத் தலைவர் கோவிந்தராசனும், தாளாளர் ரங்கசாமியும், பல்வேறு கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
மாணவர் பேரவைத் தலைவர் உரையாற்றியபோது யாதவர் பெருங்குடி மக்களின் தலைவர் கண்ணனென்றும், அந்தக் கண்ணன் ஏழ்மையிலே துவண்டு கொண்டிருந்த குசேலனுக்கு செல்வத்தை வாரி வழங்கி மாளிகைக்கு அதிபதியாக ஆக்கினான் என்றும் ஒரு உதாரணத்தை எடுத்துச் சொன்னார். குசேலருக்கு 27 குழந்தைகள். குசேலருக்கு அளப்பரிய செல்வத்தையும் அளித்த கண்ணன் குசேலருக்கு எந்த நிபந்தனையும் போட்டவில்லை. நீ பணக்காரனாகிவிட்ட காரணத்தினால் உன் பிள்ளைகள் 27 பேருக்கும் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அவன் தடுத்து விடவில்லை.
அப்படி தடுத்திருந்தால் குசேலருக்கு இவ்வளவு செல்வம் இருந்தவராக ஆகிவிட்டார் - ஆகவே அவருடைய
பிள்ளைகள் படிக்க இயலாது - அவர்கள் எல்லாம் முன்னேறியவர்களாக மாறிவிட்டார்கள் என்று கண்ணன் அன்றைக்கு சொல்லி இருந்தால், குசேலர் பிள்ளைகள் 27 பேரும் கல்வி கற்றிருக்க முடியாது. இன்று அதேநிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. குசேலரின் நிலையிலிருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கண்ணன் அல்ல என்னுடைய அண்ணன், அவருடைய தலைவர் தந்தை பெரியார், அவருக்கும் முன்பிருந்த திராவிடர் இயக்கத்தின் பெருந் தலைவர்கள் இவர்களெல்லாம் வழங்கிய கருவுலந்தான், நிகரற்ற செல்வம்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், வகுப்புரிமை என்பதாகும்.
அதை வழங்கிய அந்தத் தலைவர்கள் எந்த நிபந்தனையையும், எப்படி கதையில் வருகிற கண்ணன் குசேலருக்கு விதிக்கவில்லையோ, அதைப்போல நிபந்தனைகள் எதுவுமில்லாமல் தாழ்ந்து கிடக்கும் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக கல்வியறிவற்று, ஏன், கண்ணற்று, கபோதி நிலையிலிருக்கிற சமுதாயம் தலைநிமிர்ந்து எழுந்து நடமாடவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தோடு அந்தக் கருவுலத்தை வழங்கினார்கள்.
அந்தச் செல்வம் தொடர்ந்து பல ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்டது. பரிபோகாமல் அதைப் பாதுகாக்க பல ஆட்சிகள் இருந்தன. பெருந்தலைவர் காமராசர், பெரியவர் பக்தவத்சலம், குமாரசாமிராஜா, குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி அவர்களே ஆனாலும்கூட அந்தச் செல்வத்தைச் சீரழிக்க எண்ணியது இல்லை. ஆனால் இன்றைக்கு அந்தச் செல்வம் கொள்ளை போகின்ற சூழ்நிலையிலேதான் உங்கள் முன்னால், அந்தக் கொள்ளையைத் தடுக்க உங்களுடைய கரங்களும் எனக்கு உதவிட வேண்டும்
என்ற கோரிக்கையோடு நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்க்குடிமகன் இங்கே நான் நீண்ட நேரம் உரையாற்ற வேண்டுமென குறிப்பிட்டார். எனக்கு நிறைய நிகழ்ச்சிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். நீண்ட உரைக்குத் தலைப்பு ஏதுவாக இருக்கலாம் என்று மேடையில் இருந்தவாறு நான் யோசித்தேன். தலைப்பு “தமிழ்க்குடிமகன்” என்பதுதான். தமிழ்க்குடிமகன் பழங்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களை பிரித்துக் கொண்டு அந்த நிலங்களுக்கு ஏற்பவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வு நெறியை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்தவன்.
அந்தத் தமிழ்க்குடிமகன் உலகத்திற்குப் பண்பாடுகளை கற்றுத் தரும் ஆற்றல் பெற்றிருந்தான். உலகத்தோடு வாணிபத் தொடர்பு கொள்ளுமளவிற்கு திறன் படைத்தவனாக இருந்தான். அந்தத் தமிழ்க்குடிமகன் தமிழகத்தில் விளைவித்த செல்வங்களை கிரேக்கம், யவனம் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வெளிநாட்டிலே இருந்து வருகிற பொருட்களை தன்னுடைய நாட்டுத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து அவைகளை தமிழ் மக்களுக்குத் தருகிற வாணிப வேந்தனாக விளங்கினான்.
கடாரங்கொண்டான், இலங்கையை வென்றான் என வரலாற்று வேந்தனாக தமிழ்க்குடிமகன் திகழ்ந்தான். அப்படித் திகழ்ந்த தமிழ்க்குடிமகன் இடைக்காலத்திலேற்பட்ட சில அல்லல்களால், சோதனைகளால், சில குறுக்கீடுகளால் தமிழ்க்குடிமகன் என்ற பெயரையே இழந்தான். அந்தப் பெயர் யாதவர், முக்குலத்தோர், வன்னியர், முதலியார், செட்டியார், பிள்ளை என்று இப்படி பல பெயர்களாக மாறின. பல பெயர்களாக
மாறினாலும் அவன் தமிழ்க்குடிமகன்தான். எப்படி கண்ணனை கிருஷ்ணனென்றும், பரமாத்மா என்றும் பரந்தாமன் என்றும், வேணுகோபாலன் என்றும், விஷ்ணுவென்றும் யாதவர்களும், வைணவர்களும் பல பெயரிட்டு அழைக்கிறார்களோ அதைப் போலத்தான் தமிழ்க்குடிமகனைப் பல பெயரிட்டு அழைக்கிற நிலைமை தமிழகத்திலே ஏற்பட்டது.
அந்த நிலைக்குக் காரணம் தமிழ்க்குடிமகன் அகராதியிலேயே இல்லாத வார்த்தை - ஜாதி என்ற வார்த்தை - புதிதாக நுழைக்கப்பட்டமைதான். அப்படி நுழைக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ்க்குடிமகன் பல பிரிவுகளாக ஆக்கப்பட்டான். அப்படிப் பிரிக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதற்கு ஆண்டவன் சாட்சிக்கு இழுக்கப்பட்டான்! வேதங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் இவைகள்தான் இந்த சமூக நீதிக்குக் காரணம் என்று சமூகத்தில் அநீதி புரிந்தவர்கள் அவைகளை தங்களுக்கு எடுத்துக்காட்டுக் களாகச் சொன்னார்கள்.
இவன் பிரம்மதேவனின் தலையிலே உதித்தான், அவன் தோளில் உதித்தான், இவன் தொடையில் பிறந்தான், இவன் காலில் உதித்தான், காலில் பிறந்த காரணத்தால் கீழ்ச்சாதிக்காரன் இவன் என்று சொன்னார்கள். ஆண்டவனையே சாட்சிக்கு இழுத்து தமிழ்க்குடிமகனை தாழ்த்தி விட்டார்கள். அப்பொழுதுதான் தன்மான இயக்கம் இந்த மண்ணிலே தோன்றியது. இப்படி சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வேதங்களின் பெயரால், இதிகாசங்களின் பெயரால் மக்களை தாழ்த்தியிருக்கின்ற நிலை, பிற்படுத்தியிருக்கின்ற நிலை, சரியா?
தகுமா? முறையா? என்று தன்மான இயக்கம் கேட்டது.
அந்தத் தன்மான இயக்கத்தின் மொத்த வடிவமாகத்தான் தந்தை பெரியார் குரல் எழுப்பினார். அந்தக் குரலுக்குக் கிடைத்த பதில்தான் இவர்கள் ஆண்டவன் பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள், கீழ்ச்சாதிக்காரர்கள் என்று சொன்னார்கள். அதற்கு தன்மான இயக்கத்தின் சார்பில் நாம் அளித்த பதில்தான் ஆண்டவன் என்று ஒருவன் இருந்து அவன் தன் நெற்றியிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் மக்களை பிரசவித்திருப்பானானால் அப்படி உற்பத்தி செய்யப்பட்ட அனைவரும் அவரது உடலிலே பிறந்த மனிதர்கள் தானே - அவர்களை ஏன் இத்தனை பிரிவுகளாக பிரிக்கிறீர்கள்?
என்று கேட்டது மாத்திரமல்ல, இன்னொன்றையும் கேட்டோம்.
அத்திமரத்தை எடுத்துக் கொண்டால் உச்சியிலும், கிளையிலும், அடிமரத்திலும் காய்கள் காய்க்கின்றன. எங்கே காய்த்தாலும் அதனை அத்திக்காய் என்றுதான் சொல்கிறோமே தவிர, அடிமரத்தில் காய்ப்பதை பன்றிக்காய் என்றோ, கிளையில் காய்ப்பதை புடலங்காய் என்றோ, உச்சியில் காய்ப்பதை வெண்டைக்காய் என்றோ அழைப்பதில்லை. அதைப் போலத்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவரும், தோளிலும், தொடையிலும், காலிலும் தோன்றியவரும் மனிதர்கள் தானே தவிர அவர்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை என்று சொன்னோம்.
அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் சாதிகள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பெருகின.
