உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

தமிழின் சொல்வளம்

பகுதி 2 · 2 / 3

நீங்கள் சென்று வாதாட வேண்டிய நீதிமன்றம் இந்தியத் திருநாடாகவே இருக்கிறது!

இந்த இந்தியத் திருநாட்டிலே எதிர்காலத்திலே வாதி-பிரதிவாதி என்று பார்க்கின்ற நேரத்தில் அவர்கள் இருவரையும் நீங்கள் அளவிட்டுப் பார்க்கிற நேரத்தில், சாதி ஆணவம், மத வேறுபாடுகள், பணத்திமிர், நிலப் பிரபுக்களுடைய ஆதிக்கம், முதலாளிகளுடைய இரும்புக்

கொண்டிருக்கிற - வயிற்றைப் பிடித்து பசி நோயால் கதறிக் கொண்டிருக்கின்ற - கண்ணீர் மல்க கை பிசைந்து நின்று கொண்டிருக்கின்ற பாட்டாளி வர்க்கத்தையும் - இந்த இரு பிரிவினரையும் நீங்கள் பிரித்துப் பார்க்கிற நேரத்தில் நாம் யாருக்காக வாதாட வேண்டும்? நாம் படித்த படிப்பு, நாம் பயின்ற பட்டத்தை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் இன்றைக்கே அதற்குத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதைத்தான் நான் உங்களுக்கு அழுத்தம் திருத்தமாகக் கூற ஆசைப்படுகின்றேன்.

இங்கு இலக்கியங்களைப் பற்றி எல்லாம் கருணாநிதி பேசுவார் என்று பேரவையினுடைய தலைவர் பாண்டியன் எடுத்துரைத்தார். சட்டக் கல்லூரியிலே இலக்கியம் இடம் பெறலாமா என்று நீங்களும் கேட்க மாட்டீர்கள். நானும் அதிலே ஐயம் கொண்டவன் அல்ல. மேலும், இது இலக்கியம் இடம் பெறக்கூடிய வேளையுங்கூட அதை இல்லை என்று மறுக்கவில்லை.

ஆனால், நான் வேறு பல இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற காரணத்தால் இங்கே இலக்கியத்தில் நானும் ஆழ்ந்து, நீங்களும் ஆழ்ந்துவிட்டால் அடுத்த நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாது என்பதற்காகத்தான் நான் இலக்கியத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை, இலக்கியத்தை நமக்குத் தந்த தமிழ் மொழி எல்லாத் துறையிலும் வளர்ந்து இருக்கிறதா என்பதை தயவுகூர்ந்து நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குறிப்பாக நம்முடைய சட்டத்துறையிலேகூட தமிழ் மொழி நாம் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் வளரவில்லை.

சட்டத்துறை தமிழிலே இயங்க வேண்டும், நீதி மன்றங்களிலே தமிழிலே தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்

என்று கூறப்படுகிறது என்றாலும், அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும்கூட முழுமையான - மன நிறைவு கொள்ளத்தக்க அளவிற்கு சட்டத்துறையிலே தமிழ் ஆதிக்கம் பெறவில்லை என்பதை நான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலத்திலே இன்றைக்குச் சட்டத்துறையிலே புழங்குகின்ற சொற்கள் எத்தனை என்பதையும், தமிழிலே எத்தனை சொற்கள் புழங்குகின்றன என்பதையும் சட்டக் கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்முடைய வீட்டிலே இருக்கின்ற பெரியவர்களைப் பார்த்து, உங்களுடைய பையன் எங்கே படிக்கிறான் என்று கேட்டால் சட்டக் கல்லூரியிலே படிக்கிறான் என்று தமிழிலே சொல்வார்கள். ஆங்கிலத்திலே சொல்லுகிறார்கள் என்றால் ‘லா காலேஜ்லே படிக்கிறான்’ என்று சொல்லுவார்கள்.

‘அவன் என்ன படிக்கிறான்?’ என்று கேட்டால் ‘சட்டம் படிக்கிறான்’ என்று தமிழிலே சொல்வார்கள். ஆங்கிலத்திலே ‘லா’ படிக்கிறான் என்று சொல்வார்கள்.

ஆக சட்டம் என்ற சொல்லை - ‘லா’ என்கிற அந்த ஆங்கிலச் சொல்லுக்கு நாம் பொருத்துகிறோம்.

‘லா’ படித்து முடித்திருப்பவர்கள் வழக்கறிஞர்களான பிறகு, அவர் வழக்கறிஞர் அறையிலே உட்கார்ந்து ஒரு பெரிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு வருகின்ற ஒருவர், பையன் என்ன படித்துக் கொண்டிருக்கிறான் என்று கேட்கும் பொழுது, இவர் போய் பார்த்துவிட்டு வந்து, அவன் படிப்பது 1935-ம் ஆண்டு ‘ஆக்டை’ப் படித்துக் கொண்டிருக்கிறான் என்று ஆங்கிலத்திலே சொல்லலாம். ஆனால் தமிழிலே சொல்கிற நேரத்திலே 35-ம் ஆண்டு சட்டத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘லா’ என்பதற்கு சட்டம்-‘ஆக்ட்’ என்பதற்கும் சட்டம் என்கிற ஒரே சொல்தான் வருகிறது.

அது மாத்திரமல்ல; ஒரு ‘ஆக்ட்’ சட்டம் - ஆக்டாக ஆவதற்கு முன்பு சட்ட மன்றத்திலே வருகிறது. சட்ட மன்றத்திலே சொல்கிற பொழுது அங்கே என்ன சொல்லுகிறோம். வேறு மொழியிலே ‘மசோதா’ என்று இப்பொழுது சொல்லவில்லை. தமிழ்நாடு சட்ட மன்றத்திலே ‘சட்ட முன்வடிவு’ என்று சொல்கிறோம்.

அதற்கு ஆங்கிலத்திலே ‘பில்’ என்று பெயர்.

ஆக, அங்கேயும் தமிழில் சட்டம்தான். ஒரு வார்த்தையைச் சேர்த்துக் கொள்கிறோம் ‘முன் வடிவு’ என்று. அதாவது ‘சட்ட முன்வடிவு’ என்று சொல்கிறோமே அல்லாமல் அதற்கு என்று தனிப் பெயர் இல்லை. ஆனால் ஆங்கிலத்திலே அது ‘பில்’ என்று சொல்லப்படுகிறது.

அந்த ‘பில்’ அங்கே விவாதிக்கப்பட்டு, பிறகு ஓட்டளிக்கப்பட்டு, நிறைவேறிய பிறகுதான் ‘ஆக்ட்’டாக வருகிறது. ஆங்கிலத்திலே அது ஆக்டாகி விட்டது என்று சொல்லுகிறோம்.

அப்பொழுதும் தமிழிலே சட்டமாகிவிட்டது என்று கூறுகிறோம்.

பையன் என்ன படிக்கிறான்? சட்டம் படிக்கிறான்.

வழக்கறிஞர் அறையிலே என்ன படிக்கிறார்? சட்டம் படிக்கிறார்.

முதற் பதிப்பு : மே 2000