உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

தமிழின் சொல்வளம்

பகுதி 3 · 3 / 3

‘லா’ படிக்கும் பொழுதும் சட்டம் படிக்கிறான் என்று சொல்லுகிறோம்.

‘ஆக்ட்’ புத்தகத்தைப் படிக்கும் பொழுதும் சட்டப் புத்தகம் படிக்கிறான் என்று சொல்லுகிறோம்.

‘பில்’ வரும்பொழுதும் சட்ட முன்வடிவு என்கிறோம். ‘பில்’ என்று சொல்லவில்லை. ஆங்கிலத்திலே சொன்னால் ‘பில்’ என்கிறோம். தமிழில் சொல் இல்லை.

அது மீண்டும் ‘ஆக்ட்’டாகிறது. இத்தகைய ‘ஆக்ட்’டுகளைக் - இத்தகைய சட்டங்களை நிறைவேற்றக்கூடிய இடம் எது? சட்டமன்றம் என்கிறோம். ஆங்கிலத்தில் ‘லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி’ என்று சொல்லப்படுகிறது.

எம்.எல்.ஏ. என்றால் ‘மெம்பர் ஆஃப் தி லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி’, எம்.எல்.சி. என்றால் ‘மெம்பர் ஆஃப் தி லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்’ என்கிறோம்.

இதற்கு வேறுபட்டான வார்த்தைகள் ஆங்கிலத்திலே இருக்கின்றன. ஆனால், தமிழிலே சட்டமன்ற உறுப்பினர் - எம்.எல்.ஏ. என்பதற்கு.

சட்டமன்ற மேலவை உறுப்பினர் - எம்.எல்.சி என்பதற்கு. அதற்கும் சொல் இல்லை.

இதைவிட ‘கான்ஸ்டிடியூஷன்’ என்று சொல்லுகிறோம் ஆங்கிலத்தில். அதற்குத் தமிழிலே என்ன என்றால் முன்னால் ஒரு வார்த்தையைப் போட்டு - அரசியல் என்ற வார்த்தையைப் போட்டு - அரசியல் சட்டம் என்கிறோம்.

ஆக, பையன் படிக்கிற காலத்திலே இருந்து பாராளுமன்றம் வரையிலே பார்த்தால் ‘சட்டம் - சட்டம் - சட்டம்’ என்கிற ஒரே சொல்லைத்தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வேறு சொல் - பொருத்தமான சொல் இதுவரையிலே கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கப் பட்டிருந்தால் அது பழக்கத்திற்கு வரவில்லை. ஆனால்,

ஆங்கிலத்திலே எத்தனை சொற்கள் மாறி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘லா’ என்றும், ‘பில்’ என்றும், ‘ஆக்ட்’ என்றும், ‘லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்’ என்றும், ‘லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி’, “கான்ஸ்டிடியூஷன்” என்றும் எத்தனை வார்த்தைகள்.

சட்ட மன்றத்துறை என்றுதான் சொல்லுகிறோம். சட்டமன்ற இலாக்கா என்றுதான் சொல்லுகிறோம்.

ஆனால் ஆங்கிலத்தில் - லெஜிஸ்லேட்டிவ் டிபார்ட்மெண்ட் என்று வேறு பெயர் வந்துவிடுகின்றது. லீகல் அட்வைசர் என்பதை சட்ட ஆலோசகர் என்கிறோம்.

இப்படி ஆங்கிலத்திலே பல பெயர்களுக்கு இடம் தரக்கூடியதாகவும் ஆங்கிலத்திலே பல பெயர்களைக் கொண்ட அதிகாரியை உடையதாகவும் இன்று சட்டத்துறை இருக்கும்பொழுது, தமிழிலே மாத்திரம் சட்டத்துறைக்கு நாம் அதிகச் சொற்களைக் காண முடியாதவர்களாக - கண்ணும் பழக்கத்திலே கொண்டு வர முடியாதவர்களாக இருக்கின்றோம். இந்தக் குறையை நாம் நிவர்த்திக்க எல்லாவிதமான முயற்சிகளையும் புதுவை மாநிலம் மாத்திரம் அல்ல - அருகாமையில் இருக்கின்ற தமிழ்நாடு அரசு அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டாக வேண்டும்.

அரசு ஈடுபட்டால் மாத்திரம் போதாது. சட்டத்துறையில் பயின்ற நல்ல ஆற்றலாளர்கள் அதற்கான நல்ல ஆக்கமும் ஊக்கமும் தரத்தக்க கருத்துக்களை வாரி வாரி வழங்கிட வேண்டும். அரசு - அப்படிப்பட்ட ஆற்றலாளர்கள் தருகின்ற கருத்தும் - இணைந்தால் ஒரே நேரத்திலே சட்டத்துறையிலே அதிகம் ஆக்கம் தரக்கூடிய தமிழ்ச் சொற்களை நாம் பெற முடியும் என்பதற்காகத்தான் இதை நான் உங்களிடத்திலே எடுத்துச் சொன்னேனே அல்லாமல் வேறு அல்ல.

ஒரு மொழி பல சொற்கள் பொருந்தியதாக இருந்திட வேண்டும்.

தமிழ்மொழி இலக்கியத் துறையில் - இலக்கணத் துறையில் தொன்மைக் காலத்தில் இருந்து வளர்ந்து வந்த அந்த வேகத்தில் பல சொற்களை உடைய மொழிதான். நான் மறுக்கவில்லை. யாரும் மறுக்க இயலாது.

ஆனால் வளர்ந்து வருகின்ற இந்த அறிவுலகத்தில் அதற்கு தேவையான சொற்களை இன்றைக்குத் தமிழ் மொழி பெற்று இருக்கிறதா என்றால் இல்லை.

‘ஆ’ - ‘பசு’ - ‘கோ’ என்ற இந்த மூன்று சொற்களும் பசு மாட்டைக் குறிப்பிடுவதற்கு தமிழிலே உண்டு. நான் இல்லை என்று சொல்லவில்லை. பசுவுக்கே மூன்று சொற்கள் இருக்கின்றன. ஆனால் அதோடு நின்றுவிட்டது. தமிழினுடைய வளர்ச்சி ஒரு கட்டத்தோடு நின்றுவிட்டது. அதை மேலும் வளர்க்கின்ற அந்தப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட விஞ்ஞானத் துறையில் - சட்டத்துறையில் தமிழினுடைய வளர்ச்சி ஓரளவு குறை இருக்கின்றது.

அதை மேலும் உயர்த்துவதற்கான வழிமுறைகளை நாம் கண்டிட வேண்டும். தமிழை வளர்க்க பெருமை பாண்டிய மண்டலத்திற்கு உண்டு; சேர - சோழர் - பாண்டியர் என்றெல்லாம் மூவேந்தர்கள் ஆண்டார்கள் என்றாலும், தமிழில் ஒரு இடத்தில் சங்கம் வைத்து - முதல் சங்கம் - இடைச் சங்கம் - கடைச் சங்கம் - என்று மூன்று சங்கங்களை வைத்து வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு; மதுரையை ஆண்ட பாண்டியனுக்கு உண்டு.

அந்தப் பாண்டியர்களுடைய பெயரைப் பெற்றிருக்கின்ற நண்பர் பாண்டியன் அவர்களை இன்று தலைவராகப் பெற்றிருக்கின்ற இந்தப் பேரவைக்கும் உண்டு என்று வகையிலே நீங்கள் பெருமையைச் சேர்க்க வேண்டும் தமிழுக்கு, என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொண்டு - நீங்கள் கோரிய வரங்களை எல்லாம் தருவதாக அரசின்

சார்பிலே முதலமைச்சர் அவர்களும், அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்று நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேர்களும் இங்கே வாக்களித்து இருக்கின்றார்கள். இந்தச் சாட்சிகள் எல்லாம் போதாது என்றுதான் என்னையும் சாட்சியாக இங்கே அழைத்திருக்கின்றார்கள். எனவே நானும் சாட்சியாக இருந்து அடிக்கடி உங்கள் முதல்வரைச் சந்திக்கின்ற நேரத்திலே எல்லாம் ‘என்ன ஆயிற்று அந்த அடிக்கல் நாட்டு விழா?’

என்று கேட்டுக் கொண்டே இருப்பேன் என்பதை உங்களிடத்தில் மனப்பூர்வமாக உறுதி அளித்து வாழ்க உங்களுடைய திறன், வளர்க உங்களுடைய புகழ் என்று வாழ்த்துகிறேன்.

5.10.80 அன்று புதுவை சட்டக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000