உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

தமிழின் சொல்வளம்

பகுதி 1 · 1 / 3

தமிழின் சொல்வளம்

புதுவை சட்டக் கல்லூரியில் முதல் தடவையாக உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்று இந்த மாலை நேரத்திலே உங்களிடையே சில மணித்துளிகள் இருக்கின்ற அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிற வகையில் மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த மாணவர் பேரவையின் தலைவர் பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றிய போது சட்டக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கான இடம் எவ்வளவு இன்றியமையாதது என்பது குறித்து விளக்கி அதைப் பெறுவதற்காகவும் இந்தப் பேரவையின் தொடக்க விழா இந்த வகையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் விவரித்து தன்னுடைய வேண்டுகோளை இந்த அரசின் முன்னால் வைத்திருக்கிறார்.

அவர் ‘வேண்டி, வேண்டி’ கேட்டுக் கொண்டதைப் பார்த்தபோது - பாண்டியன் என்ற அவருடைய பெயரைக் கூட மாற்றி “வேண்டியவன்” என்று கூடப் பெயர் வைக்கலாமா என்று தோன்றியது.

நீங்கள் ஒரு நல்ல தலைவரைத்தான் உங்கள் பேரவைக்கு தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற வள்ளுவரின் குறளுக்கொப்ப நீங்கள்

உங்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய நல்ல நண்பர்களை உங்கள் நிர்வாகிகளாகப் பெற்று, இந்தப் பேரவையை இன்று தொடங்குகிறீர்கள்.

இந்தத் தொடக்க விழாவில் இந்தக் கல்லூரியின் முதல்வர் என்னைப் பற்றிச் சில நல்ல வார்த்தைகளைக் கூறியதற்காக நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அவைகள் சம்பிரதாயத்திற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் - உளமாரச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் - நான் சம்பிரதாயத்திற்காக என்று இல்லாமல் உளமார என் நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் புதுவையில் ஒரு அதிசயத்தைக் காண்கிறேன். அரசின் சார்பில் உள்ளவர்களை அழைக்கிற நேரத்தில், எதிர்க்கட்சிக்காரர்களையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கிறார்கள். இது உள்ளபடியே ஒரு பாராட்டத்தக்க அதிசயம்தான்.

நான் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது என்னை நண்பர் சிவகுமார் இந்தக் கல்லூரிக்கு அழைத்ததாகவும் - அப்போது முதல்வராக இருந்த காரணத்தால் ஆயிரம் பொறுப்புக்கள் இருந்தன. ஆகவே வரவில்லையென்றும், இப்போது வந்திருக்கிறார் என்றும் சொல்லும்போது முதலமைச்சராக இல்லாத காரணத்தால் தான் வந்தேன் என்று அவர் என்னை இடித்துச் சொன்னதாக நான் கருதிக் கொள்ளவில்லை. அப்போது பொறுப்பிலே இருக்கும்போது புறக்கணித்தாய்!

இப்போது வந்து விட்டாய் பார்த்தாயா? என்று அவர் எண்ணிக்கொண்டு குறிப்பிட்டதாக நானும் எண்ணவில்லை; நீங்களும் எண்ணத் தேவையில்லை. இருந்தாலும் உங்கள் மத்தியிலே சில கருத்துக்களை எடுத்துக்கூற வாய்ப்பினை அவரும், சட்டக்

கல்லூரி மாணவர் பேரவையும் என்னை நாடி வந்து கேட்டு - அவர்களுடைய அன்புக் கட்டளைக்கு நானும் ஒப்புதல் தந்து, இந்த விழாவிலே பங்கு பெற்றிருக்கிறேன்.

இது புதுவையிலே இன்று நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சியாக இருந்திடவில்லையே என்று ஆதங்கம் இங்கே தெரிவிக்கப்பட்டது. எது முதல் நிகழ்ச்சியாக இருக்க வேண்டுமோ அது இன்று புதுவையில் எனக்கு முதல் நிகழ்ச்சியாக இருந்தது என்பதை நான் அவருக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நான் இன்று உங்கள் முன்னால் - முன்னாள் முதல் அமைச்சராக - தமிழகத்தின் இன்றைய தலையாய எதிர்க் கட்சியின் தலைவராக - இங்கே நண்பர்கள் எல்லாம் சிறப்பித்துக் கூறினார்களே - அதற்கு நான் உரியவனோ அல்லவோ - அந்தச் சிறப்புக்களைப் பாராட்டுக்களின் மூலம் பெற்றவனாக நம்முடைய இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்கள் இந்தியாவிலே இருக்கிற - பல்வேறு துன்பங்களைத் தாங்கிப் பழக்கப்பட்ட இரண்டொரு தலைவர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டாரே அப்படிப்பட்ட துன்பங்களை தாங்குகிற சக்தியைப் படைத்தவனாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்றால் அந்தத் துணிவை - வலுவினை - நெஞ்சாற்றலை எனக்கு யார் கொடுத்துக் காலத்தில் தந்தார்களோ - அந்தத் தந்தை பெரியார் அவர்களின் சிலையைத்தான் இன்று காலையிலே நான் முதல் நிகழ்ச்சியாக திறந்து வைத்துவிட்டு - அடுத்த நிகழ்ச்சியாக உங்கள் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன்.

இதற்கு அடுத்தாற்போல் இன்னொரு கல்லூரி நிகழ்ச்சியும் - அதற்குப் பிறகு அரசின் சார்பில் நடைபெறுகிற பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா

நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. எனவே நீண்ட நேரம் நான் இங்கே இருக்க வேண்டுமென்று நீங்களும் சொல்லமாட்டீர்கள்! விரும்புவீர்கள்; ஆனால் சொல்லமாட்டீர்கள்! எனவே அடுத்து ஒரு கல்லூரி நிகழ்ச்சிதான். என்னதான் அது கலைக் கல்லூரி - இது சட்டக் கல்லூரி என்று இருந்தாலும் - அதுவும் கல்லூரி என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும் என்ற காரணத்தால் நான் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள என்னை விரைவில் அனுமதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

தாமதமாக நிகழ்ச்சிகளுக்குச் சென்று பழக்கப்பட்டவன் அல்ல நான். இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழல்களில் அப்படிப்பட்ட நிலைமைகள் நேர்ந்துவிடுவது உண்டு. நீங்கள் அவ்வாறு ஒரு நிலைமையை எனக்கு உருவாக்காமல் இந்த நிகழ்ச்சியை விரைவில் முடித்துக் கொண்டு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கல்லூரியின் முதல்வர் பேசுகிற நேரத்தில் இந்தக் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் - மாணவர்களின் திறமை - அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பற்றியெல்லாம் விவரமாக எடுத்துச் சொன்னார்கள். நீங்கள், இந்த விழாவிலே காட்டுகின்ற அமைதியையும் ஆர்வத்தையும் காணும் நேரத்தில் அத்தகைய அதிக விழுக்காடு மதிப்பெண்களை நீங்கள் பெறுவதில் எந்தவித வியப்பும் இல்லை.

எந்த ஒரு மாணவனும் தன்னுடைய படிப்பில் அதிக கவனத்தைச் செலுத்தி - அப்படிப் படிப்பில் கவனம் செலுத்துகிற நேரத்திலே சமுதாயப் பிரச்சினைகளிலே - நாட்டம் செலுத்தக் கூடாது என்று தடைபோடுகிறவன் அல்ல நான். அவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு தெரிந்து கொண்டு - அதே நேரத்திலே

தாங்கள் எந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி அதிலே முழுமையானவர்களாக வெளிவர வேண்டும் என்பதுதான் நாட்டிலே இருக்கிற எல்லாருடைய ஆவலாகவும் இருந்திட முடியும். உங்கள் பெற்றோர்களுக்கு எந்த அளவிற்கு அந்த ஆவல் இருந்திடக் கூடுமோ - அந்த அளவு அவா நாட்டிலே இருக்கிற பெரியவர்களுக்கு - தலைவர்களுக்கு - எதிர்காலச் சமுதாயம் ஒளி மிகுந்ததாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறவர்களுக்கு இருப்பது இயற்கை.

அதிலும் குறிப்பாக நம்முடைய நண்பர் சட்டமன்ற உறுப்பினர் பெத்தபெருமாள் சுட்டிக்காட்டியதைப் போல எதிர்கால தேசியச் சக்திகளாக விளங்க வேண்டியவர்கள் - இந்த நாட்டின் எதிர்காலத் தூதுவர்களாக - நாட்டின் பொறுப்பை ஏற்பவர்களாக விளங்க வேண்டியவர்கள் தான் என் முன்னால் அமர்ந்திருக்கிற மாணவர்களாகிய நீங்கள். அதிலும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

இந்திய நாட்டில் விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துப் படித்துப் பார்த்தால் அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புரளுகிற பெயர்கள் சட்டம் பயின்ற மாணவர்கள் - பெரும் பெரும் வழக்கறிஞர்கள் இவர்கள் தங்களுடைய வாழ்வைக்கூடத் தூக்கியெறிந்து விட்டு இந்த மண்ணின் விடுதலைக்காகத் தங்களுடைய உயிரையே கிரணமாக மதித்து தியாக வேள்வியிலே குதித்தார்கள் என்கிற பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.

சட்டக் கல்லூரியில் பயிலுகிற நேரத்தில் அரசியல் தட்ப வெப்பங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் எதிர்கால நாட்டின் தலைஎழுத்தை

நிர்ணயிக்க முடிகிறது. குறிப்பாக இன்று நாட்டில் இருக்கிற பல்வேறு பிரச்சினைகள் நம்முடைய கவனத்தைக் கவராமல் இல்லை. பல இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறுகின்றன. வகுப்புக் கலவரங்கள் நடைபெறுகின்றன. சாதிப் பூசல்களுக்கு இடம் அளிக்கப்பட்டு அதன் காரணமாகப் பல இடங்களில் குருதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்ற காட்சியைப் பார்க்கிறோம். இவைகள் எல்லாம் வழக்குமன்றத்திற்கு வருகிற நேரத்தில் வழக்காடும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்.

அதனால் இவைகள் எல்லாம் பெருக வேண்டும் என்று எந்த வழக்கறிஞர்களும் எண்ணக் கூடாது. எண்ணவும் மாட்டார்கள் - வழக்கறிஞர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் ஏதோ நீதி மன்றத்திற்குச் சென்று ஒரு குற்றவாளியைக் காப்பாற்றவோ - அல்லது குற்றம் சுமத்தப்பட்ட ஒருவன்மீது மேலும் பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி அவன் குற்றவாளி என்று நிரூபிக்கவோ மாத்திரம் அவர்கள் படிக்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக வாதிடக் கூடியவர்கள்தான் சட்டக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

படித்தவர்கள் எல்லாம் நாளை எந்த நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்ற நாட்டத்தோடு படிப்பதாக நான் எண்ண மாட்டேன்.

முதற் பதிப்பு : மே 2000