பூந்தோட்டம்
பகுதி 2 · 2 / 4
உடனே, அண்ணன் பாதுகைகளைச் சுமந்து சகோதர வாஞ்சையின் எடுத்துக் காட்டாக நின்ற பரதன் வாழ்ந்த அதே அந்தக் காலத்திலே தான், அவன் அண்ணன் அயோத்தியானுக்கு, தன் அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த சகோதரன் விபீஷணனும் இருந்திருக்கிறான் என்ற பதில் வீசப்படுகிறது ஒரு புறத்திலே!
அண்ணன் காலணியைத் தலையில் தாங்கிய பரதன்! அண்ணன் தலையை எதிரியின் காலடியில் வைக்குமாறு கோரிய விபீஷணன்!
இருவருமே இருந்தது அந்தக் காலத்திலேதான்!
“இந்தக் கால மாணவர்கள், ஆசிரியர் நாற்காலியில் முள் வைக்கிறார்களே - அந்தக் காலத்திலே, துரோணாச்சாரியார் என்ற குருவுக்கு கட்டை விரலைத் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்த ஏகலைவன் இருந்திருக்கிறானே - அந்தக் காலத்து குரு பக்திக்கு ஈடுமுண்டோ?”
என்ற பெருமை கீதம் பாடப்படுகிறது ஒரு புறத்திலே!
ஆனால், ஆச்சாரியார் துரோணருக்கு கட்டை விரலைத் தந்த சிஷ்ய சிரேஷ்டன் ஏகலைவன் வாழ்ந்த அந்தக் காலத்திலேதான் - குரு பத்தினி தாரையைக் கூடிய சந்திரனும் இருந்திருக்கிறான் என்று பதில் கூறி, எப்படி அந்தக் காலம் குரு பக்தியிலே சிறந்ததாகும் என்று கேள்வி தொடுக்கப்படுகிறது பிறிதோர் புறத்திலே!
தெருவிலே நடந்து செல்லும் இரண்டு இளைஞர்களை இரண்டு கிழவர்கள் காணுகிறார்கள். ஒரு இளைஞன் மூக்குக் கண்ணாடி போட்டிருக்கிறான். அதைப் பார்த்த கிழவன், பக்கத்துக் கிழவனிடம் “பார்த்தாயா! எவ்வளவு சிறு வயதில், பார்வையிலே பழுது ஏற்பட்டு விட்டது; மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கிறான். இந்தக் காலமே இப்படித்தானப்பா - அந்தக் காலத்திலே இப்படியெல்லாம் உண்டா?”
என்று அந்தக் காலத்திற்கு வக்காலத்து வாங்குகிறான், வயோதிகன்!
அந்த இளைஞர்கள் காதிலே இந்தப் பேச்சு விழுந்தால் அவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்தக் காலத்திலே கண் கெட்டு விட்டால் சிகிச்சை செய்து கொள்ள கண் வைத்தியசாலை இருக்கிறது; பார்வையைக் கூர்மையாக்கிக் கொள்ள மூக்கு கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் அந்தக் காலத்திலே இந்த வசதி கிடையாதே!
தண்ணொளி கெட்ட திருதராஷ்டிரன் கடைசி வரையில் குருடனாகத்தானே இருந்தான் என்று இளைஞர்கள் கேட்டிருப்பார்கள் - தண்ட காரணயத்திலே காணாமற் போன சீதை மட்டும், இந்தக் காலத்திலே காணாமற் போயிருந்தால், ராமனுக்கு சுக்ரீவனுடைய உதவியா வேண்டும்; சுதேசமித்திரன் பத்திரிகையே போதுமே!....
“என் மனைவி சீதை இன்ன அடையாளமுள்ளவள் அவளைத் தேடிவா” என்று அனுமானிடம் கூறியதை, ராமன் பத்திரிகையிலே விளம்பரப்படுத்தி வெகு சுலபமாக வைத்தே இருக்குமிடத்தை அறிந்திருக்கலாமே! அல்லது, மிதிலாபுரிக்கு ஜனகனுக்கு ஒரு ‘டிரங்கால்’ செய்து “மாமா! உங்கள் மகள் வந்தாளா?”
என்று கேட்டு, அயோத்திக்கு தந்தி கொடுத்து உன் அண்ணியைக் கண்டாயா?” என்று வினவி - எவ்வளவு சீக்கிரம் சீதை பற்றிய விபரங்களை அறிந்திருக்கலாம்.
இந்தக் காலத்து வசதிகள் எவ்வளவு சுலபத்திலே காரிய சாதனைக்கு ஏற்றவைகளாயுள்ளன.
இந்தக் காலம் பற்றி உணர்ந்தோர் - இந்தக் கால மகிமைகளைப் பற்றி உரைப்போர் சிலர் கூட அந்தக் காலக் கருத்துக்களோடு மோதிவரதைக் காணும்போது, கவலைதான் ஏற்படுகிறது பூந்தோட்டத்திலே உலவிடுகிற நமக்கு!
‘ரிஸ்ட் வாட்ச்’ கட்டிக்கொண்டு ராகு காலம் பார்க்கிறார்கள்!
மூக்குக் கண்ணாடியணிந்து பாரதம் படிக்கிறார்கள். ஹாலிவுட்டில் தயாரான கேமராவுக்கு தேங்காயுடைத்து, குங்குமமிட்டு, சூடம் கொளுத்தி வணக்கம் செய்து திரைப்படமெடுக்கிறார்கள்!
இந்த விசித்திரங்கள் வேடிக்கையாகவா தோன்றுகின்றன! வேதனைப் புயலையல்லவா திடீர் திடீரென்று பூந்தோட்டத்தில் வீசிடச் செய்கின்றன.
அமெரிக்காவிலே அரசியல் வாழ்விலே இருந்து, ட்ருமன் ஓய்வெடுத்துக் கொண்டால் எதைப் பற்றி எழுதுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்!
“பஜகோவிந்த” மா எழுதிக் கொண்டிருப்பார். மேதை, விவேகி, விற்பன்னர், அரசியல் தந்திரி ராஜாஜி வேலைகளை விட்டு ஓய்வு
பெறுகிறவர் உயரிய கொள்கைகளை மக்கள் உள்ளத்தைத் தொடும் உணர்ச்சி எழுத்துக்களை எழுதிக் குவிப்பார் என்று எண்ணிடுபவருக்கு, இன்பத் தாமரை தரமாட்டேன் - எருக்கம் பூவைத்தான் தருவேன் என்றால் இந்த நிலை எப்படித்தான் வர்ணிப்பது!
கள்ளிக் காடுகளே, தோட்டத்திலிருந்து அழிய வேண்டுமென்று எண்ணிடும் வேளையில் எருக்கஞ் செடிகளையும் எடுத்து வந்து பயிராக்குகிறேன் என்று முற்றுமுணர்ந்தவர்களே கூறினால் எப்படி வாய் மூடி மவுனியாக இருப்பது!
இந்தச் சங்கடமான சம்பவங்கள்தான், தமிழகச் சோலையிலே, எந்த மலர்கள் இருக்க வேண்டும், இன்னும் எத்தகைய மலர்கள் பயிராக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை பகுத்தறிவு புரியினருக்கும், பழமைத் தீவினருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது!
எம்மலர் வைப்பது என்பது ஒரு பிரச்சினை! அடுத்து, வைத்த மலர்கள் யாருக்குச் சொந்தமென்பது!
வியர்வை சிந்தியவன் தான் வைத்த மலர்ச் செடி தனக்குச் சொந்த மென்றான். வியர்வையை விருந்தாக எண்ணிடும் வீணன் மலர்கள் தன் மாளிகை மஞ்சத்திலே துவட்ட வேண்டும் என்கிறான்.
இந்தப் போராட்டம், பூந்தோட்டத்திலே ஒரு முக்கிய அங்கம் பெறுகிறது!
‘மலர் உழைத்தவனுக்கா? அல்லது உல்லாசிக்கா?’ என்பது தான் பொது உடைமைக்கும் பூர்ஷ்வா கொள்கைக்கும் நடைபெறுகிற போராட்டம். இதில் வெற்றிக்கொடி நாட்டிய நாடுகள் ரஷ்யாவும், சீனாவும் - நம்மைப் பார்த்து புன்சிரிப்பு சிரிக்கின்றன.
‘மூன்றாவதாக தோட்டத்திலே மேய்ந்த வெள்ளை மாடுகளை விரட்டி விட்டோம் - இனி வேலி கூட தேவையில்லை’ என்ற வீராப்பு பேசிடுபவருக்கும், ‘வெள்ளை மாடுகள் ஓடி விட்டன; ஆனால் பூச்சிகளும் புல்லுருவிகளும் மலர்ச் செடிகளைப் பாழாக்குகின்றன’ - அவைகளை ஒழிப்பதற்கு தனியுரிமை என்ற மருந்து தெளிக்க வேண்டும் என்பவர்களுக்கும் நடைபெறுகிற போராட்டம்!
எந்த மலர் தேவையென்பது - சமுதாயச் சீர்திருத்தம்.
மலர் யாருக்குச் சொந்தமென்பது, சமத்துவக் கோரிக்கை விளக்கம்.
‘பூந்தோட்டமே யாருடையது; இப்போது யாருடைய ஆதிக்கத்திலிருக்கிறது, அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சுந்தரச் சோலை சொந்தக்காரரின் வசமாக வேண்டாமா என்பது தனியுரிமைக் கோரிக்கை பற்றிய பிரச்சினை!
