பூந்தோட்டம்
பகுதி 1 · 1 / 4
தலைவர் அவர்களே! தோழர்களே! கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி தமிழ்க் கழகத்தின் சார்பாக நடைபெறும் இந்த விழாவில் என்னைக் கலந்து கொள்ளுமாறு விரும்பிய நண்பர்கட்கெல்லாம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் முன்னுரையில் உங்களை யெல்லாம் நான் பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன் என்றும், அது எத்தகைய பூந்தோட்டமாக இருக்குமோ என்று ஆர்வத்தின் காரணமாக அய்யமுற்று, ஒருவேளை இலக்கியப் பூந்தோட்டமாக இருந்தால் அவர் பின்னே சென்று இலக்கிய இன்பம் அனுபவித்து பிறகு திரும்பும்போது வருத்தமுடன் திரும்ப வேண்டுமோ என்று சந்தேகப்பட்டு, அது போன்றச் சூழ்நிலையை சொற்பொழிவாளர் சிருஷ்டிக்க மாட்டார் என்று நம்புவதாக ஜாடை காட்டிப் பேசி முன்னுரையை முடித்துக் கொண்டார்.
நான் உங்களையெல்லாம் பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல வரவில்லை. நாமெல்லாம் அமர்ந்திருக்கும் பூந்தோட்டத்தைப் பற்றித்தான் பேசப்போகிறேன்.
பூந்தோட்டம் அமைப்பதென்பது சாதாரணமானதல்லதான். தோட்டம் அமைக்க, காடுகளை அழிக்க வேண்டும். மேடுகளை இடித்து மட்டமாக்க வேண்டும். பள்ளங்களைச் சரிப்படுத்திப் பண்படுத்த
வேண்டும். இப்படியெல்லாம் சிரமப்பட்டு சிருஷ்டிக்கப்பட்ட சிங்காரப் பூந்தோட்டம் திடீரெனவோ, அல்லது சிறிது சிறிதாகவோ சீரழிந்து விடுவதுமுண்டு.
பொழுதுதோறும் புனலுக்கும், அனலுக்கும், கக்கும் விஷப் பாம்பினுக்கும் இடையறா நோய்களுக்கும் ஈடு கொடுத்து உண்டாக்கிய பூந்தோட்டத்திலே மலர்ந்து மணம் வீசும் மலர்களை, உழைக்காதவன், வியர்வை சிந்தாதவன் பறித்துச் சென்று பரவசத்திலீடுபடுகிறான் ஒரு புறத்திலே! இரும்புக் கரம் உண்டாக்கிய இன்பச்சோலை! அதிலே சுவை சிந்தும் தேன் மலர்! அதைக் கொய்துச் செல்லும் பொன் கரம்! இப்படி ஒரு வேதனையான சூழ்நிலை பூந்தோட்டத்திலே!
அடுத்தது, பூந்தோட்டத்திலே பயிராக்கப்பட வேண்டிய மலர்கள் என்ன என்ன என்பது!
எதில் ரோஜா இருப்பதா? அல்லது எருக்க மலர் இருப்பதா? கவின் பொழியும் மல்லிகைக் கொடியா? கள்ளிக்காடா? இது போன்ற கேள்விக் குறிகள் உலவுகின்ற நிலை பூந்தோட்டத்திலே!
அடுத்தது, பூந்தோட்டத்தை மிதித்து நாசமாக்கிய மாடுகளையும் ஆடுகளையும் விரட்ட வேண்டும் என்ற அவசரம் ஏற்பட்டு, மாடும் ஆடும் ஓடி விட்டன என்ற உற்சாகத்திலிருப்பவரிடம், ஆடும் மாடும் போனது உண்மை ஆனால் சேர்ந்திருந்து செழிப்பைக் கொல்லும் சிறு பூச்சிகளும், புல்லுருவிகளும் போக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் ஒரு புறம் பூந்தோட்டத்திலே!
இத்தகைய மூன்று விதமான பிரச்சினைகள் முற்றுகையிட்டிருக்கும் பூந்தோட்டம் நம் கவனத்துக்குரியது தான்.
கவனத்துக்குரியது மட்டுமல்ல; கவலை கொண்டு காரியமாற்ற வேண்டிய கடமையுணர்ச்சியையும் காற்றோடு கலந்து நம் உணர்வைத் தொடுகிற உயர் பணியைக் கூடச் செய்யக்கூடியது தான் நாம் ஆராயப்போகிற ‘பூந்தோட்டம்’!
நாம் வதியும் தமிழகத்தை ஒரு பூந்தோட்டமாக நினைத்துப் பார்த்தால், சிலப்பதிகார ரோஜாவும், சீவக சிந்தாமணி யெனும் செண்பகமும், குண்டலகேசிப் பூங்கொத்தும், மணிமேகலை மல்லிகையும், அகம்புற மென்ற அன்றலர்ந்த முல்லைகளும் மணம் பரப்பிடக் காணுகிறோம். அந்த மலர்களின் மணத்தை மொண்டு மொண்டு தரும்
தென்றலாக, பாரதியார் - பாரதிதாசன் - கவிதைகளும் மிதந்திடுவதைக் காணுகிறோம். இத்தகைய சீர் குலுங்கும் நந்தவனத்திலே ஒரு மூலையிலே கள்ளிக் காடும் இல்லாமலில்லை. வாசமற்ற கனகாம்பரமும் வைக்கப்படாமலில்லை. மாலை வேளையிலே உல்லாச உலவல் நடத்த முடியாதபடி பயமுறுத்துகின்ற பாம்புகள் வாழும் பெரும் புற்றுக்களும் தோன்றாமலில்லை.
கள்ளி என்கிறேன். சிலருக்குக் கடுமையாகக் கூடத் தெரியலாம் உள் நுழைந்து பார்க்காத காரணத்தால், கம்பராமாயணம் தமிழகப் பூங்காவிலே கள்ளியாகத்தான் வளர்ந்து விட்டது. கள்ளி மலரிலே அழகுண்டு, கம்பர் காதையிலே கவிதை நயம், இருப்பதுபோல! கள்ளி மலரிலே நறுமணம் கிடையாது; கம்பர் சித்திரத்திலே இன உணர்வு இல்லாதது போல!
முள் நிறைந்தது கள்ளி! தமிழ் உணர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ராமாயணம்!
சிலப்பதிகாரத்தை ரோஜாவென்று குறிப்பிட்டேன், ரோஜாவுக்கும் முள் இருப்பதால்!
சிலப்பதிகாரம் முள் இடை ரோஜா மலர்! கம்பராமாயணம் முள்ளிடை கள்ளிமலர்!
சிலப்பதிகாரத்திலே கற்பனைக் கெட்டாத சம்பவங்கள் இருக்கலாம். ஆனால் சிலம்பு ஒலிக்கும் போது செந்தமிழ்ப் பண்பு ஒலிக்கிறது. சேரனின் வாழ்வும், சோழனின் வளமும், பாண்டியனின் நேர்மையும் - மொத்தத்திலே மூவேந்தர் ஆண்ட மூன்று பெரும் நாடுகளைப் பற்றிய குறிப்புகளும் நிறைந்து கிடக்கின்றன. இளங்கோ தந்த அந்த இன்பப் புதையலிலே! சேரனின் தம்பி தயாரித்த தங்க ரோஜா சிலப்பதிகாரம்!
கற்பனைக் கெட்டாத நிகழ்ச்சிகள் இதிலே உள்ள முட்கள்! ரோஜா தேவையா? இல்லையா? என்பது விவாதிக்கத் தேவையில்லாத பிரச்சினை!
இத்தகைய காடுகள் பூந்தோட்டத்திலே பரவிடக் கூடாது என்கிறது ஒரு பலமான குரல்! பகுத்தறிவுக் குரல்! இல்லை - அவைகளும் இருக்கத்தான் வேண்டுமென்கிறது ஒரு மெலிந்த தொனி! பண்டிதர்கள் பக்கமிருந்து கிளம்பும் தொனி!
இப்படி ஒரு போராட்டம் பூந்தோட்டத்திலே, அறிவியக்கத்திற்கும் அதன் எதிர் இயக்கத்திற்கும் நடைபெறுகிறது!
அந்தக் காலத்தின் பெருமைகளும், அயோத்திராமனின் கல்யாண குணங்களும், அழகான தமிழிலே எடுத்துச் சொல்லப்படுவதால் மட்டும் அந்தக்காலம் என்பது அற்புதமான காலம் என்று நம்பி விட முடியாது.
அந்தக் காலத்தை அடியோடு புறக்கணிக்க வேண்டுமென்கிற அவசர ஆவேசங் கொண்டவர்களுமல்ல, அறிவுப் படையில் அணிவகுத்து நிற்பவர்கள். அந்தக் காலம் சில பலவற்றிற்கு சிறந்ததாக இருக்கலாம். ஆனால், அதன் ஆதிக்கத்திலே மிதிபட்டு இந்தக் காலம் நெளிந்து கிடக்க வேண்டுமென்பதை யார்தான் ஒப்புக் கொள்ள முடியும்.
அந்தக் காலத்து நல்லவைகளைக் கொண்டு வந்து இந்தக் காலப் புதுமைகளோடு இணைப்பதிலே எதிர்ப்பு கிடையாது!
இரண்டு காலங்களையும் மோத விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறார்களே, அதுதான் வேதனையைத் தருகிறது!
சிறிது - நடைமுறை நிகழ்ச்சிகளை, நாட்டிலே கிளம்பிடும் கேலிப் பேச்சுக்களை - கண்ணையும் காதையும் திருப்பி கவனித்தால், வேதனையோடு வேடிக்கையும் சேர்கிற ஒரு விசித்திர சூழ்நிலையே உண்டாகிறது எனலாம்.
இந்தக் காலத்திலே இவர்கள் எல்லாம் இப்படிப் பேசித்தான் - நாட்டிலே மழைகூடப் பெய்வது கிடையாது என்ற முணுமுணுப்பு ஒரு புறம்!
அதற்கு - அந்தக் காலத்திலே - உங்கள் நல்லதங்காள் காலத்திலே நாத்திகம் பரவாத காலத்திலே - பனிரெண்டு வருடம் மழை கிடையாதாமே என்ற பதில் ஒரு புறம்!
“இந்தக் காலத்திலே பிள்ளைகளுக்கு கொஞ்சமாவது சகோதர வாஞ்சையிருக்கிறதா?
அந்தக் காலத்திலே பாராளப் பிறந்த ராமனின் பாதுகைகளை தம்பி பரதன், தலையிலே சுமந்து, அவைகளை அரசுக் கட்டிலிலே அமர்த்தி அதன் பிரதிநிதியாகத் தானிருந்து அரசோச்சினானே - அவனல்லவா உண்மையான தம்பி - அதுவல்லவா சகோதர வாஞ்சை!” என்று அந்தக் காலத்துப் புகழ் பாடப்படுகிறது ஒரு புறத்திலே!
