பூந்தோட்டம்
பகுதி 3 · 3 / 4
இந்த மூன்றில் எது முன்னர் நடைபெற வேண்டுமென்பது சிந்திக்க வேண்டிய தொன்று!
1. எந்த மலர்?
2. மலரை யார் பறிப்பது?
3. தோட்டம் யாருடையது?
இந்த மூன்று கேள்விகளையும் முறையே வைத்து ஆராயும் போது, நாம் விரும்பும் மலரை பயிராக்குவதற்கும், தோட்டம் நமக்கு சொந்தமாக வேண்டும். அதுவரையில் நாம் விரும்பும் மலர் பற்றிய சிறப்புகளைத்தான் சொல்லிவர முடியும்.
மலரை நாமே பறித்து அனுபவிப்பதற்கும் தோட்டம் நமக்குச் சொந்தமாக வேண்டும்.
அதுவரையில் மலர் நமக்குக் கிடைத்தால், எப்படி பெய்ப்படி மாலை தொடுக்க முடியும் என்பதைத் தான் கூறமுடியும்!
ஆகவே முதலில் அவசரமாக - அவசியமாக - நடைபெற வேண்டியது, தோட்டம் நமக்குச் சொந்தமாக வேண்டியதுதான்!
தோட்டம் நமக்குச் சொந்தமாகிவிட்டால், தொல்லைதரும் பூச்சிகள் அழியும்.
தூய மலர்கள் சிரிக்கும் - மலருக்குரியவர் நாமே ஆவோம் - இந்த நல்ல காரியத்தில் ஈடுபட வேண்டுமென்று தான் உங்களையெல்லாம் அழைக்கிறேன்.
ஈடுபட வருகிறவர்கள், மலர் உழைத்தவனுக்குச் சொந்த மென்பதை உரத்த குரலில் கூறுபவர்களாக இருக்க வேண்டும்.
மாசற்ற மலர்கள் மணம் பரப்பிடவேண்டும் என்ற மனப் பக்குவம் படைத்தவர்களாயிருக்க வேண்டும்.
நாம் அமர்ந்திருக்கிற பூந்தோட்டத்திலே வீரன் செங்குட்டுவன் உலாவியிருக்கிறான்.
கடாரங் கொண்ட சோழன் களிப்புக் கீதம் பாடியிருக்கிறான்.
பாண்டியன் செந்தமிழ்ச் சங்கம் முழக்கியிருக்கிறான்.
நான் குறிப்பிடும் பூந்தோட்டம் மூன்று பக்கம் முத்து குலுங்கிடும் கடல்களைக் கொண்டது!
ஒரு புறத்தே உயர்ந்த மலைத்தொடர் கொண்டது!
வளமான வயல்கள் - வற்றாத ஜீவ நதிகள் கொண்டது!
தளிரும், மலருமட்டுமல்ல; தங்கம் தருவது!
இத்தகையப் பூந்தோட்டத்தைச் சொந்தமாக்கிடும் பணியில் ஈடுபட வாரீர் வாரீர் வழக்கு மன்றத்திற்கு என்று தான் உங்களை யெல்லாம் அழைக்கிறேன்.
இப்படி அழைப்பதிலே வகுப்புவாதம் கிடையாது - பூர்ஷ்வா கொள்கை தலைநீட்ட இடமில்லை - குறுகிய மனப்பான்மை நிச்சயமாக இல்லை.
எல்லோரையுந்தான் அழைக்கிறேன். உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பேதம் பாராட்டி அழைக்கவில்லை.
அந்தப் பேதம் நீக்கப்படவேண்டும் என்ற பெரு முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களைச் சேர்ந்தவன் தான் நான்.
உயர்ந்த ஜாதிக்காரரை ஒழித்து விடுவதோ, தாழ்ந்த ஜாதிக்காரரை - உயர் ஜாதிக்காரராகுவதோ எம் நோக்கமில்லை.
உயர்ந்தவனை கோபுரத்தின் உச்சியிலேயிருந்து இறக்கி, தாழ்ந்தவனை குப்பை மேட்டிலிருந்து எழுப்பி இருவரையும் சம நிலையிலான ஒரு மண்டபத்தில் அமரச் செய்ய வேண்டுமென்பது தான் எம்போன்றோர் ஆசையெல்லாம்.
இதைத் தவிர உயர் வகுப்பாரிடத்திலே எந்த விதமான காழ்ப்பும் கொண்டவர்களல்ல நாங்கள்.
நாம் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களாயிற்றே - குழியினில் வீழ்ந்து கிடப்பவர்களாயிற்றே நம்மை யெல்லாம் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அல்லவா கைகொடுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டும்.
