உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

“பிறப்பொக்கும்”

பகுதி 3 · 3 / 4

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றால் எல்லா உயிர்களும் பிறப்பால் சமம் ஆனவைகள்தான். அவைகளுக்குள் உயர்வு-தாழ்வு இல்லை என்று வள்ளுவர் சொன்னார்.

எல்லா உயிர்களும் என்றால் மனித உயிர்கள் மாத்திரமல்ல; எல்லா உயிர்களும்! புழு, பூச்சி, பறவை, மிருகம் என்று அனைத்து உயிர்களையும் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் - இன்னொரு இடத்தில் - ‘புலால் மறுத்தல்’ என்ற இடத்தில் வள்ளுவர்,

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.”

என்று சொல்கிறார்.

மற்ற உயிர்களைக் கொல்லாதவனையும் - புலால் உண்ணாமல் இருக்கிறவனை - அவனால் காப்பாற்றப்பட்ட அவனால் கொல்லப்படாமல் விடப்பட்ட எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் என்கிறார்.

எனவே ‘எல்லா உயிரும்’ என்ற அந்தச் சொற்றொடர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வருகிற சொல் தொடரோடு - பொருந்துகிற நேரத்தில் எல்லா உயிர்களையும் தானே குறிப்பிடுகிறது; உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளையும்தானே குறிப்பிடுகிறது என்று நாம் எண்ணிக் கொள்ளக்கூடும்.

ஆனால் வள்ளுவர் குறளை எழுதும்போது - அந்தக் குறளை மிருகங்கள் படிக்கும் என்றோ - பறவைகள் படிக்கும் என்றோ எண்ணி எழுதவில்லை.

சிங்கங்கள் படிக்கும் - யானைகள் படிக்கும் - மான்கள் - மாடுகள் - கருடன்கள் - கழுகுகள் - காக்கைகள் - பாம்புகள் எல்லாம் படிக்கும் என்று அந்த

ஜீவராசிகளுக்காக வள்ளுவர் அந்தக் குறளை எழுதவில்லை. யார் படிக்க வேண்டுமோ அவர்களுக்காக எழுதினார். அவர் அந்த உயிர்களுக்காக எழுதவில்லை. ஏனென்றால் பாம்புகளுக்குள் - ஆடு மாடு கழுகுகள் - மிருகங்களுக்குள் சாதிப்பூசல், குழப்பங்கள் கிடையாது. எனவே வள்ளுவர் அவைகளுக்காக எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் எழுதினாலும் - அதை படித்துணரக்கூடிய ஆறாவது அறிவான பகுத்தறிவு அந்த உயிரினங்களுக்கு கிடையாது. ஆறாவது அறிவு உள்ள உயிரினங்களுக்காகத்தான் வள்ளுவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எழுதினார்.

அடுத்து வள்ளுவர் “சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்” என்கிறார். பிறப்பினால் எல்லோரும் ஒன்றுதான். ஆனால் அவர்கள் எப்போது மாறுபடுகிறார்கள் என்றால் - அவரவர்கள் செய்கின்ற - அவரவர்கள் ஈடுபட்டிருக்கின்ற தொழிலைப் பொறுத்து அவரவர்களுடைய சிறப்புக்கள் வேறுபடுகின்றன; அவரவர்களுடைய தனித்தன்மைகள் வேறுபடுகின்றன என்று குறிப்பிட்டார்.

“சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்” என்கிறார். இன்றைக்குக்கூட குறளுக்கு பொருள் கூறுகிற சில ஆசிரியர்கள் தொழில் என்பது அவரவர்கள் ஈடுபட்டிருக்கிற தொழில்; ஒருவர் கொல்லராக - ஒருவர் தச்சராக - ஒருவர் ஆசிரியராக - ஒருவர் மருத்துவராக - ஒருவர் சலவைத் தொழிலாளியாக - ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவராக - ஒருவர் காவல் துறை அதிகாரியாக - ஒருவர் சங்கீத வித்துவானாக - அப்படிப்பட்ட தொழில்களைச் செய்கிறவர்கள் என்று வள்ளுவர் குறிப்பிட்டிருப்பார்; எனவே அந்தத் தொழிலைப் பொறுத்துத்தான் இந்த வேற்றுமை என்று வள்ளுவர்

கருதியிருக்கக்கூடும். அல்லது மற்றவர்களுக்கு உணர்த்தியிருக்கக்கூடும் என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்குத் தருகின்ற விளக்கம் எல்லாம் தொழில் என்பது தங்களுடைய பிழைப்பிற்காக அல்லது சமுதாயத்தின் நன்மைக்காக ஏற்றுக் கொண்டிருக்கின்ற தொழில் அல்ல: ஒரு வேலை என்கிற அந்த வார்த்தைக்குள் அடங்குகிற அந்தப் பொருளிலே தொழில்கள் குறிப்பிடப்படவில்லை.

கலெக்டர் தொழிலைச் செய்கிறவர்கூட - போலீஸ் அதிகாரியின் தொழிலைச் செய்கிறவர்கூட - அதிலே அவர் செய்கிற அந்தத் தனித் தன்மையைப் பொறுத்துத்தான் அதிலே சிறப்புக்களை அவரால் அடைய முடிகிறது.

எத்தனையோ மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான சிறப்புகளைப் பெற்று விடுவதில்லை. நாமே கூடச் சொல்கிறோம். முன்பிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் எவ்வளவோ மேல் என்று சொல்கிறோம் என்றால் (இந்த மாவட்டத்தைச் சொல்வதாக யாரும் கருதிக் கொள்ள வேண்டாம். பொதுவாகச் சொல்கிறேன்) - என்ன அர்த்தம்? மாவட்ட ஆட்சித் தலைவர் என்பது அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பணி. ஆனால் அவரவர்களும் செய்யும்போது எந்தத் தன்மையோடு செய்கிறார்களோ - எந்தத் தூய்மையான உணர்வோடு செய்கிறார்களோ - அதைப் பொறுத்துத்தான் தொழிலுக்கு பொருள் கொள்ள வேண்டும்.

சங்கீத வித்துவான் எல்லோரும் அந்தத் தொழிலால் தொழிலுக்குரிய சிறப்பை அடைந்துவிட முடியாது. சில சங்கீத வித்துவான்கள் திண்ணையிலே உட்கார்ந்து பாடினால், அடுத்த வீட்டுக்காரர்கள் காதை கூடப் பொத்திக் கொண்டு இருப்பார்கள்.

அவரும் சங்கீத வித்துவான்தான்; அதே நேரத்தில் ஒரு பெரிய அவையிலே உட்கார்ந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் ரசிக்கக்கூடிய அளவிற்கு இசையைப் பொழிகிறவரும் சங்கீத வித்துவான்தான்!

எனவே சங்கீதம் என்ற தொழிலைக் கற்றுக் கொண்ட காரணத்தினாலேயே, அந்தத் தொழிலுக்கும் இன்னொரு தொழிலுக்கும் வேறுபாடு உண்டு என்ற அந்தப் பொருளிலே வள்ளுவர் கூறியதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற தொழிலிலேகூட சில தனித் தன்மைகள் உண்டு.

ஒரு ஆசிரியர் மாணவர்களிடத்திலே மதிப்பு பெற்றவராக இருப்பார்; இன்னொரு ஆசிரியர் மாணவர்களின் கேலிக்கு உரியவராக இருப்பார்; இந்த இரண்டு ஆசிரியர்களுமே ஒரே தொழிலைத் தான் செய்கிறார்கள். ஆனாலும்கூட அவர்களுடைய மனப் போக்கைப் பொறுத்து, நடவடிக்கைகளைப் பொறுத்து, மாணவர்களிடம் மதிப்பைப் பெறுகிறார்கள்.

எனவே அவர்கள் செய்கிற காரியம் - அவர்கள் ஈடுபடுகிற காரியம் - அதிலே காட்டுகிற தனித்தன்மை இதைப் பொறுத்துத்தான் சிறப்புக்கள் அமைகின்றன; வேற்றுமைகளே உருவாகின்றன.

எனவே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; மனித உயிர்கள் எல்லாவற்றிற்கும் பிறப்பு ஒன்றுதான். அந்தப் பிறப்பால் அனைவரும் சமம்தான். ஆனால் அவரவர்கள் தங்களுடைய தனித் தன்மையைக் காட்டுகின்ற வகையில் ஆற்றுகின்ற தொழில்கள் - காரியங்கள் இவைகளின் காரணமாகப் பல்வேறு சிறப்புக்களைப் பெறுகிறார்கள். அதிலேதான் வேற்றுமை இருக்கிறது என்று அழுத்தந் திருத்தமாக வள்ளுவர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த வள்ளுவருடைய குறள் ஏட்டளவில் இருக்கிறது. குறள் உரையாளர்கள் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள். குறளைப் பற்றிய பல்வேறு பதவுரைகள், விரிவுரைகள், பொழிப்புரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுக் காலமாக இந்தச் சாதிப் பிணக்கு மேலும் மேலும் வலுப்படுகிறதேயல்லாமல், நாம் அதைக் களைவதில் சிரத்தை எடுத்துக் கொள்கிறோமா என்றால் இல்லை. வெட்கப்பட வேண்டிய அளவிற்கு இருக்கிறோம் என்பதைத் தான் சொல்ல வேண்டும்.

சாதிக் கொடுமை ஒழியாமல் - சாதி ஆதிக்கம் ஒழியாமல் நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற சுதந்திரத்தை நீண்ட நாள் காப்பாற்றிவிட முடியும் என்பதும் - நாம் வெற்றி முழக்கமிட்டு வாங்கின விடுதலைக் கொடி பாரில் உள்ள நாடுகள் எல்லாம் பாராட்டுகின்ற அளவிற்கு பறக்க விட முடியும் என்று எண்ணுவதும் - மிகமிகத் தவறான காரியமாகும்.

சாதியிலே, மதங்களிலே சாயாதே என்று சொன்ன வடலூர் வள்ளலார் முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரியவர்களின் கருத்துக்களை எல்லாம் எடுத்துக் காட்டி இந்தச் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் முதற்கொண்டு - சாதிகளை ஒழிப்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை மாணவக் கண்மணிகள் தங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

முதற் பதிப்பு : மே 2000