“பிறப்பொக்கும்”
பகுதி 4 · 4 / 4
சாதி ஒழிய வேண்டுமென்று சொல்கின்ற அதே நேரத்தில் - நானும் சரி அல்லது தமிழகத்திலே இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய நன்மைக்காகப் பாடுபடுகின்ற, போராடுகின்ற ஒரு அணியினரும் சரி - இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறுகிறோம்.
இன்று இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு பிரச்சினையின் அடிப்படையில் நடைபெறுகின்ற அமளிகளை ஏடுகளில் பார்க்கிறீர்கள். குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு கல்லூரிகளில் - வேலை வாய்ப்புகளில் - தங்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு - சாதி அடிப்படையில், சமுதாய அடிப்படையில் தங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்று போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இட ஒதுக்கீட்டிற்காக ஆரம்ப காலத்தில் போராடிய கட்சி நீதிக் கட்சி; தென்னிந்திய நல உரிமைச் சங்கம்; திராவிடர் கழகம்; திராவிட முன்னேற்றக் கழகம்; இன்றளவும் போராடிக் கொண்டிருக்கின்ற திராவிடர் இயக்கம்; இதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
குஜராத்திலே இன்றைக்கு அந்தப் பிரச்சினை எழும்பியிருக்கிறது. நாடாளுமன்றம் வரையில் அந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிக்காரர்களும் - கட்சி மாறுபாடு இல்லாமல் இட ஒதுக்கீடு இருந்தாக வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் மிக அழகாக - தெளிவாக - திட்டவட்டமாக - “எப்படி இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று என்னுடைய தந்தையார் நேரு அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்களோ - அதைப் போல, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விரும்புகிற வரை இட ஒதுக்கீட்டு முறை நீடிக்கும்” என்ற உறுதியை அளித்திருக்கிறார்கள்.
“இட ஒதுக்கீடு இருந்து - அதே நேரத்தில் சாதி ஒழியும் என்று கனவு காண்கிறீர்களே, அது நியாயமா?” என்று சிலர் கேட்கிறார்கள். மேலெழுந்த வாரியாக இந்தக் கேள்வியைப் பார்க்கும்போது இந்தக் கேள்வியில் பொருத்தம் இருப்பதைப் போலவும், நியாயம் தட்டுப்படுவதைப் போலவும் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.
இடஒதுக்கீடு கூடாது என்று இன்றைக்கு வாதிடுகிறார்களே, நான் அவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி எல்லாம் - கல்லூரிகளிலே - மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரியிலே சேருவதற்காகவும் - அரசாங்க வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்காகவும் - தகுதி, திறமை வேண்டும் என்று வாதிக்கின்ற உயர்ந்த குலத்துப் பெரியவர்களை நான் கேட்கின்றேன்.
பொறியியல் கல்லூரிக்குத் தகுதி, திறமை வேண்டும் என்கிறார்கள்; அதைப் போலவே மருத்துவக் கல்லூரிக்குத் தனித் தகுதி, திறமை வேண்டும் என்கிறார்கள்; சரி, அப்படியானால் ஒரு ஆலயத்தில் இருக்கின்ற ஆண்டவனைப் பூஜை செய்கிற - அர்ச்சனை செய்கிற தகுதி திறமை வேண்டாமா? அந்தத் தகுதி, திறமையை மாத்திரம் அடிப்படையாக வைத்துத்தான் நாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அவன் பிராமணக் குலத்திலே பிறந்திருந்தாலும், அல்லது அவன் செட்டியாராக இருந்தாலும் முதலியாராக இருந்தாலும், அல்லது அவன் பிள்ளைமாராக இருந்தாலும், அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தாலும் - ஒரு மாணவன் ஆண்டவனை அர்ச்சிப்பதற்குரிய மந்திரங்களைக் கற்று அதற்கான தேர்வில் தேரியிருந்தால் - அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும்,
தகுதி அடிப்படையில் அவனுக்கு ஆண்டவனை அர்ச்சனை செய்கிற உரிமை வேண்டும் என்ற சட்டத்தை தி.மு.கழக அரசு தமிழகத்திலே நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தின் கதி என்ன? அந்தச் சட்டம் என்னவாயிற்று? உச்ச நீதிமன்றத்தில் சில சனாதனிகள் வாதாடி, உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்திருக்கிறது தெரியுமா?
“அரசியல் சட்டம் இதற்கு இடம் தராது; எனவே, தகுதி, திறமை அடிப்படையில் ஆண்டவனை அர்ச்சிப்பது கூடாது. சாதி அடிப்படையில்தான் அது நடைபெற வேண்டும். உயர் சாதிக்காரர்களுக்குத்தான் ஆண்டவனைப் பூஜிப்பதற்குத் தகுதி உண்டு” என்றால் - நான் கேட்கிறேன்: அங்கே மாத்திரம் உயர் சாதி வரலாம்; ஆனால் கல்லூரிகளில்- அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிற நேரத்தில், இல்லை, இல்லை, தகுதி திறமை வேண்டுமென்று வாதிட்டால் குழப்பமாக இல்லையா?
முரண்பாடாக இல்லையா?
ஒன்று, தகுதி, திறமைதான் முதல் இடம் என்றால்- முதலிலே ஆலயத்திலே ஆண்டவனைப் பூஜிக்கின்ற அந்த உரிமையிலே எல்லா சாதிக்காரர்களுக்கும், அது யாராக இருந்தாலும், அவன் ஆதி திராவிட வகுப்பிலே பிறந்திருந்தாலும் - அல்லது உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்கிற பிராமணக் குலத்திலே பிறந்திருந்தாலும் - யாராக இருந்தாலும் - அவன் அர்ச்சனை செய்வதற்குரிய பரீட்சையை எழுதித் தேர்வு பெற்று, அந்தத் தகுதியை அவன் அடைந்தால் - அவன் ஆண்டவனைத் தொட்டு வணங்கலாம்; ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்யலாம்; ஆண்டவனைப்
பூஜிக்கலாம் என்ற தகுதியைத் தருவதற்கு, இந்த நாட்டிலே உள்ள பெரியவர்கள் முன்வருவார்களேயானால் - நாட்டில் சாதி ஒழியும்; அப்படிச் சாதி ஒழிந்து விடுமானால் - கலப்புத் திருமணங்கள் பெருகுமேயானால் - உயர்ந்த சாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை விட்டுத் தங்களை விடுவித்துக் கொள்வார்களேயானால் - தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று கருதப்படுவார்கள் தங்களுடைய பலவீனத்தை விட்டுவிட்டு - பய உணர்ச்சியை விட்டுவிட்டு - அவர்களும் இந்த நாட்டில் வாழும் மனிதர்கள் தான்; மண் அன்று என்ற அந்த உரிமைக்குரலை எழுப்புவார்களேயானால் - அப்படிச் சாதியற்ற சமுதாயம் என்று இந்த நாட்டில் உருவாகின்ற அந்தக் கால கட்டத்தில் தான் இடஒதுக்கீடு என்பது சமுதாய அடிப்படையிலே தேவையில்லை; சமூக அடிப்படையிலே தேவையில்லை; வகுப்பு அடிப்படையிலே தேவையில்லை; அப்பொழுது பொருளாதார அடிப்படையில் பார்த்துக் கொள்ளலாம்.
அப்பொழுது இரண்டே சமுதாயம்தான்; ஒன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுதாயம்; மற்றொன்று பொருளாதாரத்தில் முன்னேறிய சமுதாயம் என்று அப்படி இந்தச் சமுதாயத்தை இரண்டாகப் பிரிக்க முடியும். எனவே அதுவரையிலே - சாதிகள் இருக்கின்ற வரையிலே - அந்தச் சாதிகளுக்குத் தர வேண்டிய இட ஒதுக்கீடுகளை - அவர்களைக் கைதூக்கிவிட வேண்டிய காரியத்தை - நாட்டிலே இருக்கின்ற ஆட்சியாளர்கள் செய்து தீர வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
அதைத்தான் குஜராத்திலே உள்ள ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்; அதற்கு உயர்சாதிக்காரர்களால் அங்கே எதிர்ப்பு ஏற்படுவதை நாம் காண்கிறோம்.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் - சாதி ஒழிய வேண்டும் என்ற அந்தக் கருத்தை ஏதோ இங்கே கருணாநிதி புதிதாகச் சொல்கிறான் - அல்லது பேரறிஞர் அண்ணா புதிதாகச் சொன்னார் அல்லது தந்தை பெரியார் புதிதாகச் சொன்னார் என்று எண்ணிவிடாமல், இந்தக் கருத்து இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு வள்ளுவர் காலத்தில் - புத்தர் காலத்தில் - மகாவீரர் காலத்தில் - மேதைகள் காலத்தில் - மகான்கள் காலத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்து என்று உணர வேண்டும்.
நாம் மகான்களை ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை.
நாம் வள்ளுவரை வாழ்த்துகிறோம்; ஆனால், வள்ளுவர் சொன்ன அந்தக் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை.
நாம் பெரியாரை ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் பெரியார் சொன்ன அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை!
நாம் அண்ணா அவர்களை ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் அண்ணா சொன்ன அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை!
நாம் உத்தமர் காந்தி அடிகளை ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை!
எனவே ஒருவரை ஏற்றுக் கொள்வது; அந்தக் கொள்கை வழி நடப்பது - அது எந்தக் கட்சியானாலும், நான் சார்ந்திருக்கின்ற கட்சி உட்பட, எந்தக் கட்சியானாலும் - அந்தக் கட்சியிலே உள்ளவர்கள் அரசியல் ரீதியாக இன்றைக்கு சாதியை வளர்க்க முயலுவார்களானால் அவர்கள் தங்களையும் அறியாமல் இந்த நாட்டிற்கு ஒரு பெரும் கேட்டை - எதிர்கால சமுதாயத்திற்கு ஒரு பெரும் ஆபத்தை உருவாக்குகிறார்கள் என்றுதான் பொருள். அந்த ஆபத்திற்கு இடம் தராத வகையில் - உழைக்க வேண்டிய பெரும் பொறுப்பு - இன்றைய இளைய தலைமுறையாம் மாணவச் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட இளைய சமுதாயம் - இன்றைய தினம் விழிப்புற்று நடமாடிக் கொண்டிருக்கின்ற அந்தச் சமுதாயம் மேலும் மேலும் தன்னுடைய அயராத தொடர் பணிகளின் மூலமாக புதியதொரு நாட்டை உருவாக்குவதற்கு - சாதி, சமயங்கள் அற்ற ஒரு சமத்துவ நாட்டை - பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமதர்ம நாட்டை உருவாக்குவதற்குப் பாடுபட வேண்டும்.
அப்படிப் பாடுபடுகின்ற அந்தப் படையிலே சேருகின்ற முப்பது வீரர்களை இன்றைக்கு இந்தப் பட்டமளிப்பு விழாவிலே வாழ்த்துவதிலே பெருமை அடைந்து வாழ்த்தி விடை பெறுகிறேன்.
4.4.81 அன்று திருவாரூர் அரசினர் கலைக் கல்லூரியில் ஆற்றிய உரை.
