“பிறப்பொக்கும்”
பகுதி 2 · 2 / 4
இன்று இந்தத் திருவாரூர் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே செல்கிற முப்பதுக்கு மேற்பட்ட மாணவக் கண்மணிகள் ஒருவேளை ஐம்பது ரூபாய் மாதந்தோறும் மானியத் தொகை பெறுகிற பட்டியலில் இடம் பெறவும் பெறக்கூடும் - வேலை கிடைக்கிற வரை; ஆனால் அரசின் அறிவிப்பு சரியாக நிறைவேற்றப்படுமேயானால் - பட்டதாரி மாணவர்கள் ஒரு இலட்சம் பேருக்கு மாதம் ஐம்பது ரூபாய் தரப்படும் என்ற அறிவிப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படுமானால் நிச்சயமாக இந்த முப்பது பேருக்கு அந்தப் பட்டியலில் இடம் உண்டு; ஆனால் அந்த அறிவிப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் - இலட்சம் பேர் என்று தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது என்றும்,
இப்போது அந்தத் தொகை இலட்சம் பேருக்கு கிட்டவில்லை என்றும் - நாம் அறிகிற நேரத்தில் முப்பது பேருக்கும் அந்த சிறு உதவியும் கிடைக்கக்கூடிய வழியில்லை என்பதை நான் உணர்கிறேன்.
எனவேதான் படித்த படிப்பை - கற்ற கல்வியை - கல்லூரியில் பெற்ற பயிற்சியை - நூல்களின் மூலமும், பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமும் தாங்கள் கண்ட புதுமைகளை - ஏதோ தங்கள் வயிற்றைக் கழுவுகிற வேலை வாய்ப்பு என்பதற்காக மாத்திரம் பயன்படுத்தாமல் - தங்களுடைய வாழ்நாளில் ஒரு பகுதியை இந்தச் சமுதாயத்தை வாழ வைக்கவும் பயன்படுத்த வேண்டும் என்று நான் மாணவச் செல்வங்களை கேட்டுக் கொள்வேன்.
நாட்டில் படிக்காத எத்தனையோ பெரியவர்கள் - பட்டம் பெறாத எத்தனையோ பெரியவர்கள் மக்களுக்காகவே உழைத்து - பாடுபட்டு - தியாகம் செய்து - மாண்டு மடிந்து போயிருக்கிறார்கள்.
என்னையும் - என்னை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களையும் ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்கள், கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர் அல்ல.
தமிழகத்திலே எட்டாண்டு காலம் முதலமைச்சராக இருந்து - தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக பாடுபட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கல்லூரியில் நுழையாதவர்தான்.
நானும்கூட என்ன - பத்தாம் வகுப்பு வரை படித்தவன்தான்; எனவே படிப்பிற்கும், சமுதாயத்திற்கு ஆற்றுகின்ற பணிக்கும், தொடர்பு இருப்பதாகச் சொல்ல மாட்டேன் - ஆனால் படித்தவர்கள் - அண்ணாவைப் போன்ற மாமேதைகள் - சமுதாயத்திற்காகப் பணியாற்ற
முன் வருகிற நேரத்தில் - சமுதாயத்திற்கு மற்றவர்கள் பணியாற்றுகிற நேரத்தில் கிடைக்கிற பயனைவிட - அதிகப் பயன் கிடைக்கும் என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது.
படிக்காத சிலர் தலைவர்களாகவும் வந்துவிடலாம். சிலர் பெரும் பொறுப்புகளுக்கூட வந்துவிடலாம். ஆனால் நான் மாணவ நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்வேன்:-
விதிவிலக்குகள் என்றைக்கும் வழிகாட்டிகளாக ஆக மாட்டா; விதி விலக்குகள் விதிவிலக்குகள்தான். விதிவிலக்குகளையே பின்பற்றி - காமராசர் படிக்கவில்லை. முதலமைச்சராக ஆகி விட்டார். கருணாநிதி கூடத்தான் படிக்கவில்லை; ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்தான் - இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறான். எனவே நாம் ஏன் படிக்க வேண்டும்? என்ற ஒரு கேள்வியை மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டால் - அதற்குத்தான் நான் சொல்கிறேன் “விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆக மாட்டா” என்று.
உங்களுக்கு என்று நாட்டில் பல பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்களுடைய குடும்பத்தையும், உங்களையும் கவனித்துக் கொண்டு - அதே நேரத்தில் இந்த நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு இன்று பட்டம் பெற்றுச் செல்கிற மாணவச் செல்வங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலையில் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். நான் உள்ளபடியே கவலை தோய்ந்த உள்ளத்தோடு எடுத்துக் காட்டுகிறேன்-
இன்று பல கல்லூரிகள் இல்லாவிட்டாலும் சில கல்லூரிகள் போர்க்களங்களாகக் காட்சி அளித்துக்
கொண்டிருக்கின்றன. மாணவர்களுக்கிடையே பிணக்கு - பிரச்சினை - அமளி - அதன் காரணமாக அண்ணாமலை, மதுரையில் இரண்டு மாணவர்கள் - ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்து - நேற்று சட்ட சபையில்கூட அது குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டு அமைச்சர்கள் பதில் தந்திருக்கிறார்கள்.
இன்று கல்லூரிகளிலும் சாதிப் பிரச்சினை தலை தூக்கியிருக்கிற கொடுமையை நாம் அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டு விட முடியாது.
எந்தச் சாதிக் கொடுமை ஒழிய வேண்டுமென்று பெரும் பெரும் தலைவர்கள் - மேதைகள் - சமூகப் புரட்சிக்காரர்கள் நம்முடைய நாட்டில் பல ஆண்டு காலமாக பாடுபட்டு அதற்காகவே தங்களுடைய பணிகளை அர்ப்பணித்து - தங்களின் உயிர்களையும்கூட தத்தம் செய்தார்களோ - அப்படிப்பட்ட போராட்டத்தில் அவர்கள் முழு வெற்றி பெறவில்லையோ என்று நாம் சந்தேகப்படுகிற அளவிற்கு இன்று சாதி வெறி தலை விரித்தாடுகிறது.
பட்டிக்காடுகளில் - படிப்பறிவே இல்லாத பாமர மக்கள் வாழும் இடங்களில் சாதி தலை தூக்குமானால் நாம் ஆச்சரியப்படமாட்டோம். ஆனால் “எல்லோரும் ஓர் இனம்; எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்கிற புதிய சிந்தனைச் செல்வங்களைப் பெறக்கூடிய இந்தக் கல்விக் கூடங்களில் - இந்த அறிவு ஆலயங்களில் இன்றைக்கு பயிலுகிற மாணவர்களிடையே - அந்த இளம் உள்ளங்களிடையே எப்படித்தான் இந்த சாதி எனும் நஞ்சு புகுத்தப்பட்டிருக்கிறதோ என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
எனவே மாணவர்கள் - அந்தச் சாதியை ஒழிக்க - சாதி பேதத்தை தலைய ஒரு சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமேயானால் இன்றைக்கு நான் பேசுகிற தலைப்புக்கூட ‘பிறப்பொக்கும்’ என்ற அந்தத் தலைப்பில்தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இதைப்போல - பலர் - பல்வேறு தலைப்புக்களில் பேசியிருக்கக்கூடும். நான் பேசுகிற தலைப்பு ‘பிறப்பொக்கும்’ என்பதாகும். ‘பிறப்பொக்கும்’ என்கிற இந்த ஒரு சொல்லில் ஆரம்பிக்கிற குறள் - வள்ளுவர் பெருமகனால் அவர் வாழ்ந்த கால ஓட்டத்தில் - எவ்வளவு மனத் துயரத்தோடு வெளியிடப்பட்ட கருத்து என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”
என்றார் வள்ளுவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்றுதான். அதிலே உயர்வு தாழ்வே கிடையாது என்று சொல்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் இப்படிப்பட்ட ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்றால் - அப்போதே பல்வேறு சாதிகள் துளிர்விட்டு இருந்தது என்பதும் - சாதியின் பெயரால் உயர்வு, தாழ்வு உணர்வுகள் படர்ந்து இருந்தது என்பதும் - அந்தப் படர்ந்த கொடியின் வேரை அறுத்திட வேண்டும் என்பதற்காகத்தான் - வள்ளுவப் பெருமகனார் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய பேருண்மையாகும்.
