“பிறப்பொக்கும்”
பகுதி 1 · 1 / 4
“பிறப்பொக்கும்”
கல்லூரியினுடைய விழா என்ற தலைப்பிலே என்னை அழைத்து ஒரு பொதுக்கூட்டத்தை அவர்கள் களையும் அறியாமல் இந்த நிர்வாகத்தினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விழாவிற்கு வந்து மேடையிலே அமர்கிற வரையில் விழா என்ற காரணத்தாலேயோ என்னவோ - ஒவ்வொருவரும் கீழே விழாமல் இங்கே வருவது எளிதான காரியமல்ல - என்ற நிலை ஏற்பட்டு - மாணவர்களுக்கு முக்கியமான தேவையான கட்டுப்பாடு - அமைப்பு முறை இவைகள் இந்த நிகழ்ச்சியிலே ஆர்வப் பெருக்கின் காரணமாக சரியாக கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்ட காரணத்தால் - நீங்களும் தொல்லைக்கு ஆளாகி நானும் தொல்லைக்கு ஆளாகி - எதிரே வீற்றிருக்கிற ஆயிரக்கணக்கான நீங்கள் இந்த மேடையைக் காண்கிறீர்கள் - நானும் காண்கிறேன்.
மேடை முழுவதும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்ற சூழ்நிலை; புராணங்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் - என்னுடைய ஜாதகம் எப்பொழுதுமே என்னைச் சுற்றி நெருக்கடி இருந்து கொண்டிருக்கும். அதற்கேற்ப இந்த மேடையிலும் நெருக்கடி இருந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.
இன்று திருவாரூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச வேண்டும் என்று நண்பர்கள் வலியுறுத்தினார்கள்.
பொதுக் கூட்டத்திற்கு நான் ஒப்புதல் தரவில்லை. அது எவ்வளவு தவறு என்பதை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு கல்லூரியின் நிகழ்ச்சி-கல்லூரியின் முதல்வர், பேராசிரியப் பெருமக்கள், மாணவப் பேரவையின் நிர்வாகிகள், மாணவக் கண்மணிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாத்திரம் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டால் மாணவர்களிடம் கூறக்கூடிய பல விஷயங்களை கூறுகிற வாய்ப்பு எனக்கு இருந்திருக்க முடியும்.
ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட வாய்ப்பை நீங்கள் இழந்து விட்டீர்களோ-இல்லையோ எனக்குத் தெரியாது; நான் உள்ளபடியே இழந்துவிட்டேன்.
மாணவர்கள் மத்தியில் பல கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம் என்ற ஆவலோடுதான் நான், இங்கே வந்தேன்.
ஆனால் இது முப்பெரும் விழா; கல்லூரியின் ஆண்டு விழா; பேரவையின் நிறைவு விழா; பட்டம் அளிப்பு விழா ஆகிய மூன்று விழாக்கள் இணைந்த விழா. இந்த விழாவிலே இந்தக் கல்லூரி தோன்றிய காலத்தை - அது தோன்றுவதற்கு எந்த அரச காரணமாக இருந்தது என்பதையெல்லாம் இங்கே முன்னிலை ஏற்றுள்ள நண்பர் தாழை சுட்டிக் காட்டினார்.
திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரியைப் போலவே பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கப்பட்ட ஆட்சியில் ஒன்பதாண்டுக் காலம் தமிழகத்தில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன.
இன்றைக்கு ஆங்காங்கு பல்கலைக் கழகங்கள் உருவாகின்றன என்றால் - மலர் இருந்தால்தான் மாலை தொடுக்க முடியும்; அதைப் போலக் கல்லூரிகள் இருந்தால்தான் பல்கலைக் கழகங்களை உருவாக்க முடியும். எனவே பல கல்லூரிகளை உருவாக்கிய பெருமை ஒன்பதாண்டு கால தி.மு.கழக அரசுக்கு உண்டு என்பதையும் - அந்த ஆட்சிக்குப் பிறகு ஏறத்தாழ இந்த ஐந்தாறு ஆண்டு காலத்தில் எந்தவொரு புதிய கல்லூரியும் தமிழகத்தில் உருவாகவில்லை என்பதையும் - ஏனென்றால் உருவாக்கத் தேவையில்லை என்ற அளவிற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
உங்களுடைய ஆர்வத்தைப் பார்க்கும் நேரத்தில் - நீங்கள் எல்லாம் வீட்டிற்குச் செல்லும்போது நிச்சயமாக ஒன்றைப் பேசிக் கொண்டு செல்வீர்கள். என்னவென்றால் “கருணாநிதியின் பேச்சு இன்று நன்றாக இல்லை” - ஏனென்றால் நீங்கள் இவ்வளவு திரளாக என்னிடம் எதிர்பார்த்து வந்திருப்பது வேறு; நான் இங்கே பேசப் போவது வேறு.
கட்சி அரசியல் இங்கே பேச மாட்டேனா என்று பலர் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் எனக்குள்ள குறை அண்ணா அவர்களிடம் நான் பயின்ற காரணத்தால் - எதை எங்கே-எப்படிப் பேச வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எனவே உங்களுடைய ஆவலை என்னால் நிறைவு செய்ய முடியாது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சி அரசியல் என்று சொன்னேன். அரசியல் பேசுவது என்பது வேறு; கட்சி அரசியல் பேசுவது என்பது வேறு.
அரசியலை திருக்குறளே ஒத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்ற வினாக்குறி எழும்போது - எங்களை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்ன பொன்மொழியே - மாணவர்கள் அரசியலைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்; அவர்கள் மாணவப் பருவத்தில் அரசியலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்பது தான்.
இன்றைக்கு தமிழகத்தில் மாத்திரமல்ல; இந்தியாவில் பல பகுதிகளில்கூட மாணவர்களிடம் ஒரு குழுமை - ஒரு கொந்தளிப்பை - நம்மால் காணமுடிகிறது.
இன்றைக்கு முப்பது பேர் பட்டம் பெற்று - இங்கிருந்து விடை பெற்று வெளியிலே செல்கிறார்கள் என்றால் - அவர்கள் வெளியே செல்கிறார்கள் என்று பொருள் அல்ல.
நான் காரில் குடந்தையிலிருந்து இங்கே வந்து கொண்டிருந்தபோது தாழையிடம், “இன்று பட்டம் பெற்றுச் செல்கிற மாணவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு?” என்று கேட்டேன். அவர் பதில் சொல்லும்போது, “எத்தனை பேர் என்று சரியாகத் தெரியவில்லை; முப்பது பேரோ - நாற்பது பேரோ ‘ரிலீஸ்’ ஆகிறார்கள்” என்று சொன்னார்.
நான் அவரைத் திரும்பக் கேட்டேன். “‘ரிலீஸ்’ என்ற அந்த எண்ணத்திலேயே இருக்கிறாயா? இப்போது நீ ரிலீஸ் ஆகி வந்ததைப் போல” என்று சொன்னேன்.
உள்ளபடியே நீங்கள் ரிலீஸ் ஆகிச் செல்வதாக நான் கருதவில்லை. இப்போதுதான் நீங்கள் சிறைச்சாலைக்கே செல்கிறீர்கள். (கைத்தட்டல்)
ஏனென்றால் உத்தரவாதம் இல்லாத ஒரு பட்டமளிப்பு விழாதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அது எந்த ஆட்சிக் காலமானாலும் சரி - நாங்கள் பொறுப்பேற்றிருந்த அந்த ஆட்சிக் காலம் ஆனாலும் சரி - எங்களுக்கு முன்பிருந்த ஆட்சிக் காலமானாலும் சரி - ஒரு கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே செல்கிற மாணவர்களுக்கு - அவர்களுடைய வாழ்க்கைக்கான உத்தரவாதம் - அவர்களுடைய வேலைக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை. அளிக்கப்படக் கூடாது என்று எந்த அரசும் கொள்கை முடிவு எடுத்ததில்லை. உத்தரவாதம் அளிக்க முடியாத சூழலில் நாடும், நாட்டின் பொருளாதாரமும் இருக்கின்றன என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அந்த வகையில்தான் இன்றைக்கு இங்கிருந்து வெளியே செல்கிற மாணவர்கள் இதுவரையில் இந்தக் கல்லூரியில் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை - வெளி உலகத்தில் அவர்கள் பெற இயலாது.
ஆனால் பட்டம் பெற்றவர்கள் அனைவரும் வேலைக்குத்தான் செல்ல வேண்டுமா? என்ற இந்தக் கேள்வி - நியாயமான கேள்விதான். ஆனால் கேட்கப்பட வேண்டிய இடம் நம்முடைய நாடாக இருக்கும்போது தான் அதிலே பொருத்தமில்லாத ஒரு நிலை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் கல்லூரிகளிலே பட்டம் பெற்று வெளியேறுகிற மாணவர்கள் ஒரு வேலைக்குத்தான் செல்ல வேண்டுமென்ற நிலை இல்லாமல் தாங்களே பல தொழில்களை உருவாக்கவும் - தங்களுடைய அறிவால் - ஆற்றலால் - தாங்கள் கற்ற கல்வியால் - தங்களுக்கும் பயன்படக்கூடிய - மற்றவர்களுக்கும் பயன்படக்கூடிய பல தொழில்களை நடத்திடக்கூடிய தகுதி பெற்றவர்களாக இருந்திடக் காண்கிறோம்.
அது அந்த நாட்டின் பொருளாதார சூழல்; நம்முடைய நாட்டைப் பொறுத்த வரையில் படிப்பதே வேலை பார்க்கத்தான். படிப்பது சமுதாயத்தினுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்காக என்று இல்லாமல் - படிப்பது சமுதாயத்தினுடைய முன்னேற்றத்துக்காக என்று இல்லாமல் - படிப்பது நாளும் பணி புரிந்து நம்முடைய வயிற்றைக் கழுவிக் கொண்டு - நம்மை நம்பி வந்திருக்கிற பெற்றோர்களையும் வாழ வைத்து - நம்மை நம்பி வரவிருக்கிற புதிய உறவுகளையும் காப்பாற்ற - என்ற அந்த எண்ணத்தோடுதான் இன்றைக்கு ஒரு மாணவன் கல்விக்கூடத்திற்கோ அல்லது கல்லூரிக்கோ நுழைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
அப்படிப்பட்ட பொருளாதார சூழலில்தான் நம் நாடு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் இன்றைக்கு இலட்சக்கணக்கானவர்கள் வேலையற்றவர்களாக இருக்கிறார்கள்; படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள்.
