பழைய வரலாறும் இளைய தலைமுறையும்
பகுதி 3 · 3 / 4
அந்த வடுக்களையும் மக்கள் பயன்படுத்தாமல் விடுகிறார்களா?
மனிதன் பயன்படுத்தாமல் விடுகிறானா?
மக்களுக்காகப் பாடுபட்டு அதனால் ஏற்பட்ட அந்த வடுக்கள் இருக்கிறதே, அந்த வடுவின் மீது கால் வைத்து ஏறித்தான் தென்னை மரத்தில் இருக்கின்ற இளநீரையோ - தேங்காயையோ இன்றைக்கு மனிதன் பயன்படுத்திக் கொள்ள முனைகிறான்.
எனவே பெரியவர்கள் - அறிஞர்கள் - சான்றோர்கள் - புலவர் பெருமக்கள் - வரலாற்றுப் பேராசிரியர்கள் - மாமன்னர்கள் - வீரர்கள் - தியாகிகள் - இவர்களெல்லாம் கடந்த காலத்தில் இருந்து மறைந்தாலும் - எதிர்காலத்தில் உள்ளவர்கள் ஏறிச் செல்லத்தக்க, தென்னை மரத்தினுடைய வடுக்களாகத் தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அதில் ஏறிப் பயன் விளையக் கூடிய இளநீர், பயன் விளையக் கூடிய முற்றிய தேங்கினை மக்களுக்கு அளிக்க வேண்டிய பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் யார்?
யார்? என்ற கேள்விக்கு எனக்குக் கிடைக்கின்ற விடை காட்சியாகத்தான் கிடைக்கிறது.
காட்சி என்றாலும் வேறு காட்சிக்கு சென்று விடாதீர்கள்.
நான் என் எதிரிலே அமர்ந்திருக்கின்ற இளைஞர் பட்டாளத்தைத்தான் பார்க்கிறேன். (பலத்தக் கைதட்டல்)
இளைய தலைமுறையினுடைய கையிலேதான் இந்த நாடு இருக்கிறது; இந்த நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது; இந்த மொழியின் பாதுகாப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தவன் நான். 1965-ஆம் ஆண்டு, ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுக் காலமாக நடைபெற்று வந்த மொழிப் போராட்டத்தினுடைய உச்சக் கட்டத்தில் இந்த நாட்டில் உள்ள இளைய தமிழன், எழுஞாயிறு போன்ற இளந் தமிழன் அன்றைக்கு ஆர்த்தெழுந்து ‘பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழைக் காப்பேன்’ என்கிற சூளுரைத்து கிளம்பி இருக்காவிட்டால் இன்றைக்கு நாமெல்லாம் இந்த முருகப்பா மண்டபத்தில் முழுவேலோடு அமர்ந்து நம்முடைய மொழியைக் காப்பாற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது என்பதை யாரும் மறந்துவிட இயலாது.
எனவே இளைய தலைமுறையின் கையில்தான் ஒரு மொழியின் பாதுகாப்பும் - ஒரு இனத்தின் பாதுகாப்பும் - ஏன் நாம் விரும்புகின்ற சமத்துவமானாலும் - சமதர்மமானாலும் - பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற ஒரு நிலை ஏற்பட வேண்டுமென்பதிலும் - அரசியலில் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற தன்மையாலும் இவைகளை எல்லாம் துரத்தத் சக்தி வாய்ந்த பட்டாளம்தான் இளைஞர் பட்டாளம்.
எனவேதான் என்னை அழைத்து வந்தவர்களே! நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன்.
நான் ஒரு வள்ளுவரை அல்ல; உங்கள் அத்தனை பேரையும் வள்ளுவராகக் கருதி அழைக்கிறேன்.
எங்களை யெல்லாம் வள்ளுவராகக் கருதி அழைக்கிறாய் என்றால் நாங்கள் என்ன தாடி - மீசையோடு வரவேண்டுமா? நாங்கள் என்ன 1330 அருங்குறட்பாக்களையும் எழுதுகின்றவர்களாக வர வேண்டுமா என்று கேட்பீர்களேயானால் நான் எப்படி வந்திருக்கிறேன்?
தெரியவில்லையா உங்களுக்கு? ‘கைவேல் களிற்றொடு போக்கி’ வந்திருக்கிறேன்.
வள்ளுவன் குறிப்பிடுகிறான் - வீரனுக்கு அழகு,
“கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியானும்.”
என்று போர்க்களத்தில் யானையின்மேல் தன் கையில் இருந்த வேலை வீசி விட, அந்த வேல் யானையின் மீது குத்திக்கொள்ள, வேல் குத்தப்பட்ட யானை வேறு பக்கம் ஓடிவிட - அந்த நேரத்தில் இன்னொரு எதிரி தன்னை நோக்கி வரும் பொழுது அவனைத் தாக்க வேல் இல்லையே - ‘கைவேலை களிற்றொடு போக்கிவிட்டோமே’ என்று கவலைப்படுகிற வீரன் வேறு வழியில்லாமல் திகைக்கும் போது, அப்போது தான் தெரிகிறது, தன் மீது ஏற்கெனவே ஒரு வேல் குத்தி இருப்பது.
அதைப் பிடுங்கி பகைவரைச் சந்தித்தான் என்று வள்ளுவர் சொன்னார்.
அந்தக் கைவேல் களிற்றொடு போக்கிய கருணாநிதிதான் உங்கள் முன்னால் இன்று நின்று கொண்டிருக்கிறான். (கைதட்டல்)
மெய்வேல் இருக்கிறது. எனவே மெய்வேல் உண்டு என்ற நம்பிக்கையோடுதான் இங்கு வந்தேன்.
நம்பிக்கையோடு நான் உள்ளே நுழைந்தபோது எனக்குக்கூட கொஞ்சம் நம்பிக்கை குறைந்தது. நம்பிக்கையோடு வருகின்ற என்னுடைய கை தப்புமா என்கிற அளவுக்கு நீங்கள் என்னுடைய கையைக் குலுக்கினீர்கள் - இழுத்தீர்கள் - பற்பல இடங்களில் நகக்குறிகள் எல்லாம் கூட உண்டு. அவ்வளவு அன்பை என்மீது பொழிந்து என்னை வரவேற்றீர்கள்.
இளைஞர்களால் ஆகாதது எதுவுமில்லை. இதற்கு நான் புதிய சான்றுகளைத் தருவதைவிட பழைய சான்றுகளைத் தருவதேகூடப் பொருந்தும் என்று கருதுகிறேன்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளைஞன். கிண்கிணியணிந்து கையில் வேலெடுத்து அவன் போர்முனைக்குச் சென்ற பருவம் மிகமிகப் பாலப்பருவம்.
அவன் எதிர்க்க வேண்டிய மன்னர்கள் எழுவர். ஏழு மன்னர்களைக் களத்தில் சந்திக்க இவனால் ஆகுமா என்று நாட்டு மக்களெல்லாம் ஐயமுற - என்னாலும் ஆகும் என்று சொல்லிவிட்டு நான் இந்தப் போரிலே வென்று காட்டாவிட்டால் “மாங்குடி மருதனார் என்னைப் பாடாதொழிக” என்றான்.
ஒரு புலவர் ஒரு மன்னரைப் பாடுவது என்றால் அவ்வளவு பெருமைக்குரிய காரியமாக இருந்தது. அந்தக் காலத்தில் தன்மானப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட புலவர்களால் பாடப்பட வேண்டிய பெருமை எனக்கில்லாமல் போகட்டும். நான் தோல்வியடைந்து திரும்பினால் புறமுதுகிட்டு வந்தால் என்று வஞ்சினம் கூறி சிறுவன் நெடுஞ்செழியன் ஏழு பேரைச் சந்தித்தான். அதன் காரணமாக ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பட்டத்தைப் பெற்றான்.
அவன் இளைஞன்தான்! இளமைப் பருவத்தில்தான்!
கரிகாற் பெருவளத்தான் சிங்களம் சென்று - வென்று பன்னீராயிரம் சிங்களர்களைக் கைதிகளாகக் கொண்டு வந்து காவிரிக்கு அணை கட்டினான். அது கரிகாலன் கட்டிய கல்லணை என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறோம்.
திருமாவளவன் கரிகாற் பெருவளத்தானைப் பற்றிய இளமைக்கால கதையும் உண்டு.
