உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பழைய வரலாறும் இளைய தலைமுறையும்

பகுதி 4 · 4 / 4

அவன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது நாட்டாளும் பொறுப்பை ஏற்க வேண்டியவனானான். அவனிடத்திலே முறையீடு செய்து கொள்ள இரு தரப்பார் வந்தனர். நீதி மன்றத்திலே அமர்ந்த அந்த இளைஞன் அளிக்கின்ற தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்வார்களா? அவையோர்தான் அதை ஏற்பார்களா என்ற சந்தேகத்தின் மீது இளைஞனான கரிகாற் பெருவளத்தான் தாடி வைத்துக் கொண்டு கொக்குபோல் வெண்மையான தாடியும், மீசையும் வைத்துக் கொண்டு நீதி மன்றத்திலே அமர்ந்து தீர்ப்பு வழங்கினான்.

இவ்வளவு வயதானவர் தீர்ப்பு வழங்குகிறாரே நல்ல தீர்ப்புதான் என்று அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு போனார்கள். அவர்கள் சென்ற பிறகு தாடி, மீசையைத் களைந்தான் கரிகாலன். காரணம் இளமைப் பருவத்திலே அப்படி அற்புதத்தைச் செய்து காட்டினான்.

வழங்கிய தீர்ப்பும் நல்ல தீர்ப்புதான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக முதுமைக் கோலம் பூண்டான். இளைஞனாக இருந்து முதுமைக் கோலம் பூண்டதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. இப்போது காலம் மாறி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு இளைஞனாக இருந்தவன் முதுமைக் கோலம் கொண்டாவது நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கரிகாற் பெருவளத்தான் தன்னுடைய இளமைப் பருவத்திலே ஆற்றல் மிகு செயலை, அந்த நீதி வழங்கியதன் மூலமாக நிரூபித்துக் காட்டினான்.

எனக்குப் பிடித்தமான கருத்துள்ள கதையம்சம் கொண்ட பாரதத்தில் இருந்து உதாரணம் சொல்ல

வேண்டுமேயானால் பாரதப் போரிலே அபிமன்யு நடத்திய போருக்கு இணையாக அர்ச்சுனன்கூட நடத்தவில்லை.

ஏடெண்ணில் தன்னுடைய மிக இளமையான மனைவியை வீட்டில் விடுத்து - விடைபெற்று தாயிடத்தில் விடைபெற்று - தந்தையும் வேறு போர்க்களத்தில் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், தந்தையையும் காணச் சந்தர்ப்பம் இல்லாமல் போர்க்களம் புகுந்து, போரில் கையிழந்த போதும் நாக்கினால் வாயால் வாளைக் கவ்விக் கொண்டு எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்கின்ற அளவுக்கு போரிட்டு இறுதியாக ஜெயப்பிரதன் என்கிற ஒரு துரோகியினால் பின்னாலிருந்து குத்தப்பட்டு இறந்தான் வீர இளைஞனான அபிமன்யு. அவனுடைய இளமைப் பிராயத்திலேயே தான், அந்த அற்புதத்தைச் செய்து காட்டினான்.

பாரதப் போரில் யாருடைய சாகசத்தையும்விட அபிமன்யுவுடன் போரிட்ட சாகசம்தான் புகழப்படுகிறது.

அதைப் போலத்தான் இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் இராவணனால்கூட - கும்பகர்ணனால்கூட அல்லது வேறு பல தளநாயகர்களால்கூட நடத்திக் காட்ட முடியாத சாகசங்களை இராமனும் - இலக்குமணனும் - அனுமனும் - சுக்கிரிவனும் அத்தனை பேரும் கதிகலங்கக்கூடிய அளவுக்கு, எதுவும் புரியாமல் திகைப்படையக் கூடிய அளவுக்கு, போரிட்டு அவர்களை ஓட ஓட விரட்டி இறுதியில் மாண்டு போனானே இந்திரஜித், அவனும் இளைஞன்தான். அவனும் தன்னுடைய இளமைத் துடிப்பைப் போர்க்களத்திலே காட்டி இராமாயணப் போராட்டத்தை எப்படி பாரதப் போரில் அபிமன்யு

போராடிய நாள் பிரசித்தி பெற்ற நாளோ - அதேபோல இந்திரஜித் போராடிய நாள் - புகழக்கூடிய நாள் என்கிற குறிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அவன் போர் புரிந்து காட்டினான்.

அபிமன்யுவினுடைய தந்தை அர்ச்சுனன் புகழ் பெற்ற வில்வீரன் காண்டீபன் என்கிற புகழைப் பெற்றது ஐம்பது வயதிற்கு மேல்; அந்தப் புகழைப் பெற்றது அவன் துரோணரிடத்தில் மாணவராக இருந்தபோதுதான். அப்போது பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடத்திலே மாணவர்களாக இருந்தபோது, அவர்களது பயிற்சி முடிந்து சோதனை செய்வதற்காக துரோணர் பாண்டவர்களையும், கௌரவர்களையும் அழைத்து ஒரு பெரிய மரத்தைக் காட்டி - அந்த மரத்தில் அமர்ந்திருந்த ஒரு கிளியைக் காட்டி - ஒவ்வொருவரையும் வில்லை வளைக்கச் சொல்லி, வில்லை வளைத்து நின்ற குறியைப் பார்த்து ‘என்ன தெரிகிறது?’

என்று கேட்க அவனும் மரம் தெரிகிறது, இலை தெரிகிறது என்று வர்ணித்துக் கொண்டே செல்ல ‘நீ வேண்டாம்’ என்று கூறிவிட்டு துரோணர் எல்லா வீரர்களையும் பார்த்துக் கேட்க, ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது, கிளை தெரிகிறது, இலை தெரிகிறது என்று கூற அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, இறுதியாக அர்ச்சுனனை அழைத்து “நீ பார் என்ன தெரிகிறது?”

என்று கேட்க, அர்ச்சுனன் “என்னுடைய வில்லில் பூட்டப்பட்டிருக்கின்ற அம்பின் நுனியும் - மரக்கிளையில் அமர்ந்திருக்கின்ற கிளியின் கழுத்தும்தான் தெரிகிறது” என்று சொன்னானாம்.

உடனே அம்பை எடுத்தான்; கிளியின் கழுத்து, கீழே விழுந்தது என்று கதை முடிகிறது.

எனவே, குறிக்கோள் என்று ஒன்று இருக்க வேண்டுமேயானால் அந்தக் குறிக்கோளின் மேல்தான் முழுக் கவனமும் இருக்க வேண்டுமேயல்லாமல் அக்கம் பக்கம் கவனம் செல்லக்கூடாது என்பதை எடுத்துக் காட்டாகவும், அந்த எடுத்துக் காட்டிலே வெற்றி பெற்றவனாகவும் விளங்கினான் அர்ச்சுனன் என்றால், அது இளமைப் பிராயத்திலேதான்! கொஞ்சம் வாலிபனான பிறகு அக்கம் பக்கம் திரும்பினான்.

எந்தெந்தப் பக்கம் என்றெல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் அந்த அல்லி, பவழக்கொடி கதைக்கெல்லாம் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் இளமைக் காலத்திலே அர்ச்சுனன் புரிந்த அற்புதத்தைக் காட்டத்தான் இதைச் சொன்னேன்.

இராமனைப் பற்றி எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு, உங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு.

வால்மீகிக்கும் கம்பனுக்கும்கூட கருத்து வேறுபாடு உண்டு, இராமனைப் பற்றி. ஆனால் இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணந்து இளமைப் பருவத்திலே தான். எனவே, இராமன் ஆர்வம் படைத்தது, ஆற்றல் படைத்தது, இளம்பிராயத்திலேதான் அம்பேத்கார் ஆனாலும், ஆசியாவின் ஜோதி நேருவானாலும், தந்தை பெரியாரானாலும், பேரறிஞர் அண்ணா அவர்களானாலும் இவர்களெல்லாம் தங்களுடைய இளமைப் பிராயத்திலேதான் - வாலிப வயதிலேதான் - பொதுத் தொண்டிலே இறங்கிச் சமுதாயச் சீர்திருத்தம் - பகுத்தறிவுப் போதனை - இந்திய நாட்டு விடுதலைக்கான போராட்டம், சமுதாயத்தில் அரசியல் விழிப்புணர்வு - இவைகளையெல்லாம் ஏற்படுத்திக் காட்டினார்கள்.

1949-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தைக் கண்டார். ஒரு இயக்கத்தைத் கண்டார்.

ஆனால், 1938-ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழி காக்க வேண்டும் என்ற போராட்டத்திலே ஆறு மாத காலம் சிறை புகுந்தார்.

1909-லே பிறந்த அண்ணாவுக்கு 1938-ஆம் ஆண்டு வயது 29 தான். முப்பது வயதுகூட நிறையவில்லை. அந்த இளம் வயதிலேயே - பேரறிஞர் அண்ணா அவர்கள் - இளம் பிராயத்திலேயே தமிழ் காக்க மொழிப் போராட்டத்திலே ஈடுபட்டார்.

அவரைப் பின்பற்றித்தான் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் புரட்சியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே மாணவன் ராஜேந்திரன் ஆனாலும், தீக்குளித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாயவரம் மாணவன் சாரங்கபாணி யானாலும், சென்னை சிவலிங்கமானாலும், அவர்களையொட்டி மேலும் ஐந்து வீர இளைஞர்களானாலும் அவர்களெல்லாம் தமிழ்த் தாயைக் காப்பாற்றத்தான், தமிழ் இனத்தைக் காப்பாற்றத்தான், தங்கள் உயிரைத் திரணமாக மதித்து அக்கினியிலே தங்களைக் குளிப்பாட்டிக் கொண்டார்கள்.

அதனால் வயது முதிர்ந்தவர்களெல்லாம் விலக்கப்பட வேண்டுமென்பதல்ல. ஆனால், இன்றைக்கு வயதிலே இளைஞர்களாக இருக்கின்றவர்களுடைய கையிலேதான் நாளைய நாடு இருக்கிறது. நாளையத் தமிழகம் இருக்கிறது. நாளைய இந்தியா இருக்கிறது என்கிற உரிமை எழுதி வைக்கின்ற காரியத்தைத்தான் பெரியோர்களெல்லாம் செய்தாக வேண்டும்.

இளைஞர்கள் இல்லாவிட்டால், இளைய தலைமுறை இல்லாவிட்டால், இந்த நாட்டுக்கு விமோசனம் இல்லை.

விடிவுகாலம் இல்லை. இந்த நாடு வாழ வேண்டுமேயானால், இந்த நாட்டு மக்கள் பெற்ற சுதந்திரத்தைச் செம்மையாகப் பேணிக் காப்பாற்ற வேண்டுமேயானால், அது இளைஞர்களால் தான் முடியும்.

எனவேதான் இந்தத் தமிழ் மன்ற விழாவில் இளைஞர்களை அழைக்கின்றேன்.

எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வந்த காளைகளே! வீழ்ச்சியுற்ற தமிழகத்தின் வீரமிக்க குழந்தைகளே! வருக! ஈட்டியின் முனைகளே எழுங்கள்! தீட்டிய கூர்வாட்களே திட்டமிட்டோ! கட்டிய நாய்கள் அல்ல நாம் எட்டிய மட்டும் பாய்வதற்கு! தட்டிய மாத்திரத்தில் தருக்கள் கொட்டம் அடங்க வேண்டும்! பெரும் விருப்பமுள்ளவராம் பதவியில் பல பேர் - அவர் வேண்டாம். நெருப்பின் பொறிகளே! நீங்கள்தான் தேவை! என அழைத்து விடைபெறுகிறேன்.

31.8.80 அன்று காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000