உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பழைய வரலாறும் இளைய தலைமுறையும்

பகுதி 2 · 2 / 4

மங்கோலியர்கள், அதைப் போலவே யூதர்கள் என்று இப்படிப் பல்வேறு இனங்கள் உலகத்திலே உண்டு. அப்படிப்பட்ட இனப் பிரிவுகளிலே ஒன்றுதான் திராவிட இனப் பிரிவாகும்.

திராவிட இனப்பிரிவு அதற்குரிய பெருமை - இவைகளை என்னை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? தந்தை பெரியார் அவர்களா என்றால், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களுடைய பல்கலைக் கழகத்திலே பயின்றார் என்றாலும், அவர் பயின்ற பச்சையப்பன் கல்லூரியில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு திராவிட வரலாற்றைக் கற்றுக் கொடுத்தவர் பி.ஆர். சேஷு அய்யங்கார் என்கிற ஒரு வரலாற்றுப் பேராசிரியர்.

இனிமேல் நான் திராவிடர் என்று சொன்னால் உங்களிலே யாருக்கும் சந்தேகம் வராது என்று கருதுகிறேன். ஏனென்றால் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வரலாற்றுப் பேராசிரியர் பெயரே பி.ஆர். சேஷு அய்யங்கார். அவர் எழுதிய நூலுக்குப் பெயர் ‘திராவிடியன் இந்தியா’ என்பதாகும். திராவிடியன்

இந்தியா என்ற நூலின் மூலம் திராவிடர்களின் வரலாற்றை ஓங்கு புகழ் எய்தி இருந்த வரலாற்றை எழுதிக் காட்டிய பேரறிஞர் அண்ணா போன்றவர்களை தங்களுடைய இளமைக் காலத்திலேயே திராவிட உணர்வு கொள்ளச் செய்கின்ற அளவிற்கு பயிற்சியளித்த பி.ஆர். சேஷு அய்யங்கார் அவர்களை நாம் மறந்திட முடியாது.

ஏனென்றால் அவர் அண்ணாவுக்கு வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார். அதைப் போலவே திராவிடர் சமுதாயத்தைப் பற்றி - திராவிட கலாச்சாரத்தைப் பற்றி - திராவிட மொழிகளைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டவர்கள், அப்படி வெளியிடப்பட்ட பல்வேறு நூல்கள் அழிந்து போகாமல் நம்முடைய பழம் பெரும் பண்புகளைக் காப்பாற்றியவர்கள் எல்லாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதிலும் குறிப்பாக திராவிட வித்தியா பூஷண மகா மகோ உபாத்தியாய உ.வே.

சாமிநாத அய்யர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் என்பதையும் எடுத்துச் சொன்னால் நான் திராவிட ஆரிய என்கிற கலாச்சாரங்களைப் பற்றி இங்கு வேறுபடுத்திச் சொல்லுகின்ற நேரத்தில் யாருக்கும் என்மீது என்னை அழைத்தவர்கள் மீது தவறான எண்ணம் ஏற்படாது என்று நான் திடமாக நம்புகிறேன்.

இந்தியாவிலேதான் முதன் முதலாக தமிழ்நாட்டிலே கடற்படையை வைத்து இருந்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் கணிக்கிறார்கள். வடக்கே உள்ள மாமன்னர்கள் பெரிய சாம்ராஜ்ஜிய அதிபதிகள் - பல மண்டலங்களை கட்டி ஆண்ட மகுடபதிகள். இவர்களெல்லாம் வடக்கே இருந்து இருந்தார்கள் என்றாலும், அந்த நிலப்பரப்பைப் பற்றி குறிப்பிடுகிற நேரத்தில் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களுடைய

நிலப்பரப்பு கடல் வரையிலே நீண்டு இருந்தது. நீண்டு இருந்த நிலப்பரப்பிற்கு சொந்தக்காரன் என்கிற அளவிற்குத்தான் வடபுலத்திலே இருந்த மன்னர்கள் சித்தரிக்கப்பட்டார்கள் - போற்றப்பட்டார்கள் - புகழப்பட்டார்கள்.

ஆனால் அந்தக் காலத்திலே தங்களுக்கென தனிக் கப்பற்படைகள் வைத்துக் கொண்டிருந்த அரசர்களாக தென்னாட்டு அரசர்கள், தமிழ்நாட்டு அரசர்கள் விளங்கினார்கள் என்பதை எண்ணுகிற நேரத்தில், எவ்வளவு பெருமைக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பதை எண்ணியெண்ணி இறும்புது எய்தலாம்.

சரித்திரக் குறிப்புகள் சிலவற்றைப் படித்துப் பார்த்தால் நம்முடைய தமிழ்நாட்டுப் பொருட்கள் ரோமாபுரி போன்ற இடங்களில், கிரேக்கம் போன்ற இடங்களில் எந்த அளவிற்குப் புகழ்பெற்று எந்த அளவிற்கு அவைகள் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டு வாங்கிச் செல்லப்பட்டன என்ற உண்மைகளை எல்லாம் அறிந்து கொள்ளலாம்.

வரலாற்றுக் குறிப்புக் காட்டுகிறது; ரோமானியச் சக்கரவர்த்தி கையஸ் கிளாடியஸ் என்ற மாபெரும் வீரன். அந்தக் கையஸ் கிளாடியசினுடைய மனைவி மகாராணி லோலா என்கிற ரோமாபுரிச் சக்கரவர்த்தியினுடைய மகாராணி தன்னுடைய கழுத்திலே அணிந்திருந்த முத்துக்களுடைய மதிப்பு மாத்திரம் 3 லட்சம் ஸ்டாலிங் என்று சரித்திர ஆசிரியர்கள் கணக்கிடுகிறார்கள்.

மூன்று லட்சம் ஸ்டாலிங் என்றால் இன்றைய மதிப்பிற்கு 60 லட்சம் ரூபாய். 60 லட்சம் மதிப்புள்ள முத்துக்களை லோலா என்கிற ரோமாபுரியினுடைய மகாராணி ஒருத்தி அணிந்திருந்தாள் என்பதை

எண்ணுகிற நேரத்தில் அது- 60 லட்சம் ரூபாய்க்கு அவைகளை அணிந்திருந்தாள் என்கிற திகைப்பும் வியப்பும் நமக்கு வருவதற்காக அல்ல. அவளுடைய அழகுக்கு அழகு செய்த அந்த அணிகலன் நம்முடைய தமிழ்நாட்டுக் கடலிலே இருந்து கிடைத்த முத்தல்லவா என்று எண்ணுகிற நேரத்தில் நமக்குள் இனம் தெரியாத மகிழ்ச்சி இன்பத்துள்ளல் ஏற்படுகிறது.

ஆண்டனி - கிளியோபாத்ராவினுடைய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கிளியோபத்ரா ஆண்டனியிடத்தில் ஒரு நேரத்தில் ஊடல் கொண்டாள்.

கிளியோபத்ரா வரலாற்றைப்பற்றி விரிவாக உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆண்டனியும் அவளும் அகமகிழ்ந்து மஞ்சத்தில் கூடிக் கிடந்த நேரத்தில் ஊடல் வருகிறது.

ஊடல்தான் பிறகு ஏற்படுகின்ற கூடலுக்கு இன்பம் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

ஊடல் உருவானவுடன் ஏற்பட்ட கோபத்தில் கிளியோபத்ரா தன்னுடைய காதில் அணிந்திருந்த காதணியை எடுத்துப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சாராயத்தில் போட்டு விடுகிறாளாம். அப்படிப் போடப்பட்ட அந்தக் காதணி கரைந்து போய் விடுகிறதாம் அந்த சாராயத்தில்.

எண்பதாயிரம் ஸ்டார்லிங் பெறுமானமுள்ள தமிழ்நாட்டு முத்தாம் அந்தக் காதணி! இன்னொரு காதணியையும் கழற்றி அந்த மதுவில் போட்டுவிட முனைகின்ற நேரத்தில் ஆண்டனி அவளைத் தடுத்து விடுகிற காரணத்தால் இன்னொரு முத்து தப்பியது என்று ஆண்டனி கிளியோபத்ராவைப் பற்றி சொல்லுகின்றவர்கள் சிரிப்பித்துக் கூறுகின்றார்கள்.

இவைகளையெல்லாம் நான் சொல்வதற்குக் காரணம் தமிழ்நாட்டு முத்துக்கும் - மயிலுக்கும் - மிளகுக்கும் - யானைத் தந்தத்துக்கும், அரிசிக்கும் இன்னும் பிற பொருட்களுக்கும் வெளிநாட்டுக்காரர்கள் இரு கரம் நீட்டிக் காத்துக் கொண்டிருந்த காலம்.

தமிழகத்திலிருந்து நாவாய்கள் -- தமிழகத்திலிருந்து கப்பல்கள் என்றைக்கு வரும் வரும் என்று தமிழ்நாட்டுக் கலங்களுக்காக ஏங்கிக் கிடந்த வெளிநாடுகளை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டு நிலைமையையும் எண்ணிப் பார்க்கிறோம். இந்த நிலை மாறி, தமிழகம் எங்கும் வளம் கொழிக்கும் பூமிதான் - நான் தனித் தமிழகத்தைச் சொல்லவில்லை. இந்தியத் திருநாட்டில் இணைந்துள்ள தமிழகத்தைத்தான் சொல்கிறேன். இந்தியத் திருநாட்டில் ஒரு மாநிலமாக இருக்கிற தமிழகத்தைத்தான் சொல்கிறேன்.

இந்த மாநிலம் மாற்றாரும் பாராட்டுகிற மாநிலமாக மாறிட வேண்டும்; அதற்கு யார் துணை நின்றிட வேண்டும்?

அதற்கான வித்தினை யார் ஊன்றுவது?

பல பெரியார்கள் அதற்காகப் பாடுபட்டு மறைந்து விட்டார்கள். அவர்கள் மறைந்துவிட்ட இடங்கள் இருக்கின்றன. அவர்கள் மறைந்துவிட்ட இடங்களெல்லாம் நாம் கால்வைத்து ஏறுவதற்குரிய இடங்களாக அமைத்துவிட்டு படிக்கற்களாக அமைத்துவிட்டு அவர்கள் மறைந்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால் - தென்னை சிறு கன்றில் இருந்து வளர்ந்து, அது தருகின்ற ஒவ்வொரு மட்டையையும் மக்களுக்கென்று பயன்படுத்துகிறது. தென்னை மரமாக ஆன பிறகு பார்த்தால் அங்கே தெரிகின்ற வடுக்களெல்லாம் என்ன?

ஒவ்வொரு மட்டையும் இருந்த இடம், ஒவ்வொரு மட்டையையும் மக்களுக்காகத் தந்துவிட்டு வடுக்களை மாத்திரம் மிச்சமாக வைத்திருக்கிறது.

முதற் பதிப்பு : மே 2000