பழைய வரலாறும் இளைய தலைமுறையும்
பகுதி 1 · 1 / 4
“பழைய வரலாறும் இளைய தலைமுறையும்”
இந்தக் கல்லூரி மாணவர்களாகிய உங்கள் அனைவரையும் காண்பதிலும், உங்களுடைய தமிழ் மன்றத்தைத் துவக்கி வைத்துப் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மன்றத் தொடக்க விழாவிற்கு வருகை தந்த என்னை வள்ளுவரே (மன்றச் செயலாளர்) வரவேற்று இருப்பது பெருமகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
வள்ளுவர்-என்னை மாத்திரம் அல்ல, இந்தத் தமிழ்ச் சமுதாயத்தை மாத்திரம் அல்ல, உலகெங்கும் பரவியிருக்கின்ற மனித இனத்தையும் வரவேற்று அறநெறியில் வாழ்ந்திடவும், அன்பு நெறி தழைத்திடவும், அரசு நெறி ஒழுங்காக நிறைவேற்றிடவும் ஆயிரமாயிரம் கருத்துக்களை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார்.
வள்ளுவருடைய வரவேற்புரை அனைத்தையும் உலக மாந்தர் செவிமடுத்து சிந்தையிலே தேக்கி அதனைக் கடைப்பிடித்து வருகிறார்களா என்பது கேள்விக்குரிய ஒன்றாயினும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை ஆர்வத்தோடுதான் இப்படிப்பட்ட தமிழ் மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும்; தொடங்கப்படுகின்றன என்பதை நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவருக்கென பேரவைகள் அமைந்திருந்த போதிலும் தமிழ் மன்றங்கள் அமைவது சாலச் சிறப்புடைய ஒன்றாகும்.
ஏனென்றால் தமிழர் தங்களுடைய மொழியைப் பற்றி பிறர் சொல்லித் தெரிந்து “ஓ! இவ்வளவு பெருமையுடைய மொழியா நம்முடைய மொழி” என்று வியப்புற்று, அப்படியானால் இதைக் காப்பாற்றத்தான் வேண்டும் என்கிற உறுதி ஏற்படுவதற்கு இடைக்காலத்திலே எவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டன.
அந்த உறுதியை தமிழ் மகனுடைய உள்ளத்திலே உருவாக்கப் பாடுபட்ட பெரியவர்கள் - சான்றோர்கள் - அறிஞர்கள் - அவர்கள் ஆற்றியிருக்கின்ற பணிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எழுத்தால் - பேச்சால் - வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளால் - இலக்கிய ஆராய்ச்சிகளால் அவர்கள் தந்துவிட்டுப்போன கருவூலங்களைப் பயன்படுத்தி நம்முடைய மொழியின் சிறப்பை நம்மனோர் உணர்ந்து கொள்ளவும், உணர்ந்ததைச் செயல்படுத்தவும் மொழி காக்க, அந்த மொழி காக்கும் இனம் காக்க, இன்றைக்குத் தமிழ் இளைஞர்கள் ஆங்காங்கு குரல் எழுப்புகின்ற காட்சியை என்னால் காண முடிகிறது.
தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால் அந்த வரலாறு ஒழுங்காக எழுதப்பட்டது கிடையாது. தமிழனுடைய வரலாறு இந்திய நாட்டு வரலாற்றோடு இணைந்து கிடக்கின்ற வரலாறு. அப்படி இணைவது சரியா, அல்லவா? என்ற ஆராய்ச்சியிலே ஈடுபட நான் இப்போது வரவும் இல்லை. அந்த ஆராய்ச்சியின் முடிவிற்கு - அந்த முடிவால் ஏற்படுகின்ற விளைவிற்கு உங்களை அழைத்திடும் நோக்கமும் எனக்கு இல்லை.
ஆனால், ஒரு நாட்டு வரலாறு எழுதப்படுகின்ற நேரத்தில் அது எப்படி எழுதப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்துக்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. இந்திய நாட்டு வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்ற கருத்தினை மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளை அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
அவர்கள் கோடிட்டுக் காட்டியது மாத்திரம் பெருமைக்குரிய ஒன்றல்ல; கவனிக்கத்தக்க ஒன்றல்ல. அவர் கோடிட்டுக் காட்டியதை இந்திய நாட்டினுடைய ஆதிகால வரலாற்றைத் தொடங்கி எழுதிய வின்சென்ட் ஸ்மித் - என்ற வரலாற்றுப் பேராசிரியர் அவரது நூலின் முன்னுரையிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா என்ற இந்த நாட்டுக்கு வரலாறு எழுதுவது என்பது ஒரு தீபகற்பத்தின் வரலாற்றினுடைய தொடக்கமாகத்தான் இருக்க வேண்டும். தீபகற்பம் என்றால், மூன்று கடலும் சூழ்ந்து இருக்கின்ற இந்துமகா சமுத்திரம், அரபிக்கடலும், வங்கக்கடலும் சூழ்ந்து இருக்கின்ற மூன்று புறங்களும் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாக இருக்கின்ற தென்னகம் - அந்தத் தென்னகத்திலே கிருஷ்ணாநதி பள்ளத்தாக்கிலே இருந்தோ, அல்லது காவிரி நதி பள்ளத்தாக்கிலே இருந்தோ அல்லது வைகைக் கரையிலே இருந்தோதான் இந்திய நாட்டினுடைய வரலாறு எழுதப்பட வேண்டும்.
அப்படி எழுதப்படுகின்ற வரலாறுதான் இந்தியாவினுடைய உண்மையான வரலாறாக இருக்க முடியும் என்று பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை குறிப்பிட்டதை நான் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன் என்று வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித் தன்னுடைய நூலின் முன்னுரையிலே குறிப்பிட்டு இருந்தபோதிலும்
அதற்கான காலம் கனியாத காரணத்தினால் நான் இப்பொழுது இருக்கின்ற வழக்கத்துப்படியே கங்கை ஆற்றில் இருந்து இந்திய நாட்டினுடைய வரலாற்றைத் தொடங்குகிறேன் என்று வேதனையோடு வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித் தன்னுடைய முன்னுரையை முடிக்கிறார்.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு நாட்டினுடைய வரலாறு தொடங்கப்பட வேண்டிய இடத்திலே தொடங்கப்படவில்லை. அதற்குக் காரணம் நாமேதான்.
நாமேதான் என்றால் நம்முடைய முன்னோர்களே கூட அதற்குக் காரணம்.
இந்திய நாட்டினுடைய வரலாற்றுப் புருஷன் யார் என்று கேட்டால் அலெக்ஸாண்டர் என்று சொல்வார்கள். அலெக்ஸாண்டர் இந்தியத் திருநாட்டின் மீது படையெடுத்து வந்தபோது அவனுடன் வீரர்களை அழைத்து வந்தான். அமைச்சர்களை அழைத்து வந்தான். தளபதிகளை அழைத்து வந்தான். இவர்களுக்கு எல்லாம் மேலாக எண்ணற்ற வரலாற்றுப் பேராசிரியர்களை அழைத்து வந்தான். வரலாற்றுப் பேராசிரியர்களை தன்னுடைய படைகளோடு அழைத்து வந்த காரணத்தால் அவன் இந்தியத் திருநாட்டிலே கிடைத்த வெற்றிகளை எல்லாம் குறித்து வரலாறு எழுதக்கூடிய வாய்ப்பு அவனுக்கும் கிடைத்தது; வரலாற்றுப் பேராசிரியர்களுக்கும் கிடைத்தது.
அலெக்ஸாண்டரையே புறம் காணக்கூடிய வீராதி வீரர்கள் மாமன்னர்கள் இந்தியாவிலே இருந்தார்கள் என்றாலும்கூட அதுவும் குறிப்பாக தமிழகத்திலே வாழ்ந்தார்கள் என்றாலும்கூட அவர்கள் போர்க்களத்திற்கு அழைத்துப் போனதெல்லாம் வரலாற்றுப் பேராசிரியர்களை அல்ல.
பேராசிரியர் நண்பர் பழனியப்பன் (வரலாற்றுப் பேராசிரியர்) கோபித்துக் கொள்ளக்கூடாது. புலவர்களைத்தான் அழைத்துக் கொண்டு போனார்கள். புலவர்கள் அவர்களோடு ஏன் போகிறார்கள் என்றால் யார் அந்த நேரத்திலே அரச கட்டில்களில் வீற்றிருக்கிறார்களோ அவர்களைப் பாடிப்பாடி புகழ்ந்து பழக்கப்பட்டவர்களேதான் புலவர்களே தவிர, அவர்கள் உண்மை வரலாறுகளை உலகுக் காட்டக் கூடியவர்கள் அல்ல; அல்லது இருப்பதை மிகைப் படுத்தக் கூடியவர்கள்.
வரலாற்றுப் பேராசிரியர்கள் வேறு. ஒருவர் வரலாற்றிலே தவறு இழைக்கக்கூடும். ஆனால் புலவர்களைப்போல மிகைப்படுத்தி எதையும் எழுத மாட்டார்கள். இருந்த போதிலும் நமக்கெனக் கிடைத்திருக்கின்ற வரலாற்றுக் கருவூலம், நாம் வரலாறு எழுதுவது என்றால் எடுத்துக் கொள்வதற்கான ஆக்கப் பொருள், அதற்கென அமைந்துள்ள அடித்தளம், அதற்கென இருக்கின்ற மூலப் பொருள் இலக்கியங்கள் தான்.
புலவர்கள் யாத்துத் தந்திருக்கின்ற அகம் - புறம் போன்ற பல்வேறு தமிழ் இலக்கியங்கள்தான் நமக்கு வரலாற்றுச் சான்றுகளுக்கு இன்றைய தினம் துணை புரியக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன. எனவே, நான் அவைகளைப் பற்றி அதிகமாக நகைச்சுவையாகப் பேசி, புலவர்களைப் பற்றி நான் விமர்சனம் செய்து, இருக்கிற வரலாற்றையும் இழந்து விட விரும்பவில்லை.
ஏதோ இருக்கிறது; அவைகளை வைத்துக்கொண்டு, அந்த இலக்கியங்களை வைத்துக்கொண்டு, நம்முடைய வரலாற்றை நாம் கவனித்தாக வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகின்றேன்.
நான் தென்னகம் என்றும், கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கிலே இருந்து என்றும், காவிரிப் படுகையிலே
இருந்து என்றும், வைகை நதிப் படுகையிலே இருந்து என்றும் குறிப்பிட்டேனே. அந்தப் பகுதிகள்தான் திராவிடர்கள் வாழ்ந்த பகுதியாகும். திராவிடர்கள் என்று நான் கூறுவதால் அரசியல் அடிப்படையில் இதைக் கூறுகிறேன் என்று நிச்சயமாக அழகப்பா கல்லூரியில் கூடியிருக்கிற நீங்கள் யாரும் அத்தகைய தவறான கருத்துக்கு உங்களை ஆளாக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
ஏனென்றால், திராவிடர்கள் தங்களுக்கு என ஒரு தனி நாகரிகத்தைப் படைத்தவர்கள். ஆரியர்கள் தங்களுக்கு என ஒரு தனி நாகரிகத்தைப் படைத்தவர்கள்.
