பள்ளி வாழ்க்கை
பகுதி 9 · 9 / 15
வேண்டும் இன்று! எது தேவை, மக்களுக்கு! தீர்ப்பு கூறுங்கள்!
மனிதனி அறிவு கண்டு, பலனுமடைந்த விஞ்ஞான மார்க்கமா? அல்லது மகான்கள்(!) வழி வழி வந்து மறையவர் செய்திடும் வருண ஜபமா?
எந்த அறிவு தேவையான அறிவு, மக்களுக்கு, குறிப்பாகப் பள்ளி மாணவருக்கு! பள்ளி வாழ்க்கையில் பெறவேண்டியது, எது, இந்த இரண்டில்! பொது அறிவா? புராணப் பாராயணமா? எது வேண்டும் சொல்லுங்கள்?
நடைமுறையா? நாரதர் காலத்துத் தவமுறையா? எதுவேண்டும், எது தேவை, இன்று? நமக்கு, நமது நல்வாழ்விற்கு! சிந்திக்கவேண்டாமா, நாம்!
பயன் தரும் பகுத்தறிவு வழியா? பரலோக வாழ்வு பற்றிப் பேசிடும் பகவத் கதைகளா? பகுத்தறிந்திடும் பண்பா? ‘பகவான் மொழி, பராசர் வாக்கு’ என்றதும் பணிந்திடும் பக்தியா? எது தேவை, எது தெளிவு, எது நன்று, எது நல்லது? கூறுங்கள்!
விஞ்ஞானமா? வேதமா? அறிவா? ஆற்றலா அல்லது அவனருள் விட்டவழி, விதியை வெல்வோர் யார், என்ற பழம் பல்லவியா? எது முறை, எது சரி, எது தேவை, இன்று?
விஞ்ஞானம்—பொது அறிவு—உலகியல் அறிவு இன்று முதலிடம் பெற்றுள்ளது, மனித வாழ்வில்!
மனிதனது வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இன்று விஞ்ஞானம் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது!
விஞ்ஞானம் மனித வாழ்வை மங்காத ஒளியாக, மட்டற்ற மகிழ்ச்சிப் பூங்காவாக, இருள் நீங்கிய வானமாக, உழைப்பைக் குறைத்து, உணர்வைப் பெருக்கிடும் துணைவனாக, தோழனாகத் தொண்டு செய்கிறது!
விஞ்ஞானம், தொட்டவற்றில் எல்லாம் தோன்றித் துணை செய்கிறது, மனிதனுக்கு!
மனிதன் படிப்பதற்குத் தேவையப்படும், புத்தகங்கள், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள காகிதங்கள் விஞ்ஞான வளர்ச்சியின் அறிகுறி! அதன் அச்சிடும் அச்சு இயந்திரம், மனித உழைப்பைக் குறைத்து, ஓலச் சுவடிகளில் எழுதும் ஓயாத உழைப்பைக் குறைத்து, உருவான தொண்டு செய்துள்ள விஞ்ஞான வளர்ச்சியின், கண்டு பிடிப்புதானே!
மனிதன் செல்லும் வண்டி, வாகனங்கள், ஓடும் இரயில், செலுத்தும் மோட்டார், பறக்கும் விமானம், பேசும் சினிமா, கீதமிசைத்திடும் கிராமபோன், பாடும் ரேடியோ, பார்க்கிடும் டெலிவிஷன், காலம் அறிவிக்கும்
கடிகார வகைகள், இன்னும் எத்தனை யெத்தனை! விஞ்ஞானம் மனிதனுக்குத் தந்துள்ள மட்டற்ற சாதனங்கள்!
மின்சார ஒளி—மின்சார விசிறி, மின்சார மோட்டார், மின்சார இரயில், மின்சார அடுப்பு, மின்சார மணி, மின்சார விசை, மின்சார மருந்து வகைகள், மின்சாரத் தாக்கு முறை, மின்சார ஏணி, மின்சாரத் தள்ளி, மின்சாரத் தூக்கி, மின்சாரப் பொருத்தி, மின்சாரப் பாதுகாப்பு முறை! அப்பப்பா! மின்சாரம், மின்சாரம் மின்சாரம் என்று மனிதன் மின்சார மயமாக அல்லவா, மாறி விட்டிருக்கிறான், இன்று!
மின்சாரம்—இயற்கைச் சக்தி! இயற்கைச் சக்தியான நீர்வீழ்ச்சியிலிருந்து, ஏன், அதையும்விட, நீரை அணைகட்டித் தேக்கி, மின்சார சக்தி உண்டாக்கி, அந்த மின்சாரத்தை மனிதன் தனது உழைப்பைக் குறைக்கும் உறுதுணைவனாக, உல்லாசத்திற்கேற்ற ஒளிப்படமாக, உபயோகப்படும் ஒளி விளக்காக, உயரே செல்லும் மின்சாரத் தூக்கியாக, இயந்திரங்களை இயக்கிடும் ஏவலனாக, எத்தனையோ வழிகளில், வகைகளில் உபயோகப்படுத்துகிறானே? இந்த அறிவு, இயற்கைச் சக்தியைப் பயன் படுத்திடும் அறிவு எதனால் உண்டானது?
மனிதன் சிந்திக்கத் தலைப்பட்டான்! சிந்தித்தான்! சுற்றியுள்ள பொருள்களைப் பார்த்தான், சிந்தித்தான்!
சிறு சிறு அசைவுகளையும் கண்டு சிந்திக்கத் தவறவில்லை, சில மனிதர்கள். அத்தகைய சிந்தனையாளர்களின் சீரிய முடிவு, இன்று நமது வாழ்வெங்கும் பரிமளிக்கிறது!
பரிமளம்! பயன் தரும் பரிமளம்! பலனுள்ள பரிமளம் வீசுகிறது, உலகெங்கும்!
எவனோ ஒருவனது சிந்தனைத் துளி, எதையோ கண்டு, கருத்தைச் செலுத்திச் செய்திட்ட ஆராய்ச்சியின் விளைவு, விஞ்ஞான முன்னேற்றம், வாழ்க்கை வசதியாக்குகிறது, உலகெங்கும் உபயோகப்படுகிறது!
உலகப் பொது நன்மைக்குப் பயன்தரும் பணி, பொது அறிவுப் பணி! பகுத்தறிவுப் பணி! மனிதனை மனிதனாக வாழவைக்கும் பணி! மிருகத்தனமான உழைப்பினின்றும் விடுதலை தந்திடும் பணி! உற்பத்தியைப் பெருக்கிடும் உதவிப் பெரும் படை, உலகியல் அறிவு, விஞ்ஞான அறிவு!
உலகின் ஒரு கோடியில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது! அது அன்றே, உலகு எங்கும், உலக முழுதும் தெரிந்திட, பரவிட எத்தனை அரிய சாதனங்கள் அமைந்துள்ளன, இன்று!
உலகின் அன்றாட நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டும், செய்தித் தாள்கள் என்ன? வானொலிகள் என்ன?
அவசர நிகழ்ச்சியா, செய்தியா? அனுப்பு, தந்தி! என்ன அற்புதம்? ஆனாலும் நடக்கிறதே, நடைமுறையில் நடந்திடக் காண்கிறோமே!
‘பணத்தோட்டம்’ எனப்படும் ‘பாங்கி’ (Bank) கள் செய்திடும் சுலப, சாத்திய முறைகள் என்ன?
முன்னேற்றம்! ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமல்ல! உலக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு கோணத்திலும், முன்னேற்றம், வகையான முன்னேற்றம், நடந்துள்ளது, நடந்துகொண்டே இருக்கிறது!
இத்தகைய நேரத்திலே, இத்தகைய முன்னேற்றப் பாதையிலே, உலகம், சென்றுகொண்டிருக்கும் விஞ்ஞான காலத்திலே, நாம் வெறும் வேதாந்திகளாக, உலகளந்தானைப் பாடிக்கொண்டிருக்கும் உத்தம பக்தர்களாக, சிவகாமி நேசனின் திருத்தொண்டர் புராணத்தைப் பாடிப் பூரிக்கும் அடியார்களாகவே இருக்கத்தான் வேண்டுமா?
உலகத்தைப்பற்றிய, உலகின் வடிவத்தைப்பற்றிய கருத்து, எண்ணம் ஒரு காலத்தில் ஒருவிதமாக இருந்தது!
