உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 10 · 10 / 15

உலகம் தட்டையானது! உலகம் நீண்ட சதுர வடிவங்கொண்டது, என்றெல்லாம் மக்கள் எண்ணியிருந்த காலமும் இருந்தது! ஆனால் இன்று?

உலகம் உருண்டை என்பது உறுதியான செய்தி, உறுதியான செய்தி மட்டுமல்ல, உலகைச் சுற்றிப் பார்த்து கண்ட கருத்துமாகும்!

உலகம் தட்டை என்பதைச் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, புராணங்களே பறைசாற்றின! தேவாதி தேவர்களே இதனைக் கூறியுள்ளனர். இரண்ணியாட்சகன் என்ற அசுரன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு, கடலில் ஓடி, ஒளிந்துகொண்டானும். உலகமே மறைந்து விட்டது, இதனால்.

தேவரும், முனிவரும், காக்கும் கடவுளாம் கார்வண்ணனை, திருமாலைத் துதித்து, அந்தத் தீயானை அழித்தொழித்து, பூமியைத் திரும்பவும் கொண்டு வரும் படி வேண்டினராம்!

மகாவிஷ்ணுவும், முனிவர், தேவர், வேண்டுதலுக்குச் செவிசாய்த்து ‘ஆவன செய்வோம், அஞ்சற்க’, என அபயம் அளித்துவிட்டார்.

தேவரும் முனிவரும் களிப்புக் கடலில் மூழ்கினர், மாலோனின் ஆறுதல் மொழிகேட்டு!

மகாவிஷ்ணுவானவர், உடனே, வராகவதாரம் (பன்றி வடிவம்) எடுத்துக் கடலில் குதித்து, இரண்ணியாட்சகனைத் தேடியலைந்து அவனுடன் போராடி, அந்த அரக்கனை அழித்து ஒழித்துவிட்டு, அகில உலகையும்

ஆழ்கடலிலிருந்து காப்பாற்றி, அரக்கன் பாய்போலச் சுருட்டிச் சென்ற, பரந்தபூமியை, மீண்டும் கடலினின்றும் வெளிக்கொணர்ந்து, பாயை விரித்தார்—பாயாகச் சுருட்டப்பட்டிருந்த பூமியை—உலகை—மீண்டும் பரப்பினர்!

மறைந்த உலகு மீண்டும் வந்தது வெளியே! சுருட்டப்பட்ட உலகு மீண்டும் விரிக்கப்பட்டு விட்டது, பரந்தாமனால்!

இது புராணம், தேவகதை! சாமான்யர் விட்ட சரடல்ல, பக்திப் பரம்பரைப்பாடி, முக்தி தரும் பக்திக் கதை!

பரந்தாமன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வராகவதாரம்! தேவரும், முனிவரும், மும்மூர்த்திகளில் ஒருவரான, மகாவிஷ்ணுவும் ஒப்பிய உண்மை, உலகம் தட்டை, பாய்போன்றது, என்பது?

இந்த தேவமொழி, இன்று தேய்ந்த மொழியாகி விட்டது, விஞ்ஞானத்தின் முன்! மனித அறிவுத் தெளிவின் முன்! உலகம் உருண்டையாகத்தான் இருந்தது, இருக்கிறது என்பது, எடுத்துக் காட்டப்பட்டுவிட்டது!

இந்த மாறுதல், கருத்து மாறுதல், கண்கண்ட கருத்து மாறுதல், காலவேகம் கற்றுக்கொடுத்த கருத்து மாறுதல், புறக்கணிக்க முடியாத, வாழ்வுடன் இணைந்து

விட்ட கருத்து மாறுதல் இன்று முடிந்துபோன, தவறு என்று எடுத்துக் காட்டப்பட்டு, தீர்மானமாகிவிட்ட கருத்துடன், காலங்கடந்த கருத்துடன் மோதவிடப்படுகிறது; நாட்டில், நாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலுங்கூட!

இந்த மோதுதல், பழமையையும் புதுமையையும் மோதவிடும் பணி, பள்ளி மாணவனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திக் குழப்ப நிலையில் தானே கொண்டுவிடும். கொண்டுவிடுகிறது!

சூரிய கிரகணம், சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது! எப்படி?

படிக்கிறோம், விஞ்ஞான வகுப்பில், பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டே, சூரியனைச் சுற்றிவரும் பாதையில் ஏற்படும் மாறுதலைப் பொருத்தும், சந்திரன் பூமியைச் சுற்றும்போது ஏற்படும் மாறுதலைப் பொருத்தும் இந்தக் கிரகணங்கள் ஏற்படுகின்றன, என்று.

சூரியனையோ, அல்லது சந்திரனையோ, இராகு, கேது என்ற பாம்புகள் விழுங்கும்போது, சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகப் பழைய ஏடுகள் கூறுகின்றன! இதையும் படிக்கவேண்டிய நிலை!

இரு, வேறு வேறான காரணங்கள், ஒரு நிகழ்ச்சியைக் குறித்து. ஒன்று விஞ்ஞான ஆராய்ச்சி முடிவு; மற்றொன்று,

வேத ஆகம புராணக்கூற்று! இதில் எது உண்மை, எது தேவை! என்ற தெளிவு ஏற்பட வேண்டாமா, மாணவருக்கு!

புராணத்தையும், அதே நேரத்தில் புராணக் கருத்தைப் புளுகு என்று எடுத்துக் காட்டிடும் புதுமைக் கருத்தையும் படிக்கவிட்டு, இரண்டையும் இளஞர் இதயங்களில் குடிபுகவிட்டால், இளஞர் இதயம், இளஞரின் தெளிவு, என்னாவது?

காலத்தால் உளுத்துப்போன, கவைக்குதவாத கண்மூடிக் கொள்கைகளை விட்டுவிடக் கூடாது, என்று ஒரு புறம் போற்றிக்கொண்டு வருவதும், அதே நேரத்தில், வேகமாக வளர்ந்துவரும் பொது அறிவு தந்திடும் புதுயுக மறுமலர்ச்சிச் சாதனங்களை வாழ்க்கையில் உபயோகப் படுத்திக்கொண்டும் வாழ்கிறோம். விசித்திர வாழ்க்கை!

விசித்திர வாழ்க்கை! விஞ்ஞானமும்-விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட, நேர்மாறான கருத்துக்கொண்ட, வேதங்களும் ஒன்றாகவே, வளர்க்கப்பட்டு வருகின்றன!

வாழ்வுக்குத் தேவையான வசதிகளை, விஞ்ஞான மூலம் பெற்று, புறத்தில், வெளி உருவில் மாறுதல், மறுமலர்ச்சி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் ‘அக வாழ்வு’ அந்தக் கால, அர்த்தமற்ற அறியாமை வாழ்வாகத்தானே,

இருக்கிறது! இந்தநிலை, தெளிவற்ற நிலை, மாற்றப்படவேண்டும்?

படிப்பு! வெறும் படிப்பாக, வெட்டிப் படிப்பாகப் போய் விடக்கூடாது!