உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 11 · 11 / 15

படித்தோம், பல கலைகளையும் கற்றோம்! பகுத்தறிவு பெற்றோம்! இல்லாமையைப் போக்கிடத் துணை செய்தது! கொடுமையை விரட்டியது; சமத்துவத்தைப் பரப்பியது! சகோதரத்துவத்தை நிலை நாட்டியது! எண்ணத் தெளிவு ஏற்பட்டது! கருத்து முரண்பாடுகளை, கண்மூடி வழக்கங்களை, காட்டுமிராண்டித் தன்மைகளை, நீக்கிட, போக்கிடத் துணை செய்தது, என்ற முறையிலே: பள்ளி வாழ்க்கையில், பயனுள்ள கல்வி, பகுத்தறிந்திடும், அறிவு தரும் படிப்பு, தேவை!

மிகமிகத் தேவை! உடனடியாகத் தேவை!

வரலாறு! உலக வரலாறு! உலகின் ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளும் பள்ளி வாழ்க்கையில் கற்பிக்கப்படுகிறது!

பல நாடுகளின் வரலாற்றைப் படிக்கிறோம்! அந்தந்த நாடுகளிலே, மக்கள் வாழ்ந்த வரலாறு, வாழ்க்கைத்தரம் வளர்ந்த வரலாறு, நாகரிகமற்ற வாழ்க்கை மாறி, நாளுக்குநாள் தெளிவுபெற்று, சிந்தனை முதிர்ச்சி யடைந்து, நாகரிக வாழ்வு, வாழ்வதைப் பற்றியும் படித்திருக்கிறோம்!

பேரரசுகள் பல தோன்றியதையும், அவை அழிந்த வகை வழிபற்றியும் படிக்கிறோம்! எந்தெந்த நேரத்திலே, மறுமலர்ச்சி, மனமாறுதல் ஏற்பட்டது, அந்தந்த நாடுகளிலே, என்பதையும் தெரிந்து கொள்கிறோம்!

இவ்வளவும் படிக்கும் நாம், நமது நாட்டின் வரலாற்றையும் படிக்கிறோம்!

நமது வரலாறு, நமது தமிழ் நாட்டின் வரலாறு, சரிவர உள்ளதா; நமது மூதாதையரான, சேரன், சோழன், பாண்டியன் பற்றிய வரலாறுகள் ஒரு சில பக்கங்களிலேயே, சரித்திரப் புத்தகங்களில் முடிந்து விட்டிருப்பதைப் பார்க்கிறோம்!

பர்மாவைவென்ற பராந்தகன் ஈழம்வென்ற தமிழ் அரசன், இமயத்தில் தமிழ்க்கொடி பொறித்த தமிழரசர்கள், வரலாறு, விரிவாக, விளக்கமாக இல்லை!

தமிழனைத் தாழ்த்திப் பேசின, கனக, விசயர் என்ற ஆரியர் தலையிலே கல்சுமக்க வைத்த சேரன் செங்குட்டுவனைப் பற்றிய சேதி உண்டா, சரித்திரத்தில்!

உலகப் பொது மறை என்று புகழப்படும் திருக்குறளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு, ஒரு சொல், ஒரு பாராட்டுதல் உண்டா! உண்டா! சரித்திரத்தில்!

பகவத் கீதை, இராமாயண, பாரத இதிகாசங்கள்

இடம்பெற்ற சரித ஏடுகளிலே, இல்லை, திருக்குறளுக்கு இடம்!

தமிழா, உன்நிலை, உனது வரலாற்று நிலை இதுவா? என்று தேம்பும் நிலையன்றோ, தமிழ், தமிழனது இன வரலாறு இல்லாது போய்விட்ட இந்நிலை!

தமிழ் வரலாறு, தமிழின் வரலாறு, சரிவர எழுதப்படவேண்டும். சுதுமதி படைத்தோரால், மறைக்கப்பட்ட தமிழ் மணம், தமிழரது சரித்திரம், எழுதப்பட வேண்டும், தமிழனது வீரம், தீரம், வாழ்க்கைத்தரம் விளக்கப்படவேண்டும், முறையாக, தெளிவாக!

உலகம் முழுதும் சுற்றி, உன்னத நிலையிலே வாணிபம் செய்து, கடல் கடந்து கலம் பல கண்ட தமிழனது வீரம், நாகரிகம் இன்று மறைந்திட்ட, மறைக்கப்பட்ட காரணம் என்ன?

வரலாறு, தமிழக வரலாறு, கங்கைக் கரையிலிருந்து ஆரம்பிக்கப்படாது, காவிரிக் கரையிலிருந்து தொடங்கப்பட வேண்டும்!

கங்கை கொண்ட சோழன் வரலாறு, கனக விசயர் தலையிலே கல்சுமக்கவைத்த செங்குட்டுவன் சரித்திரம், இளங்கோவின் எழுத்து, திருக்குறளின் மேன்மை, குலோத்துங்கன் காலம், இராஜ இராஜேந்திரனின்

வெற்றிச் செய்திகள் யாவும் தீட்டப்படவேண்டும். தமிழக வரலாற்றில்.

தமிழன், தமிழக வரலாற்றைப் படிக்க, தெரிந்து கொள்ள, வழி வகுக்கவேண்டும்.

தமிழின் தொன்மை, தமிழின் மேன்மைபற்றிப் படிக்கவேண்டும், தமிழைப் போற்ற வேண்டும், தமிழைப் பாதுகாக்க வேண்டும், தமிழன் தமிழனாக வாழ வேண்டும்?

தமிழினம், வருங்காலத் தமிழனாவது, தமிழறிந்த தமிழனமாக, தமிழின வரலாறு தெரிந்த தமிழனமாக, தமிழ்ப் பூங்காவாக, தமிழ்த்திருநாட்டைத் தனித் திருநாடாக வாழவைக்க வழி கோலவேண்டும். இதற்கு ஆவன செய்யவேண்டும்.

பள்ளி வாழ்க்கையில், உலகைத் திருத்திய உத்தமர் வரலாறுகளைப் படிக்கவேண்டும். உத்தமர் வாழ்க்கை வரலாறுகள் பலவும், போதிக்கப்படவேண்டும், பள்ளிகளில்.

காட்டுமிராண்டிகளாக, காடுகளிலும் மேடுகளிலும், மலைக் குகைகளிலும் மனித வர்க்கம் நாகரிக மற்றுத் திரிந்த காலம் மாறி, மதனின் அறிவு வளர்ச்சி பெற்று, மத, அரசியல், பொருளாதார அறிவு பெற்று வாழத் தலைப்பட்டு, முன்னேற்றமடைந்துள்ள, வளர்ச்சி

வழியை, முன்னேற்றப் பாதையை, வளர்த்த நாகரிகத்தின் வரலாற்றைப் படித்தறியவேண்டும்.

‘கடவுள்,’ ஆண்டவன் தோன்றியவிதம், ஆதிகால மனிதன் போற்றிய கடவுளரின் இன்றைய நிலை, மதங்கள் உற்பத்தியான விதம், மதங்களிலே ஏற்பட்ட மாறுதல்கள், இடையிடையே மக்கள் மன நிலை, மன வளம் மாறிய வழி, மார்க்கம் யாவும் பள்ளி வாழ்க்கையில், நிச்சயமாக இடம்பெறத்தான் வேண்டும்.

கண்மூடிக் கொள்கைகளைக் கொண்டு மக்கள் சிந்திக்கவும் எண்ணமின்றி வாழ்ந்தபோது “சிந்தி, யோசித்துப் பார், காரண காரியங்களைக் கவனி? எண்ணிடத் துணி, காரியமாற்று, கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றாதே,” என்றெல்லாம் எடுத்துரைத்த கிரேக்க அறிஞன் சாக்ரடீஸ் பற்றிப் படிக்கத் தவறக் கூடாது!

சிந்திக்கத் துணிவு கற்பித்த குற்றத்திற்காக ஏதென்ஸ் அளித்த தீர்ப்பு, விஷக்கோப்பை!

‘சிந்திப்பது பாவமல்ல, மனித இயற்கை,’ என்பதை எடுத்துக் கூறியதற்கு சாக்ரடீஸ் பெற்ற பரிசு ‘நச்சுக் கோப்பை!’