உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 12 · 12 / 15

“நஞ்சுக் குடித்துச் சாகவேண்டும்” இது அந்த

நாள், அந்தக் கால புனித உள்ளம் அளித்த தீர்ப்பு! சிந்திக்கத் துணிந்த சாக்ரடீசுக்கு!

மதத்துறையிலே, கிறித்துவ மதத்துறையிலே மாறுதல் காண விரும்பித் துணிவுடன், போப்புடன் போராடிய மார்ட்டின் லூதர், எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் இடையே செய்த பணியை படிக்கத்தான் வேண்டும், பள்ளி வாழ்க்கையில்!

சிலுவையிலே அறையப்பட்டு இறந்த இயேசுவைப் பற்றி அறியவேண்டும். கல்லெறிபட்டுக் கலங்கியோடிய முகமது, மீனவ மக்களைத் துறந்து நள்ளிரவில் மன அமைதிகாண வெளியேறிய கௌதம புத்தர், அடிமை விலங்கைத் தகர்த்தெறியப் பாடுபட்ட ஆப்ரகாம் லிங்கன், நோயாளியெனக் கேலி செய்யப்பட்ட துருக்கிக்குப் புது வாழ்வு அளித்த கமால் பாட்சா, சீன தேசத்துச் சன்யாட்சன், பொது உடைமைக் கொள்கைகளை வகுத்துச் சென்ற கார்ல் மார்க்ஸ்—எங்கல்ஸ், அறிஞன் ரூசோ, வால்டேர், லெனின், உத்தமர் காந்தியார் போன்றவரின் வாழ்க்கையையெல்லாம் பாடமாக, பள்ளி வாழ்க்கையில் கற்றுத் தெளிய வேண்டும்.

ரேடியோவைக் கண்டு பிடித்தது யார், தெரிந்து கொள். மின்சாரம் தோன்றிய வரலாறு என்ன? அறிந்துகொள்! தொலை நோக்காடி தோன்றிய முறையாது? கற்றுக்கொள்! புதுப் புதுக் கருவிகள் உண்டான

சூழ்நிலைகள் என்ன? புறக்கணித்து விடாதே, தெளிவாகத் தெரிந்துகொள்! பள்ளி வாழ்க்கையில் இவைகளை விளக்கிடும் ஏடுகள் தேவை!

மனித இயல், மனிதப் பண்பு, மனிதத் தன்மை வளரவேண்டும். மனிதத் தன்மையை வளர்க்கும் ஏடுகள் ஏராளமாகத் தேவை!

மனிதன் மனிதனாக வாழவேண்டும். மனிதன் தன்னையும் பிறரையும் மனிதனாக மதித்து, மனித உள்ளத்தோடு, மிருகத் தன்மையினின்றும் மாறி, பகுத்தறிவு படைத்தவனாக, சூழ்நிலையை ஆராய்ந்திடும் ஆற்றல், அறிவு, மனத்திடங்கொண்டு அமைய, அறிவு நூல்கள், மனப் பண்பு விளக்க ஏடுகள் இயற்றப்பட வேண்டும்.

பள்ளிப் பாடதிட்டங்களில் இவையெல்லாம் இடம் பெற வேண்டும்! இடம் பெறும்படி செய்தாக வேண்டும்.

வாழ்க்கைக் கல்வி—வாழ்க்கைக்கு வழி காட்டிடும் கல்வியறிவே தேவை.

சமுதாய முன்னேற்றக் கருத்துக்களைப் புகுத்திடும் புத்தகங்கள், பள்ளி வாழ்க்கையில், படிக்கப்படவேண்டும், மாணவர்களால்.

மனிதன்—திருடுகிறான். மனிதன் பொய் பேசுகிறான்.

தாய் தந்தையைத் துறந்து, நாடோடியாகக்கூட மனிதன் திரிகிறான், சில பல நேரங்களில்! ஏன்? மனிதன் மனமுடைந்து, வாழ்வில் விருப்பமுமற்று, சோர்பித் திரிவது ஏன்? மூளை கெட்டு, மதியங்கிப் பைத்தியமாகிறானே, மனிதன், எதனால்? எத்தகைய சூழ்நிலையால், என்றெல்லாம், மாணவர் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

மனிதனது சிந்தனைக்கு, வேலை தரும் சிறு சிறு செய்திகளையும், நிகழ்ச்சிகளையும், அறியும் தன்மை, ஆராய்ச்சிசெய்திடும் எண்ணம், ஊட்டிடும் புத்தகங்களைப் படிக்கவேண்டும்.

கடந்தகால வாழ்விற்கும், கடந்தகால வாழ்க்கை முறைக்கும், வசதிகளுக்கும், இன்றைய வாழ்வை, வாழ்க்கை முறைகளை, வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை, முன்னேற்றத்தை, மாறுதலைக் கவனித்து, வேண்டுவனவற்றையெல்லாம், அறிவுக்குத் துணைபுரிந்து வாழ வழிவகுக்கும் கருத்துக்களையெல்லாம் ஊன்றிப் படித்தறியவேண்டும், மாணவர்கள்!

தமிழ் மகன், தமிழன் என்றும், தான் தமிழினம் என்றும் கூறிக்கொள்ள, உணர வைத்திடும் ஏடுகளைப் படித்தே தீரவேண்டும்!

ஆங்கில நாட்டு மாணவன் தன்னை ஆங்கிலேயன்

என்று கூறுவதும், ரஷ்ய நாட்டு மாணவர் தம்மை ரஷ்யர்கள் என்று தெரிவித்துக்கொள்வதும், ஜப்பானிய மாணவன், ஜப்பானியன் என்று சொல்வதும், சீன நாட்டு மாணவன், தான் சீனன் என்று பெருமைப்படுவதும், தவறு, அடாத செயல், வேற்றுமை புணர்ச்சி, என்று கூறுவது எவ்வளவு மடமையாகுமோ பொருந்தாத, அர்த்தமற்ற, ஆதாரமுமற்ற செயலாகுமோ, அதைப் போலத்தான் தமிழ்நாட்டு—திராவிட நாட்டு மாணவன் தன்னைத் திராவிடன், தனது நாடு திராவிட நாடு என்று கூறுவதை, உணர்வதைக் கண்டிப்பது மாகும்!

மாணவரின் அறிவு வளர்ச்சிக்கு அணை! சிந்தனைக்குத் தடை, முற்போக்குக்குத் தடை, தேவையற்றது!

தமிழனின் தன்மான உணர்ச்சிக்குத் தாழ்ப்பாள் போட்டவேண்டாம். அது இனத்துரோகம்—இழி செயல்!

தமிழினத்தின் தன்மான வரலாற்றைப் படிக்கும் தமிழ் மகன் தமிழ் வீரனாகத் திகழ்வான்! தனது மூதாதையர் ஆண்ட தமிழகத்தின் சிறப்பை, சீரிய வாழ்வைப் படிக்கும் நேரத்தில், இன்றைய நிலையை நினைத்துப் பாராமலிருக்க முடியுமா, அவனால்? அதைச் சீர்திருத்த, செப்பனிட, தமிழகத்திற்குத் தன்மான வாழ்வு அளிக்க, தனித் தமிழகம் அமைக்கும் ஆர்வம், ஆற்றல், அறிவு அஞ்சாமை தோன்றுமே! இதற்கா தடை, தாழ்ப்பாள் தேவையில்லையே!

மாண்ட மறத் தமிழரின் வரலாறுகள் மாணவர் உள்ளங்களில் புரளும்போதும், நாம் மூவேந்தரின் வழி வந்தோர், கலிங்கத்துப் பரணி பாடப்பட்ட நாட்டில் உதித்தோர், சேரன் செங்குட்டுவன் பரம்பரையில் வந்தவர்கள், கடாரம்வென்று கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்தான் நமது முன்னோர்கள் என்ற எண்ணங்கள் அவனது மனதில் எழும்போது, அவனது எதிர்காலம் பற்றி அவனது எண்ணக்கோட்டைகள், சிந்தனைத் துளிகள் எப்படியிருக்கும்!

ஆண்ட இனம், அடிமையானதே! உயர்ந்தவர் தாழ்ந்தனரே—வீரர்—வீரனின் அடிபணியும் கீழ் நிலையா, இன்னும்! என்று எண்ணிட மாட்டானா? சென்ற கால சரித்திர நிகழ்ச்சிகள், ஒன்றன்பின் ஒன்றாக கண்ணெதிரே, ஓடும்போது மாணவன் பெருமூச்சு விடுகிறான்!

பெருமூச்சு! ஏக்கத்தில் கிளம்பி, எதிர்காலத்தை நினைத்துப் பார்த்து, எத்தர்களின் ஏடுகளையும், புரட்டர்களின் புளுகுப் புராணங்களையும் நினைத்து நெஞ்சக் குமுறலால், கொதித்திடும் எரிமலையின் அனல் மூச்சாக மாறித் தீராதா?

எரிமலையின் மேல் தண்ணீரை ஊற்றி அணைக்க முயல்வது போல, தமிழனது இனத்தை, இனவரலாற்றை, மறைத்து வைத்துப் பயனில்லை இனியும் என்பதை ஏடெழுதிகள் நன்றாக நினைவில் நிறுத்த வேண்டும்!

இத்தகைய எழுச்சி பெறவேண்டிய மாணவர்கள், இத்தகைய எழுச்சியின் வயப்பட்டுப் பள்ளி வாழ்க்கையில், படிப்பதை மறந்துவிடக் கூடாது!