பள்ளி வாழ்க்கை
பகுதி 13 · 13 / 15
எதிர்கால ஏற்றத்தின், உயர்வின், ஏணி, படிக்கட்டு—இன்றைய உங்கள், ‘பள்ளி வாழ்க்கை’ என்பதை மறக்க வேண்டாம்!
அறிவுதரும் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்! அலட்சியப் படுத்தாதீர், அறிவுபெறும் வாழ்வுப் பகுதியான, பள்ளி வாழ்க்கையை!
தமிழனுக்கு, இழந்த உரிமையை மீண்டும் பெற்றுத் தரும் ஆயுதம் ‘பள்ளி வாழ்க்கை’, நமது அறிவுக் கோட்டையென்ற மதிலில் அமர்ந்திருக்கும் பீரங்கிக்குச் சக்திகளைக் கொண்டு குவிக்கப்போகும் வெடிகுண்டுகள் நீங்கள் பெறும் ‘பள்ளி வாழ்க்கை!’ நினைவிருக்கட்டும்! நன்றாக நினைவிருக்கட்டும்!
‘பள்ளி வாழ்க்கை’ முடிந்து ‘வாழ்க்கை’யில் புகுந்திடும் நேரத்திற்குத் தேவையான, உபயோகமான வாழ்க்கைக் கல்வியை வளப்படுத்திக் கொள்ளுங்கள் பள்ளி வாழ்க்கையில், என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
இன்றைய மாணவர்கள் தான் வருங்காலத் தலைவர்கள், நாட்டிற்கு! இவர்களிலிருந்துதான் வருங்கால விஞ்ஞானிகளும், விரிவுரையாளர்களும் தோன்றிடப்
போகிறார்கள்! பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், சமுதாயத்தைச் சீர்திருத்திடும் சிந்தனைச் சிற்பிகள், சன்மார்க்க போதகர்கள், ஆட்சியாளர்கள், அரசாங்க அலுவலாளர்கள், அரசாங்கத் தூதர்கள், போர் வீரர்களை நடத்திச் செல்லும் தளபதிகள், புத்தகவித்தகர், கவிகள் கதாசிரியர்கள், காவியம் புனைவோர் கட்டுரை வரைவோர், கலைக்கூடங்களைக் கட்டித்தரும் கட்டிட நிபுணர்கள், கலாவல்லுநர்கள், சரித்திரப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவுலகச் சிற்பிகள், அறிஞர்கள் ஆகிய அனைவரும், உண்டாகும் இடம், உண்டாக்கப்படும் உலகந்தான், ‘பள்ளி வாழ்க்கை’!
இத்தகைய சிறந்த பயிற்சி, முயற்சி தரப்படுகிறது, பள்ளி வாழ்க்கையில், மாணவருக்கு!
பள்ளி வாழ்க்கையில், மாணவர் படிப்பில் முழு கவனத்தையும், கருத்தையும் செலுத்த வேண்டும், முதலில்!
பள்ளி வாழ்க்கையில், பரந்த அரசியல் உலகிலே அவர்கள் நுழையக்கூடாது; நுழைந்து அரசியலில் நேரடியாக ஈடுபடவுங் கூடாது!
மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது; கூடவே கூடாது! என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்!
மாணவர்கள் அரசியல் உலகை, அரசியலின் போக்கை, மாறுதல்களை, மாற்றங்களை அரசியல் நிகழ்ச்சிகளை, தந்திரங்களைத் தவறாது கவனித்து வர வேண்டும். அரசியல் அவைகளை அறியத்தான் வேண்டும். மாணவர்கள் அரசியல் அறிவு பெறவேண்டும் என்று கூறுகிறேன்! ஆனால் அதே நேரத்தில், அன்றாட அரசியல் வாழ்வில், அரசியல் நிகழ்ச்சிகளில் சிக்கிவிடக் கூடாது, நேரடித் தொடர்புகொண்டு அரசியல் வாழ்வாக, பள்ளி வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும், மாற்றிக்கொண்ட நிலைக்கு, சூழ்நிலைக்குச் செல்லவேண்டாம் என்றும் கூறிடத் தவறமாட்டேன்!
அரசியல் அறிவு தேவை, அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனித்து வரவேண்டும்; ஆனால் அரசியலில் பங்கு கொள்ளக்கூடாது, பள்ளி மாணவர்கள்!
மாணவர்கள் அரசியலில் நேரடியான பங்கு கொள்ளாமல், அரசியலின் போக்கைக் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளி வாழ்க்கை, முடிந்து, பழைய மாணவன் என்ற நிலைக்குச் சென்ற பின்னர்தான் மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது நல்லது!
இதனை மாணவர்கள், நன்றாக நினைவு கொள்ள வேண்டும். வீணே, அரசியல் சூதாட்டத்தில், சுழற்சியில் சிக்கி, பள்ளியில் படிப்பதைவிட்டு, வெறும் உணர்ச்சி வேகத்தில் இறங்கி, அறிவைப் பெருக்கிடும்
கல்வியறிவைப் புறக்கணித்துப், பின்னர் வருந்தும் வகையில் மாணவர் உள்ளம், அமையக் கூடாது, கூடாது; கூடவேகூடாது என மறுமுறையும் வற்புறுத்துகிறேன்!
பள்ளி வாழ்க்கையில் பள்ளி மாணவரைப் பக்குவப்படுத்தும் பெரும்பணி, பள்ளி ஆசிரியரைச் சேர்ந்திருக்கிறது, என்பது அனைவரும் அறிந்ததே!
பள்ளி ஆசிரியர் வாழ்வு, இன்று சுவைதரும் வாழ்வாக, வாழ்க்கைக்குத் தேவையான, சாதாரண வசதிகள் கூடக் கிடைக்க முடியாத அளவில்தான் அவர்களது ஊதியம், சம்பளம் அமைந்திருக்கிறது! வறுமை ஆசிரியர்களின் தோழனாகவே என்றும் அமைந்திருக்கிறது! பரிதாப நிலை!
இந்தப் பரிதாப நிலையிலும், பள்ளி மாணவருக்குக் கல்வி கற்றுத்தரும் அவர்களது பணி, நாட்டுக்குத்தரும் நல்ல, நன்மைதரும் பணியாகும்!
ஆசிரியர்கள், பள்ளிகளிலே, பலப் பலவிதமான மாணவர்களையும் ஒருங்கே, ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்கட்குப் பாடபோதனையும் செய்து, பக்குவப்படுத்தி, படித்தவன் என்ற நற்சான்று தரும் நிலையிலும் இருக்கிறார்கள்!
ஆசிரியர்கள், ஏதோ, பள்ளிக்கு வந்தோம், பிள்ளைகளைக் கட்டி மேய்த்தோம், பாடத்தைப் போதித்தோம்,
படிக்கிற பிள்ளைகள் படிக்கட்டும், படிக்காதவர் போகட்டும்; நாமென்ன செய்யமுடியும், என்ற அளவோடு நின்று, பரீட்சைக்குக் கேள்விகளைத் தயாரித்துத் தந்து, விடைத் தாள்களைத் திருத்தி, ‘தேர்வு’ அறிவிப்பதோடு தமது கடமை, ஊதியத்திற்கேற்ற உழைப்பு முடிந்தது என்று இருந்திடக் கூடாது!
சம்பளமோ, குறைவு! வீட்டிலோ, தொல்லை! பிள்ளைகளின் குறும்புத்தனமோ, சொல்லுந்தரமன்று, பள்ளிகளில்! மட்டிப் பிள்ளைகள், மந்தபுத்தி படைத்த மண்டூகங்கள், சுட்டிப் பிள்ளைகள், கெட்டிக்கார மாணவர்கள், சோம்பேறி மாணக்கர், குறும்பன், கோமாளி இன்னும் எத்தனையோவித மனோபாவங்கொண்ட மாணவர்கள் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
இவ்வளவு முரண்பட்ட குணங்கள் படைத்த மாணக்கரையும் நல்வழிப்படுத்தி, நல்வாழ்வுப் போதனை புரிந்து, நல்லமுறை, தீய முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டி, பாடங்களையும் போதித்துப் பண்புடைய மாந்தராக, தெளிந்த, படித்த மனிதராக மாணவரை உருக்கி வார்த்திடும் ஒரு புரட்சி மனிதன், ஆசிரியன்.
மாணவப் பருவத்தில் ஆசிரியர்கள் அன்பொழுகப் பேசி, ஆர்வமுடன் நேசித்து, அடக்கி, ஒடுக்கி, சில பல நேரங்களில் அடித்துங்கூடப் படிப்பிக்கும் பாடங்கள், படிப்பினைகள், பழக்க வழக்கங்கள், நல்லொழுக்கங்கள் தான் மனிதனது வருங்கால வாழ்க்கை வளர்ச்சிக்கு
ஆரம்பம், அணிவேர், அடிப்படை, வழிகாட்டியுமாகும்!
ஆசிரியர்கள் தங்களது பொறுப்பை நன்கு உணர்ந்து, தங்களின் பிற்கால சந்ததிகளான, இன்றைய மாணவ உலகை, நல்ல அறிவுபெற்று, வருங்காலத்தை, வாழ்விக்கும் வகையில் பண்படுத்திடவேண்டும்.
பல மாணவருக்குப் ‘படிப்பு வரவில்லை’, தகுதியும் திறமையும் இல்லாத மாணவர்களைக் கட்டியழ வேண்டியிருக்கிறது, என்று பலர் கூறிடக் கேட்கிறோம்!
