உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 14 · 14 / 15

தகுதியும் திறமையும்! ‘படிப்பு வரவில்லை, வராது!’ வேடிக்கையான சொற்றொடர்கள், வேதனைதரும் சொற்றொடர்கள், இவை!

தகுதியற்றவன், தகுதியில்லாதவன், திறமையற்றவன், திறமையில்லாதவன்! எதனால்? ஏன்? படிப்பு வரவில்லை, படிப்பு வராது! எதனால், ஏன்! என்ற கேள்விகளை, எழுப்புங்கள்? எழுப்பிப்பாருங்கள்.

ஒரு சில மாணவர்கள் மட்டும் தகுதியுடையோராயும், திறமை படைத்தவராயும், வேறுபலர் தகுதியும் திறமையும் இல்லாதவராயும் இருந்திடக் காரணம் என்ன? தகுதி எதிலே இல்லை, ஏன்? திறமை எதிலே குறைவு, எதனால்?

தகுதியும் திறமையும் படைத்தவர்கள் யார்? யார்?

எந்தெந்த மாணவர்கள்? எத்தகைய வசதி படைத்தவர்கள், எந்தவிதமான பரம்பரையில், வாழ்க்கைச் சூழ்நிலையில் வாழ்பவர்கள்? என்று ஆராய்ந்து பாருங்கள்?

தகுதி யாருக்கு இல்லை, திறமை எவரிடம் குறைந்திருக்கிறது, இல்லாமலிருக்கிறது, படிப்பதிலே, பள்ளிப் பாடங்களைப் படித்துத் தேர்வில், அதிக மார்க்குகள் பெற்றுத் தேர்ச்சிபெற முடியாத மாணவர்கள், யார், யார், எத்தகைய வசதிபடைத்தவர்கள்? எந்தெந்தப் பரம்பரையில், வாழ்க்கைச் சூழ்நிலையில் வாழ்பவர்கள் என்றும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்?

தகுதி யாருக்கு இருக்கிறது. யாரிடமிருக்கிறது? திறமை எவருக்குத் தன்னுலே வருகிறது, படிப்பில், ஏன்? யோசிக்கவேண்டும்.

இந்த நாட்டில், தமிழ்த் திருநாட்டில், ஏற்கனவே, பரம்பரை, பரம்பரையாகப் படித்த பரம்பரையினராகவே, படித்த குடும்பங்களாகவே, படித்த மக்களாகவே வாழ்ந்து, வளர்ந்து வரும் சில பரம்பரைப் படிப்பாளிகள், படித்த பரம்பரைகள் இருக்கின்றன!

அண்ணன் படித்தவன், அப்பா கற்றவர், பாட்டன் பண்டிதர், ஒரு அண்ணன் வக்கீல், மற்றவன் மருத்துவர், இன்னொரு அண்ணன், அரசாங்க அலுவகத்தில் வேலை பார்ப்பவன், வேறொருவன் பள்ளிப் பேராசிரியர். தாய், தமக்கை, தங்கை அத்தனைபேரும் படித்தவர்களே! அத்திம்பேரும் சரி, மைத்துனர், மாமி, எல்லோரும்

படித்தவர்கள் என்ற சூழ்நிலையில் வாழும் குடும்பங்கள், வசதியான குடும்பங்கள், படித்த பரம்பரைகளாகவே இன்னும் இருந்திடக் காண்கிறோம்.

இத்தகைய வாழ்க்கை வசதியையும், வளமான சூழ்நிலையையும், படித்த பரம்பரை வாசனையையும் வழிகாட்டியையும், கொண்ட குடும்பத்தில் உதித்த மாணவருக்குத் தகுதியும் திறமையும், இருப்பதிலே, படிப்பவை, பள்ளியிலே, பரீட்சையிலே கெட்டிக்காரனாக, வகுப்பில் முதல் மார்க்கு பெறுபவனாக விளங்குவதிலே என்ன விசித்திரம், தகுதி, திறமை இருக்கிறது!

படித்த வீட்டுப் பிள்ளை, பரம்பரை பரம்பரையாக; வாழ்வின் துன்பச்சாயலே காணாத, காணவேண்டிய தேவையற்ற வாழ்வு, உண்ணல், உறங்கல், படித்தல், விளையாடல் தவிர வேறு வேலையற்ற வசதியான வாழ்க்கை வளப்பத்தையும் கொண்ட மாணவனுக்கு ஏன், தகுதியும் திறமையும் இருக்காது! இருக்கத்தான் இருக்கும்?

தகுதி—திறமை, வசதியுடையோருக்கு, சுற்றுச் சார்பும் சூழ்நிலையும் சுகமாக அமைந்துள்ளவருக்கு, படித்த பரம்பரையில் தோன்றியவருக்கு, தானாகவே அமைகிறது, படிப்பதிலே!

ஏழைக் குடியானவனுடைய மகனுக்குத் தகுதியும் திறமையும் இல்லை, கற்பதில் என்று கூறிவிட்டால் மட்டும் போதாது! ஏன் இல்லை அவனுக்குத் தகுதி?

எதனால் காணமுடியவில்லை அவனிடம், திறமையை! என்று எண்ணிப்பார்க்க வேண்டும்?

ஏழையின் வாழ்வு எத்தகையது? அவனது இருப்பிடம், வாழும் வகை, வசதி, படிப்பதற்குச் செலவிடப்படும் காலம், நேரம், பணம் இவற்றையும் இதற்கேல் வாழ் பொருந்தும் முறையிலே, நிலையிலே, அவனது வாழ்வு, வாழ்க்கைத்தரம் வளமாக, வசதியாக அமைந்துள்ளதா? என்று கூர்ந்து நோக்கவேண்டும்.

ஏழைக் குடியானவனுடைய மகன், அதிகாலையில் எழுந்து, தன் தந்தையோடு, வயல்களுக்குச் சென்று தந்தைக்குத் துணைசெய்யவேண்டிய அவசியத்தில் இருக்கிறான். காலையிலே, கழனிக் காரியங்களை முடித்துவிட்டுக் கிடைத்த கம்பையோ, கேழ்வரகுக் கூழையோ, கஞ்சியையோ குடித்துவிட்டு, ஏதோ கிடைத்த கட்டுச் சோற்றை, பழைய சோற்றைத் தூக்கிக்கொண்டு, பல மைல் தூரங்கூட, நடந்துசென்று படிக்கவேண்டிய பரிதாப நிலையிலே, இருக்கிறான்!

வேண்டிய உணவு, வசதியான இருப்பிடம், தேவையான துணி மணிகள், ஏன், பாடப் புத்தகங்கள் அத்தனையையும், எல்லாப் புத்தகங்களையுங்கூட, வாங்கிடமுடியாத, வறுமை வாழ்வு, அவனது வாழ்வு.

வாழ, அவன், அந்த ஏழை மாணவன், தன் குடும்பத்தாருடன் உழைக்கவேண்டும், உதவி செய்யவேண்டும்! கிடைப்பதை உண்டு, கிழிந்த உடைகள் உடுத்தி, அரைகுறையான அவல வாழ்வு வாழ்கிறான். அத்துடன்

படிக்கிறான். அந்தக் குடும்பத்திலே, பள்ளி வாழ்வைக் கண்டவன், குடும்பத்தின் முதல் படிப்பாளி, முதல் மாணவன் அவனாகத்தான் இருப்பான்.

பாடபுத்தகங்கள் அனைத்தையும் வாங்க முடியாத வறுமை நிலை! பல மைல் நடந்து சென்று படித்துத் திரும்பும் பாரம்! குடும்ப பாரம் வேறு! இந்தச் சூழ்நிலையில், அவனிடம் தெளிவு எங்கே இருக்கும், இருக்கத்தான் முடியும்!

இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் சிக்கியுள்ள, அந்த ஏழை மாணவன், படிப்பில் ஓரளவு, தேர்வுக்குத் தேவையான குறைந்த அளவு மார்க்குகள் கூட அவனால் சில பல நேரங்களில் பெற முடிவதில்லை! சூழ்நிலை காரணமாகப் படிப்பு வரவில்லை என்பது மட்டுமல்ல, சூழ்நிலை காரணமாகவே அவனது எண்ணம், உணர்வு, ஊக்கம், படிப்பில் செல்லவில்லை, செல்லமுடியவில்லை, என்பதையும், வறுமைச் சூழ்நிலைதான் அவனது தகுதியற்ற, திறமையற்ற தன்மைக்குக் காரணம் என்பதையும் மறக்கக் கூடாது!

நிம்மதியான வாழ்க்கையில் வாழ்கின்ற மாணவனை விட, நிம்மதியற்ற வறுமை வாழ்வு வாழ்கின்ற மாணவன் பெறும் குறைந்த மார்க்குகளை மட்டும் பார்த்துத் தகுதி—திறமையைக் கணக்கிடக் கூடாது!

அவரவர் சூழ்நிலைக்கேற்ப, தகுதியும் திறமையும். படிப்புத்துறையில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லாத் துறைகளிலும்,

ஒவ்வொரு முறைகளிலும் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

எனவே, தகுதி—திறமை, இல்லாத ஏழை, எளிய வரை, பின் தங்கிய சமுதாயத்தை, படிப்பு வராத இனத்தை மேலும் பின் தங்கிடும் நிலையிலேயே விட்டு விட்டு, ஏற்கனவே படித்த பரம்பரையில், சூழ்நிலையில் வாழ்ந்து, வளர்ந்து நிற்கும் படித்த மக்களை, பணக்காரப் பிள்ளைகளை, படித்த பரம்பரையான பார்ப்பன மாணவர்களை மட்டுமே முன்னேற்றப் பாதையில் விரைந்து அனுப்பிக் கொண்டே செல்வது, முறையல்ல, தகுதியுமல்ல, மனிதப் பண்புக்கே முரண்பட்டது மாகும்.