பள்ளி வாழ்க்கை
பகுதி 15 · 15 / 15
இது மக்களாட்சிக் காலம். மனிதன் ஒவ்வொருவனுக்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும். மனிதனே மனிதன் சுரண்டுவது, ஏய்ப்பது, தாழ்த்துவது கூடாது என்ற கொள்கை பூத்து வரும் மறுமலர்ச்சியுகம், இந்தக்காலம்.
மனித உரிமை, தனி மனிதனது உரிமை, பிற மனிதரைத் தாழ்த்தாத, வாழ முடியாது செய்ய முடியாத, செய்யாத தனி மனித உரிமை எங்கும் ஏகோபித்துப் போற்றப்பட்டு வருகிறது, உலகில்!
உரிமை! வாழும் உரிமை எல்லோருக்கும் உண்டு. படிக்கும் உரிமை, வாழும் உரிமையில் முக்கிய பகுதி! அறிவு பெறும் பகுதி! அறிவு வளர்ச்சிப் பகுதி!
இந்தப் பகுதியில், பள்ளி வாழ்க்கையில், தகுதியையும்,
திறமையையும் மட்டும் பார்த்து, மாணவரைச் சேர்த்தால், பள்ளி வாழ்க்கையில், பாமர மக்கள், ஏழை, எளியவர்கள் எப்படி நுழைய முடியும்.
படித்தவன், பணக்காரன், பார்ப்பனன் என்ற, ஏற்கனவே வசதியும் வாய்ப்பும், வளமான வாழ்க்கை நிலையினர், படித்த பரம்பரையினர் ஆகியவரின் ஏகபோக உரிமையாகப் பள்ளி வாழ்க்கை அமைந்திடக் கூடாது!
பின் தங்கிவிட்ட, பிறப்பாலும், பிற்போக்குக் கொள்கைகளாலும், வறுமை நிலையினாலும், பின் தங்கி விட்ட மக்கள், மற்றவருடன் முன் வந்து நிற்கும் நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும்!
மனித உள்ளம், பிறரையும் வாழ வைக்க வேண்டும், தன்னைப் போல். தன்னுடைய உரிமைகளைக் குறைத்து, தனது ஏக போகத்தை விட்டுக் கொடுத்து, பின் தங்கிய மக்களுக்குச் சலுகைகள் வழங்கி, அவர்களுக்குச் சந்தர்ப்பங்களை உண்டாக்கித் தந்து, முன்னேற்ற வேண்டும், என்ற எண்ணம், எழுச்சி, கிளர்ச்சி, நாடெங்கும் தேவை! மிகமிகத் தேவை!
இருக்கும் பள்ளிகளோ, குறைவு! மாணவர் தொகையோ, மிக அதிகம்! புதிய பள்ளிகள் அமைத்திடப் போதிய பணமில்லை, இடமில்லை என்று கூறி, பள்ளியில் சிறந்த தகுதியுடையவர்களையே, திறமைசாலிகளையே சேர்க்க வேண்டும் என்று கூறுவது பின் தங்கிய மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்.
உலகயுத்தம் மூண்டது! உணவுப் பஞ்சம் ஏற்பட்டது,
நாட்டில்! அவசியமான உணவுப் பொருள்களை, அரசாங்கத்தார், அளந்து, பங்கிட்டு வழங்க வில்லையா மக்களுக்கு!
அதிக வயல்கள், வசதிகள் பெற்றவர் என்பதற்காக, அளவு முறை, பங்கீட்டுக் கொள்கையை விட்டு விடமுடியுமா, சிலரிடம் உணவுப் பங்கீட்டில் முடியாதே!
அது போலவே, கல்வி நிலையங்களில், மக்கள் தொகைக்கேற்ப, அத்துடன் பின் தங்கியவர்கள், மற்றவர் நிலைக்கு உயர்த்தும் உள்ளத்தையும் கொண்டு, மாணவரைச் சேர்த்திடும் முறை, வகுப்பு நீதி தேவை, கம்யூனல் ஜி. ஓ கட்டாயம் தேவை, வகுப்புகள் உள்ள வரையில்! வகுப்புகள், சமூகங்கள் வாழ்ந்திட, எல்லாச் சமூகங்களும் சமமாக வாழ்ந்திட!
பள்ளிகள் இல்லை, பணமில்லை, இடமில்லை என்றெல்லாம் இருக்கும் நிலையை மாற்ற ஆளவந்தார் ஆவன செய்யவேண்டும்!
ஆளவந்தார்—நாட்டை ஆண்டிடும் அரசியலார், அறிவு வளர்ச்சிக்கு. பள்ளி வாழ்க்கைக்கு முதலிடம் தந்து, அதற்கான எல்லாவற்றையும் செய்யவேண்டும். வீண் திட்டங்களைவிட்டு மக்களை விவேகிகளாக்கிடும் பள்ளி வாழ்க்கையைப் பண்படுத்தும் வகையில் பணத்தைச் செலவிடவேண்டும்!
மக்கள் வாழ்க்கைத்தரம் குறைந்தவர்களாக வாழாதவர்களாக, வாழமுடியாதவர்களாகவே விளங்குகின்றனர்.
பெரும்பாலான மக்கள், உள்ளநிலை, இதுதான், இன்று, இந்தத் தமிழ்த்திருநாட்டில்!
வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் இன்று திறமை தேவைப்படுகிறது; அறிவு அவசியமாகிறது! தகுதி முக்கியமாகக் கருதப்படுகிறது!
தகுதி, திறமை, திட்டமிடும் வன்மை, எதையும் திருத்தமாக, தெளிவாக முடித்திடும் ஆற்றல், அறிவு, ஆராய்ந்திடும் இத்தனையும் இன்று தேவை, மனிதனுக்கு!
மனித வாழ்வு இன்று முன்னேற்றமடைய மூளை பலம் அதிகம் தேவைப்படுகிறது. சிந்தனைத் தெளிவு, சிக்கலான பிரச்சினைகளை ஆய்ந்து, அலசிப்பார்த்து முடிவு கட்டிடும் மனத்திறன், மனவலிமை முக்கியமான அங்கம் வகிக்கிறது, மனிதவாழ்வில்!
சிந்தனை செய்ய மனிதன் துணிவு பெறவேண்டும். துணிவு, தேவைதான், சிந்திக்கக்கூடத் துணிவு தேவையான நிலைதான் இன்று, மனிதனுக்கு!
இதை ஆராயக்கூடாது; இதைப்பற்றிப் பேசவே கூடாது; அதைப்பற்றிச் சந்தேகப்படாதே! ஆண்டவன் கட்டளையை மீறாதே; அடங்கிவாழ், அற்ப மானிட வாழ்க்கையைப் பெரிதென நம்பி, ஆசாபாசங்களுக்குக் கட்டுப்படாதே! தேவனை நம்பு! பக்தியோடு வாழ், மத நம்பிக்கையோடு! மகான்களைப் போற்று! மடாலயத் திருப்பணிக்கு உதவு! என்றெல்லாம் நாட்டில் கூக்குரல்,
பழக்க வழக்கத்தின் பேரால் சாஸ்திர சம்பிரதாயத்தின் பேரால், எழும்பிடக் கேட்கிறோம்.
இந்த நிலையில், சிந்தித்திடத் துணிவு, தேவைப்படுகிறதல்லவா? எனவே சிந்திக்கக்கூட, துணிவு, தீர்மானமான எண்ணம், நிச்சய புத்தி, தேவைப்படுகிறது என்ற நிலை, உள்ளநிலை!
இந்த நிலை மாறி, துணிவு ஏற்பட்டு, சிந்திக்க முனைந்த மக்களாய் மனிதஇனம் மாறிட, தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, தமிழறிந்த தமிழர்களாய், தமிழ் கற்ற தமிழராய்த் தமிழரெல்லாம் விளங்க, வாழத் தமிழ் கற்றுத் தெளிவு பெறுங்கள்!
மாணவரே, பள்ளி வாழ்க்கையில் பற்றுவைத்து தெளிந்து, பகுத்தறிவுடன், உலகியலேக் காண, உலகத்தோடு உயர்ந்து வாழும் வழிகாண, படியுங்கள்! படித்துத் தெளியுங்கள்! தமிழினத்தை வீறுகொண்டெழச் செய்து, தமிழ்த் திருநாட்டை அமையுங்கள்!
திருநாடு, திராவிட நாடு, தமிழின் மக்களான, ஆந்திர, கேரள, கன்னட, மலையாளரைக் கொண்ட தனி நாடு அமைவதற்கு, அமைப்பதற்கு, அறியாமையைப் போக்கிடும் அறிவை, ஆராய்ச்சித் திறனை, இனவரலாறுகளை, உத்தமர் வாழ்க்கை ஏடுகளை, விஞ்ஞானத்தை, விரிந்த உலக நிகழ்ச்சிகளைக் கற்றுத் தெளிவு பெறுங்கள், தீப்புத்தி படைத்தவராக, தீரத் தமிழராக, தன்மானச் சிங்கங்களாக விளங்க அடிப்படை காணுங்கள், பள்ளி வாழ்க்கையில்! வணக்கம் !!
