உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 8 · 8 / 15

ஊரே கலங்கிடும்படி, இருசாராரும் சுடுசொற்களை வீசியும், கைகலந்தும் கலகம் முற்றிக் கொண்டிருந்தது!

திடீரென்று, சிவனடியாரைக் காணவில்லை. ஆகாயத்திலே, ஒளியொன்று, அதில் சிவபெருமான் காட்சியளித்து, “இயற்பகையாரே, உமது சிவத்தொண்டைக் கண்டு மகிழ்ந்தோம், சித்தங்குளிர்ந்தோம், உம்மைச் சோதித்து, உமது பக்தியைப் பரிசோதித்து உமக்குப்

பெருமை தந்திடத்தான், உமது பக்திப் பெருமையை உலகுக்கு உணர்த்துவான் பொருட்டேதான், யாம், இத்திருவிளையாடல் புரிந்தோம்,” என்று ஆசிமொழி கூறி, இயற்பகையை வாழ்த்தி மறைந்தார்.

இது பெரிய புராணத்தில் கூறப்படும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான இயற்பகை நாயனார் வரலாறு! புனிதமான புராணம்!

எவ்வளவு பக்தி! எத்துணை தொண்டு, சிவத் தொண்டு, கட்டிய மனையாளைக் கண்டவருக்குத் தானம் செய்திட்ட தயாள குணம்! இதுவா, தேவை இன்று!

எல்லாம் வல்ல இறைவன் திருவிளையாடல், இறைவனடியாரைச் சோதிக்கும் இழிமுறை, இல்லாளைத்தானம் கேட்பது, கேட்டுப்பெற்று உடன் அழைத்துப்போவது, நன்று? நீதியா, முறைதானா? கூறுங்கள்!

இத்தகைய மூட, பக்திப் போதை, தன்னிலை மறந்த, தன்மானமற்ற போக்கு, பகுத்தறிவற்ற பண்பு, படித்தறியப்படவேண்டுமா? பாடங்களில் இவை அமைந்திட வேண்டுமா? இவ்வழி, இக்கால சந்ததிக்குத் தேவை, அவசியம் என்ற எண்ணமா? ஏற்பாடா? எதற்காகப் புகுத்தவேண்டும், இளைஞரின் இதயங்களில் இத்தகைய, இழிதன்மைகளை! அதுவும் ஆண்டவன் பேரால், ஆபாசத்தை, அறிவுக்கூடங்களான கல்வி நிலையங்களில், பள்ளி வாழ்க்கையில்! தேவையற்ற திருப்பணிதானே, இதெல்லாம்?

ஆண்டவன், கடவுள், மகேஸ்வரன் இவைபற்றிய ஏடுகள் தேவைதான், என்று வாதத்திற்காக, பேச்சளவில் ஒப்புக்கொண்டு கவனித்தாலும், ஆபாச ஆண்டவனையும், கருத்தற்ற கண்மூடிக் கடவுளரையும், பிறன் மனையாளைப் பிடித்திழுக்கும் மதிகெட்ட மகேஸ்வரனையுமா, மாணவருக்குப் பாடமாக அமைத்திட வேண்டும்!

பக்தி! நம்பிக்கை, நாதன் புராணம், நம்பினால் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்ற பயந்த பரம்பரைப் புத்தி, போகிற கதிக்குப் புண்ணியம் தரும் ஏடு, என்று எண்ணி நம்பிக்கை வைத்து சிந்தனையற்று, சீர்தூக்கியும் பாராது, கண்டனவற்றையெல்லாம், காலத்திற்கும் கருத்திற்கும் முரண்பட்ட நடத்தைகள், முறையற்ற, தகாத கோட்பாடுகளைப்போற்றிப் புகழ்ந்து, அடாத ஆகாத அக்கிரமங்களை, ஆண்டவன் அவதார மகிமை, திருவிளையாடல்கள் என்று படித்து பாடியாடி மகிழ்ந்திடும் ‘பக்திப் போதை’யிலேயே, எதிர்காலச் சந்ததியையும் சிக்கச் செய்ய வைத்திடும் பணியைப் பள்ளி வாழ்க்கையில், இனியும் புரிந்திடத்தான் வேண்டுமா, புராண, இதிகாச போதனைகள் மூலம்?

ஆண்டவன், கடவுள், உலக அறிவிற்கு அப்பாற்பட்டவர். காணமுடியாத ஒரு சக்தி! பார்க்கமுடியாத ஒரு பொருள்! மனித சக்திக்கும் மீறிய ஒன்று! இயற்கை! என்ற கொள்கைதான் தேவை!

பள்ளி வாழ்க்கையிலேயே மதமாச்சரியங்களை ஊட்டிடும்

புராணங்கள், ஒன்றுக் கொன்று முரண்பட்ட மதக் கோட்பாடுகள், அறிவையும் அதே நேரத்தில் அறியாமையையும் புகுத்திடும் பாடங்கள், விஞ்ஞானத்தையும் அதே நேரத்தில் விசித்திர அவதார மகிமைகளையும், போதித்து மாணவருக்குப் புரியாத, குழப்பமான சூழ்நிலையை, முரண்பட்ட, ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொள்ளும் தத்துவங்களுக்கு ஆக்கந்தந்திடும் விசித்திர, விபரீதப் பாடத்திட்டம், பகுத்தறிவுக்கு முரண்பட்ட திட்டம், தேவைதானா, இன்னும்? இந்தக் காலத்திலும்?

விஞ்ஞான வகுப்பில் மாணவன் மழைபொழிவது எப்படி? என்பதைப் படிக்கிறான். பற்பல உபகரணங்களைக் கொண்டு, கண்ணெதிரே மழை தோன்றுவதற்கான காரணங்களை, மழை பெய்யும் சூழ்நிலைகளைப் பற்றிப் படிக்கிறான்.

பூமியிலுள்ள நீரானது, சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறி, காற்றிலே கலந்து மேலே போய், வானத்தில் மேகங்களாகின்றன! குளிர்ந்த காற்றுப் பட்டாலோ, அன்றி, குளிர்ந்த மலைச்சிகரங்களுடன் மோதிடும் பொழுதோ மேகங்கள் குளிர்ந்து, நீராக மாறி மழையாகப் பொழிகின்றன, என்று படிக்கிறான், பொது அறிவு வகுப்பிலே!

அடுத்தபடியாக, புராணங்களிலும், இதிகாசங்களிலும், மழைக்கு அதிபதி வருணபகவான் என்றும்

இடிக்குத் தலைவன் இந்திரன் என்றும் இவர்களைப் போற்றி, தொழுதால்தான் மழைபொழியும், என்று மற்ற வகுப்பிலும் படிக்கும் மாணவனது அறிவு-தெளிவு என்னாவது!

பக்திரச ஏடுகள், புண்ணிய புராணங்கள், பகவான் திருவாய் மலர்ந்தருள, அதனின் முனிபுங்கவர், தவசிரேஷ்டர்கள் கேட்டு வழிவழியாகச் சொல்லப்பட்டு வேதமாக, இதிகாசமாக, புராணமாக இன்று பாட புத்தகங்களாகவும் அமைந்துள்ள ஏடுகளில் மழை பெய்வதற்குக் காட்டப்படும், “பரம்பொருள் வாக்கு” என்ற லேபில், முத்திரையுடன் கூடியவற்றில் கூறப்படும் காரணத்தை ஏற்பதா, அன்றி அறிவுலக ஆராய்ச்சி, பொது அறிவு, விஞ்ஞானம் கூறுவதை, தீர்மானித்து, திட்டமாகக் கூறுவதை நம்புவதா? எதை நம்புவது, ஏற்பது, கொள்வது?

மாணவனின் மனதில் மருளாதா? மனச்சோர்வு அடையாதா?

விஞ்ஞானம் தெளிவானது! பொருந்திய, உண்மைகளைக் கொண்டது. அதை நம்பினால், புண்ணிய புராணத்தை நம்பிடாத ‘புல்லன்’ ஆவானே!

புராணத்தை நம்பி, புராணவழி நடந்தால் பொது அறிவு கிட்டிடாது!

இரண்டுங் கெட்டநிலை! தவிப்பு! தெளிவற்ற, சூழ்நிலை! பாலப்பருவத்தில், பள்ளி வாழ்க்கையில்!

கருத்து, முரண்பட்ட கருத்து, கொள்கை, ஒரு காரியத்திற்கு, ஒரு இயற்கையின் நிகழ்ச்சி, செயல்முறை முறை குறித்து! மழை பெய்வது எப்படி? என்று? வேடிக்கை! விபரீதம்! விசித்திர முரண்பாடு! வேதனை தரும் வேடிக்கை நிகழ்ச்சிதான்!

வருண பகவானை நம்பி, வருண ஜெபங்கள் நடத்தி வருண யாகங்கள் செய்து வருண பகவானின் அருளால், வறண்ட பூமி வளம்பெற, மழை பெய்விக்க வருண ஜபங்கள் பெரும் பெரும் பொருட் செலவில் இன்னும் நடப்பதை ஒரு பக்கம் கவனிக்கிறான் மாணவன்.

இதே நேரத்தில், ஆகாய விமானத்தில் மேகங்களிடையே சென்று, விஞ்ஞானக் கருவிகள் மூலம் மேகங்களை இழுத்து வந்து, தமது நாட்டில் மழை பெய்வித்து, வாழும் ரஷ்ய நாட்டுச் செய்தியையும், நடக்கின்ற உண்மையையும் படிக்கிறான், மாணவன்!

வருண ஜபம், மழை வேண்டி! வந்ததா? நிச்சயமாகக் கூறமுடியுமா? வருண ஜபம் செய்து மழை பெய்து, நாடு நல்ல வளம்பெற்றதென்று? முடியாத நிலைதானே?

மேகத்தை விஞ்ஞானக் கருவிகளால் இழுத்து வந்து மழை பெய்விப்பதைக் காண்கிறோம் கேட்கிறோம், இந்த நாளில், ரஷ்ய நாட்டில்?

மேற் குறிப்பிட்ட, இரண்டு வழிகளில், எது