உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 5 · 5 / 15

உலகம், நாகரிகத்தில், வாழ்க்கையை வளப்படுத்தும் துறையில், முன்னேறும் இந்த நேரத்தில் இந்த நாடு, தமிழ் நாடு, திருநாடு, உள்ள நிலை என்ன?

இங்கு, மக்கள் அறிவுபெறும் சாதனமான, கல்வி போதனையின் திட்டமென்ன? இங்கு போதிக்கப்படும்

கல்வி, தமிழனுக்குத் தரும் பயன்தான் என்ன? சிந்தித்துப் பார்க்கவேண்டும்? தேவையான கல்வி, அறிவு வளர்ச்சி தரப்படுகிறதா, இங்கே?

இங்கு இன்னமும், நாயன்மார்களின் சரித்திரமும் புராணப் பாடல்களும், இதிகாசச் சுவையும், இளையான் குடிமாறனார், இயற்பகையார் புராணங்களும் பாடத் திட்டத்தில் இடம்பெறத் தவறிடக் காணோம்!

சமய அறிவு, வாழ்க்கைக்கு, இவ்வுலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட மேலுலக, இன்ப வாழ்க்கைக் கருத்துக்களே முதலிடம், பெற்றுள்ளன! அவற்றை விளக்கிடும் ஏடுகளே அதிகம்! அவைதான் இதிகாசம், புராணம், காவியம், கட்டுரை, கதை என்ற பலப்பல உருவிலே குழைத்துக் குழைத்து, மாற்றி மாற்றிக் காப்படுகின்றன!

இகத்தை வெறுத்து, பரத்தில் இன்பந் துய்க்கப் போதிய புண்ணியம் சம்பாதிக்கவேண்டிய இடைக்காலமாக, தங்குமிடமாக, இந்த வாழ்க்கை, இவ்வுலக வாழ்வு அமைந்துள்ளது என்ற போலி வேதாந்தத்தை வளர்க்கும் கருத்துக்கள் போதிந்த ஏடுகளே அதிகம்!

தன்னைப்பற்றிக் கவலைப்பட, தான்வாழ, தான் வாழும் நாடு, பேசும் மொழி போற்றிட, தன்னுடைய சமூகத்தின், நாட்டின், நலனுக்காக உழைத்திடத் தமிழன் இன்னும் கற்றபாடில்லை, கற்பிக்கும் ஏடுகளைப்

படிக்கவில்லை; படிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படவில்லை, அவனுக்குப் பள்ளி வாழ்க்கையில்!

வருங்காலம்! இந்த நாட்டின் வருங்காலம், உயர்வதும் தாழ்வதும், வாழ்வதும் வீழ்வதும் இந்நாட்டு வருங்கால வாலிபரை, வருங்காலச் சந்ததிகளைப் பொறுத்தே இருக்கிறது!

வருங்காலச் சந்ததிகள், இன்றைய சிறுவர்களே! மாணப் பருவத்துக் குழந்தைகளின் வளர்த்தை, மன வளர்த்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது, வருங்காலம்!

குழந்தைகளைப் பேணும் முறை, குழந்தைகளை வளர்த்துப் பெரியவராக்கித் தரும் பெரும்பணி, வருங்கால உலகுக்கு, தமிழ் உலகுக்கு வாழ்வளிக்கப் போகும் சிங்கத்தமிழரைப் பக்குவப்படுத்துவதிலேதான், வருங்காலத் தமிழினத்தின் நிலை அமைந்திருக்கிறது!

இன்றைய இளஞ்சிறார், பெறும் அறிவு, இன்று பெறும் அறிவு, அறிவு விளக்கங்கள், தமிழ் உணர்வு, தமிழ் இன உணர்வு, தன்னுணர்வு, தன்மான உணர்வு, வாழ்க்கைப் பயிற்சி முறை இவைகளைச் சீர்படுத்திச் செப்பனிட்டு வகைப்படுத்தியாக வேண்டும், வருங்காலம் வாழ, தமிழ் தழைக்க, தமிழ்நாடு தன்மானத் திருநாடாக விளங்க, தமிழர்கள் திருப்தியோடு தன்னிகரற்று விளங்க!

வருங்காலத்தை வாழ்விக்கப்போகும், இன்றைய

இளஞ்சமுதாயம், இன்று பள்ளி வாழ்க்கையில் பெறும் அறிவுப் போதனையைப் பொறுத்தே, வருங்காலம் அமையும், அமைய முடியும் என்பது உறுதி!

இன்றைய இளஞ்சமுதாயம், இளஞர் உலகு, நல்லறிவுபெற்று, வாழ்க்கை வாழ்வதற்கென்ற வகையான கொள்கையைக்கொண்டு முன்னேறிட, பள்ளி வாழ்க்கை ஒரு சிறந்த சாதனமாக, தூண்டுகோலாக, வழிகாட்டியாக அமைந்திடவேண்டும். அதற்கான முறையில் பள்ளிப்போதனை அமைக்கப்படவேண்டும். தேவையான கருத்துக்களைப் போதித்து, தேவையற்ற கருத்துக்களே நீக்கிடத் தயங்கிடக்கூடாது!

தமிழன் வாழ, தமிழினம் வாழ, தமிழ்நாடு செழிக்க, தமிழ் மக்களுக்கு, தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் உணர்ச்சியூட்ட வேண்டும்.

தமிழ்! தமிழ்! தமிழன்! தமிழினம், தமிழ்நாடு, திருநாடு என்ற உணர்வு, தன்மானம், தமிழ்ப் பரம்பரை பற்றிய எழுச்சியை ஊட்டவேண்டும்!

தமிழனுக்குத் தகாதவற்றை விலக்கத் துணிவு கற்பிக்கவேண்டும். தன்னுடைய மானத்தைப் பறித்து, மடமைக்கு மண்டியிடும் மூடக்கொள்கைகளைப் புறக்கணிக்கக் கற்றுத்தரவேண்டும், வருங்கால தமிழ் மகனுக்கு, இன்றைய துடிக்கும் இளந்தமிழனுக்கு!

தமிழன் தமிழைப் படிக்கவேண்டும், தமிழினத்தைப்

போற்றிவேண்டும், தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும், தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற எழுச்சி முரசொலி இதயகீதமாகப் படவேண்டும்; இளந்தமிழரது இதய பேரிகை இவையாகத்தான் இருக்கவேண்டும்!

பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவைப் போக்கி, அறியாமையை வளர்த்திடும் பழக்கவழக்கங்களே விட்டொழிக்கத் தூண்டும், வழிகாட்டும் நூல்களைப் படிக்க வேண்டும்!

பழமை, பழமையென்று பேசி, பூத்துக் குலுங்கி வரும் புதியக் மறுமலர்ச்சிக்கு, புத்தறிவிற்கு மடை கட்டித் தடுத்தல் தகாத காரியம்!

அணுகுண்டு காலத்திலே, அனுமார் மகாத்மியத்தைப் பாராயணம் செய்து அடையப் போவது என்ன? கண்முன்னே காணும் இன்பத்தை மறந்து, வெறுத்து ஒதுக்கி, இறந்த பின்னர் பெறப்போகும் அந்தரலோக வாழ்வுபற்றிய விளக்க ஏடுகள் தேவைத்தானா, இன்னும்? இல்லையே!

இன்று, மாணவர் படித்தறியக் கூடாதவை எவை யெவை? படித்துணர வேண்டுபவை எவையெவை? என்று தீர யோசித்துப் பாருங்கள்!

மாணவப் பருவத்திலே பதியும் கருத்துக்கள், பள்ளி வாழ்க்கையிலே பெறப்படும் பண்புகள், பசுமரத்தாணிபோலப்

பதிந்து, இறுதி செல்லும்வரைத் தொடர்ந்து நிலைத்து நிற்பவையாகும்.

இந்தப் பருவத்திலே, மாணவர்கள் மாயாவாதக் கருத்தைப் படிக்கலாமா? தேவைத்தானா, இந்தக் காலத்தில்? தன்னம்பிக்கையோடு வாழவேண்டிய பகுத்தறிவுக் காலத்தில், பஞ்சபாண்டவர் சூதாடிய கதையும், துரோபதை துகிலுரியப்பட்ட காட்சி! அரிபந்தாமன் அந்த நேரத்திலே, அந்தரத்திலிருந்து அநேக சேலைகளைத் தந்துதவி, மாது துரோபதையின் மானங்காத்த பாடல்களும், தேவைத்தானா? இல்லையே!