உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 4 · 4 / 15

நாளுக்கு நாள் நாகரீகத்தில் முன்னேறிடும் அகில உலகத்தை மறந்து, வெட்டி வேதாந்தம் பேசி, வாழ்வை நம்பாது, நல்லதங்கள் கதை காலத்திற்கே நாம் போய்க்கொண்டிருப்பதா!

நாகரிக முதிர்ச்சி பெற்று, நல்லறிவு விளக்கங்கள் பெற்று, நாவினை நாட்டினரும் உலகில் ஒரு சிறப்பான இடம் பெறும் இந்நாள், தமிழ் நாடு, தற்குறித் தன்மைக்கு எடுத்துக்காட்டாக, படியாத, பள்ளி வாழ்க்கை அறியாத மக்கள் தொகையில் முன்னேற்றமடைவதா? கூடாது.

மனித வாழ்வு முன்னேறிட, அறிவு, அவசியம்; மிக மிக அவசியம்! அறிவு—கற்றுணர்ந்து ஊறும். படிக்கப் படிக்க பயன் அதிகரிக்கும். கற்கக் கற்க கருத்துத் தெளிவடையும்.

அறிவு தோன்றத் தோன்ற, அறியாமை இருள் அகலும். தெளிவு பிறக்கும், தெளிந்த மனம், தெள்ளிய

வாழ்க்கை முறையைத் தேடி, பெற்று வாழும், என்பது உறுதி! மறுக்கமுடியாத உறுதி!

அறிவு! பிறந்த ஒவ்வொரு மனித இனத்திற்கும் இருக்கிறது, இயற்கையிலேயே! இருக்கும் அறிவு, தெளிவுபெற, பகுத்தறிவு பெருக, கல்வி, கேள்வி மிகவும் முக்கியம்.

கல்வியைக் கற்பது, கல்வி பெறுவது, பாலப் பருவத்தில், பள்ளி வாழ்க்கையில்!

‘பள்ளி வாழ்க்கை’ என்றும், பெற்ற குழந்தையைத் தாய், பாலூட்டிச் சீராட்டிப் பேணி வளர்த்து, பாலகன் ஆனதும், தவழிப் பூச்சூடி, உச்சிமோந்து, எடுகோல் கையிலே தந்து, பள்ளிக்கு அனுப்பும் காட்சியும், ‘போகமாட்டேன்’ என்று பிடிவாதம் செய்யும் பாலகனைத் தந்தை அச்சுறுத்தி, அடக்கிப் பள்ளிக்கு அனுப்பும் தோற்றமும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன!

‘பள்ளி வாழ்க்கை’ என்றும், உருட்டும் விழிகளுடனும், மருட்டும் பார்வையுடனும், கையிலே கம்பேந்தி நிற்கும் ஆசிரியர், நம்முன், நமது நினைப்பிலே வரத்தவறுவதில்லை!

பெற்றோரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி, பள்ளி, சென்று, அங்கே பள்ளி ஆசிரியரின் கம்பின் கனத்தை

அடியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை!

பிள்ளையின் படிப்பு, எழுத்தைத் தெரிந்து, கூட்டிப் படிக்கப் பழகி, கணக்குகள் போடத் தெரிந்து, கடிதங்கள் வரையப் பழகி, கதைகள் சொல்ல, படிக்க ‘படித்தவன்’ என்ற பட்டம், நற்சான்று பெற்றிடும் அளவில் பெருமை, பூரிப்பு, போதுமென்ற மனம் மட்டும் போதாது!

பள்ளி வாழ்வு, பயனுள்ள வாழ்வாக அமைய வேண்டும், அமைக்கப்பட வேண்டும்.

வாழ்க்கையை வளப்படுத்த, வளப்படுத்திக் கொள்ளும் வகைக்கு, வழிக்கு ஊக்கந்தந்து, ஆக்கந்தரும் அறிவுபெறும் வாழ்வாக அமைதல் வேண்டும், பள்ளி வாழ்க்கை.

வெறும் படிப்புபோதும். வகுப்புக்கள் பல மாறி, ஒரு வரம்பு கல்வி கற்றுத் தேர்வுபெற்று, உத்தியோகத்திற்குத் உகந்தவன் என்ற திருப்திபெறும் அளவிலே கல்வி கற்றுப் பலனில்லை, பயனுமில்லை!

வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும். தமிழன் தமிழனாக வாழ, தன்மானத்துடன் விளங்க, தன் மொழியைப் போற்றிட தன் நாட்டைப் பாதுகாத்திடத்தக்க, தீரத் தமிழனாக,

தன்னம்பிக்கையுள்ள தமிழனாக, தன்மானத் தமிழனாக, தமிழ் மகனே, தமிழ்ப் பாலகனே உருக்கி வார்த்திடும் வாழ்வுதான் தமிழனுக்குத் தேவையான “பள்ளி வாழ்க்கை”, பயனுள்ள வாழ்க்கைக்கு வழியமைக்கும் வாழ்க்கை!

மனிதனுக்கு உள்ள தனிச்சிறப்பு, பிற உயிரினங்களைவிட மேம்பட்ட நிலை, அவனிடமுள்ள பகுத்தறிவுதான்!

பகுத்தறிவு—உலக அறிவினுள், உலகியலின் தன்மைகளை நன்கு அறிந்த நிலையினுள் உண்டாகிறது. உலகியல் உணர, உலகத்தைப்பற்றிய எல்லாச் செய்திகளையும், நடைமுறைகளையும், எல்லாத் துறைகளிலும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உலக வாழ்வு—இன்று மிகமிக வேகமாக மாறுகிறது, மாறிமாறி முன்னேறிக்கொண்டே வருகிறது!

உலகில், நேற்றுவரை காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தோரெல்லாம் இன்று நவீன, நாகரிக வாழ்க்கை முறைகளிலே தமது வாழ்க்கைத் துறையை மாற்றிக் கொண்டு முன்னிற்பதைக் காண்கிறோம்!

உலகில் வாழ்க்கைச் சாதனங்கள், இயற்கையை மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் பண்படுத்தி, பக்குவப்படுத்தி, உபயோகப்படுத்தும் வகையில் துரித முன்னேற்றம் மடைகின்றன.

மனிதன் நினைத்தால் பறக்கிறான், ஆகாய விமானத்தில். மனிதன் எண்ணினால் பேசுகிறான், உலகின் எந்தப் பகுதியில் வசிக்கும் மற்றவர்களுடனும், டெலிபோன் என்ற கருவி மூலம்.

மனிதன் பேசினால், உலகின் ஒரு கோடியில் பேசினால், உலகின் மற்ற எந்தப் பகுதியிலிருந்தும் அதனைக் கணத்தில் கேட்க முடிகிறது! ரேடியோ, இதுதானே!

ரேடியோவிலிருந்து, டெலிவிஷன் என்ற நிலைக்கு, பேசும் நபரைப் பார்க்கவும் முடிகிற நிலைக்கு இன்று முன்னேறியுள்ளது உலகம்!

கட்டுச் சோறு கட்டிக்கொண்டு கால்நடையாகவும், ஆடு, மாடுகள் மீதும், கட்டை வண்டிகளில் ஏறிக் கரடு முரடான பாதைவழி சென்ற, அந்தநாள் இன்று இல்லை! இருக்கவும் முடியாது. இருந்தால் இன்றைய உலகில் வாழமுடியாதவர்கள், அவர்கள். காலத்தின் அருமை தெரியாத கபோதிகள். நேரத்தை வீணாக்கி, மனித உழைப்பைப் பாழ்படுத்தும் பகுத்தறிவற்றவர்கள் எனப்படுவர்.