உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 3 · 3 / 15

இந்தக் கல்லூரிகளினின்றும் தேறி, வெளியேறிடும் மாணவரிலும் பெரும் பகுதியினர் வெறும் வேலை விரும்பிகளாய்த்தான் காணப்படுகின்றனர்.

நமது நாட்டில் கல்வி கற்பது, பள்ளி வாழ்க்கையில் ஈடுபடுவது, அறிவுவளர்ச்சிக்கு என்ற அடிப்படை எண்ணம் மேலோங்காது, அரைவயிற்றுக் கஞ்சிக்காவது,

உடலுழைப்பின்றி, ஏதாவது வேலை பெற்று வாழலாம் என்ற அரைகுறைத் திருப்தியால்தான் என்பது நன்கு புலப்படுகிறது.

படிப்பவர் குறைவு; மக்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு! படிப்பவரிலும் உயர்தரக் கல்வி வரை பள்ளி வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பவர் அதைவிடக் குறைவு! இதிலிருந்து கல்லூரி சென்று பட்டம் பெறுவோர் அதனினும் குறைவு. இதைவிடக் குறைவு, தொழிற் கல்வி பெறும் மாணவரது தொகை.

மனிதன் தன்னைத்தானே உணர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், சமுதாயத்தையும், தனது மொழியையும், பிற மொழிகளைப் பற்றியும், தனது நாட்டையும், பிற நாடுகளைப்பற்றியும் தனது நாட்டின் சரித்திரத்தையும், ஏன் இந்த பரந்த உலகைப் பற்றிய விளக்கத்தையுமே, கல்வி மூலம் பெறுகிறான்.

மனித அறிவு, கல்வியினுள் கடைந்தெடுக்கப்பட்டு, அறிவு அதிகரித்து தெளிவுபெற முடிகிறது. இத்தகைய அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை, கல்வி. கல்வி கற்கு மிடம் கல்வி நிலையங்கள். கல்வி நிலையங்களில் மனித வர்க்கம் கழிக்கும் நாள், வாழ்க்கை தான் பள்ளி வாழ்க்கை!

ஒரு சிலர் பெறும் கல்வியறிவும், வெறும் எட்டுச்சுரையெனப் பள்ளி வாழ்க்கை முடிந்ததும் வேலை தேடி, ஊதியம்பெற, பெற்றிடும் நற்சான்று, நுழைவுச் சீட்டு என்ற அளவோடு கொள்ளப்பட்டு, கருத்துப்பட்டுத் தள்ளப்பட்டு விடுகிறது, பின்னர்!

பள்ளி புகுந்து, படித்து, படிப்பினால் பெறப்படும் கல்வி அறிவை, வாழ்க்கைத் துணையாக, வாழ்வின் கலங்கரை விளக்காக, வாழ்க்கைக்கு வழி காட்டியாக, வாழ்வை வளப்படுத்தும் சாதனமாக, தன் வாழ்வுமட்டுமன்றி, தன்னைப்போன்ற பிறர் வாழ்வும் பயனுள்ள வாழ்க்கையாக மாற்றவேண்டும், மாற்றப்படவேண்டும் என்ற பொதுநலக் கோட்பாடுமன்றி ‘படிப்பு’, பள்ளி வாழ்க்கை, ஏதோ ஒரு ‘சிறைச்சாலை, நிர்பந்தத்தால், நிலைமையின் தூண்டுதலால் கடத்தப்படுகின்ற கட்டுப்பாட்டு வாழ்க்கையாகக் காட்சியளிக்கின்றது! இந்த நிலை மாறவேண்டும்!

மாற்றப்படவேண்டும்!

பள்ளி வாழ்க்கை மனித இனத்தின் முக்கிய பகுதி! மனிதனது இதயத்தைப் பள்ளி வாழ்க்கை உருக்கி வார்க்கிறது! பள்ளிப் பருவத்திலே, அமைந்திடும் பழக்க வழக்கங்கள் மனிதனது இதயத்தில் ஆழப்பதிந்து, மனிதனுடைய மரணவாயில் வரையில் நிலைத்து நிற்கின்றன.

வாழ்வில் பிடிப்பும், பற்றும், பாசமும் தன்னம்பிக்கையும் கொண்டவாழ்வு, வாழ்வில் தெளிவுபெற்று,

திடசித்தமுடையவனாக மனித இனம் வாழ, பள்ளி வாழ்க்கை, பாலப் பருவத்தில் சமைத்துக்கொடுக்கும், கருத்துக்கள் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.

இவ்வளவு சிறப்புடைய, சிறந்த, தேவையான சாதனமாகிய, பள்ளி வாழ்க்கை, பாலப்பருவம், கல்வியறிவு, மனித இனத்தின் பெரும் பகுதியினர் பெற முடியாது போகின்றது, இந்த நாட்டில்!

வாழ்க்கைத்தரம் மிகவும் குறைந்துள்ள நாடு இது! வாழ்க்கை வளமற்று வறண்ட பாலைவனமாக இருக்கின்றது, இங்கே?

இந்தத் திருநாட்டில், எல்லா வளங்களும் நிறைந்துதான் இருக்கின்றன! குடிவளத்திற்குக் குறைவில்லை. மக்கள் தொகையும் மிக அதிகந்தான், பலகோடி மக்கள் வாழும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடுதான் இது!

நிலவளமும் நிறைந்துள்ளது! குடிவளத்திற்குக் குறைவேயில்லை! நீர்வளமும் இல்லாமலில்லை. பரந்து ஓடும் காவிரி, பெண்ணை, வைகை, கோதாவரி இருக்கத்தான் இருக்கின்றன. பூமிக்கடியிலே, பொன், கடலிலே முத்து, காட்டிலே சந்தனம், நாட்டிலே மாந்தர், தோள் வலி படைத்தோர், இத்தனையும் இருக்கின்றன. இருந்தும் இங்கே வளமில்லை, வாழ்வில். மக்கள் வாழ வழியில்லை என்ற நிலை!

வாழ, மக்கள் வாழ, வயிறார உண்டு, நல்ல உடை உடுத்து, வசதியாக இருக்க இடம் உடைத்து வாழ வழியில்லை, வகையில்லை!

மக்களிலும், பெரும்பகுதி மக்கள்தான், இந்தக் கீழ் நிலையில் இருந்திடக் காண்கிறோம். சிலர், வெகு சிலர் போகபோகியங்களிலே புரண்டு, செல்வ நீரோடையில் நீந்தி விளையாடி, வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்ந்து காணப்படுகின்றனர்.

உழைக்கும் மக்கள் வாழவில்லை, உயிரைப் பிடித்து நிறுத்த, ஒட்டிய வயிற்றை, ஏதோ கொஞ்சம் நிரப்பி உயிர் வாழ்கின்றனர்.

இந்த உயிர் வாழ்க்கைமுறை அவர்கட்குத் திருப்தியைத் தராவிட்டாலும், அலுப்போ, சலிப்போ இன்றி வாழ்வைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

வாழ்ந்தும் வாழாத நிலை! வளமிருந்தும், வளம் பெறாத வாழ்வு! வாழமுடியாத வாழ்வு! உழைத்தும் உழைப்பின் பயன், பலன் இல்லாத, கிட்டாத கீழ்நிலை!

இத்தகைய பலமுறைகள், மூடநம்பிக்கைகள், அறியாமை; அடிமைத்தனம். அலட்சிய நோக்கு, சலிப்பு, சலிப்பால் ஏற்பட்ட விரக்தி, விரக்தியினால் விளைந்த வெறுப்பு, வாழ்வில்லையே! இது, இந்தத் திரு

நாட்டில் சர்வ சாதாரண நிகழ்ச்சியாக மாறி, பகுத்தறிவு படைத்த மனித வர்க்கத்தை, வெறும் இயந்திரமாக, உழைப்பது, ஏதோ கிடைப்பதை உண்பது, உறங்குவது, மீண்டும் உழைப்பு, உண்ணல், உறக்கம் என்ற முறையிலே மாற்றியமைத்து விட்டிருக்கிறது!

உலகில் பிறந்தோம், மனித இனத்தில், பகுத்தறிவு படைத்த மனித வர்க்கத்தில்! பிறந்தோம், வாழ, வாழப்பிறந்தோம், நாம் வாழ, பிறரும் வாழ, நம்மை நாம் வாழ்வித்துக் கொள்ள, பிறரையும் வாழ்விக்க என்ற கருத்து இல்லை!

‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்’, ‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா,’ என்பன போன்ற மாயா வாதங்களையும், ‘வேதன் விட்ட வழி, நாதன் இட்ட கட்டளை,’ ‘விதியை வெல்வோர் யார்?’ என்ற ஏக்கத்தையும் கொண்டு ‘அன்றெழுதினவன் அழித்து எழுதப்போவதில்லை,’ என்ற வேதாந்தமும் பேசி ‘கொடுத்துவைத்தது அவ்வளவுதான், அவரவர் கர்மப்படிதானே, கிடைக்கும்,’ என்ற அர்த்தமற்ற திருப்தியில் வந்து நின்று தமது சிந்தனைக்குத்தாமே தடையிட்டுக்கொள்ளும் நிலையிலேதான் இன்றைய மக்கள், தமிழர்கள் இருக்கிறார்கள்!

சிந்திக்கத் தமிழர்கள் தவறிவிட்டனர், இப்போது. சிந்தனை செய்து, தம்மையும், தம்மைச் சுற்றியும் ஒரு முறை கூர்ந்து நோக்கி உலகத்தைப்பார்த்து, உள்ளபடி

உணர வேண்டும். அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழமுடியும்; வாழவும் எண்ண, எண்ண அலைகள், சிந்தனைக்குத் தோன்றும், வளரும், வாழ்வு மலரும், மலரவும் முடியும்!

இன்றை சமுதாயம், பழமை என்ற போர்வையினுள்ளே மறைந்து கிடக்கிறது! புதுமையிலும் பழமையைக் கண்டு பூரிக்கக் கற்பிக்கப்படுகின்றனர், மக்கள்!