உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 2 · 2 / 15

வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி, மாறி மாறி வந்ததின் முடிவு, கடைசிக் கூறு, மனித வர்க்கத்தின் இன்றைய நாகரீக வாழ்வு!

பகுத்தறிவு! எதையும் பகுத்து, ஒன்றுக் கொண்டு பிரித்து ஆராய்ந்து பார்த்திடும் பகுத்தறிவே மனித வர்க்கத்தை இன்றைய நாகரீக வாழ்க்கை நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நன்றாக நினைவில் நிறுத்த வேண்டும்.

இந்த நிலையில், பகுத்தறிவு பெற்றுள்ள மனித வர்க்கம் எப்படி வாழ்கிறது என்பதையும், எப்படி வாழ வேண்டிய வர்க்கம் எப்படி யெல்லாம் வாழ்கிறது என்பதையும், எப்படி, வாழ்வை ஒரு சிலர் மட்டும் இன்பக் கேணியாகவும், வேறுபலர் துன்பக் கேணியாகவும் காண்கின்றனர் என்பதையும், பகுத்தறிவே, பகுத்தறிவைப் பாழ் படுத்தி, மனித மிருகங்கள் உண்டாக்கி, இன்பபுரி ஓர் புறத்திலும் துன்பபுரி மற்றோர் புறத்திலும் நாட்டில் வளர்கிறது, வளர்க்கப் படுகிறது என்பதையும், இதற்குப்படிப்பு, பகுத்தறிவுக்கு அரண் செய்யும் அறிவு, அறியாமையை அகற்றி, தெளிவையுண்டாக்கிடும் கல்வி, கேள்வி ஞானங்களைத் தூர்த்திடும் போதனைகள், பழக்க வழக்கத்தால் ஏற்பட்டுள்ள, ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எவையெவை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், திரு நாட்டில் மக்களின் வாழ்க்கை நிலை என்ன? மக்கள் ஒருப்படியாக வாழ்கின்றனரா? மக்கள் மக்களாக, மற்ற உயிரினங்களின் றும் மேம்பட்ட வாழ்வு வாழ்கின்றனரா? இதற்கு அவரவர் பெற்றுள்ள பள்ளி வாழ்க்கை எந்த அளவுக்குத் துணை செய்கிறது, என்பதைக் காண்போம்.

குப்பன் ஒரு குடியானவன். அவனுக்கு வயது ஐம்பதிற்கும் மேலாகிறது. அவன் வயலில் உழுது கொண்டிருக்கிறான். அவனது மூத்தமகன் முத்தன். வயது முப்பதை எட்டிப்பிடிக்கும் நேரம். அவன் அருகே, ஏற்றத்தில் ஏறி இறங்கி நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான், கிணற்றிலிருந்து. அதற்கும் அப்பால் அவன் மனைவி குப்பாயி, களை பிடுங்கிக் கொண்டிருக்கிறாள், வயலில். பக்கத்தில் அவன் தங்கை நாற்று நடுகிறாள். அடுத்த தோப்பில் அவனது கடைசி மகன் கந்தன் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கின்றான்.

அவனது அருமை மருமகள் கருப்பாயி முதலாளி வீட்டில் மிளகாய் அரைத்துக்கொண்டிருக்கிறாள்.

குடும்பம், குடியானக் குடும்பம் முழுதும் ஒருமிக்க உழைக்கிறது! உழைப்பே, நாள் முழுதும் உழைத்து உழைத்துப் பழகிவிட்ட உழைப்பே, இவர்கள் சொத்து, சுகம் எல்லாம்.

உழைத்தால்தான் இவர்கட்கு உணவு, உழைத்தால்தான் இவர்கட்கு உடை, உழைத்தால் தான் இவர்கட்கு

இருக்க இடம், உழைத்தால்தான் இவர்கட்கு உல்லாசம், உழைத்தால்தான் இவர்களுக்கு உறக்கம், உழைத்தால்தான் இந்தக் குடும்பத்திற்கு குதூகலம்.

உழைத்தால்தான் உபத்திரவமற்ற வாழ்க்கை, வாழ வழி, வயிற்றை நிரப்ப வகை, உடுக்க உடை என்ற நிலை. இந்த நிலையிலே இவர்களது வாழ்க்கைத்தரம், நிலை, ஏன், பரம்பரையே, பிறந்தது, வளர்ந்தது, வளர்ந்து கொண்டே போகிறது.

உழைப்பு, உழைப்பிற்காகத் தரப்படும் சிறு ஊதியம்; அதன் மூலம் பெறும் உணவு, உடை, உல்லாசம் இவையே இவர்கட்கு வாழ்க்கை! வாழும் நாள் முழுதும் தங்களது எஜமானன் இட்டவேலையைத் தட்டாது செய்து, அவரது அன்பைப் பெற்று, அவரது அதிகப் பூரிப்பிலே சிந்திடும் சன்மானங்களே, இவர்கட்குப் புதையல்! அவரது சீற்றம், இவரது வாழ்க்கைச் செந்தி. அவரது புன்னகை இவர்கட்குத் திருப்தி, என்ற விதத்திலே, பிறருக்காக, அதிலும் தங்களுடைய முதலாளியின் மகிழ்ச்சிக்காக, வளப்பத்திற்காகவே வாழ்ந்து, அவரது மிதமிஞ்சிய சுகத்தில் சிதறிய சிறு துளிகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இப்படிப்பட்ட குடும்பத்தினர் பள்ளி வாழ்க்கை பற்றிய எண்ணங்கொள்ள, ஏதாவது நேரமோ, சந்தர்ப்பமோ, அல்லது வசதியோ இருக்கிறதா? படித்தால் மட்டும் விரலிலே அழுக்குப்படாது வாழ முடியுமா?

என்றைக்கிருந்தாலும் விரலிலே மண் பட வேலை செய்யப் போகிறவன்தானே, படிப்பு எதற்கு, என்று படிப்பை, கல்வியறிவை அலட்சியம் செய்யுமளவுக்கு அவர்களது வாழ்க்கை அமைந்திருக்கிறது.

இதே குப்பன், வேலை செய்யும் அந்தப் பண்ணையில் கணக்கப்பிள்ளை, காரியஸ்தர் வேலை பார்ப்பவர் குடும்பம் வேறு விதமாக இருக்கும். அவர்கள் சிறிது எழுத்து வாசனை பெற்றிருப்பார். அதுவும் ஏதோபடித்து, கணக்கு வழக்கு எழுதி நாலுகாசு சம்பாதிக்கப் போதுமான தமிழ்க் கணக்கு மட்டுமாவது தெரிந்து வைத்திருப்பார். அந்த அளவிலே அவர்கள் ‘பள்ளி வாழ்க்கை’ யைப் பற்றி நினைப்பார்; நினைக்க முடிகிறது! நினைத்திடும் நிர்பந்த நிலையிலே நிற்கிறார்கள்!

வாழ்க்கைக்கு வழிதேடி என்ற அளவிலே ‘பள்ளி வாழ்க்கை’ தோன்றி முடிகிறது, இதுபோன்ற நடுத்தர வகுப்பாரிடையே!

அதே இடத்தில் வியாபாரியின் வீட்டுப் பிள்ளை வியாபாரத்திற்கான கடிதப்போக்கு வரத்துக்குத் தேவையான அளவோடு கல்வியறிவைப் பெறுவதிலே திருப்தியடைகிறான்! ஒரு சிலர் உத்தியோகம் பெற்று, ஊதியம் பெறுமளவுக்குப் படிக்கிறார்கள். முடிந்தவர் கல்லூரி சென்று கலைகள் பல கற்று, பல துறைகளிலும் முன்னேறுகின்றனர். பண்ணையார் குடும்பம் பெருமைக்காகவாவது பள்ளிசென்று வருகிறது.

பார்ப்பனர் பரம்பரைப் பழக்கத்தால் படிக்கத் தவறுவதே கிடையாது.

பொதுவில் கல்வியறிவு தேவை, என்ற உணர்ச்சி பலரிடம் தோன்றவே இல்லை! ஆனால் எங்கும் கல்விக்கு கண்ணியமான வரவேற்பு, வாழ்த்து இருப்பதைக் காண்கிறோம். படிக்கச் சாதகமான சூழ்நிலை, வாழ்க்கை வளம், தேவைக்கேற்ற படிப்பு, படித்தால்தான் வாழ்க்கைக்கு வழி, பெருமைக்குப் படித்தல், படிப்பின் பயன் தெரிந்து படித்தல் என்று பலப்பல முறைகளிலே பலர் பலவிதமாகப் ‘பள்ளி வாழ்க்கை’யில் நுழைகின்றனர்.

பள்ளி வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம் ஆரம்பக் கல்வி (Elementary School) ஆரம்பப் பள்ளி.

மனிதன் எழுத்து வாசனையைத் தெரிந்துகொள்ள எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள, எழுதப் படிக்க அவசியமான எழுத்துக்களைத் தெரிந்து, புரிந்து கொள்ள, சுருங்கக் கூறுமிடத்து கல்வியின் அடிப்படையே ஆரம்பக் கல்விதான்.

ஆரம்பக்கல்வி அதிக அளவில் சர்வசாதாரணமாக கிராமாந்திரங்களில் உள்ள திண்ணைப்பள்ளியிலிருந்து ஆரம்பித்து, பெரிய பெரிய நகராண்மைக் கழகங்களில் உள்ள ஆரம்பக் கல்வி நிலையங்கள் வரையிலே பலப்பல விதங்களிலே இருக்கின்றன.

ஆரம்பக் கல்வி நிலையங்களிலே ஒரு சில வகுப்புக்கள் இருக்கின்றன. அங்கு படிக்குமளவு, சாதாரண அறிவு பெற முடிகிறது, இந்தக் கட்டத்தோடு நிற்கும் மக்கள் அளவு ஏராளம். ஏதோ எழுத்துப் படிக்கத் தெரிந்து கொண்டது, நம் குழந்தை என்ற அளவுடன் திருப்தியடைந்து குழந்தைகள் வேறு துறைகளிலே, கடையிலோ, மண்டியிலோ வீட்டு வயிற்றுத் தீனிக்கு வழிதேடும்படி விட்டிடும் பெற்றோர் ஏராளம்.

இந்தக் கட்டத்தை, ஆரம்பக் கல்வியைத் தாண்டி, மத்தியதரக் கல்வி நிலையங்கள் (Middle Schools) சென்று, அங்கு அளவு கல்வி கற்று நின்றுவிடுவர், பள்ளி வாழ்க்கையை விட்டு வெளியேறுவோர் பலர் உண்டு.

மூன்றாவது கட்டமான, உயர்தரக் கல்வி நிலையத்தில் (High School) புகுந்து படித்துத் தேறுவோர் சிலர்தான் இருப்பர். படிக்கும் வசதி, பணவசதி, குடும்பத்தின் சூழ்நிலை இவையாவற்றையும் கடந்து, இந்தக் கட்டத்தை எட்டிப்பிடிப்போர் ஆரம்பக் கல்வியிலிருந்து வரைவிட மிக மிகக் குறைந்த தொகையினராய் இருக்கிறார்கள்.

உயர்தரக் கல்வி கற்ற உடனே உத்தியோக வேட்டையில் ஈடுபடுவோர் தொகை ஏராளமாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பகுதியோடு ‘பள்ளி வாழ்க்கை’ யை விட்டு நீங்குவோர், வெறும்

வேலை தேடிகளாகத்தான் நமது நாட்டில் இருக்கின்றனர்.

இந்தப் பருவத்தைக் கடந்து கல்லூரி (College) செல்லும் வாய்ப்பு பெற்றிடும் இளைஞர் தொகை மிகச் சொற்பமே. கல்லூரி சென்று கலைகள் பல கற்றுத் தேர்ந்து, கல்லூரன் என்ற பட்டம் பூண்டு வெளியேறும் மாணவர்களிலும் பெரும்பகுதியினர், வேலை தேடி அலையத்தான் செய்கின்றனர்.

அடுத்து தொழிற் கல்லூரி (Industrial College) பொறியற் கல்லூரி, (Engineering College) மருத்துவக் கல்லூரி, (Medical College) சட்டக் கல்லூரி (Law College) விவசாயக் கல்லூரி (Agricultural College) போன்றவற்றில் தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திடும் வசதியும் வாய்ப்பும் பெற்றுள்ளவர், கல்லூரி செல்லும் மாணவர் தொகையில், மிகமிகக் குறைவானவர்கள்தான்.