உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 1 · 1 / 15

பள்ளி வாழ்க்கை

பள்ளி வாழ்க்கை! மனித வாழ்க்கையிலே வளமான ஒரு பகுதி! மனிதரின் வாழ்வை வளப்படுத்தும் பகுதி, வகைப்படுத்தும் பகுதியாகும்!

மனித இனம் உலகில் பிறந்து வளர்ந்து, பழகிப் பருவங்கடந்து, பாலப் பருவந்தொடங்கிடும் நேரத்திலே பள்ளி வாழ்க்கையும் தொடங்குகிறது!

பள்ளி வாழ்க்கை புகும்பேறு, ஆம்! இதனைப் பேறு, பாக்கியம் என்றுதான் குறிப்பிடவேண்டும், வெகு சிலருக்குத்தான் இந்த நாட்டில் கிடைக்கிறது, கிடைக்கும் வசதி, வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், வாழ்க்கை வசதி அமைந்திருக்கிறது.

பள்ளி வாழ்க்கை புகுந்து, பாடங்கள் பல பயின்று, படிக்கத் தெரிந்து பல நூல்களைக் கற்றுத் தெரிந்து, கவிதைக் கடலில், காவியரசத்தில் மூழ்கியெழுந்து, விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் போன்ற பல பிரிவுகளையும் ஆராய்ந்து தெளிந்து, கற்றோனாக, கல்லூரனாக, கவியாக, கதாசிரியனாக, கட்டுரையாசிரியனாக, ஊருக்கு உபதேசித்திடும் உத்தமனாக வெளிவரும் பேறு, பாக்கியம் பெறும் மனிதக் குழந்தைகள் மிகமிகக் குறைவு! மிகச் சொற்பம்!

ஏன்?

வாழ்பவர் பலர், ஆனால் படிப்பவர், படித்தவர் வெகு சிலர், ஏன்? என்ன காரணம்?

படிப்பது பாவமென்ற எண்ணமா? படிப்பதற்குத் தடையா? என்ன?

ஏன், படித்தவர் குறைவு? இங்கே மட்டும்? இந்த நாட்டில் மட்டும்!

கல்விக் கடவுளாம் சரஸ்வதிதேவியார் வாழ்ந்திடும் நாடு இதுதானே? ‘கல்வியிற் பெரியவன் கம்பன்’ என்ற பழமொழி வழங்கிடும் நாடல்லவா, இது? ஏன் இங்கே கல்விப் பஞ்சம், பள்ளி வாழ்க்கை புகா மாந்தர் அதிகம்? எதனால்?

கல்வி பற்றிய கருத்துக் குறைவா? கல்வியைப் போற்றிடும் கருத்தற்றவர்களா, இங்கு வாழ்ந்திடும் மக்கள்? கற்றோரைப் போற்றும் மதி குறைந்தவர்களா?

அன்றி படிப்பது பாவம் என்ற பண்புதான் படைத்தவர்களா? அல்ல, அல்ல. பின் என்ன காரணம் இந்தத் தற்குறித் தன்மைக்கு?

**பள்ளி வாழ்க்கை** என்பதை மட்டும் மேலெழுந்த வாரியாகக் கவனித்தால் இதற்கு விடை காணமுடியாது, கிடைக்கவும் கிடைக்காது!

பள்ளி—பள்ளிக்கூடம், படிக்குமிடம், செல்ல, செல்லும் வசதிபெற்ற வாழ்வு, பள்ளி செல்லும் நேரத்திலே, வேறு வேலை செய்திட வேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலையில், பரம்பரையில், பிறந்திடாது, வளமான வாழ்க்கையும், வசதியான சூழ்நிலையும், பணக்காரப் பரம்பரையில் தோன்றியவர் மட்டுமே, (ஒரு சிலர் தவிர, அதுவும் மிக மிகச் சிலர்தான்.) பள்ளி வாழ்க்கை தொடங்குவர், தொடங்குகின்றனர், இந்த நாட்டில்!

மற்றவர், வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்” என்ற எண்ணத்துடனேயே, “ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், என்று வாழ்வில் ஏதும் பிடிப்பின்றி வறண்ட வாழ்க்கையிலே உழன்று, சுழன்று வாழ்வையெல்லாம் நடைப் பிணங்களாகக் கழித்து முடிக்கின்றனர்!

வாழ்வில், சுவையின்றி, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாடு துளியுமின்றி ஏதோ வாழ்கிறோம், என்ற சலிப்புடன், சத்தற்ற வாழ்க்கை நடத்துகின்றனர், நாட்டின் பெரும்பாலான மக்கள்!

எனவே, பள்ளி வாழ்க்கை என்பதைப் பற்றிப் பேசப் புகுமுன், வாழ்க்கை, வாழ்க்கைத் தரம், வாழ்க்கைப் பயன் என்பனபற்றி நாம் தெரிந்து, நன்கு புரிந்து கொள்ளவேண்டிய அவசியத்திலிருக்கிறோம்!

வாழ்க்கை! அதிலும் மனித வாழ்க்கை, மற்ற வாழ்க்கைகளிலிருந்தும் வேறுபட்டது, முற்றிலும் மாறுபட்டதுங் கூட!

உலகில் எவையெவையோ பிறக்கின்றன, வாழவும் வாழ்கின்றன! காடை, கெளதாரி, மைனா, புறா, கிளி, கழுகு, ஆந்தைபோன்ற பறவையினங்கள்; புலி, சிங்கம், கரடி, யானை, மான், முயல், பன்றி, நாய், நரி, பூனை, எலி, இன்னபிற மிருக வகைகள், முதலை, மீன், தவளை, நண்டு போன்ற நீரில் வாழும் உயிரினங்களும், பாம்பு, நத்தை, ஆமை முதலிய நீரிலும் நிலத்திலும் வாழ்ந்திடும் இனங்களும், இன்னும் எத்தனையோ வகையானவை வாழ்கின்றன.

இத்தகைய பிற இனங்களிலிருந்து, வேறான, மாறுபட்ட மனித இனம், மற்றெல்லா உயிரினங்களையும் அடக்கி, ஒடுக்கி, தனக்கு உபயோகப்படும் வகையில் மாற்றி, திருத்தி வாழ்ந்து வருகிறது!

உயிர் வாழ்க்கை நடத்தும் மற்ற இன, உயிர்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடு, மாறுபாடு, மகத்தானது, மிக மிகப்பெரியது. மனிதன் மற்ற உயிரினங்களைவிட

உயர்வு, அதிகப்படியான ஒரு அறிவு—பகுத்தறிவுகொண்ட இனமாகும்.

மற்ற உயிரினங்களிலிருந்தும், உயரிய பண்பு, பகுத்தறிந்திடும் பண்பு, நன்மை—தீமை, தேவையானவை,—தேவையற்றவை, வேண்டியவை—வேண்டாதவை, இந்த வழி சென்றால் இடர் உண்டாகும், அந்த வழி சென்றால் இன்னல் ஏற்படாது—இன்பந்தரும் என்ற தன்மை, சூழ்நிலையை, சுற்றுச் சார்பை ஆராய்ந்தறின்—பகுத்தறிவு பெற்றது, மனித இனம்!

மனித இனம் பகுத்தறிவுடன் பிறக்கிறது, எங்கும்! பிறந்த மனித இனம், பிறந்த இடத்திற் கேற்ற சுற்றுச் சார்பு, தட்பவெப்பம், முதலிய சூழ்நிலைக்கேற்ப பல விதங்களிலே, முறைகளிலே வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறது. அதுமட்டுமல்ல, சுற்றுச்சார்பை, சூழ்நிலையை மாற்றி, முன்னேறுகிறது. தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, தட்ப வெட்ப நிலைகளையும் மாற்றி, தனக்கு உதவியாக, தனக்குச் சாதகமான முறையிலே மாற்றியும் அமைத்துக்கொள்கிறது!

ஆரம்பத்தில் மனித இனம் காட்டுமிராண்டித் தனமாகக் காட்டிலும், மேட்டிலும், ஆற்றிலும், சேற்றிலும், காற்றிலும்; கடுங்களரிலும் திரிந்துகொண்டிருந்தது. பிறந்த காலத்திலே மனித இனம் அலைந்து கொண்டிருந்த காலமும் உண்டு. நாளாவட்டத்தில்,

மரத்தழை, இலை, மரப் பட்டைகளைக்கொண்டு தனது உடல் மறைத்து நாகரீக வாழ்வு வாழக் கற்றுக்கொண்டது. இருக்க ஓர் குறிப்பிட்ட இடமுமின்றி அலைந்தவர்கள் மலைக் குகைகளில் வாழ்ந்து, பின்னர் இலை, தழைகளால் ஆன குடிசைகளையும், பின்னர் மூங்கில் போன்றவற்றினால் ஆன குடிசைகளையும் கட்டிக்கொண்டு நாரினாலும், நல்ல தோலினாலும் ஆன ஆடைகளை அணிந்து வாழத் தொடங்கினர்.

தனித்தனியே அலைந்த பலர், கூடி, ஒரு கும்பலாக, ஒரு சேர, ஒருங்கே பல வீடுகளைக் கட்டி வாழத்தலைப்பட்டனர். கும்பல், பல கும்பல்களாக மாறி, பல குடும்பங்கள், பல சமூகங்களாக மாறி, பல சமூகங்கள் சமுதாயங்களாக மாறி, பல சமுதாயங்கள் பல இனங்களாக மாறி, பல இனங்கள் பல நாடுகளாக மாறி ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாகரீக வளர்ச்சிக் கட்டத்திலும், மனித இனம் வாழ்வில் ஒழுங்கு பெற்று, அதாவது பழக்க வழக்கம், படிக்கும் முறை, வாழ்க்கைத் துணை முறை, ஆண் பெண் உறவு முறை, ஆடை அணி அணியும் வகை, வழி, தற்காப்புப் பயிற்சி, தன்னடக்கம், சமூகக் கட்டுப்பாடு, சமுதாய, இன முன்னேற்றம், நாடு, நாட்டுப்பற்று, பாதுகாப்பு, சமூக, சமுதாயத் தலைவர்கள், நாட்டாண்மைக்காரன்.

நாட்டின் தலைவன், அரசன், குரு என்ற முறையிலே வளர்ந்து, இன்றைய நிலைமைக்குப் படிப் படியாக, பற்பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. இத்தகைய பல படிக்கட்டுகளை பற்பல