நாம் ஒரே சாதி - தமிழ்ச்சாதி!
பகுதி 4 · 4 / 5
இன்றைய தினம் மாணவர்களுடைய கவலை இன்னும் வேதனையோடு சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு கல்லூரியிலேயும் - பல்கலைக் கழகமானாலும் - கல்லூரியானாலும் அல்லது வேறு
கல்விக் கூடங்களானாலும் அங்கெல்லாம் மாணவர்கள் எந்த வகையிலே பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்? ஒரு காலத்திலே வ.வே.சு. அய்யர் அவர்கள் சேரன்மாதேவியிலே நடத்திய குருகுலத்தில், மாணவர்களை ஜாதிவாரியாகப் பிரித்து, அவர்களுக்கு சமபந்தி உணவு படைக்கமாட்டேன் என்று சொன்ன காரணத்திற்காக காங்கிரஸ் இயக்கத்திலேயே பெரும் தளபதியாக விளங்கிய பெரியார் ராமசாமி, வ.வே.சு. அய்யர் அவர்களை எதிர்த்து சேரன்மாதேவியிலே போராட்டம் நடத்தி அந்த இயக்கத்திலிருந்தே வெளியேறக்கூடிய நிலைமை உருவாயிற்று ஒரு காலத்தில்.
அதற்குப் பிறகு குடந்தையிலே தண்ணீர் குடிப்பதிலேகூட வேறுபாடு.
இன்னின்ன ஜாதிக்கார மாணவர்கள் இன்னின்ன பானைகளிலே தண்ணீர் குடித்தாக வேண்டும். இந்தப் பானையிலே அவர் கைபடக்கூடாது; அந்தப் பானையிலே அவர் கைபடக்கூடாது என்கிற அளவிற்கு ஜாதிப் பாகுபாடு குடந்தை கல்லூரியிலே தோன்றி அதற்காக ஒரு போராட்டமே ஏற்பட்டது.
இது குடந்தை, சேரன்மாதேவி என்று நான் குறிப்பிட்ட இந்த இரண்டு ஊர்களோடு மாத்திரமல்ல; நாடு தழுவிய ஒரு நிலையாக இருந்தது.
அவைகள் எல்லாம் போக்கப்பட்டதான் இந்த நாட்டிலே உள்ள பெரியவர்கள், தியாகிகள், சீர்திருத்தவாதிகள், புரட்சிக்காரர்கள், சமுதாய மறுமலர்ச்சியை விரும்பியவர்கள் போரிட்டார்கள் - வென்றார்கள்.
ஆனால் இன்றைக்கு நிலை என்ன? இன்றைக்கு நம்மை வேறு யாரும் பிரிக்க வேண்டாம்; நம்மை நாமே பிரித்துக்கொள்கிறோம்.
எந்தக் கல்லூரியானாலும் அல்லது எந்தக் கல்விக் கூடமானாலும் பல்கலைக் கழகமானாலும், அங்கெல்லாம் மாணவர்கள் எத்தனை ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கின்றார்கள்? ஜாதிகளாகப் பிரிந்து கிடப்பது இட ஒதுக்கீடுகளைப் பெறுகிற வரையிலே தேவையானது என்றாலும்கூட, இதய ஒதுக்கீட்டைப் பொறுத்த வரையிலே அது சரியல்ல என்பதைத்தான் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
“ஜாதியிலே, மதங்களிலே, சாத்திரச் சந்தடியிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்” என்று வடலூர் வள்ளலார் பாடினார்.
அந்த வள்ளலார் வாழ்ந்த மாவட்டத்திலேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
வள்ளலாருக்கு விழா எடுக்கின்றோம்; பூசத் திருவிழா நடத்துகின்றோம்; ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை’ என்றெல்லாம் சொல்லுகின்றோம்.
நம்முடைய பெரியவர் சண்முகனார் அவர்களுக்குக் கூட கொஞ்ச காலமாக வள்ளலார்மீது பற்று மிகுந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். நம்பிடவில்லை. மேடையிலே கண்டேன். அந்த அளவிற்கு வள்ளலாருடைய கருத்தை எடுத்துச் சொல்லுகிற நாம் அதைப் பின்பற்றத் தயாராக இருக்கின்றோமா?
‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை’ என்று ஆரம்பித்து எந்தக் கொள்கைகளை வள்ளலார் நாட்டுக்குச் சொல்ல முற்பட்டாரோ அந்த புரட்சிகரமான கொள்கைகளையெல்லாம் மறைத்துவிட்டு அவைகள் எல்லாம் ஆறாம் திருமுறை என்று - ஆறாம் திருமுறைக்கு ஒதுக்கிவிட்டு அவர் கடவுளைப் பற்றி என்னென்ன பாடினார்?
என்னென்ன தெய்வங்களைப் பற்றிப் பாடினார் என்பதை மாத்திரமே மக்களிடத்தில் எடுத்து
வைத்து உண்மையான வள்ளலாரை - உண்மையான இராமலிங்க அடிகளை - மறைப்பதிலே நாம் சாமர்த்தியசாலிகளாக இருந்திருக்கிறோமேயல்லாமல், அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுவதிலே நாம் உண்மையானவர்களாக இருந்திடவில்லை.
பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று குழந்தைக்கே சொன்னார். ஆனால் நாம் குமார்களுக்கு, குமரிகளுக்கே சொல்ல வேண்டிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறதே ஏன்?
நான் என்ன ஜாதி முதலியாரா? பார்ப்பனரா என்று இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் காணுகின்ற நிலையை விட - நாம் அத்தனை பேரும் என்ன ஜாதி? தமிழ்ச்சாதியல்லவா?
கரிகால் பெருவளத்தானின் வாழையடி வாழையாக வந்தவர்கள் அல்லவா!
பாண்டியன் நெடுஞ்செழியனுடைய பரம்பரை அல்லவா? சேரன் செங்குட்டுவனின் சந்ததியல்லவா?
எத்தகைய சந்ததி?
எத்தகைய முன்னோர்கள்?
நான் முதலிலே குறிப்பிட்டேனே காவேரி, அந்தக் காவேரிக்கு கல்லணை என்கிற இடத்திலே அணை எடுத்தானே திருமாவளவன் கரிகால் பெருவளத்தான்; அந்த அணையைக் கட்ட - காவேரியின் கரையை உயர்த்த - அவன் இலங்கைக்கு வரை சென்று பன்னீராயிரம் சிங்களவர்களை வென்று அவர்களைக் கைதிகளாக ஆக்கிக் கொண்டு தமிழகத்திற்கு வந்து, அந்தக் கைதிகளைக் கொண்டு காவேரிக்கு அணை கட்டினான் என்பது நம்முடைய வரலாறு.
கண்ணகிக்குச் சிலை வைக்க வேண்டும்! எங்கே கல் எடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் சேரன் செங்குட்டுவன். அந்த நேரத்திலேதான் “காவா நாவிற் கனக விசயரும், ஈங்குமன்னர் தம்முடன் கூடி அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலராகி, செப்பிய மொழிகளை சேரனுக் குணர்த்துவேன்” என்று - வடபுலம் சென்ற ஒரு புலவன் திரும்பி வந்து “மன்னவரே!
சேரரே! நான் வடபுலம் சென்றிருந்தேன். அங்கே கனகன், விசயன் என்ற இரண்டு மன்னர்கள் தங்களுடைய இருப்புக்கூடத்திலே பேசியதை காதால் கேட்டேன்” என்றார்.
“என்ன கேட்டாய்” என்று வினவியபோது, அந்தப் புலவர் சொன்னார். “தமிழகத்திலே உள்ள மன்னர்கள் இமயம் வரையிலே படை எடுத்தார்களாம். என்ன காரணம் தெரியுமா? எம்போல் மன்னர்கள் அப்பொழுது இங்கே இல்லையென்றாலும்; அதனால் படையெடுத்தார்கள். புலி, வில், கயல் என்ற இலச்சினைகளை இமயத்தின் நெற்றியிலே பொறித்தார்கள். காரணம் எங்களைப் போன்ற மன்னர்கள் இல்லாததுதான் என்று இழித்துரைத்தார்கள்” என்று சொன்னதும் சேரன் செங்குட்டுவன் வீறுகொண்டெழுந்தான்.
எழுந்த நேரத்திலே அந்த அவையிலே இருந்த ஒரு நிமித்திகன் கேட்டான்: “சேர மன்னா! கனகனும் விசயனும் இழந்தது தமிழ்நாட்டு மன்னர்கள் அத்தனை பேரையும் தான். ஆனால் உனக்கு மாத்திரம் கோபம் வருவானேன்!” என்றான். செங்குட்டுவன் “தமிழன் என்பதால்!”
என்று சொன்னான்.
பாண்டியனுக்கோ, சோழனுக்கோ வராத கோபம்தான், உனக்கேன் என்று கேட்டபோது, தமிழன் என்பதால் அவர்களுக்கும் நான் போர்முரசம் கொட்டுகிறேன் என்று சொல்லி தும்பிவாடி, தோரணப்பட்டு,
கோட்டையிலே உள்ள வீரர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வடபுலம் சென்று, இமயமலைக்கு அருகாமையிலே உள்ள குயிலாலுவத்திலே கனகனையும், விசயனையும் வென்று, அவர்கள் துறவிகளாக உருவம் மாற்றிக் கொண்டு ஓடிய நேரத்தில் அவர்களைக் கைது செய்து - கைது செய்யப்பட்டவர்களை மன்னர் முன் கொண்டுவந்து நிறுத்தியபோது கண்ணகிக்குச் சிலை வடிக்க இங்கே கல் எடுங்கள்! என்று கல்லைப் பெயர்க்கச் சொல்லி அந்தக் கல்லைச் சுமந்து தமிழகத்திற்கு வருவதற்கு நல்ல எருமைகள் கிடைத்து விட்டன.
இவர்களுடைய தலையிலே ஏற்றி அந்தக் கல்லைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று கொண்டு வந்து கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் நம்முடைய மூதாதை!
