நாம் ஒரே சாதி - தமிழ்ச்சாதி!
பகுதி 5 · 5 / 5
அதை எண்ணிப் பார்க்கிறோமா?
‘நீதி வளைந்தது’ எனக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் காவியத் திரு, ஆவி குடிபோன வடிவம் கொண்டு, கையில் தனிச் சிலம்போடு பாண்டியனுடைய கொலு மண்டபத்திற்குள்ளேயே வந்து ‘என் கணவன் கள்வன் அல்ல!’ என்று நீதிக்காகப் போராடி - வாதாடி வென்ற நேரத்தில் நான்தான் கள்வன் - நான்தான் திருடன் என்று கூறி உயிர்விட்டு வளைந்த செங்கோலை நிமிர்த்திக் கொண்டான் நெடுஞ்செழியப் பாண்டியன்.
அவன் வளைந்த செங்கோலை நிமிர்த்திக் கொண்டான். அந்த நெடுஞ்செழிய பாண்டியனுடைய வாரிசுகளா நாம்? எண்ணிப் பார்க்கிறோமா?
எனவே ஒரு காலத்திலே தமிழகம் எப்படி தழைத்தோங்கி நின்றது! வீரமணம் கமழ்ந்தது! அதற்குப் பிறகு பொலிவிழந்து போன தமிழகத்திலேகூடப் பிறகாலச் சோழர்கள் உருவானார்கள்.
ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் கடற்படை நடத்தினார்கள். கடாரம் வரையிலே சென்றார்கள்; வென்றார்கள் என்பதுதான் நம்முடைய வரலாறு.
அந்த வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாம் இன்றைக்கு கவலைப்படுவதில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் ‘நாம்’ என்றால் என்னையும் சேர்த்துச் சொல்வதாக நீங்கள் எண்ணிக் கொள்ளாதீர்கள். அருமை மாணவக் கண்மணிகளைப் பற்றித்தான் சொல்லுகிறேன்.
நாம் கவலைப்படுவதெல்லாம் அணிகின்ற உடை எப்படி இருக்க வேண்டும்? நம்முடைய தலை எவ்வாறு வாரிவிடப்பட வேண்டும்? எப்படி எப்படி புதிய நாகரிகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன? அந்தச் சிந்தனை வேகத்திற்கு தகுந்தவாறு அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்க முனைகிறோமேயல்லாமல், நம்முடைய பழம்பெரும் நாகரிகம் வீழ்ந்து விட்டதே - அந்த நாகரிகம் வீழ்ந்து கிடக்கின்ற பள்ளத்தாக்கிலே இருந்து அதை வெளியே எடுத்து ஒளி உலகத்திற்குக் கொண்டு வர வேண்டுமே என்கிற எண்ணம் சிறிதும் இல்லாமல் இன்றைக்கு மாணவமணிகள் இருக்கின்றார்கள்.
அவர்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும். அந்தக் காலத்திலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டேனே பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ என்று அழைத்தார்களே அந்தக் காலத்திலே எத்தனை எத்தனை மாணவர்கள் தமிழ் உணர்வு கொண்டிருந்தார்கள். எத்தனையெத்தனை மாணவர்கள் தமிழ் இன உணர்வு கொண்டிருந்தார்கள்!
இன்றைக்கு அந்த மொழி உணர்வும் - இன உணர்வும் அற்றுப் போகின்ற அளவிற்கு ‘ஜாதிப்பித்து’
என்கிற உணர்வு மாணவர்களை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அல்லது முன்னேறியோர் என்கிற இந்த மூன்று பிரிவினர் தான் நாட்டிலே இருக்க வேண்டும். அதுவும் ஒரு காலவரையறை வரையிலேதான்.
பிற்படுத்தப்பட்டோர் எல்லாம் இன்றைக்கு முன்னேறியிருக்கின்ற மற்றவர்கள் அளவிற்கு - முன்னேறுகின்ற அந்தக் காலவரையறையிலே அது இன்னும் நூறாண்டு காலம்கூட ஆகலாம்; இருநூறாண்டு காலம்கூட ஆகலாம். ஆனால் அது வரையில் அவர்களுக்கு ஏற்ற இட ஒதுக்கீடு தேவைதான். ஆனால் அவர்களுக்குள்ளே சண்டை சச்சரவுகள் தேவையா? மோதல்கள் தேவையா?
அன்றைக்கு எழுதி வைத்தார்கள் புராணத்தில் - பிரும்மாவினுடைய தலையிலே பிறந்தவர்கள் இவர்கள்; தோளிலே பிறந்தவர்கள் இவர்கள்; தொடையிலே பிறந்தவர்கள் இவர்கள்; காலிலே பிறந்தவர்கள் இவர்கள்.
காலிலே பிறந்தவர்கள் தான் பெரும்பான்மையான நாம்!
காலிலே பிறந்தவர்கள் நாம் - நாம் அத்தனை பேர்களும் காலிலே தான் பிறந்தோம் அந்தக் காலத்துப் புராணத்தின் கூற்றுப்படி! எல்லோரும் காலிலே பிறந்திருக்கும் போது நாம் ஏன் ஒருவருக்கொருவர் கலகம் செய்து கொள்ள வேண்டும் என்று காலிலே பிறந்த நாம் ‘நீ பெருவிரலிலே பிறந்தாய், நீ அடுத்த விரலிலே பிறந்தாய், நீ நடுவிரலிலே பிறந்தாய், நீ சுண்டு விரலிலே பிறந்தாய்’ என்று காலிலே எந்த விரலிலே பிறந்தோம் என்று நமக்குள்ளே சண்டை போட்டுக் கொள்வது தேவைத்தானா என்பதை எனது அருமை மாணவக் கண்மணிகளே நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
நான் மாணவர்களுக்கு மாத்திரம் இந்த வேண்டுகோளை விடவில்லை. பெரியவர்களுக்கும் சொல்லுகிறேன். தமிழகத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்றைக்கு ஜாதிப் பூசல்கள் - சமயச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன.
அவைகளுக்கெல்லாம் காரணம் இன்றைக்கு வளர்ந்து வருகின்ற இளம் தலைமுறை. அந்த இளம் தலைமுறையினுடைய உள்ளத்தில் நச்சு விதைகள் ஊன்றப்படுகின்றன. அந்த ஊன்றப்பட்ட விதைகளை எல்லாம் எடுத்து எறிந்திட வேண்டும்.
நம்முடைய வீரம் செறிந்த வரலாறுகளை மாணவர்கள் படித்திட வேண்டும். நம்முடைய மாணவர்கள் ஒரு காலத்திலே கவிதை எழுதினார்கள்.
“சேரர்கள் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே? வீரர் பாண்டிய அரசு ஏன் கவிழ்ந்தது? சோழர் உலவிய சோலைவிலா நாட்டில், கோழை கொள்கை குவிந்தது எவ்விதம்? வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில்”
என்று கவிதை எழுதப்பட்ட நாடு இந்த நாடு!
மாணவப் பருவத்திலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பார்த்து எங்களுடைய மாணவர் மன்றத்திற்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டபோது,
“தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்காண் வன்மையோடும் உண்மையோடும் வாழ்ந்திடுங்காண் மக்களிடை எழுச்சிக்கு மருந்தாகுங்காண் கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம் கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை”
என்று எழுதிய பாரதிதாசனுடைய அந்தப் பாடலை இன்னமும் நான் எண்ணியெண்ணிச் சுவைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காலம் இனி திரும்பி வராதா என்கிற அப்படிப்பட்ட அந்த உணர்வு மாணவர்களுடைய உள்ளத்திலே இன்றைக்கு வேர் விட்டுக் கிளம்பியிருக்கிறதா? பீறிட்டு எழுகிறதா?
வேதனையோடுதான் நான் கேட்கிறேன்.
எனவேதான் மாணவர்களை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வேன் - அப்படிப்பட்ட உணர்வுகளை நீங்கள் பெற்றாக வேண்டும்.
சாதி சமயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிட நீங்கள் பாடுபட வேண்டும்.
பகுத்தறிவு மணம் கமழ்கின்ற ஒரு சமுதாயத்தை - ஒளிவிடும் சமுதாயத்தை உருவாக்கிட நீங்கள் பாடுபட்டாக வேண்டும். அப்படிப்பட்ட பெரும் பணிகளிலே உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாமல் - வகுப்புக் கலவரம் - ஜாதிக்கலவரம் என்கிற இந்தப் பேதங்களை வளர்த்துக் கொள்ளக்கூடாது. இதைத்தான் இந்த மாணவர் பேரவையினுடைய நிறைவு விழாவில் - இந்தக் கல்லூரியினுடைய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
11.4.82 அன்று விழுப்புரம் அரசினர் கலைக் கல்லூரியில் ஆற்றிய உரை.
