உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

நாம் ஒரே சாதி - தமிழ்ச்சாதி!

பகுதி 3 · 3 / 5

இவைகள் எல்லாம் விதிவிலக்கு - விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆகமாட்டா! அதை மனதிலே பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

எனவே விதிவிலக்குகளையே உங்களுடைய வழிகாட்டிகளாக நீங்கள் பின்பற்றிடக்கூடாது.

ஏதோ நூற்றிலே ஒன்று ஆயிரத்திலே ஒன்று இப்படி இருக்கலாம். அதற்காக நாமும் படிக்காமல் இருந்தால் - நாமும் தேர்வு எழுதாமல் இருந்தால் நாமும் படிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால் மேன்மை பெறலாம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.

பெரியார் ராமசாமி கல்லூரிக்குச் சென்றவரா? இந்தக் கேள்வியை எழுப்பி உங்களுக்கு ஒரு கேடயத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.

பெருந்தலைவர் காமராசர் கல்லூரியிலே படித்தவரா? இந்தக் கேள்வியை எழுப்பி உங்களுக்கு ஒரு கவசத்தைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.

எனவே படிப்பு என்பது வேறு; அறிவு என்பது வேறு. ஆனால் இரண்டிற்கும் தொடர்பு உண்டு. இரண்டும் இணைகின்ற நேரத்தில் அறிவு மெருகேறுகிறது. அதைப் போலவே படிப்பும் அறிவின் காரணமாக பட்டை தீட்டப்பட்ட வைரமாக மாறுகிறது.

இந்த இரண்டும் இணையவில்லையே என்கிற ஆதங்கம் இன்றைக்கும் எனக்குண்டு. இருந்தாலும்கூட இனிமேல் இளமை திரும்பி வரப்போகிறதா? இனியொரு மாணவப்பருவம் நமக்கு ஏற்படப் போகிறதா? எனக்கு அடுத்த ஜென்மத்திலே நம்பிக்கையில்லை. அடுத்த ஜென்மத்திலே மீண்டும் பிறந்து - பிறந்த பிறகு மாணவனாகப் பள்ளிக்குச் சென்று ஒழுங்காகப் படித்துத் தேரி - கல்லூரிக்குச் சென்று கல்லூரியிலே முதல்தர மாணவனாகத் தகுதியும் பெருமையும் பெற்று எனக்குளும் எடுத்து, அப்படியெல்லாம் உயர வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை கிடையாது.

அடுத்த ஜென்மத்திலே நம்பிக்கை இருக்குமேயானால் நான் அப்படிப்பட்ட ஆசைகளைப் பெறுவதிலே நியாயம் இருக்க முடியும். ஏன் எனக்கு அடுத்த

ஜென்மத்திலே நம்பிக்கை இல்லை என்றால், இந்த உலகத்தினுடைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் உற்று நோக்கினால் ஏதோ வேதங்களிலும் புராணங்களிலும் அவர்கள் கொள்கைகளில் ஜென்மங்களைப் பற்றிக் கூறியிருந்தாலும் அந்த ஜென்மங்கள் இந்த ஜென்மத்திலே இருக்கின்ற மனிதனை மிரட்டி பணிய வைப்பதற்காக ஒரு கட்டுப்பாட்டிற்குள்ளே அவர்களை அடங்க வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறு நம்பிக்கைகளே தவிர வேறு அல்ல.

இந்த ஜென்மத்திலே தவறு செய்தால் அடுத்த ஜென்மத்தில் நாயாகப் பிறப்பாய் என்றால், அதை எண்ணி இவன் தவறு செய்யாமல் இருக்க எண்ணுகிறான் என்று ஒரு நம்பிக்கை, அப்படிச் சொல்லுகின்றவர்களுக்கு!

அதற்குப் பணிந்தவனும் உண்டு. பரவாயில்லை நாயாகப் பிறந்தாலும் நாலு வீட்டு எச்சில் இலைகளைச் சாப்பிட்டு வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுச் சோறு இல்லாமல் வாடுவதைவிட விரைவிலே செத்துப்போய் நாயாகப் பிறந்து நாலு வீட்டு எச்சில் இலையைச் சாப்பிடலாம் என்று எண்ணுகின்ற அளவிற்கு வறுமைக் கோட்டிற்குக் கீழே பல கோடி மக்கள் இந்தியத் திருநாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது!

எனவேதான் ஜென்மம் - அது போன்ற நம்பிக்கை அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்தப் பிறவியில் - இந்த ஜென்மத்தில் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம்; எத்தனை காலம் வாழ்ந்தோம்; எத்தனை வருடங்கள் நம்முடைய வாழ்வு நீண்டது - நீளப் போகிறது என்று கவலைப்படுவதைவிட வாழ்ந்த காலத்திலே எப்படி வாழ்ந்தோம் என்கிற அந்தக் கவலைக்கு நம்மை நாம் ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.

கவிச் சக்கரவர்த்தி பாரதியார் நாற்பது ஆண்டுகூட வாழவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த அந்தக் குறைந்த காலத்தில் எவ்வளவு பெரிய சுவையை அவர் இந்த உலகத்திலே விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவே எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது அல்ல; வாழ்ந்த காலத்திலே நாட்டிற்கு என்ன செய்தோம்; சமுதாயத்திற்கு என்ன செய்தோம்; மொழிக்கு என்ன செய்தோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் எல்லாம் படித்த காலம் எனக்குப் பசுமையாக நினைவிற்கு வருகிறது. திருவாரூர் பள்ளியிலே நான் படித்துக்கொண்டிருந்தபொழுது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைப் பற்றி இங்கே சொன்னார்களே - நம்முடைய நண்பர்கள் பழனியப்பன் அவர்களும், செஞ்சி ராமச்சந்திரன் அவர்களும், அந்த அண்ணாமலை பல்கலைக் கழகத்திலேதான் இன்றைய நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பயின்றார். இன்றைய தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அங்கேதான் பயின்றார்.

என்னுடைய நண்பர் மதியழகன் அவர்கள் அங்கேதான் பயின்றார்.

தென்னாற்காடு மாவட்டத்தினுடைய கறுப்பு இளவரசர் என்று பாராட்டப்பட்ட என்னுடைய ஆருயிர் நண்பர் கடலூர் இளம்வழுதி அங்கேதான் பயின்றார்.

அவர்களையெல்லாம் நான் அந்தக் காலத்திலேயே அறிவேன். அவர்கள் எல்லாம் அங்கே பயின்ற அந்தக் காலத்திலேதான் பேரறிஞர் அண்ணா அவர்களை அங்கே அழைத்து உரையாற்றுமாறு ஏற்பாடு செய்தார்கள். எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே

பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே உரையாற்றச் சென்றார்கள். அவருக்கு அப்போது தரப்பட்ட தலைப்புக்கள் இரண்டு. முதலில் உரையாற்றியபோது ‘ஆற்றோரம்’ என்ற தலைப்பிலே பேரறிஞர் அண்ணா பேசினார்.

அடுத்து ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பேரறிஞர் அண்ணா அவர்கள் “ஏ தாழ்ந்த தமிழகமே!” என்ற தலைப்பிலே பேசினார்.

‘ஆற்றோரம்’ என்ற தலைப்பிலே அண்ணா அவர்கள் பேசியபோது எடுத்துச் சொன்ன கருத்து, நாடே எதிர்பார்த்தது. என்ன, அண்ணா அவர்களை ஒரு பல்கலைக் கழகத்திற்கு அழைத்து ஆற்றோரத்தைப் பற்றிப் பேசச் சொல்லி இருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன பேசப் போகிறார்’ என்று நாடே மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தது.

ஆனால் அண்ணா பேசினார். “இந்திய நாட்டினுடைய நாகரிகத்தைப்பற்றி உண்மையில் எழுத வேண்டுமேயானால், அந்த நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தமிழனுடைய வாழ்க்கை - இலக்கியம் இவைகளைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமானால் இந்தியாவினுடைய வரலாறு; இன்றைக்கு கங்கையாற்றோரத்தில் இருந்து எழுதப்படுவதற்குப் பதிலாக காவிரியாற்றோரத்தில் இருந்து எழுதப்பட வேண்டுமென்று தன்னுடைய உரையைத் தொடங்கினார்.

அந்தக் கருத்து, அறிஞர் அண்ணா அவர்களுக்கு முன்பே, ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை அவர்கள் இந்த நாட்டுக்கு விட்டுச் சென்ற கருத்துக்களிலே ஒன்று. ‘மனோன்மணியம்’ சுந்தரம்பிள்ளையே சொல்லி இருக்கிறார். இந்தியாவினுடைய முழுமையான வரலாற்றைத்

தெரிந்துகொள்ள வேண்டுமேயானால் அந்த வரலாறு, கங்கை நதி தீரத்திலே இருந்து புறப்படுவதற்குப் பதிலாக, எழுதப்படுவதற்குப் பதிலாக காவிரி நதித்தீரத்திலே இருந்து எழுதப்பட வேண்டும். இந்தக் கருத்தினை மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

இந்தக் கருத்தை மையமாக வைத்துத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே உரையாற்றியபோது ‘கங்கையாற்று நாகரிகம், காவிரியாற்று நாகரிகத்தை அடக்கிட - ஒடுக்கிட முனைந்தது. அதிலே ஒருவாறு வெற்றியும் பெற்றது. எனவேதான் சொல்லுகிறேன். காவிரியாற்றோரத்தில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இன்றைக்கு காவிரி என்றால், நம்முடைய உள்ளத்திலே எல்லாம் குடைந்து கொண்டிருக்கிற பிரச்சினை ‘காவிரித் தகராறு எப்பொழுது தீரும்’ என்பதுதான்.

ஆனால், அந்தக் காவிரியின் கரைகளினுடைய வரலாறு - காவேரி தீரத்தினுடைய வரலாறு - அந்தக் காவேரிக்குக் கரை கட்டிய மன்னர்களுடைய வரலாறு - இவைகளைப் பற்றி எண்ணுகிற, ஏக்கப் பெருமூச்சு விடுகிற, எண்ணி எண்ணி பெருமைப்படுகிற மாணவர்களுடைய தொகை குறைந்து கொண்டே வருகின்ற காட்சியை நான் கண்டு கொண்டே வருகின்றேன்.

முதற் பதிப்பு : மே 2000