உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

நாம் ஒரே சாதி - தமிழ்ச்சாதி!

பகுதி 2 · 2 / 5

கல்லூரியிலே பெயரை எடுத்துவிட்ட பிறகு, அழைப்பிதழிலே எதற்காக இருக்க வேண்டும் (கைத்தட்டல்) என்று எண்ணி இருப்பீர்கள்.

சில பேரைப் பார்த்துச் சொல்லுவார்கள்; நான் எப்படி நடக்க வேண்டும் என்று கேட்டால், ‘நீ நல்ல பெயரை எடுக்க வேண்டும்’ என்று சொல்லுவார்கள். அதுபோல இன்றைக்கு இருக்கின்ற சிலர் நல்ல பெயரை எடுப்பதில் மிக மும்முரமாக இருக்கிறார்கள். (கைத்தட்டல்)

எனவே எப்படியாவது அவர்கள் நல்ல பெயரை எடுத்தால் போதும் என்கிற மகிழ்ச்சி தானே தவிர, பெயரிலே என்ன இருக்கிறது? உங்களுடைய உணர்வுகள் - உங்களுடைய நாடி நரம்புகளிலே பாய்ந்து ஓடுகின்ற குருதி கொப்பளங்களில் - உங்களுடைய மூச்சில் - இதயத் துடிப்பில் எங்கே ஒரு மூலையில் - எனக்கு ஒரு இடம் இருக்கிறது என்கிற அந்த நம்பிக்கை ஒன்றுதான் ஆயிரக்கணக்கான சோதனைகளை, பல்லாயிரக்கணக்கான வேதனைகளை, துன்ப துயரங்களை, இடுக்கண்களை, இன்னல்களை, இடையூறுகளை, தாங்கிக் கொள்ள என்னைப் பழக்கப்படுத்தி இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு நீங்கள் கல்லூரி மாணவர்கள். வரவேற்புரையாற்றியவர்கள் அல்லது வாழ்த்துரை வழங்கியவர்கள் அனைவருமே இங்கே எடுத்துக் காட்டியதைப் போல, நாளைய தினம் இந்த நாட்டை நடத்திச் செல்ல வேண்டியவர்கள்.

நாட்டை நடத்திச் செல்ல வேண்டியவர்கள் என்று சொன்னதும் நமக்கு எந்த இலாகா? இரண்டாவது மந்திரியா? மூன்றாவது? நான்காவது என்று நாட்டை நடத்துவதற்குப் பதவி ஒன்றுதான் தேவை என்று

கருதாமல் உதவி இல்லாமலேகூட நாட்டை நடத்திச் செல்ல முடியும்.

எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்துகூட நாட்டை நடத்திச் செல்ல முடியும்.

எனவே நாட்டை நடத்துவதென்பது ஆட்சிச் செங்கோலை கையிலே வைத்துக் கொண்டுதான் நடத்துவது என்று பொருளல்ல. பதவியிலே அமர்ந்துதான் நாட்டை நடத்திச் செல்ல வேண்டும் என்று இல்லை. பதவியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாட்டை நல்ல முறையிலே நடத்திச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இன்றைக்கு இளம் தளிர்களாய், கொழுந்துகளாய் இருக்கின்ற மாணவ மணிகளுக்கு ஏற்பட்டாக வேண்டும்.

இன்று தமிழகத்திலே ஏராளமான கல்லூரிகள் இருக்கின்றன. நன்றிப் பெருக்கோடு சொல்ல வேண்டுமேயானால் தமிழகத்திலே கல்வித் துறையில், ஒரு சமத்துவம் இட ஒதுக்கீடு மூலமாக, பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்று அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் தென்புலத்திலே உள்ள பெரியவர்கள் வாதாடி - போராடி - சட்டம் இயற்றி - அதிலே பெருவாரியான வெற்றியைப் பெற்று அனைவருக்கும் கல்வி கிடைக்கக் கூடிய ஒரு நிலைமையை உருவாக்கி கல்வி நீரோடையில் அனைவரும் தக்க பயனை அனுபவித்திட வேண்டும் - என்ற கொள்கையின் அடிப்படையிலே கல்வியின் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தப்பட்டது என்றாலும்கூட, அந்த முதியோர்களுக்கு - முன்னோர்களுக்கு - பெரியவர்களுக்கு - நாம் நன்றியைச் செலுத்த வேண்டியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களைத் தொடர்ந்து கல்விக் கண்ணைத் திறந்தார் பெருந்தலைவர் காமராசர் என்று சொல்கின்ற அளவிற்கு, கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்திட்ட

அந்த பெரும் பொறுப்பும், அருந்தொண்டும், அவரைத்தான் சாரும்.

அதுமாத்திரமல்ல, அன்றிருந்த பள்ளி இறுதி வகுப்பு வரையிலே காமராசருடைய ஆட்சியில் இலவசப் படிப்பு என்கிற ஏற்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதன் பின்னர், அண்ணா ஆட்சிக்கு வந்து அவர் மறைந்து அவரைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பு என் தோளிலே சுமத்தப்பட்ட நேரத்தில், ஆட்சிப் பொறுப்பு என்னுடைய தலைமையிலே இயங்கிய சமயத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரையிலே இருந்த இலவசக் கல்வியை அன்றிருந்த பி.யு.சி. வரையிலே என்கிற அளவிற்கு நான் தலைமையேற்றிருந்த ஆட்சியின் சார்பாகச் செய்யப்பட்டது என்பதையும் நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

எனவே, இப்படிக் கல்வித் தகுதியை இந்த நாட்டில் அனைவரும் பெறுகின்ற வகையிலே தொடர்ந்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதிலே படிப்படியாக கல்வி வளர்ச்சியிலே நாட்டம் செலுத்தி இருக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப்போனால் கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்திலே புதிய கல்லூரிகளே உருவாகவில்லை. நான் இதைக் குறையாகச் சொல்லதாகக் கருத்தக்கூடாது. யாரையும் குற்றம் சாட்டுவதாக எண்ணக் கூடாது.

என்ன காரணம்? புதிய கல்லூரிகளை உருவாக்கக் கூடாது என்பதா இன்றுள்ள ஆட்சியாளர்களுடைய எண்ணம்? அல்ல.

உருவாக வேண்டிய அளவிற்கு கல்லூரிகளை நாங்கள் ஏற்கனவே உருவாக்கி விட்ட காரணத்தால்! (பலத்த கைத்தட்டல்)

இன்றைக்கு அவர்களுக்கு இருக்கின்ற பொறுப்பெல்லாம் எத்தனை கல்லூரிகளைச் சேர்த்து ஒரு பல்கலைக் கழகமாக ஆக்கலாம்? என்கிற அந்தக் கடமையை இன்றுள்ள ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள்.

இதைச் சொல்லுவது யாரையும் குறைகூற அல்ல என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்.

எனவே ஏராளமான கல்லூரிகளை, இதற்கு முன்பு காமராசருடைய ஆட்சியைத் தொடர்ந்து, நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் கட்டி முடித்துவிட்ட காரணத்தால், கிராமப்புறத்திலே இருக்கின்ற ஏழை எளிய மக்கள், பின்தங்கிய - தாழ்த்தப்பட்ட மக்கள் - இவர்கள் எல்லாம் நகரங்களுக்குச் சென்று கல்லூரிக் கல்வியைப் பெறுவது என்பது இயலாத காரியம் என்ற காரணத்தினால், பல்வேறு கிராமங்களை இணைக்கின்ற இடங்களில் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இனி, கல்லூரிகள் போதும்; போதும், இன்னும் கொஞ்ச நாள் கழித்து கல்லூரிகளை உருவாக்கினால் போதும் என்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால் அந்தக் கல்லூரிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு மாணவ மணிகளுக்கு இருக்கிறது என்பதை நான் மிகுந்த உரிமையோடு எடுத்துக்காட்ட வேண்டியவனாக இருக்கின்றேன்.

கல்லூரிகள் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்குகின்ற இடங்கள்; எதிர்காலப் பேரறிஞர்களை தயாரிக்கின்ற பாசறைகள். எதிர்காலத்தில் இந்த நாட்டை ஒழுங்குபடுத்துகின்ற தலைவர்களை எல்லாம் படைத்தளிக்கின்ற பாடிவீடு!

அப்படிப்பட்ட கல்லூரிகளிலே பயிலுகின்ற மாணவர்கள் தங்களுடைய கடமையினை உணர்ந்தாக வேண்டும்.

என்ன கடமையை உணர வேண்டும்?

நீங்கள் என்னை மன்னித்துக்கொள்ள வேண்டும். நான் கல்லூரிக்குச் செல்லாதவன். செல்லாதவன் என்றால் இப்படிப்பட்ட விழாக்களுக்குச் சென்றவன்!

ஆனால், பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லுகின்ற வாய்ப்பைப் பெறாதவன். பள்ளி இறுதி வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே என்னுடைய எண்ணம், சிந்தனையோட்டம், செயல் இவைகள் அனைத்தும் தமிழ் மொழியின்பால் - தமிழ் இனத்தின்பால் ஈர்க்கப்பட்டு விட்டன.

அப்படி ஈர்க்கப்பட்டுவிட்ட காரணத்தால், படிப்பிலே நான் கவனம் செலுத்தவில்லை. நீங்கள்கூட எண்ணலாம்! ஆகா! எவ்வளவு அருமையான உதாரண புருஷர் இவர்! படிப்பிலே கவனம் செலுத்தாத காரணத்தால் அல்லவா இப்படி பாராட்டுக்குரிய தலைவராக வந்திருக்கிறார். எனவே, இவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு, நாம் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் ஒருவேளை உலகத் தலைவராக ஆனாலும் ஆகலாம். (கைத்தட்டல்) ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவராக ஆனாலும் ஆகலாம் என்று கருதி நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

முதற் பதிப்பு : மே 2000