உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

நாம் ஒரே சாதி - தமிழ்ச்சாதி!

பகுதி 1 · 1 / 5

நாம் ஒரே சாதி

- தமிழ்ச்சாதி!

இந்தக் கல்லூரியினுடைய ஆண்டு விழாவும்; மாணவர் பேரவையினுடைய நிறைவு விழாவும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகின்ற இந்த நேரத்தில் நானும் கலந்து கொள்கின்ற நல்ல வாய்ப்பினை பெற்றமைக்காக மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

குறித்த நேரத்திற்கு மாறாக ஒரு இரண்டு மணி நேரம் கழித்து நான் தாமதமாக வந்தமைக்கு நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்திய தேசிய செயற்கைக்கோள் இன்சாட் - ஏ, அமெரிக்காவிலே இருந்து விண்வெளியிலே பறக்கவிட இரண்டு நாள் தாமதமாகிறது. இதை நாமெல்லாம் பொறுத்துக் கொள்கிற நேரத்தில், ஒரு இரண்டு மணி நேர தாமதத்தையும் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்காக மாத்திரம் நடைபெறுகிற நிகழ்ச்சி அல்ல என்பதை இங்கே பல்லாயிரக்கணக்கில் குழுமி இருக்கின்ற பெருமக்களைப் பார்த்தாலே புரிகிறது.

மாணவர் பேரவையினுடைய நிறைவு விழா என்று மாத்திரம் விளம்பரம் அல்லது அழைப்பு என்று

ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குமேயானால் ஒரு அரங்கத்தில் அல்லது ஒரு மண்டபத்தில் மாணவர்களுக்கு மத்தியிலே மாத்திரம் என்னை நிறுத்தி பேசச் சொல்லி இருக்கக்கூடும்.

இது கல்லூரியினுடைய ஆண்டு விழாவாகவும் ஆகிவிட்ட காரணத்தால், கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்காக மாத்திரமல்ல, கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் சேர்த்து நடைபெறுகின்ற விழாவாகவே இங்கு நடப்பதாக நான் நம்புகிறேன்.

ஆனால் ஒன்று. நான் மாணவர் பேரவையினுடைய நண்பர்களுக்கும் சொல்லிக் கொள்வேன். கல்லூரியினுடைய முதல்வர் அவர்களையும் வேண்டிக் கொள்வேன். பல்வேறு அரசியல் கட்சி சார்புடைய அமைப்புகளையும் நான் கேட்டுக் கொள்வேன்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள், மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாக ஏற்பாடு செய்யப்பட்டு அதிலே கருத்துக்களைச் சொல்லுகின்ற வாய்ப்பு என் போன்றவர்களுக்கு அளிக்கப்படுமேயானால் மிகச் சிறப்பாக அது அமைந்திடக் கூடும்.

இந்த மேடையில் யாரும் நேரிலே காணாமல் இந்த மேடையினுடைய நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கியின் மூலமாக மாத்திரம் கேட்டுக் கொண்டிருப்பார்களேயானால் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறுவதைப் போல - பல்வேறு கழக அமைப்புக்கள் சார்பில் - மன்றங்களின் சார்பில் எனக்கு மாலைகள், கைத்தறி ஆடைகளை - ரூபாய் நோட்டுக்கள் கோத்திடப்பட்ட மாலைகளை எல்லாம் அணிவித்திருப்பது நான் வேறொரு மேடையானால் அவைகளை மிகுந்த விருப்பத்தோடு ஏற்றுக் கொள்வேன்.

ஆனால், ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற விழாவிலே அரசியல் கட்சியைச் சேர்ந்த நண்பர்கள் தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுவது என்னைப் பொறுத்த வரையிலே நான் விரும்பவில்லை என்பதை இங்கே நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், அவர்கள் கேட்டார்கள், “நீ நீண்ட நாளைக்குப் பிறகு விழுப்புரம் வருகிறாய்; வருகிற உன்னை வரவேற்காவிட்டால் என்ன எண்ணிக் கொள்வாயோ என்கிற ஐயம் எங்களுக்கு - நீண்ட நாட்களுக்குப் பிறகு மாத்திரம் அல்ல; நீண்ட பயணம் வேறு நடத்திவிட்டு வருகிறாய். அந்த நேரத்திலே வரவேற்காவிட்டால் நீ என்ன நினைப்பாயோ என்கிற சிந்தனை எங்களுக்கு வந்ததுதான். வந்தாய்; விழுப்புரம் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கூட்டத்திலே கலந்து கொள்கிறேன் என்று ஒப்புதல் அளித்திருந்தால் எங்களுடைய கைவரிசையை எல்லாம் அங்கே காட்டி இருப்போம்.

எனவே ஒரே நிகழ்ச்சி என்கிற காரணத்தினால் நாங்கள் இந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டோம்” என்று அவர்கள் சமாதானம் சொல்லக்கூடும்.

ஒருவேளை அதற்கும் நான் காரணமாக இருந்திருப்பேனானால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களுக்காக நடைபெறுகின்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் எதுவாயினும் அது ஆண்டு விழாவானாலும், மாணவர்கள் மாத்திரமே கூடியிருந்து வருகிறவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்த - நல்ல கருத்துக்களை வழங்கக்கூடிய பெரியோர்களாக

இருந்தாலும், அவர்கள் கட்சி சார்பற்ற முறையிலே சில கருத்துக்களை - நாடு வாழ - நலிவு தீர - சமுதாயத்திலே மேன்மைகள் கிடைக்க - அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ - தமிழ்மொழி காத்திட - சமதர்ம மணம் கமழ்ந்திட - சமத்துவம் எங்கெங்கும் பரவிட - எத்தகைய கருத்துக்கள் தேவையோ, அத்தகைய கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற அந்த நல்ல வாய்ப்பினை அவர்கள் பெறக்கூடும்.

ஆனால் இங்கே பெருந்திரளாகக் கூடி இருக்கின்ற இந்தக் கூட்டத்தில் பெரும்பாலோர் அசைவ உணவை விரும்பி வந்திருப்பவர்கள். அதைத்தான் நான் அரசியல் பிரச்சாரம் என்பதற்கு உவமையாகக் கூறுகிறேன்.

நான் இங்கே சைவ உணவு மாத்திரம் படைத்தால் போதுமென்று அந்தச் சமையலோடுதான் வந்திருக்கிறேன். எனவே இறைச்சி கிடைக்கும் என்று யாராவது இந்தப் பெரும் கூட்டத்திலே இருப்பார்களேயானால் அவர்கள் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

காரணம் என்னை அழைத்தது மாணவர் பேரவை. நான் கருத்துக்களைக் கூறவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட இடம் - எடுத்துக் காட்டப்பட்ட இடம் கல்லூரி மண்டபம்.

எனவே நான் பரிமாறுவது அசைவமற்ற, சைவ உணவைத்தான் பரிமாறிட வேண்டும். இங்கேயும் நான் அசைவ உணவைப் பரிமாறுகின்ற மிலிட்டரி ஓட்டலை நடத்துவேனேயானால் அது, நான் எந்த இடத்திலே பாடம் கற்றேனோ - எந்தப் பள்ளியிலே பயின்றேனோ - எத்தகைய தலைமையின் கீழ் என்னை நான் உருவாக்கிக் கொண்டேனோ அதற்கு முற்றிலும் பொருந்தாது என்பதனை உங்களுக்குச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

இங்கே நம்முடைய பெரியவர் சண்முகனார் அவர்கள் இந்தக் கல்லூரி உருவாக்குவதற்கு காரணமாக எத்தகைய முயற்சிகளை எல்லாம் அந்தக் காலத்திலே மேற்கொண்டார்கள் என்பதை நண்பர்கள் குறிப்பாகக் கோடிட்டுக் காட்டினார்கள்.

இந்த விழாவிற்குத் தலைவராக இருக்கின்ற கல்லூரியின் முதல்வர் அவர்களும், மற்றவர்களும், பேசுகின்ற நேரத்திலேகூட இந்தக் கல்லூரி உருவாவதற்கு நானும்கூட ஒரு காரணம் என்று என்னைக் கூடப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

நீண்ட நேரம் அவர்கள் எல்லாம் உரையாற்ற முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு. அவர்கள் உங்களுடைய உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், தங்களுடைய உரைகளை எல்லாம் சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள் என்பதையும் நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

இந்தக் கல்லூரி விழுப்புரத்தில் உருவாக வேண்டும் என்று பாடுபட்ட பெரியவர் சண்முகனார், பெரு மகிழ்ச்சி அடையத்தக்க வகையிலும், இது உருவான பிறகு இந்தக் கல்லூரி சிறப்புற நடைபெறுகிறது, என்பதை கேள்விப்பட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்று நான் கேள்விப்பட்ட நிலையிலும் இந்த விழாவிலே கலந்து கொள்வது எனக்கு கிடைத்த பெரும்பேறாக நான் கருதுகிறேன்.

உங்களுடைய அழைப்பிதழை நான் பார்த்தேன். அதிலே ‘டாக்டர் கலைஞர் உரையாற்றுவார்’ என்று மாத்திரம் போட்டிருக்கிறார்கள். ‘கலைஞர் கருணாநிதி’ என்று போடவில்லை.

முதற் பதிப்பு : மே 2000