மே தின விழா
பகுதி 2 · 2 / 3
தி.மு.கழகம் ஆட்சிபொறுப்புக்கு வந்த பிறகு தொழிலாளர்கள் நலனில் எவ்வளவு அக்கறையோடு எத்தகைய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியது என்பதை இங்கே வரிசைப்படுத்திக் காட்டியிருக்கின்றார்கள். அவைகளை நான் ஒவ்வொன்றாகச் சுருக்கமாக எடுத்து வைக்க விரும்புகின்றேன்.
1968-ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியிலேதான் தோட்ட நிறுவன சட்டத்தின் கீழ், மலைத் தோட்டங்களில் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
69-ஆம் ஆண்டு தொழிலாளர் நலத்துறைக்கு முதன் முதலாக ஓர் அமைச்சரை நியமித்ததும் தி.மு.கழக அரசுதான்.
நண்பர்கள் எல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல இதே நாளுக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை வழங்கியதும் தி.மு.கழக அரசுதான். (கைதட்டல்)
மாநில அளவிலே மாத்திரம் அது இல்லாமல் இந்திய பூபாகம் முழுவதும் இந்த விடுமுறை தேவை என்பதை வலியுறுத்தி வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில், அவருக்கு வேண்டுகோள் விடுத்து, அதை அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டு “இந்தியா முழுமைக்கும் ‘மே’ நாள் விடுமுறை நாள்” என்று வி.பி.சிங் அவர்கள் அறிவித்ததும் நாம் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாகத்தான்.
தொழிலாளர்கள் நலன் கருதி, தொழிலாளர் நலநிதி உருவாக்கப்பட்டு அதனை நிர்வகிக்கத் தொழிலாளர் நலவாரியம் ஒன்றை 1971-ஆம் ஆண்டில் தோற்றுவித்தது கழக ஆட்சிதான்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க சட்டத்தில் வழி வகை செய்தது தி.மு.கழக ஆட்சிதான்.
தொழிலாளர்கள் நலன் கருதி, 72-லிருந்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் பணிக் கொடை வழங்கும் திட்டம் கண்டது தி.மு.கழக ஆட்சிதான்.
விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் லாரி, ஆட்டோ, தனியார் கார், டாக்சி, பேருந்து ஆகியவற்றின் ஓட்டுநர்களுக்கும், கட்டிட கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், தகுந்த நிவாரணங்கள் வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் குடும்பத்தாருடைய துயரங்களைத் துடைக்கும் வகையில் தொழில்-விபத்து நிவாரண நிதி ஒன்றை 1972-ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது தி.மு.கழக ஆட்சிதான்.
பெண் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் துணைவியர்க்குத் தையல் பயிற்சி வகுப்புகளையும் அவர்தம் குழந்தைகளுக்காக கிண்டர் கார்டன் வகுப்புகளைக் கொண்ட நல மையங்களையும், 72-ஆம் ஆண்டிலேயே சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் தொடங்கியது கழக ஆட்சிதான்.
நல்ல சங்கத் தலைவர்களை உருவாக்குதல், தொழிலாளர்கள் மற்றும் தனி அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல், தொழிலாளர் துறை அலுவலர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளித்தல், ஆகியவற்றின் பொருட்டு 73-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் கண்டது கழக ஆட்சிதான்.
ஒப்பந்த தொழிலாளர்களின் நலன் கருதி 71-இல் தனியே சட்டம் கண்டது கழக அரசுதான். அச்சட்டத்தில் 75-ஆம் ஆண்டில் மேலும் சில விதிகளை உருவாக்கி ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன் காத்தது கழக ஆட்சிதான்.
சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தோழர் வரதராஜன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஒரே வாரத்தில் மே தினப் பூங்காவை உருவாக்கி அங்கே மே தின நினைவுச் சின்னத்தை அமைத்ததும் தி.மு.கழக ஆட்சிதான்.
இவைகளுக்கெல்லாம் மேலாக இங்கே நம்முடைய தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர் நல அமைச்சர் என அனைவரும் எடுத்துக்காட்டியதைப் போல் அமைப்பு ரீதியிலே இல்லாத தொழிலாளர்களுக்குப் பல்வேறு தொழிலாளர்களின் நலத் திட்டங்கள் சென்றடைவதில்லை. இப்பயன்கள் அவர்களைச் சென்றடையும் பொருட்டு 97-98-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுக்கள் பரிந்துரைத்தவாறு அமைப்பு ரீதியிலே இல்லாத தொழிலாளர் நல வாரியம் ஒன்றை இந்த ஆண்டிலே அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வாரியத்தின் மூலமாகப் பயன் பெற இருக்கிற தொழிலாளர்கள் யார்? யார்? சுமை தூக்கும் தொழிலாளர், தீப்பெட்டித் தொழிலாளர், சங்கங்கள் இல்லாத கைத்தறித் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், செங்கல் தயாரிப்புத் தொழிலாளர், சாயம் ஏற்றும் பணியிலே ஈடுபடும் தொழிலாளர், முந்திரி உடைக்கும் தொழிலாளர், கயிறு தயாரிக்கும் தொழிலாளர், பந்தல் கட்டும் தொழிலாளர், அப்பளம் தயாரிக்கும் தொழிலாளர்,
செயற்கை வைரம் தீட்டும் தொழிலாளர், பொற்கொல்லர், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர், மண்பாண்டம் தயாரிப்போர், அச்சுத் தொழிலாளர், சமையல் மற்றும் ஓட்டல் தொழிலாளர், தனியார் கடைகளில் பணிபுரிவோர், தையல் தொழிலாளர், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர், வாடகைக் கார் ஓட்டுபவர், உப்பளத் தொழிலாளர் போன்ற 43 வகை அமைப்பு ரீதியிலே இல்லாத தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏறத்தாழ 25 லட்சம் பேர் பயன் பெறக்கூடிய வாரியத்தை அமைத்து அறிவித்து அதை நடைமுறைப்படுத்த இருப்பதும் தி.மு.கழக ஆட்சிதான் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவற்றையெல்லாம் நான் எடுத்துக்காட்டியதன் மூலம் தமிழகத்திலே ஆட்சி வாயிலாக மாத்திரமல்ல, கட்சி வாயிலாக மாத்திரமல்ல. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 69-70-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் தி.மு.கழகத்தின் சார்புடைய ஒரு தொழிற்சங்கப் பேரவை அமைய வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த அடிப்படையிலே நம்முடைய கழகக் காவலர்கள் தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையை அன்றைக்கு அமைத்து இது வாழுமா?
இது முன்னேறுமா? இதற்கு எதிர்காலம் உண்டா? என்றெல்லாம் ஆரூடங்கள் கணிக்கப்பட்டதையெல்லாம் துச்சமாக கருதி, துளிர் விட்டு வளர்ந்து இன்றைக்கு விழுது விட்டுள்ள நிலையிலே, ஒரு ஆலமரமாக தமிழகத்திலே காட்சி தருகின்ற இயக்கம்தான் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை என்னும் இந்த இயக்கம். (பலத்த கைதட்டல்)
இந்த முக்கியமான நாளில் இந்த இயக்கத்தின் சார்பாக நான் தி.மு.கழகத்தினுடைய தலைவனாக
இருந்தாலும்கூட, சார்புடைய ஒரு துணை அமைப்பு - தொ.மு.ச. அமைப்பு என்கிற முறையில் இங்கே உங்கள் முன்னிலையில் ஒரு தீர்மானம் அல்ல, ஒரு கருத்தை மொழிகின்றேன். இதை இந்த மே தின விழா பொதுக் கூட்டத்தினுடைய தீர்மானமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்திய நாட்டில் ஒரு கட்சி ஆட்சி என்பது இனி இல்லை.
தி.மு.கழகம் போன்ற மாநில கட்சிகள் இணைந்துதான் இனி மத்திய அரசு அமைய முடியும் என்ற நிலை உறுதியாகி விட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய தொழிற்சங்க அமைப்பு உருவாக்கி தொ.மு.ச. பேரவை போல செயல்பட்டு வருகின்றன.
ஒரு கட்சி ஆட்சி இருந்தபோது மத்தியில் INTUC, AITUC, CITU போன்ற அமைப்புகள் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன.
பெரும்பகுதி தொழிலாளர்களைக் கொண்ட மாநில அளவிலான தொ.மு.ச. பேரவை போன்ற அமைப்புகள் அங்கீகாரம் பெறாமல் எடுக்கப்படுகின்ற முடிவுகள், செயல்படுத்தப்பட வேண்டுமென்ற நிலை வரும்போது அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கமுடியாது.
